சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/008-010

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

79. அழகற்ற நிலவு

மற்றவர்களோடு உரையாடும் போது, அடக்கமாகப் பேசும் பழக்கமுள்ள ஒரு மனிதர் இருந்தார். ஒருமுறை அவர் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார். அந்திக் கருக்கலில் அழகு நிலவினைக் கண்ட அந்த விருந்திரனர் “ஆ என்ன அழகான நிலவு” என்று வியந்துரைத்தார். உடனே அடக்கமாகவே பேசும் அந்த வீட்டுக்காரர் கைகட்டி, வாய்பொத்தி மிகவும் அடக்கத்தோடு “என்னை நீங்கள் மிகவும் புகழ்கிறீர்கள். என் எளிய குடிலில் நிலவுக்குக் கூடப் பெருமை கிடையாது” என்றார்.

80. மூடன்

இரண்டு உடன்பிறந்தவர்கள் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றனர். நண்பர் வீட்டின் ஒரு பலகையின் அருகில் கிடந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தனர். பலகையின் மீது உலர்ந்த அத்திப் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதுவரை அந்தப் பழங்களைப் பார்த்தறியாத இளையவன் அண்ணனிடம் அவை என்னவோ என்று கேட்டான். அண்ணன் “முட்டாள்!” என்று சொன்னான். பின்னர் கொடிமுந்திரிப் பழங்கள் பரிமாறப்பட்டன. மீண்டும் இளையவன் அண்ணனிடம் “அது என்ன?” என்று வினவினான். அண்ணன் மீண்டும் அதே விடையைச் சொன்னான்.

பின்னர் அவர்கள் இருவரும் நண்பரிடம் விடை பெற்று வெளியே வாயலில் வந்தபோது, தம்பி அண்ணனிடம் சொன்னான் “முதலில் கொடுத்த முட்டாள்கள் மெல்லக் கடினமாயிருந்தன. ஆனால் அவைதாம் சுவையாயிருந்தன. இரண்டாவது கொடுத்த முட்டாள்களே நாவில் சுவைக்கவேயில்லை” என்று.

81. மதுக்கோப்பையை அறுத்தல்

அழைப்பிற்கிணங்கி விருந்தொன்றிற்குச் சென்றார் ஒருவர். விருந்துக்கழைத்த நண்பரோ ஒவ்வொரு முறையும் மதுக் கிண்ணத்தில் அரைக் கிண்ணம் அளவே மது ஊற்றிக் கொடுத்தார். விருந்தினரோ அவர் செயல் கண்டு வெறுப்புற்றார். அளவுக்கு மிஞ்சிய வெறுப்பில் அவர் கேட்டார். “உங்களிடம் வாள்(ரம்பம்) இருக்கின்றதா? இருந்தால் கொஞ்சநேரம். இரவல் கொடுங்களேன்” என்று கேட்டார்.

“ஏன்? எதற்கு?” என்றார் விருந்து கொடுத்த நண்பர். விருந்தினர் சொன்னார் “நீங்கள் மதுக் கிண்ணத்தில் பாதியளவே மதுவினை ஊற்றுகிறீர்கள். கிண்ணத்தில் எஞ்சிய பாதி பயனற்று வீணாய் தானே உள்ளது. அந்தப் பயனற்ற கிண்ணத்தில் மேல்பாதியை வெட்டித் தள்ளிவிடலாம் அல்லவா?” என்று.


82. வேதனை ஒன்று

விருந்தொன்றில் வந்த விருந்தினர்களில் ஒருவர் அகன்ற பெரிய தட்டில் பரிமாறப்பட்ட வாதுமைப் பருப்பில் பாதியை ஒரே கவளத்தில் அள்ளி விழுங்கினார் விரைவாக. இதனைக் கண்ட விருந்தளித்தவன் ‘ஏன் இப்படி விரிைவாகச் சாப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது அவர் சொன்னார் ‘வாதுமைப் பருப்பு’ நெஞ்சங்குலைக்கு நல்லது’ என்று. இதனைக் கேட்ட விருந்து கொடுத்தவன் “உணவை நன்றாக உண்டு ஐயமின்றி நீங்கள் உங்கள் நெஞ்சத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றீர்கள். ஆனால் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே” என்று எதிர்வான எழுபப்பினார் விருந்தளித்தவர்.

