உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரக் காட்சிகள்/கோவலன் கொல்லப்படுதல்

விக்கிமூலம் இலிருந்து

9. கோவலன் கொல்லப்படுதல்

அபசகுனம்

இங்ஙனம் கோவலன் வீட்டை விட்டு வெளிப்பட்டதும் அவனைக் காளை ஒன்று எதிர்த்துப் பாய வந்தது அஃது அபசகுனம் என்பதைக் கோவலன் அறியான்; ஆதலால் கடைத்தெருவை நோக்கிக் கடுகி நடந்தான்.

பொற்கொல்லன்

கோவலன் கடைத் தெருவிற் செல்லும் பொழுது எதிரில் கூட்டமாகச் சிலர் வருவதைக் கண்டான். அவர் அனைவரும் பொற்கொல்லர் ஆவர். அவர்கட்கு நடுவில் கம்பீரமாக ஒருவன் வந்தான். அவன் அரண்மனைப் பொற்கொல்லன். ஏனையோர் அவனுக்குக் கீழ் வேலை செய்து, வந்தவர் ஆவர். அவர் அனைவரும் கோவலன் சென்ற திசை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அரண்மனைப் பொற்கொல்லன்

கோவலன் அரண்மனைப் பொற்கொல்லனைச் சந்தித்து, “அரச மாதேவியர் அணியத்தக்க சிலம்பு. ஒன்று என்னிடம இருக்கின்றது. நீ அதனை விலை மதிக்கவல்லையோ?” என்று கேட்டான். அப்பொற் கொல்லன் கை தொழுது, “ஐயனே, அடியேன் பாண்டியர் பெருமானது அரண்மனைப் பொற்கொல்லன். அடியேன் பாண்டி மாதேவியார்ககு, அணிகள் செய்பவன்.” என்று அடக்கமாகக கூறினான்.

பொற்கொல்லன் யோசனை

உடனே கோவலன் தன் மூட்டையை அவிழ்த்துக் கண்ணகியின் காற்சிலம்பைக் காட்டினான். அதனில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களையும் பசும் பொன்னால் இயன்ற சிலம்பையும் கண்ட பொற்கொல்லன் பெரு வியப்பு அடைந்தான். அவன் கோவலனைப் பார்த்து “ஐயா, கோப்பெருந்தேவியரே இதனை அணியத் தக்கவர் வேறெவர்க்கும் இது தகுதி அன்று. ஆதலின் இச் சிலம்பைப் பற்றி யான் அரசர் பெருமானிடம்கூறி: அவர் உள்ளத்தை அறிந்து வருவேன்; அதுவரை நீர் இங்கு இருக்கலாம்,” எனறு ஓர் இடத்தைக் காட்டிக் கோவலனை அங்கு இருக்கச் செய்து, அரண்மனையை நோக்கி விரைந்து சென்றான்.

அரண்மனையில் ஆடல்-பாடல்

இங்ஙனம் பொற்கொல்லன் செல்ல அதே நேரத்தில் பாண்டியன் அரண்மனையில் இருந்த அரங்கத்தில் நாடகமகளிரது இசைவிருந்தும் நடன விருந்தும் நடைபெற்றன. அரசனும் அரசியும் அவற்றைக் கண்களிப்பக் கண்டுகொண்டு இருந்தனர். அரசனான பாண்டியன்-நெடுஞ்செழியன் சிறந்த இசைப்புலவன்; நடனக் கலையை நன்கு அறிந்தவன்; சிறந்த தமிழ்ப் புலவன். ஆதலால் அவன் இசையையும் நடனத்தையும் நன்றாக அநுபவித்தான். அவன் மனைவி ‘தலைவலி என்று கூறி அந்தப்புரம் சென்றுவிட்டாள். இசை விருந்து அளித்த மகளிர் தமிழ்ப் பண்களை இசைத்துக் குழல், யாழ் முதலிய கருவிகளின் துணைக்கொண்டு பாடினர். அப்பாடல்கள் செவிக்கும் உள்ளத்திற்கும் பேரின்பத்தை அளித்தன. நடன மகளிர் பலவகை நடனங்களை மிகவும் திறமையாக நடித்துக் காட்டினர். பாண்டியன் உள்ளம் மகிழ்ந்து அம்மகளிர்க்குப் பல்வகைப் பரிசுகளை வழங்கினான். அம்மகளிரும் பிறரும் அரண்மனையை விட்டு அகன்றனர். பிறகு பாண்டியன், ‘தலைவலி’ என்று சொல்லிச் சென்ற அரச மாதேவியைக் காண விரும்பினான். அதனால் அவளது அந்தப்புரம்நோக்கி விரைந்து நடந்தான்.

