சிலப்பதிகாரக் காட்சிகள்/சேரன்–செங்குட்டுவன்

விக்கிமூலம் இலிருந்து

13. சேரன்-செங்குட்டுவன்

செங்குட்டுவன்

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன்-செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன்

வட நாட்டுப் போர்

செங்குட்டுவன் ஏறத்தாழ இருபது வயதிற் பட்டம் பெற்றான்; ஐம்பது வருட காலம் அரசாண்டான். அவன் சிறந்த போர் வீரன்; தன் தாயான நற்சோணை என்பவள் இறந்தவுடன், அவளுக்கு உருவம் சமைக்கத்தக்க கல்லை இமயத்திலிருந்து எடுத்துவரச் சென்றான்; அப்பொழுது அவனது நோக்கம் அறியாத வட இந்திய அரசர்கள், அவன் தங்கள் மீது படையெடுத்து வருவதாகக் கருதித் தாக்கினர். செங்குட்டுவன், புலிக் கூட்டத்தினுட் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து அவர்களை வென்றான்; இமயம் சென்று கல்லைக் கொணர்ந்தான்; அதன் மீது தன் தாயின் உருவத்தைப் பொறித்தான்; அச்சிலையை நட்டு கோயில் எடுப்பித்தான்.

சோழருடன் போர்

செங்குட்டுவன் மாமனான மணக்கிள்ளி இறந்தவுடன் அவன் மகனான நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற முயன்றான். அம்முயற்சியை அவன் தாயத்தார் எதிர்த்துச் சோழ நாட்டில் கலகம் விளைவித்தனர். சேரர் பெருமான் பெரும்படையுடன் ‘அங்குச் சென்று, கலகம் விளைவித்த சோழ அரசர் மரபினர் ஒன்பதின்மரை ‘நேரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான்; தன் மைத்துனச் சோழனைச் சோழ அரசனாக்கி மீண்டான்

சோழ-பாண்டியருடன் போர்

ஒருமுறை சோழ மரபினர் சிலர் பாண்டிய அரசனுடன் சேர்ந்து சேரனைஎதிர்த்தனர். போர் ‘கொங்கர் செங்களம்’ என்ற இடத்தில் நடந்தது. சேரன், யானைக் கூட்டத்தில் புலி பாய்வதைப் போலப் பாய்ந்து பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்தான். அதுமுதல் அவன் ஆயுட்காலம் வரை சோழ பாண்டியர் அடங்கிக் கிடந்தனர். சேரன் தமிழ்நாட்டுத் தலைவனாக விளங்கினான்.

பேரரசன்

சேரன் கங்கர், கொங்கர், கொங்கணர் முதலிய பல நாட்டரசரை வென்று தென் இந்தியாவிற் பெருவீரனாக விளக்கமுற்று இருந்தான். அவனது பெயர் இமய முதல் குமரி வரை பரவி இருந்தது.

மலைவளம் காணல்

கண்ணகி வானுலகப் சென்று சில மாதங்கள் ஆயின. ஒருநாள் செங்குட்டுவன் தன் கோப்பெருந்தேவியுடனும் இளங்கோ அடிகளுடனும் பரிவாரங் ளுடனும் பேரியாற்றங்கரை வழியே மலைவளம் காணச் சென்றான். யாவரும் மலை நாட்டு வளத்தைக் கண்டு கொண்டே ஆற்றோரம் சென்றனர்; பிறகு ஓரிடத்தில் தங்கினர்.