83. கூன் விழுந்த முதுகு

“கூனினை நிமிரச் செய்து அற்புத நலமளிக்கும் வியப்புறு சிகிச்சை; கூனர்கள் நடக்கவும்; குணம் பெறவும்” என்ற மருத்துவர் ஒருவரின் விளம்பரத்தை நம்பி, தன் கூனை நிமிரச் செய்ய அந்த மருத்துவரை நாடினார் ஒருவர். மருத்துவரும் அவரை அன்போடு வரவேற்றுச் சிகிச்சையைத் தொடங்கினார். நீண்ட பலகை ஒன்றினில் நோயாளியைப் படுக்கச் செய்தார். வேறொரு நீண்ட பலகையை அவர் மீது வைத்தார். மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பலகைகளுக்கிடையே இப்போது நோயாளி படுத்திருந்தார். இரண்டு பலகைகளின் விளிம்புகளைக் கயிற்றால் கட்டி மெல்ல மெல்ல கட்டுகளை இறுக்கினார். பலகைகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்ந்து இடையில் கிடந்த மனிதனை நெருங்கின. பின்னர் நசுக்கின. வேதனை தாங்காது நோயாளி கட்டுகளை இறுக்குவதை நிறுத்தச் சொல்லிக் கதறினார். மருத்துவரோ அவர் கதறுதலைத் தம் காதில் போட்டுக் கொள்ளாமல் தம் வைத்தியத்தை தொடர்ந்தார். சற்று நேரத்தில் கதறல் நின்றது. தற்போது பல கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் பலகையை நீக்கினார். கூன் நேராக நிமிர்ந்திருந்தது. நோயாளியும் கூன் மட்டும் நிமிரவில்லை கை கால்கள் அனைத்துமே நீட்டி நிமிர்ந்த வண்ணம் மடக்க முடியாமல் இருந்தன. கூன் குணமானது. ஆனால் நோயாளி இறந்து போனான்.

உறவினர் கொதித்தனர். மருத்துவரை உதைத்தனர். உதைகளுக்கிடையே மருத்துவர் “நான் கூனை நிமித்துவதாகத்தான் சொன்னேன் அப்போது யாரும் என்னிடம் அவருடைய உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லையே” என்றார்.


84. அம்பினை அகற்றச் சென்றவன்
வம்பினில் அகப்பட்டான்

வீரன் ஒருவனின் உடம்பில் அம்பொன்று தைத்தது. ஆழமாகத் தைத்த அம்பினை அகற்ற மருத்துவரிடம் கொண்டு

அந்த அறுவைச் சிகிச்சை வல்லுனரோ “நான் உடம்பின் வெளியே உள்ள பகுதிகளை அறுப்பதிலும் அகற்றுவதிலும் தான் வல்லுனன். அதனை நான் செம்மையாகச் செய்து விட்டேன். இப்போது நீங்கள் உடம்பின் உட்பகுதிகளை அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுனரை நாடுங்கள்” என்று ஆய்வுரை வழங்கினார்.

85. குருதிக் கொடை

பிறவுயிர்களுக்குத் தன் அரத்தத்தை (குருதி) அளித்து அவற்றை வாழவைக்க நினைத்தார் பெளத்தத் துறவியொருவர். நினைத்த வண்ணமே கொசுக்களைத் தன் குருதியை உறிஞ்சி உயிர்வாழ அனுமதித்தார். சில நாள்கள் கொசுக்கள் பல்கிப் பெருகின. அவரால் கொசுக்கடியைத் தாங்க முடியவில்லை. கடிதாங்காத துறவி தன்கைகளால் கொசு கடிக்கும் இடங்களில் பட்டு, பட்டு என்று அடித்துக் கொண்டார். இப்படித் தம் உடம்பை தாமே அடித்துக் கொண்டிருக்கும் நிலைகண்டு திகைப்புற்ற வழிப்போக்கன் ஒருவன் துறவி-

யிடம் “கொசுக்களுக்கு இரத்தக் கொடை செய்வதாக உறுதியெடுத்துக் கொண்ட நீங்கள் இப்படி அவைகளை அடித்து விரட்டலாமா?” என்று கேட்டார். “எனெனில் சில கொசுக்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன” என்றார் துறவி.

