உள்ளடக்கத்துக்குச் செல்

சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/007-010

விக்கிமூலம் இலிருந்து

71. பிச்சைக்காரர்களும் நாய்களும்

“உன்னைக் கண்டதுமே நாய்கள் உன்னைக் கடிக்க வருகின்றதே ஏன்?” என்று ஒருவன் பிச்சைக்காரனிடம் கேட்டான். “ஏனெனில் ஆடையைப் பார்த்தே நாய்கள் மனிதனை மதிக்கச் செய்கின்றன” என்று விடை அளித்தான் அந்தப் பிச்சைக்காரன்.


72. கழிவாய் புகையே

வயது முதிர்ந்த செல்வன் ஒருவர் வீட்டு வேலைகளைக் கவனிக்க எந்த வேலைக்காரர்களையும் அமர்த்தாமல் அனைத்து வேலைகளையும் அவரே மிகவும் தொல்லையுடன் தனித்துச் செய்துவந்தார். நண்பர்கள் எல்லாம் அப்பணிகளைச் செய்ய வேலைக்காரன் ஒருவனை அமர்த்தும்படி வற்புறுத்தி வந்தார்கள். ஆனால் அந்தச்

சீமானோ எப்போதும் “வேலைக்காரர்களால் ஏற்படும் நன்மைகளை நான் நன்கறிவேன். ஆனால் அவர்களுக்குக் கூலியும், உண்ண உணவும் கொடுக்க வேண்டுமே. ஆகவே தான் என் பணிகளை நானே செய்துவருகிறேன். வேலைக்காரர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்று விடையளித்து வந்தார்.

எப்படியேனும் செல்வருக்கு ஒரு வேலைக்காரனை அமர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர், “என்னுடைய வீட்டில் நான் ஒரு வேலைக்காரன் வைத்திருக்கிறேன். அவனுக்கு உணவோ கூலியோ கொடுக்கத் தேவையில்லை. எனினும் அவன் திறமையாக பணிகளைச் செய்வான். உங்களுக்குப் பணிபுரிய நான் அவனை இலவயமாகத் தருகிறேன். நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றார். சற்று நேரச் சிந்தனைக்குப்பின் செல்வர் கேட்டார். “உணவு உண்ணவில்லை என்றால் அவன் இறந்துவிட மாட்டானா?" என்று. “இந்த வேலைக்காரன் சிறுவனாய் இருக்கும்போது தேவதை ஒன்றைச் சந்தித்தானாம். அந்தத் தேவதை இவனுக்குக் காற்றை உண்டு, புகையை வெளியிட்டிடு, என்று வேறு எதையும் புசியாது வாழும் வரம் நல்கினாளாம். எனவே அவனுக்குப் பசியெடுப்பதே இல்லை” என்று விடையளித்தார் நண்பர்.

அதனைக் கேட்டதும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் அந்தச் செல்வர். பின் மெதுவாய்ச் சொன்னார் “வேண்டாம் மிக்க நன்றி எனக்கு அப்படிப்பட்ட வேலைக்காரன் வேண்டாம்” என்று. “ஏன்?” என்றார் நண்பர். “எனது கழனிகளுக்கு வேண்டிய உரத்தில் ஒரு பகுதியையாவது அந்த வேலைக்காரனின் கழிவில் இருந்து(மலம்) பெறலாம் என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் சொல்கின்ற வேலைக்காரனோ புகையை மட்டுமே வெளியேற்றுகின்றார். அவனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றே அஞ்சுகிறேன்” என்றார் செல்வர். செய்வதறியாது திகைத்தார் நண்பர்.

73. விடை சொல்லும் பாங்கு

விடை சொல்லும் பாங்கினைப் பற்றிப் பக்குவமாய்த் தம் மகனுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ஒருவர். புரியாது விழித்துக் கொண்டிருந்த மகன் புரியும்படி சொல்லுங்கள் என்று விளக்கம் கேட்டான். அந்த நேரம் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒன்றை இரவலாகப் பெற்றுச் செல்ல அங்கு வந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தந்தை சொன்னார் “யாராவது

உன்னிடம் வந்து ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டால் முற்றிலும் ‘உண்டு’ என்றோ ‘இல்லை’ என்றோ விடை சொல்லக்கூடாது. கொஞ்சம் உண்டு; கொஞ்சம் இல்லை என்று பதில் தரவேண்டும்” என்றார். தந்தை சொன்னதை மனத்திலிருத்திக் கொண்டான் மகன்.