சாத்தனார்

சாத்தனார் என்பவர் மதுரையில் இருந்த தமிழ்ப் புலவர். அவர் நெல், வரகு, சோளம் முதலிய கூல (தானிய) வகைகளைக் கொண்ட கடை ஒன்றை வைத்திருந்தார். அவர் நம் செங்குட்டுவனுக்கும் இளங்கோ அடிகட்கும் உயிர் நண்பர் ஆவர். அவர் அடிக்கடி சேரநாட்டுக்கு வந்து போவது வழக்கம். அப்புலவர் சேரனைக் காண வஞ்சி மாநகரம் சென்றார்; அரசன் மலை வளம் காணப் போயிருப்பதை அறிந்தார். அரண்மனை ஆட்கள் வழி காட்ட வந்து சேரர் பெருமா னையும் அடிகளையும் கண்டு அடி பணிந்தார். உடன் பிறந்தார் இருவரும் அவரைத் தழுவி மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தங்கள் மன்னர் பெருமான் மலை நாடு நோக்கி வந்தான் என்பதை மலைவாணர் அறிந்து மகிழ்ந்தனர்; அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களையும் மலையில் விளையும் பலவகைப் பழங்களையும் எடுத்துக் கொண்டு தங்கள் அரசர் பெருந்தகையைச் சென்று கண்டனர். மன்னன் மகிழ்ந்து, “மலைவாணரே உங்கள் மலை நாட்டில் ஏதேனும் விசேஷம் உண்டோ?” என்று கேட்டான்.

கண்ணகி விண்ணகம் புகுந்த செய்தி

உடனே குன்றக் குறவர் அரசனைப் பணிந்து, “பெருமானே சில மாதங்கட்கு முன்பு எங்கள் மலையில் இருந்த வேங்கைமர நிழலில் இளமங்கை ஒருத்தி வந்து நின்றாள். அவள் கணவனைப் பறி கொடுத்தவள்; பொறுக்க முடியாத துன்பத்தை அநுபவித்தவள். அவள் கண்ணெதிரே ஒரு விமானம் வந்து நின்றது. அவள் அதனில் இருந்தவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவன் அவள், கணவன் போலும்! அவள் அவ்விமானத்தில் ஏறிக் கொண்டாள். விமானம் மறைந்தது அவள் எந்த நாட்டவளோ? யார் மகளோ என்றனர்.

சாத்தனார் விளக்கம்

அரசனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அரசமாதேவி ஆச்சரியப்பட்டாள். இளங்கோவடிகள் சாத்தனார் முகத்தைப் பார்த்தார். சாத்தனார் புன்முறுவலுடன், “அவள் வரலாற்றை யான் அறிவேன்.” என்று கூறினர். உடனே அனைவரும் “கூறியருளுக” என்றனர். சாத்தனார் வீரபத்தினியின் வரலாற்றை விளங்கவுரைத்தார்.

செங்குட்டுவன் கேள்வி

துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது. அவன் கோப்பெருந்தேவி அறக்கற்பு உடையவன். அரசன் ஒரு நாட்டைக் காப்பது துன்பமுடைய செயலே ஆகும்” என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான்.

அரசி பதில்

பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.

சேரன் செய்த முடிவு

உடனே சேரர் பெருமான் அமைச்சரைப் பார்த்தான. அமைச்சர் அரசனைப் பணிந்து, “அரசே, பத்தினிக்குரிய கல்லைப் பொதிய மலையிலிருந்து கொணர்ந்து காவிரியில் நீராட்டலாம்; அல்லது இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்டலாம் தேவரீர் விருப்பப்படி இரண்டில் ஒன்றைச் செய்யலாம்” என்றனன். அரசன், “அமைச்சரே, நமது தாயார் பொருட்டு நாம் இமயம் சென்றபோது ஆரியமன்னரை வென்றோம் அல்லவா? அவர் மரபினர் ‘அச்சேரன் இப்பொழுது இங்கு வரட்டும்; பார்ப்போம்’ என்று வீரம் பேசுகின்றனராம் ஆதலால் நாம் இமயம் சென்று கல்லைக் கொணர்வதே தக்கது. நமது வடநாட்டு யாத்திரையை மாநகரத்தார்க்கு அறிவித்திடுக. இச்செய்தி பல நாட்டு ஒற்றர் மூலம் பல நாடுகட்கும் பரவி விடும். நம் நண்பரான நூற்றுவர் கன்னர்க்கும்[1] அறிவித்திடுக நாம் அவர்கள் உதவி கொண்டே கங்கையாற்றைக் கடக்கவேண்டும்” என்றான். பின்னர் யாவரும் வஞ்சி மாநகரத் திற்குத் திரும்பினர்.

  1. நூற்றுவர், கன்னர், சதகர்ணி என்ற பட்டமுடைய ஆந்திர மன்னர் ஆவர்.