சிலப்பதிகாரக் காட்சிகள்/சிலப்பதிகாரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. சிலப்பதிகாரம்

இளங்கோ அடிகளும் சாத்தனாரும்

பத்தினி விழாப் பாங்குற முடிந்தது. கனகவிசயர் செறுக்கு அடங்கிச் சேரனைப் பணிந்து விடைப் பெற்று தம் நாடு சென்றனர். தமிழ்நாடு எங்கனும் பத்தினியின் பெயர் பரவியது தமிழ் மக்கள் பத்தினியைக் கண் கண்ட தெய்வமாகக் கொண்டாடினர். சேரர் பெருமான் தம்பியான இளங்கோ அடிகளும் நண்பரான மதுரைக் கூல வாணிகன் சாத்தனாரும் கண்ணகி விழா நிகழ்ச்சிகளை எல்லாம் கூர்ந்து கவனித்து வந்தனர். தேவந்தி என்ற பார்ப்பணத் தோழி, பத்தினிக் கோயிலில் தங்கிப் பூஜையை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தாள்.

மணிமேகலை

கோவலனுக்கு மகளாகிய மணிமேகலை என்பவள் பெளத்த மதத்தைச் சார்ந்தாள்; அறவண அடிகள் என்ற பெளத்த சமயத்துறவியிடம் அறவுரை பெற்றாள். காஞ்சி பூம்புகார் என்ற நகரங்களில் இருந்து அன்னதானம் செய்தாள், ஜாவா மணிபல்லவம் முதலிய தீவுகட்குச் சென்று மீண்டாள்; பத்தினிக் கடவுள் கோவிலுக்கு வந்து, பத்தினியைத் தரிசித்து ஆசி பெற்றாள்; பல சமயவாதிகளைச் சந்தித்து, அவரவர்கள் சமயக் கொள்கைகளைக் கேட்டறிந்தாள்; இறுதியில் அறவன அடிகள் உபதேசப்படி, தவம் கிடந்து துறக்கம் அடைந்தாள். அவளது பெயரும் புகழும் தமிழ் நாட்டில் நன்கு பரவின.

இரு பெருங் காவியங்கள்

இவ்விரண்டு வரலாறுகளும் நடைபெற்று ஆண்டுகள் சில கழிந்தன. ஒருநாள் வஞ்சி அரண் மனையில் சேரன்-செங்குட்டுவன் முன் சாத்தனார் இளங்கோ அடிகளை நோக்கி, “அடிகளே, கோவலன்-கண்ணகி வரலாற்றை நீவிர் ஒரு காவியமாகப் பாடியருளல் வேண்டும்” என்று வேண்டினர். அடிகள் சாத்தனாரை அன்புடன் நோக்கி, “புலவரே, நீவிர் மணிமேகலை வரலாற்றை ஒரு காவியமாகப் பாடுவதாயின், நான் உமது விருப்பம்போல் ஒரு காவியம் பாடுவேன்” என்றனர் சாத்தனாரும் அதற்கு இசைந்தனர்.

சிலப்பதிகார அரங்கேற்றம்

பல மாதங்கள் கழிந்தன. பின்னர் ஒரு நாள் வஞ்சிமாநகரத்தில் வஞ்சி வேந்தனது பேரவையில் தமிழ் நாட்டுப் பெரும் புலவர்கள் கூடியிருந்தனர். கூட்டத்திற்குச் சாத்தனார் தலைமை வகித்தார். இளங்கோவடிகள், கோவலன்-கண்ணகித் தொடர்பாகத் தாம் பாடிய சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் படித்து பொருள் விளக்கி அரங்கேற்றம் செய்தார். புலவர் அனைவரும் கேட்டுப் பெருமகிழ்ச்சிகொண்டு தலை அசைத்துத் தமது பாராட்டை அறிவித்தனர்.

மணிமேகலை அரங்கேற்றம்

மறு நாளும் பேரவை கூடியது. அன்று இளங்கோ அடிகள் பேரவைக்குத் தலைமை தாங்கினார். சாத்தனார் தாம் பாடிய மணிமேகலை என்ற காவியத்தைப் படித்து ஆங்காங்கு பொருள் விளக்கம் செய்தார். அடிகளும் பிற புலவரும் நூலினைப் பாராட்டி மகிழ்ந்தனர். சேர வேந்தனான செங்குட்டுவன் இரு நூல்களையும் பாராட்டிப் பேசினான்; சாத்தனார்க்குத் தக்க பரிசில் நல்கினான்; பல ஊர்களில் இருந்து வந்து அவையைச் சிறப்பித்த புலவர்க்குப் பரிசுகள் அளித்து மகிழ்ந்தான். அன்று முதல் சிலப்பதிகாரமும்-மணிமேகலையும் இரட்டை நூல்கள் என்று கூறப்பட்டன. அவை இரண்டும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் ஆயிரக் கணக்கான தமிழ்மக்களால் விரும்பிக் கற்கப்பட்டு வருகின்றன

