உள்ளடக்கத்துக்குச் செல்

சிலப்பதிகாரக் காட்சிகள்/கண்ணகி விண்ணகம் புகுதல்

விக்கிமூலம் இலிருந்து

12. கண்ணகி விண்ணகம் புகுதல்

மதுரை தீப்பிடித்தல்

மதுரையை அழிப்பதாக வஞ்சினம் கூறிய கண்ணகி. "மதுரை மாநகரத்தில் உள்ள பத்தினிகளே, குற்றமற்ற பெருமக்களே, தெய்வங்காள், மாதவர்களே, கேளுங்கள்; எனது குற்றமற்ற காதலனுக்குத் தவறு இழைத்த இக் கோ நகரைச் சீறினேன்; யான் குற்றம் இல்லாதவள்” என்று கூறினாள்; தனது இடப்பக்க மார்பை வலக் கையால் திருகினாள்; நகரத்தை மும்முறை வலம் வந்தாள்; திருகிய மார்பை வட்டித்து எறிந்தாள். உடனே பீடு மிக்க மாட மதுரையில் பெருந் தீப் பற்றிக் கொண்டது.

பாண்டியன் அரண்மனை தீப்பற்றிக் கொண்டது. அதனுள் முன்னரே இறந்து கிடந்த பாண்டியன் உடலமும் அவனது கோப்பெருந் தேவியின் உடலம் எரிந்து சாம்பராயின. அழகிய பல கட்டடங்கள் எரிந்து பாழ்பட்டன. பத்தினி ஏவிய தீயாதலால் அது மதுரையில் இருந்த அந்தணர், பத்தினிகள், நல்லோர், குழந்தைகள் முதலியவரை விட்டுத் தீத்திறத்தார் பக்கமே சார்ந்தது. அவர் அனைவரும் பூம்புகார்ப்பத்தினியைத் தெய்வமாகப் போற்றினர்.

மதுராபதி

கண்ணகி, தீப்பற்றி எரிந்த மதுரையைப். பார்த்துக் கொண்டே சென்றாள். அவள் உள்ளம் கனன்றது, அவள் கொல்லனது உலைக்களத்துத் துருத்திப் போல பெருமூச்சு விட்டாள்; பெருந் தெருக்களிலே திரிந்தாள்; சந்துகளில் நடந்தாள். இவ்வாறு அவள் மதுரையில் திரிந்து வருகையில் மதுராபதி என்னும் மதுரை மாநகரின் அதி. தேவதை பெண்ணுருத் தாங்கிக் கண்ணகியின் பின் புறமாக வந்தாள்; வந்து, “நங்காய், நீ வாழ்க; நான் கூறுவதைக் கேட்பாயாக” என்றாள். உடனே கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிப் பார்த்து, “என் பின் வருகின்ற நீ யார்? என் துயரத்தை அறிவையோ ?” என்று கேட்டாள்.

பாண்டியன் சிறப்பு

உடனே மதுராபதி, “அம்மே! நான் உனது பொறுத்தற்கரிய துன்பத்தை அறிவேன். நான் சொல்ல வந்தேன். நான் உனது கணவற்கு நேர்ந்த கதியினை எண்ணி மிக வருந்துகிறேன். நான் இந் நகரத்தைக் காக்கும் அதிதேவதை என் பெயர் ‘மதுராபதி’ என்பது. நான் கூறுவதைக் கேள். இன்று இறந்த பாண்டியன் மரபு ஆராய்ச்சி மணி ஒசைகேட்டறியாதது. இப்பாண்டியன், குடிகளால் பெரிதும் விரும்பப்பட்டவன். பாண்டியர் ஒழுக்கம் தவறிய செயலைச் செய்தறியார். முற்காலத்தில் கீரந்தை என்ற பார்ப்பனன் காசியாத்திரை சென்றான்; சென்ற பொழுது தன் மனைவியை நோக்கி, நின் தனிமைச்கு வருந்தாதே. பாண்டியன் காவல் நினக்குப் பாதுகாவல் ஆகும்’ என்று கூறினான். அவனை, அப்பக்கமாக நகர் சோதனைக்கு வந்த பாண்டியன் கேட்டான். அவன் மறு இரவு முதல் ஒவ்வோர் இரவும் அந்தப் பார்ப்பனன் இல்லத்தைக் காவல் காத்து வந்தான்; ஒருநாள் இரவு வீட்டிற்குள் ஆடவன் பேச்சுக் குரல் கேட்டு உண்மை உணர விரும்பிக் கதவினை தட்டினான். உடனே கீரந்தை ‘யார் அது? என்று அதட்டினான். உடனே பாண்டியன், ‘சரி, வீட்டிற்கு உரியவன் வந்து விட்டான்; நமக்குக் கவலை இல்லை. ஆனால், நாம் அவசரப்பட்டுக் கதவைத் தட்டியதை அவன் தவறாகக் கருதித் தன் மனைவியின் ஒழுக்கத்தில் ஐயம் கொள்வானே! அடடா! என்ன செய்வது? என்று யோசித்து, முடிவில், ‘நான் இப்பொழுது இந்தத் தெருவிலுள்ள எல்லா வீட்டு கதவுகளையும் தட்டி, விட்டுப் போவதே நல்லது. எல்லோரும் இதனைப் பித்தன் - செயல் எனறு நினைத்துக் கொள்வர்’ என்று முடிவு செய்தான்; அப்படியே எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு மறைந்தான். மறுநாள் காலையில் அந்தத் தெருவில் இருந்த பார்ப்பனர் அனைவரும் அரசனிடம் சென்று, ‘இரவில் ஒரு பித்தன் வந்து எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டி எங்களை அச்சத்திற்கு உள்ளாக்கி விட்டான்’ என்று கூறி வருந்தினர். அரசன், ‘அறிஞரே, அப்பித்தின் அகப்பட்டால் அவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்? என்று கேட்டான். உடனே மறையவர், ‘கதவுகளைத் தட்டின அக் கையை வெட்டிவிட வேண்டும்’ என்றனர். உடனே அரசன் மகிழ்ந்து, அந்தக் கை இதுதான்’ என்று. கூறித் தன் கையை வெட்டிக் கொண்டான்.

