உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரக் காட்சிகள்/கண்ணகி துயரம்

விக்கிமூலம் இலிருந்து

10. கண்ணகி துயரம்

ஆயர்பாடியில் அபசகுனங்கள்

மேற்கண்ட நிகழ்ச்சியை முன்னிட்டி ஆயர் பாடியில் சில அபசகுனங்கள் காணப்பட்டன. குடத்தில் இருந்த பால் உறையவில்லை; எருது கண்ணிர் விட்டது; உறியில் இருந்த வெண்ணெய் உருகி மெலிந்தது; ஆட்டுக்குட்டி சுறுசுறுப்பு இல்லாமல் குழைந்து கிடந்தது; பசுவின் பால் காம்புகள் ஆடின; பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய மணிகள் இற்று நிலத்தில் விழுந்தன. இந்தக் கேடுகளைக் கண்ட ஆயர் மகளிர், “இவை விரைந்து வருவதோர் துன்பத்தை உணர்த்தும் குறிகள் ஆகும். ஆதலின், நமது வழிபாடு கடவுளாகிய கண்ணனைப் பரவுவோம்” என்று துணிந்தனர் ‘துணிந்து, மாயவன் நப்பின்னைப்’ பிராட்டியுடன் ஆடிய கூரவைக் கூத்து ஆடத் தொடங்கினர்.


ஆய்ச்சியர் குரவை

குரவை என்பது எழுவர் அல்லது ஒன்பதின்மர் கைகோத்து ஆடும் கூத்து. ஆயர் மகளிர் அக் கூத்தினை ஆடிக்கொண்டே கண்ணபிரான் வீரச் செயல்களையும் பிற நல்ல இயல்புகளையும் அவன் எடுத்த பிற அவதாரங்களையும் அந்த அவதாரங்களில் அவன் செய்த அரிய செயல்களையும் பாராட்டிப் பாடினர். அப்பாடல்களில் ஒன்றை இங்குக் காண்க:

“பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!”

ஆயர் முதுமகள்

இங்ஙனம் ஆயர் மகளிர் கண்ணனைத் துதித்து வழிபட்டனர். அப்பொழுது ஆயர் முதுமகள்ஒருத்தி வைகையில் நீராடச் சென்று மீண்டவள் அங்கு வந்தாள். அவள் உள்நகரத்துச் செய்தி ஒன்றைக் கேட்டு அதனைச் சொல்ல விரைந்து வந்தாள். ஆனால் அவள் தான் கேள்வியுற்ற செயதியைக் கண்ணகிக்குக் கூற அஞ்சினாள்; அதனால் குரவையாடி நின்ற மகளிரிடம் தான் கேட்ட செய்தியைக் கூறிக் கண்ணகியைப் பார்த்துக் கண்ணிர் விட்டு நின்றாள்.

கண்ணகியின் கவலை

அந்நிலையில், குரவைக் கூத்தினைக் கவனித்து நின்ற கண்ணகி, மாதரிமகளான ஐயை என்பாளை நோக்கி “தோழி, என் காதலன் இன்னும் வரவில்லையே? அதனால் என் நெஞ்சம் கலங்குகிறது; என் மூச்சுத் தீயுடன் கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் உள்ள என்னை நோக்கி இந்த ஆய்ச்சியர் ஏதோ பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேச்சின் கருத்து யாதோ தெரியவில்லையே! கோவலன் சென்றபோதோ என் நெஞ்சம் கலங்கியது. அந்நேரமுதல் என் உள்ளம் கலங்கிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் பேசிக்கொள்வது முக்கியமான செய்தியாகும். இவர்கள் பேசுவதற்கு ஏற்ப என் காதலன் வரவில்லை. ஐயோ! நான் என்ன செய்வேன்” என்று வருந்திக் கைகளைப் பிசைந்து நின்றாள்.

முதுமகள் கூற்று

அந்த நிலையில், முன் சொன்ன ஆயர் முது மகள் வாயைத் திறந்து, “இவள் கணவன் அரசனது அரண்மனையில் இருந்த சிலம்பைத் திருடிய கள்வன் என்று கருதப்பட்டுக் கொலை செய்யப் பட்டான்” என்று கூறினாள்.