பொற்கொல்லன் சூழ்ச்சி

அந்தச் சமயத்தில், கோவலனை விடடுப் பிரிந்த பொற்கொல்லன் அரண்மனைக்குள் நுழைந்தான். அவன் பல நாட்களுக்கு முன்னர் அரச மாதேவியின் காற்சிலம்பு ஒன்றை பழுது பார்க்க எடுத்துச் சென்றான். அதனைத் தான் எடுத்துக் கொண்டான்; அது காணப்படவிலலை என்றும் தேடி வருவதாகவும் அரசியிடம் கூறி வந்தான் கோவலன் அக்கொடியவனிடம் கண்ணகியின் சிலம்பைக் காட்டினது தவறாக முடிநதது. அவன் அரண்மனை நோக்கி வரும்பொழுது “இப் புதியவனை, அரசமாதேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வன்” என்று அரசனிடம் கூறி அவனைக் கொல்லச் செய்வேன், என்று தனக்குள் முடிவு செய்து கொண்டான்

அவசரத்தில் அரசன் ஆணை

இந்தக் கொடிய எண்ணத்துடன் வந்த பொற்கொல்லன், அவசரமாக அந்தப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசனைக் கண்டான்; உடனே தரையில் வீழ்ந்து பணிந்தான். அரசன் அவசரமாகப் போக வேண்டியவன் ஆதலால். பதட்டத்துடன்: “என்ன செய்தி?” என்றான்.

உடனே பொற்கொல்லன், “ஐயனே, அவசரமான செய்தி ஒன்று உண்டு. அரச மாதேவியார் சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் தமது காற் சிலம்பு ஒன்றைப் பழுது பார்க்க கொடுத்திருந்தார். அஃது எவ்வாறோ மாயமாய்க் காணாமற் போனது. நான் பல இடங்கட்கும் ஆட்களை அனுப்பித் தேடி அலுத்தேன். அதனைத் திருடிய கள்வன் இன்று தானே வந்து என்னிடம் அகப்பட்டிருக்கிறான். “நீ இதனை விலை மதிக்க வில்லையோ?” என்று கேட்டான். சிலம்பு அவன் கையில் இருக்கின்றது", என்றான்.

‘அரச மாதேவியின் சிலம்பு கிடைப்பின், அஃது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஊட்டும்’ என்று அரசன் எண்ணினான்; உடனே அவள் சொன்ன “தலைவலி அவன் நினைவுக்கு வந்தது. அதனால் அரசன் அவசரத்தில் காவலரை அழைத்து, “இப் பொற்கொல்லன் கூறும் கள்வனிடம் சிலம்பு இருக்குமாயின், அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக", என்று கட்டளையிட்டு அந்தப்புரம் சென்றான்.

களவு நூல் கற்ற கள்வர்

பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்தது என்று மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவன் காவலருடன் விரைந்து சென்று கோவலன் தங்கி இருந்த இடத்தை அடைந்தான்; சிறிது தூரத்தில் நின்று கொண்டே கோவலனைச் சுட்டிக காட்டினான். காவலர் கோவலனைக் கூர்ந்து கவனித்தனர்; அவனது மாசற்ற முகத்தைக் கண்டனர்; “இவன் கள்வன் அல்லன்,” என்றனர். உடனே பொற் கொல்லன், ‘ஐயன்மீர் இவன் பண்பட்ட கள்வன்; களவு நூலில் கைதேர்ந்தவன். களவு நூலில் வல்ல கள்வர் பார்வைக்குக் குற்றமற்றவராகக் காணப்படுவர். ஆதலால் மேல் தோற்றத்தைக் கண்டு ஏமாறலாகாது. இவர்கள் மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி, ஆகிய எட்டின் துணைகொண்டு வாழ்பவர்கள்.இவற்றின் துணையினால் குற்றமற்றவர் போலவும் தனவந்தர் போலவும் யோகிகள் போலவும் கற்றறிந்தவர் போலவும் ஒழுக்கத்திற் சிறந்த சான்றோர் போலவும் நடிப்பர். ஆதலால் நீவிர் முகத்தைக் கண்டு ஏமாறலாகாது.” என நயமாக வற்புறுத்தினான்.

கோவலன் கொல்லப்படுதல்

ஊழ்வலிமை உடையது அல்லவா? ஆதலால் காவலருள் கொலை அஞ்சாத இளைஞன் ஒருவன் முன்னர்ப் பாய்ந்து தன் உடைவாளால் கோவலனை வெட்டி வீழ்த்தினான். அந்தோ கொடுமை! கொடுமை!!