அத்தகைய பாண்டியன் - மரபில் வந்தவன் இந்த நெடுஞ்செழியன்.

சோதிடம் பலித்தல்

‘இந்த நகரம் இந்த ஆண்டு ஆடிமாதம் கிருஷ்ணபக்ஷம் கார்த்திகை-பரணி பொருந்திய எட்டாம் நாளாகிய வெள்ளிக்கிழமை அன்று தீப்பிடித்து அழியும்; அரசனும் அழிவான்’ என்பது சோதிடமாகும். அது மெய்யாயிற்று. உங்கட்கு இக்கேடு வந்ததற்குக் காரணம் கூறுவேன், கேட்பாயாக.

முன்வினை

“பல ஆண்டுகட்கு முன் கலிங்க நாட்டுச் சிங்கபுரத்தில் வசு என்பவனும் கபிலபுரத்தில் குமரன் என்பவனும் ஆண்டு வந்தனர். அவர்கள் தம்முள் ஓயாது போரிட்டு வந்தனர். நகை வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் சிங்கபுரத்திற்குச் சென்று வியாபாரம் செய்து வந்தான். அவன் மீது பொறாமை கொண்ட பரதன் என்பவன். அவனைப் ‘பகை அரசனது ஒற்றன்’ எனத் தன் அரசனைக் கொண்டு கொல்லச் செய்தான் - அவ்வணிகன் மனைவியான நீலி என்பவள் ஊர் முழுவதும் சுற்றிப் புலம்பினாள்; கணவன் இறந்த பதினான் காம் நாள் ஒரு மலைமீது ஏறி இறக்கத் துணிந்தாள். அப்பொழுது அவள் ‘எமக்கு இப்பிறப்பில் இத்துன்பம் செய்தவர் மறுபிறப்பில் இதனையே அநுபவிப்பாராக!’ என்று சபித்து இறந்தாள். அவள் இட்ட சாபமே இப்பிறப்பில் உங்களைப் பற்றியது; அவள் கணவனைக் கொல்வித்த பரதனே உன் கணவனான கோவன்; கொல்லப்பட்ட நகை வியாபாரியே இப்பிறப்பில் பொற்கொல்லனாகப் பிறந்தான். நீ பதினான்காம் நாள் நின் கணவனைக் கண்டு களிப்பாய்.” என்று கூறி மறைந்தது.

கண்ணகி விண்ணகம் புகுதல்

கண்ணகி அக்கதையைக் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்; “என் காதலனைக் காணாதவரை என் மனம் அமைதி அடையாது” என்று கூறி, நகரத்தின் மேற்கு வாயிலை அடைந்தாள், அங்கு இருந்த துர்க்காதேவியின் கோயிலில். “கிழக்கு வாசலில் கணவனோடு வந்தேன்: மேற்கு வாசலில் தனியே செல்கிறேன்” என்று வருந்திக் கூறித் தன் பொன் வளையல்களை அங்கு உடைத்து எறிந்து, மேற்கு. நோக்கிச் சென்றாள்; இரவு பகல் என்பதனைக் கவனியாமல் வைகையாற்றின் ஒரு கரைமீது நடந்து சென்றாள்; பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி, வேங்கை மர நிழலில் நின்றாள். அப்பொழுது தேவர் உலகத்தில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதனில் கோவலன் இருந்தான். அவனுடன் கண்ணகி விண்ணகம் புகுந்தாள்.