சிலப்பதிகாரக் காட்சிகள்/பத்தினிக் கோவில்

விக்கிமூலம் இலிருந்து

14. பத்தினிக் கோவில்

வடநாட்டு யாத்திரை

சேரன்-செங்குட்டுவன் குறித்த நாளில்-குறித்த நல்ல நேரத்தில் தன் பரிவாரங்கள் சூழ வஞ்சி மாநகரத்திலிருந்து வடக்கு நோக்கில் புறப்பட்டான். அவன் சிறந்த சிவபக்தன்; சிவபிரான் அருளால் பிறந்தவன்; ஆதலின் சிவபெருமானைப் பூசித்துப புறப்பட்டான். வஞ்சி மாநகரத்து மக்கள், “எங்கள் பெருமான் வெற்றி பெற்று மீள்வானாக” என்று வாழ்த்தி வழியனுப்பினர். அப்பொழுது திருமால் பிரசாதம் சேர வேந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவன் தன் படைகள் புடைசூழ இமயம் நோக்கிச் செல்லலானான்.

சேரன் வழிநெடுக இயற்கைக் காட்சிகளைக் கண்டுகொண்டே சென்றான்; படைவீரர் தம் அரசர் பெருமான்னப் பற்றிய வீரப் பாடல்களை யும் சேர நாட்டுப் பழமை-வீரம்-சிறப்புமுதலியவற்றை விளக்கும் நாட்டுப் பாடல்களை யும் பாடிக் கொண்டு அணியணியாகச் சென்றனர். குதிரைப் படைகளின் செலவினால் கிளம்பிய புழுதி மேல் எழும்பி மேகங்கள் எனப் படர்ந்தன. வீரர் ஏந்திய ஈட்டிகளின் பளபளப்புத் தூரத்தில் இருந்து காண்போர்க்கு மின்னலைப் போலக் காட்சி அளித்தது,

நீலகிரியில் தங்கல்

சேரர் பெருந்தகை இங்ஙனம் சென்று நீலகிரியில் இளைப்பாறத் தங்கினான், அங்குச் சில நாட்கள் இருந்தான். அவன் அங்குத் தங்கப் போவதை முன்னரே அறிந்த சுற்றுப்புற நாட்டரசர் தத்தம் உத்தியோகஸ்தர் மூலமாகப் பலவகை விலை உயர்ந்த பொருள்களைச் சேரனுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தனர். பல நாட்டு நாடக மகளிரும் ஆடு மகளிரும் பாடு மகளிரும் தத்தம் பரிவாரங்களுடன் சேரனைக் கண்டு வணங்கி ஆடல்-பாடல்களைப் புரிந்தனர். சேரப்பெருமான் அவர்களுக் குத் தக்கவாறு பரிசில் நல்கி விடை கொடுத்தான்.

சஞ்சயன்

நூற்றுவர் கன்னர் அனுப்பிய சஞ்சயன் என்ற தூதுவர் தலைவன், பல வரிசைகளுடன் வந்துசேர வேந்தனைக் கண்டான் சேர அரசன் அவனுக்குத் தக்க மரியாதை செய்து மகிழ்ந்தான்; தன் படைகள் கலக்கம் இன்றிக் கங்கையைக் கடத்தற்கு ஏற்ற கலங்களைத் தயார் செயது வைக்கும்படி வேண்டி னான். சஞ்சயன் அவ்வாறே செய்வதாக வாக்களித்து அகன்றான்.

உத்தர கோசலத்தில் தங்கல்

பின்னர்ச் சேரன் நீலகிரியை விட்டு புறபபட்டு வடக்கு நோக்கிச் சென்றான்; பல நாடுகளைக் கடந்தான்; இறுதியில் கங்கையின் தென் கரையை அடைந்தான். அங்கு சஞ்சயன் பல கப்பல்களுடன் காத்திருந்தான். படைகள் யாவும் கப்பல்களில் ஏறி அக்கரையை அடைந்தன. சேர பெருமான் உத்தர கோசலத்தை அடைந்து, ஓர் இடத்தில் தன் பரிவாரங்களுடன் தங்கி இருந்தான்.

உத்திர கோசலத்தில் போர்

சேரனது வடநாட்டு யாத்திரையை கேள்வியுற்ற கனக விசயர் என்ற சகோதரர்; தமக்குத் துணையாகச் சிற்றரசர் பலரை சேர்த்துக்கொண்டு உத்தர கோசலத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் பெருஞ்சேனையைப் போருக்கென்று தயாரித்திருந்தனர்; செங்குட்டுவன் உத்தர கோசலத்தில் தங்கியதை அறிந்ததும் திடீரென அவன் படைகளை வளைத்துக் கொண்டு தாக்கினர். கனக விசயர் செறுக்கை அடக்க வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்து கொண்ட செங்குட்டுவன் தன் படை வீரர்க்குப் போர் துவக்குமாறு ஆணையிட்டான். உடனே இருதிறத்துப் படைகளும் கை கலந்தன. புலிக் கூட்டத்து நடுவில் சிங்க ஏறு பாய்வதைப் போலச் சேரர் பெருந்தகை உருவிய வாளுடன் பாய்ந்து அரசர் பலரைக் கொன்றான். வஞ்சி வீரர் வாட்போரில் வல்லவர்; அதனால் அவர்கள் வாளுக்குப் பகைவர் பலர் இரையாயினர். போர் பதினெட்டு நாழிகை நடைபெற்றது. முடிவில் கனக விசயர் சிறைப்பட்டனர். சேரன்-செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

இமயத்திலிருந்து சிலை கொணர்தல்

பின்னர் அரசனது ஏவலால் படைவீரர் இமயம் சென்று பத்தினியின் உருவத்தைச் செதுக்குவதற்கு உரிய கல்லைத் தேர்ந்து எடுத் தனர்; அதனைக் கங்கையாற்றிற் கொணர்ந்து நீராட்டினர்; நீராட்டிய அக்கல்லைக் கனக விசயர் முடி மீது ஏற்றி வஞ்சி மாநகர் நோக்கிப் புறப்பட்டனர்.