சில நாள்களுக்குப்பின் யாரோ ஒருவர் வந்து “உன் தந்தை இருக்கிறாரா?” என்று கேட்டபோது “கொஞ்சம் இருக்கிறார்; கொஞ்சம் இல்லை” என்றான் தந்தை சொல் தட்டாத தனயன். என்னே அவனின் பதில் சொல்லும் பாங்கு.

74. இறப்பை வெல்லும் மூலிகை

“என்னைக் குணமாக்கும் திறமையான மருத்துவர் எவரேனும் இருப்பின் அவருக்கு இறப்பினையே வெல்லும் மூலிகை ஒன்றினை நன்றிக் கடனாகக் கொடுப்பேன். எனது மூலிகை ஒருவனைப் பலநூறு ஆண்டுகள் வாழ வைக்கும் என்று சொல்லி மருத்துவர் ஒருவரை அழைத்து வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார் சாவுப் படுக்கையிலிருந்த மருத்துவர் ஒருவர்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் “ஏன்? அப்படிபட்ட அற்புத மூலிகையிருப்பின் இவரே அதனைப் பயன்படுத்தித் தம்மைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டார்.

இறக்கப்போகும் சாவுப்படுக்கையில் இருந்த மருத்துவர் சொன்னார், “ஒரு நல்ல மருத்துவன் தனக்குத் தானே மருந்து கொடுத்துக் கொள்ளமாட்டான்” என்று. 

75. அறிஞனின் தீர்ப்பு

செல்வன் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினான் ஒரு சிற்றூரான். நூறு காணி நஞ்சை நிலம் வாங்கினால்தான் நான் நிறைவடைவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான் அவன். இதனைக் கேள்வியுற்ற அவனது அண்டை வீட்டான் “நீ நூறு காணி நஞ்சை நிலம் வாங்கி விடுவாயானால், அதில் விளையும் நெல் அனைத்தையும் வாங்கப் பல இலக்கம் பணம் சேர்த்து விடுவேன்” என்று எதிர் அறைகூவலும் உறுதியும் செய்தான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

நான் நூறு காணி வாங்கிவிடுவேன் என்று ஒருவனும், அவற்றின் விளைச்சலை பல இலக்கம் சேர்த்து நான் வாங்கிவிடுவேன் என்று மாறிமாறிப் பேசினர். இருவரும் தங்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துச் செல்ல முடிவு செய்து பட்டணம் சென்றனர். இருவருமே அதுவரை பட்டணம் சென்று நீதிமன்றத்தைப் பார்த்து அறியாதவர்கள். எனவே செல்லும் வழியில் ஒரு சிவப்பு நிறக் கட்டிடத்தைக் கண்டு அது தான் நீதிமன்றம் என நினைத்து உள்ளே நுழைந்தனர். அந்தக் கட்டிடமோ அறிஞர் பூங்குன்றனின் மெய்மை ஆய்வுக் கூடமாயிருந்தது. பல மாணவர்களும் அறிஞர்களும் அங்குத் தங்கி ஆய்வு செய்து வந்தனர். இவர்கள் செல்லும் வேளையில் அம் மண்டபத்தின் முகப்பில் அறிஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் நீதிபதி என நினைத்து, சிற்றூர்க்காரர் இருவரும் தங்கள் வழக்கையுரைத்தனர். வழக்கைக் கேட்டபின் அறிஞர் சொன்னார், “முதலில் நீங்கள் இருவரும் அவரவர் சம்பாதிக்க நினைப்பதைச் சம்பாதியுங்கள். நானும் நீதிபதியானவுடன் என் தீர்ப்பைச் சொல்லுகிறேன்” என்று.