கண்ணகி புலம்பல்

அவ்வளவே: கண்ணகி பொங்கி எழுந்தாள்; தன்வசம் இழந்து, நிலத்தில் மயங்கி வீழ்ந்தாள். கார்மேகம் போன்ற அவள் கூந்தல் தரையிற். புரண்டது. வீழ்ந்த கண்ணகி மயக்கம் தெளிந்து எழுந்தாள். அவள் கண்கள் சிவந்தன. அவள் தன் கண்கள் கலங்கும்படி கையால் மோதிக் கொண்டு அழுதாள்; “ஐயனே, நீ எங்கு இருக்கின்றாய்!” என்று வாய்விட்டு அழுதாள்; “பாண்டியன் தவறு செய்ததால் கணவனை இழந்தேனே! அந்தோ! அவன் இறந்தான் என்பது கேட்டு இன்னும் நான் இறக்கவில்லையே! அறக்கடவுளே, நீ உலகில் இருக்கின்றாயா? இந்த அநீதியைப் பார்த்துக் கொண்டா இருக்கின்றாய்? குற்றமற்ற என் காதலனைக் ‘குற்றம் உள்ளவன்’ என்று கோலை செய் வித்த பாண்டியன் செங்கோல் அரசனா? என்று பலவாறு புலம்பினாள். பிறகு கண்ணகி சூரியனைப் பார்த்து, “காய்கின்ற கதிர்களையுன்டய பகலவனே நீ அறிய என் கணவன் கள்வனா?” என்றாள். உடனே, “உன் கணவன் கள்வன் அல்லன்; அவனுக்குத் தவறு இழைத்த இவ்வூரை எரி உண்னும்,’ என்று ஒரு குரல் அங்குக் கூடியிருந்தோர் அனைவர்க்கும் கேட்டது.

பின்னர்ப் பத்தினியாகிய கண்ணகி தலைவிரி கோலமாக மதுரை நகருள் புகுந்தாள்; தெருக்கள் வழியே ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்திச் சென்றாள். சென்றவள். “மாநகரத்துப் பத்தினிகாள், என் கணவன் எனது காற்சிலம்பு ஒன்றை விற்க இந்நகரத்துக்கு வந்தான்; ம்திகெட்ட் பாண்டியனால் கொலை செய்யப்பட்டான். நான் என் காதற் கணவனைக் காண்பேன்; அவன் வாய்ச் சொல்லைக் கேட்பேன்,’ என்று பலவாறு புலம்பிக் கொண்டே போனாள்.

மதுரை மனக்கலக்கம்

மதுரை மாநகரத்தில் வாழ்ந்த பத்தினிமாரும் சான்றோரும் கண்ணகியின் பொறுத்தற்கு அருமையான துன்ப நிலையைக் கண்டு கண்ணிர் உகுத்தனர்; “ஐயோ, இவள் மிக்க இளம் பெண்; செல்வச் சீமான் மகளாகக் காண்கிறாள்; நற்குடிப் பிறப்புடையவள் போலக் காண்கிறாள். இவளுக்கு இக்கொடுமை இழைக்கப்பட்டதே! பாண்டியன் நெறி தவறாதவன் அல்லவா? அவனது வளையாத செங்கோல் வளைந்ததே! என்னே ஊழ்வினை இருந்தவாறு!” என்று கூறி மனம் வருந்தினர்.

கொலைக்களக் காட்கி

இங்ஙணம் மாநகர மக்கள் மனம் பதறக் கண்ணகி தெருத் தெருவாகப் புலம்பிச் சென்றாள்; முடிவில் தன் கணவன் கொலையுண்ட இடத்தைக் குறுகினாள்; தன் ஆருயிர்க் காதலனது உடல் இரத்த வெள்ளத்தில் படிந்திருக்க கண்டாள். அந்தோ! அவனது ஆவியற்றவுடலைக் கண்டாள் ஆனால், கோவலன் தன் காதலியின் சோக நிலையைக் காணவில்லை. அந்த நேரத்தில் கண்ணகியின் துயரை நேரிற்காணப் பெறாதவனாய்க் கதிரவன் மேல் திசையில் மறைந்தான்; அதனால் எங்கும் இருள் சூழத் தலைப்பட்டது.

கொலைகளத்தில் கண்ணகி

கண்ணகி, கணவன் உடலைக் கண்டு, நீர் எனது துயரத்தைக் காணவில்லையா? உமது மண மிக்க நறுமேனி மண்ணிலும் இரத்தத்திலும் புரண்டு கிடக்கத் தக்கதோ? பாவியாகிய நான் செய்த தீவினை தான் எனக்கு இக்கொடிய காட்சியை அளிக்கின்றதோ? பாண்டியன் நெறி தவறிய செயலால் உமது உயிரா போக வேண்டும்? எனது வாழ்வன்றோ இதாலைந்தது! இந்நாளில் பத்தினிகளும் சான்றோரும் இருப்பின் இந்த அநீதி நடவாது ...என்னே என் கொடுவினை!” என்று பலவாறு புலம்பித் தன் கணவன் உடலைத் தழுவிக் கொண்டாள்.

அவ்வளவில் கோவலன் உயிர் பெற்றான்; கண் பெற்றுக் கண்ணகியை நோக்கி, நிறைமதி: போன்ற நின் முகம் வாடியதேன்?” என்று கூறி அவளது முகத்தைக் கையால் துடைத்தான், கண்ணகி அவன் திருவடிகளை இரண்டு கைகளாலும் பற்றி வணங்கினாள். கோலலன் “நீ, இங்கு இருப்பாயாக’ என்று கூறி பிணமானான்.

இந்நிகழ்ச்சி கண்ணகிக்கு மயக்கத்தை உண் டாக்கியது. அவள் செய்வகை தோன்றாது சோக நிலையில் நின்றாள். பிறகு ஒருவாறு துணிந்து பாண்டியன் அரண்மனை நோக்கி நடந்தாள்.