86. தெருப் பாடகன்

தெருவிலே ஒருவன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கினான். பலரும் அவன் மண்முழா தான் வாசிக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டு அவன் இசையைச் சுவைக்க அவனைச் சுற்றிக் குழுமினர். ஆனால் இசைக் கலைஞன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கியதும் இசையில் இனிமையில்லாததால் குழுமிய கூட்டம் கலைந்தது. ஒரே ஒருவர் மட்டும் அங்கு இறுதிவரை நின்று கொண்டிருந்தார். இறுதிவரை தன் அருகில் நின்று கொண்டிருந்த அந்த மனிதரைக் கண்டு ‘நம் இசையை சுவைக்க இவர் ஒருவர் இருக்கிறாரே. எனவே என் இசை அறிவு வீண்போகவில்லை’ என்று மகிழ்ந்து கூறினார் இசைக் கலைஞர். அதனைக் கேட்டு, அந்த மனிதன் “என் நிலைப்பலகையை மட்டும் நான் உங்களுக்கு மேடையாக தராவிட்டால் நானும் இங்கிருந்து எப்போதோ போயிருப்பேன்” என்று சொன்னார்.

87. திருடனின் மேலாடை
திருடப்பட்டது

மணத்துணைவர் (தம்பதிகள்) தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் புகுந்தான் திருடன். அவர்கள் வீட்டில் திருடுவதற்கு வேறெதுவும் இல்லாமல், ஒரே ஒரு பானையில் அரிசி நிரப்பப்பட்டு அவர்கள் படுக்கை அறையில் அது வைக்கப்பட்டிருந்ததால் அதனைத் திருட அங்குப் புகுந்தான் அந்தத் திருடன். பானையிலிருந்த அரிசியைத் திருடி, வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்துண்ண நினைத்தான் திருடன்.

ஆனால் அரிசியைக் கட்டி எடுத்துச் செல்ல அங்கு வேறெதுவும் இல்லாததால், தன் மேலாடையில் முழு அரிசியைக் கொட்டிக் கட்டி எடுத்துச் செல்ல நினைத்துத், தன் மேலாடையைக் கழற்றித் தரையில் விரித்தான். பின் பானையின் பக்கம் திரும்பி அதனைத் தூக்க முனைந்த போது, விழிந்துக் கொண்ட கணவன் தன்கையை நீட்டி திருடனின் மேலாடையை மெதுவாய் எடுத்துத் தன் படுக்கையின் அடியில் மறைத்து வைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். பானையைத் தூக்கி அதிலிருந்த அரிசியை மேலாடையில் கொட்ட வந்த திருடன் தான் ஆடையை விரித்திருந்த இடத்தில் காணமல் திடுக்கிட்டுத் திகைத்தான். அந்த நேரம் பார்த்து மனைவி விழித்துக் கொண்டாள். கணவனை எழுப்பி ஏதோ ஓர் உருவம் அறையினுள் நடமாடுவதை அவனுக்கு உணர்த்தினாள். கணவன் “நான் நீண்ட நேரமாக விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இங்குத் திருடன் யாரும் இங்கு இல்லை” என்றான். ‘என்ன?’ திருடன் கூவினான். ‘என் மேலாடை இங்கு திருடு போய்விட்டது. திருடன் யாரும் இங்கு இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம்? என்றான் அந்த உண்மைத் திருடன்.