76. தோலைக் கெடுத்துவிடாதே

புலிவாயில் விழுந்த ஒரு மனிதனைக் காக்க அவன் மகன் கத்தி ஒன்றினை எடுத்துப் புலியினைக் குத்திக் கொல்லப் பாய்ந்து வந்தான். பாய்ந்து வரும் மகனைப் பார்த்துப் புலி வாயில் அகப்பட்ட மனிதன் “மகனே, ஆத்திரப்பட்டுப் புலியின் மீது கண்டவிடத்தில் குத்தி அதன் தோலினைச் சேதப்படுத்தி விடாதே. அதன் காலடியிலிருந்து வெட்டத் தொடங்கிப் பின்னர் அதன் உடலினைப் பிளந்துவிடு.” என்று ஆய்வுரை கூறினான். 


77. அரசனும் அரச உடையும்

தலை நகரிலிருந்து திரும்பிய பிச்சைக்காரன் மா மன்னனைத் தான் பார்த்த பெருமையினைப் பறைசாற்றிக் கொண்டிருந்தான். அரசன் அணிந்திருந்த உடையினைப் பற்றி அவனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், “பச்சை மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட மகுடமும் தங்கத் தகடுகளால் ஆன உடையினையும் அணிந்திருந்தார்” என்று. “தங்கத் தகடுகளால் ஆன உடையை அணிந்திருந்தால் அவரால் எப்படி குனிந்து தொழுதிட முடியும்?” என்றான். பிச்சைக்காரன் இதனைக் கேட்டு நகைத்தான், பின்னர் சொன்னான் “உனக்கு இந்த உலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. மன்னர் குனிந்து தொழவேண்டிய மனிதர் யாரும் இல்லை” என்று.

78. வேதத் தலைவனுக்குத் தகுந்த இடம்

கோயிலின் சிறப்பு மண்டபத்தில் இடப் புறத்தில் சிவபொருமானின் சிலையும் வலப்புறத்தே புத்த பெருமானின் திருஉருவச் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன. அவ் இரு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள இடங்களை உற்றுக் கவனித்த பெளத்த துறவி ஒருவர் எம்பெருமான் தொண்டர்கள் உலகெலாம் பரவியுள்ளர். அப்படிப்பட்ட புகழ்மிக்க புத்தனை சிவனின் வலப்புறத்தே அமைத்தேன்?” என்று வினவினார்.

பின்னர் புத்தனை இடப்புறத்தும் சிவனை வலப்புறத்தும். மாற்றி அமைத்துவிட்டுச் சென்றார். சற்று நேரத்திற்குப் பின் சைவ மதகுரு ஒருவர் அங்கே வந்தார்.

சிலைகள் அமைந்திருக்கும் வண்ணம் கண்டார். சினம் கொண்டார். அவர் சொன்னார்” நமது நாட்டில் சைவத் தொண்டர்கள் மிகவும் புனிதமானவர்கள். அப்படியிருக்கச் சிவனின் சிலையைப் புத்தனின் வலப்புறம் அமைத்தது ஏன்? என்று வினவினார். மீண்டும் அச் சிலைகளை இடம் மாற்றி அமைத்துவிட்டு அவர் அவ்விடம் விட்டு அகன்றார். அவர் அகன்றதும் மீண்டும் பெளத்தத் துறவி வந்தார். சிலைகளின் இருப்பிடத்தை மாற்றியமைத்தார். இவ்வாறு மாறி மாறி இரு சமயத்தினரும் சிலைகளை மாற்றி மாற்றி அமைத்தனர். இறுதியில் அவை இரண்டுமே மண் சிலைகள் ஆனதால் கீழே விழுந்து நொறுங்கின. கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்த சிவனின் நொறுங்கிக் கிடக்கும் புத்தனைப் பார்த்துப் புன்னகைத்தார். பின் அவர் “முன்பு நாம் இருந்த வண்ணமே அவரவர் இடத்தில் அமர்ந்து நமது பணிகளைச் செய்தோம். இப்போதோ நமது அடியார்கள் நமது அழிவுக்கு அவர்கள்தாம் காரணம்” என்பதை மெய்ப்பித்து விட்டனர்” என்று துயரத்தோடு சொன்னார்.