மாடலன் என்ற மறையவன்

சேரன் உத்தரகோசலத்துப் பாசறையில் தங்கி இருந்த பொழுது மாடலன் என்ற மறையவன் ஒருவன் அங்கு வந்தான். அவன் பூம்புகார் நகரத்தினன். அவன் கோவலன்-கண்ணகி வரலாற்றைச் சேரனுக்கு விளங்கவுரைத்தான்; கோவலன் இறந்தது கேட்டு அவன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்தமையும் இருவர் தந்தையரும் துறவிகள் ஆன செய்தியையும் கூறினான்; மாதவியும் அவள் மகளான மணிமேகலையும் பெளத்த சமயத்தில் சேர்ந்து விட்டமையும் குறிப்பிட்டான்.

வஞ்சி மீளுதல்

சேரன்- செங்குட்டுவன் முப்பத்திரண்டு மாதங்கள் கழித்து வஞ்சி மீண்டான். அவன் வெற்றியுடன் திரும்பி வருவதை அறிந்த மாநகரத்து மக்கள் நகரை அலங்கரித்தனர்; பல வகை மங்கல ஒலிகளுக்கு இடையே அவனைப் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்பேரரசன் சேரர் அரண்மனைக்குள் நுழையும் பொழுது யாவரும் வாழ்த்தி மலர்மழை பொழிந்தனர். உள் நுழைந்த சேரர் பெருமானை அரச மாதேவி அன்று அலர்ந்த மலர்களால் பாதபூசை செய்து வரவேற்றாள்.

கண்ணகிக்குக் கோவில்

கண்ணகித்தெய்வம் வந்து நின்ற மலையருகில் கோவில் கட்டப்பட்டது. இமயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சிலையில் பத்தினியின் திருவுருவம் செதுக்கப்பட்டது. உருவத்தின் அடியில பெயரும் பீடும் எழுதப்பட்டன. நல்ல நாளில், பத்தினிச் சிலை நாட்டப்பட்டது. அந்த நல்ல நாளில் அரசனது அழைப்புக்கு இணங்கிக் கடல் சூழ் இலங்கை கயவாகு[1] வேந்தன், மாளுவ நாட்டு மன்னர், நூற்றுவர் கன்னர் முதலிய அரசர் பலர் வந்திருந்தனர் முன் சொன்ன பெண்மணிகள் மூவரும் கண்ணகியை வாழ்த்திப் பாடினர்.

பத்தினி வாழ்த்தல்

அப்பொழுது விண்ணில் ஓர் உருவம் தோன் றியது. அது கைகளில் வளையல்களும் கழுத்தில் மாலைகளும் காதுகளில் தோடுகளும் அணிந்திருந் தது. அவ்வுருவம், “தோழிகளே, யான் இம்மலையில் விளையாடல் புரிவேன். என் கணவரைக கொல்வித்த பாண்டியன் குற்றமுடையவன் அல்லன். அவன் தேவேந்திரன் அரண்மனையில் விருந்தினனாக இருக்கிறான். நான் அவன் மகள். எனக்குச் சிறப்புச் செய்த செங்குட்டுவன் வாழ்க!" என்று வாழ்த்தி மறைந்தது,

பிறகு வஞ்சி மகளிரும் தேவந்தி முதலியவரும் கண்ணகித் தெய்வத்தைப் பலவாறு வாழ்த்தினர். பிரதிட்டை விழாச் சிறப்பாக நடைபெற்றது. மாளுவ மன்னரும் கயவாகு வேந்தனும் பிறரும், “அம்மே, நீ சேர நாட்டில் எழுந்தருளி இருப்பதைப் போலவே எங்கள் நாடுகளிலும் எழுந்தருளி இருந்து எங்களை வாழ்விக்க வேண்டும்” என்று பத்தினிக் கடவுளை வேண்டினர். அப்பொழுது “தந்தேன் வரம்” என்று ஒரு குரல் விண்ணிடை எழுந்தது.

பல நாடுகளில் பத்தினிக் கோவில்

செங்குட்டுவன் தேவந்தி என்ற பார்ப்பனத் தோழியைப் பத்தினிக் கோவிலில் இருந்து நாளும் பூசை செய்து வருமாறு ஏற்பாடு செய்தான். பூசை, விழா இவற்றுக்குக் குறைவு நேராதபடி பெரும் பெரும் நிலங்களும், தேவதானமாக விட்டான். அக்கோயில் அன்று முதல் ‘பத்தினிக் கோயில்’ எனப் பெயர் பெற்றது. மாளுவ மன்னர் தம் நாட்டில் கட்டிய கோயிலுக்கு இப்பெயரே இட்டனர். அப்பெயர் நாளடைவில் மருவி இன்று ‘பைதனி கோயில் என்று வழங்குகிறது. கயவாகு மன்னன் பத்தினிக்கு எடுப்பித்த சிலை இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.

  1. இவன் கஜபாஹூ என்பவை ‘இவன் காலம் கி. பி. 171-193, இக்குறிப்பினாற்றான் சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.