88. உப்பிட்ட முட்டைகள்

ஒரு நாள் உப்பிட்ட முட்டைகளை இருவர் தின்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் “பொதுவாக முட்டைக்குச் சிறப்பான மணமோ, சுவையோ இல்லை என்றுதான் நான் இந்நாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்த முட்டைகள் சுவையாகவும் உப்பாகவும் இருக்கின்றனவே” என்றான். “நல்லவேளை இந்த உண்மையை நீ கண்டுபிடிக்கும் போது என்னோடு இருக்கிறாய். நான் உனக்கு முழு உண்மையையும் விளக்குகிறேன். எனெனில் எனக்கு அவற்றைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த முட்டைகள் உப்புக் கோழிகளிடமிருந்து கிடைக்கிறது, எனவே தான் உப்பாயிருக்கிறது” என்று விளக்கம் தந்தான் முன்னவனுக்குப் பின்னவன்.

89. தவறான மருத்துவம்

நோயாளியை ஆய்வுசெய்த மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டார். ஆய்வுசெய்தபின் மருத்துவர் சொன்னார் “பயப்படும்படி எதுவுமில்லை, எனினும் முழு ஓய்வு தேவை. சில நாள்கள் படுக்கையில் ஓய்வெடுப்பது நல்லது” என்று. ஆனால் சில நாள்களுக்குள்ளாகவே அந்த நோயாளி இறந்துவிட்டார். சினமுற்ற நோயாளியின் குடும்பத்தினர் தங்கள் வேலைக்காரனை அனுப்பி மருத்துவரை வசைபாடி விட்டு வரும்படி அனுப்பினர்.

வேலைக்காரனோ சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தான். “என்ன, அவரை நன்றாக வசைபாடினாயா?” என்று கேட்டனர். “இல்லை" என்றான் அவன். “ஏன்?” என்றனர் அவர்கள். அவன் சொன்னான் “மருத்துவரைச் சூழ்ந்து பெரும் கூட்டம் நின்று பல்வேறு வகைகளில் அவரை அனைவரும் வசைபாடிக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தை விலக்கி அருகில் சென்று அவரை வாயார வசைபாட முடியாமல் திரும்பி விட்டேன்” என்றான் வேலைக்காரன்.


90. குளிர் நீர் ஊற்று

“என் உள்ளம் குளிர்ந்தது” என்று தன் மனைவியிடம் கூறினான் ஒரு மனிதன். "நீங்கள் சொல்லுவதின் பொருள் என்ன?” என்று புரியாது வினவினாள் மனைவி. இப்போது தான் நான் குளிர்நீர் ஊற்றில் என் உள்ளத்தைக் கழுவினேன். எனவே என் உள்ளம் குளிராவிட்டால் அந்த நீர் ஊற்றுக்கு அதன் பெயர் பொருந்தாது போய்விடுமே” என்று தன் மனைவிக்குப் பொருள் புரியும்படி அருள்புரிந்தான் அந்தக் கணவன்.

91. கனவில் கண்ட காரிகை

இளைஞன் ஒருவன் இரவில் கனவொன்று கண்டான். காலையில் எழுந்ததும் பணிப் பெண்ணை அழைத்தான். “நேற்றிரவு என்னை நீ கனவில் கண்டாயா?” ‘இல்லை’ என்றாள். வேறெதுவும் அவள் சொல்லவில்லை.

சீற்றமுற்றான் இளைஞன். “நான் என் கனவில் உன்னைக் கண்டேன் என்பது முற்றிலும் உண்மை? அப்படியாயின் நீ மட்டும் என்னைக் காணவில்லை என்று எப்படிப் பொய் சொல்லலாம்’ என்று சொல்லிய வண்ணம் அம்மாவின் அறைக்குச் சென்று அம்மாவிடம் “அம்மா, உன்றன் பணிப்பெண் தண்டனைக்குரியவள். நேற்றிரவு அவளை நான் கனவில் கண்டு காதல் கொண்டேன். ஆனால் அவளே என்னை காணவில்லையென்று பொய் சொல்லுகிறாள்” என்று முறையிட்டான்.