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் முப்பது பிரிவுகளை உடையது ஒவ்வொரு பிரிவும் ஒரு 'காதை' எனப்படும். சிலப்பதிகாரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே (1) புகார்க் காண்டம் (2) மதுரை காண்டம், (3) வஞ்சிக் காண்டம் என்பன. புகார், மதுரை, வஞ்சி என்பன முறையே சோழ-பாண்டிய-சேர நாட்டுத் தலைநகரங்கள் அல்லவா? கண்ணகி பூம்புகாரிற் பிறந்தவள் வளர்ந்தவள். அவள் கோவலனுடன் மதுரையை அடையும் வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதி புகார் காண்டம் எனப்படும்; அவள் மதுரையை அழித்துச் சேரநாடு நோக்கி நடந்த வரை கூறும் பகுதி மதுரைக் காண்டம் எனப்படும்; அவள் வேங்கைமர நிழலில் நின்றது முதல் பத்தினி விழா முடியவுள்ள பகுதி வஞ்சிக் காண்டம் எனப் பெயர் பெறும்.

மூவரசர் பாராட்டு

புகார்க் காண்டத்தின் இறுதியில் சோழ அரசன் சிறப்பு குறிக்கப்பட்டுள்ளது. மதுரைக் காண்டத்தின் இறுதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வீரம், நீதி முறை முதலியன பேசப்பட்டு இருக்கின்றன. வஞ்சிக் காண்டத்து ஈற்றில் சேர அரசனுடைய குண நலன்கள் பாராட்டப்பட்டுள்ளன.

நூலின் சிறப்பு

கண்ணகி சோழ நாட்டைச் சேர்ந்தவள்; பாண்டி நாட்டில் கணவனை இழந்தவள்; சேர நாட்டில் துறக்கம் புகுந்தவள். அவள் சோழர் தலை நகரமான புகாரில் பிறந்து வளர்ந்தவள்; பாண்டியர் தலைநகரமான மதுரையில கணவனை இழந்தவள்; சேரர் தலைநகருக்கு, அண்மையில் துறக்கம் அடைந்தவள். அவள் பாண்டியனைக் கண்டு வழக்குரைத்து வென்றவள்: சேர அரசனால் தெய்வமாக வணங்கப்பட்டவள், இப்பண்புகளால் அவளது வரலாறு மூன்று தமிழ் நாடுகட்கும்மூன்று தலை நகரங்கட்கும் தமிழ் அரசர் மூவர்க்கும் உரியதாயிற்று, மேலும், இந்நூலில் குறிஞ்சி (மலைநாடு), பாலை (பாலைவனம்), முல்லை (காட்டு நிலம்) முதலிய நில அமைப்புகளும் அங்கு வாழும் மக்கள் இயல்புகள் அவர் வழிபாட்டு முறைகளும் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. இன்று காணக் கூடாத நிலையில் அழிந்து பட்ட பூம்புகார் நகரம், வஞ்சி மாநகரம் முதலிய நகரங்களின் அமைப்பையெல்லாம் இந்நூலிற்காணலாம். இந்நூலில், இயற்றமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் என்னும் மூவகைத் தமிழையும் கண்டு மகிழலாம். பண்டைக்கால நடன வகைகள் இந்நூலைக் கொண்டுதான் அறிய முடிகின்றன. சுருங்கக் கூறின், இந்நூலைக் கொண்டு கி.பி 2-ஆம் நூற்றாண்டின் தமிழகத்தை ஒருவாறு அறியலாம். வேறு எந்தத் தமிழ் நூலைக் கொண்டும் இந்த அளவு அறிதல் இயலாது

இந்நூல் நடை மிகவும் எளிமை வாய்ந்தது. படிக்க இனிமை பயப்பது. இளங்கோ அடிகள்: கண்ணகி வரலாற்றைப் படிப்பவர்க்கு இன்பம் பயக்கத்தக்க முறையில் பாடியுள்ளனர். இந்தச் சிறப்பை நோக்கியே காலஞ்சென்ற சுப்பிரமணிய காரதியார் இதனை,

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்”, என்று வாயார வாழ்த்தினார்.