சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/11.காடுகாண் காதை
சிலப்பதிகாரம்
[தொகு]இரண்டாவது மதுரைக்காண்டம்
[தொகு]11.காடுகாண் காதை
[தொகு]- திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
- செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
- கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
- ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
- கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் 5
- அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
- சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
- மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
- அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
- தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று 10
- வைகறை யாமத்து வாரணங் கழிந்து
- வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
- வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
- இளமரக் கானத் திருக்கை புக்குழி
- வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை 15
- ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
- அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
- வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
- பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
- குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள 20
- வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
- தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
- திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
- செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
- பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி 25
- முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
- இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
- பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
- மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
- தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி 30
- மாமுது மறையோன் வந்திருந் தோனை
- யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
- கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
- மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
- நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35
- பால்விரிந் தகலாது படிந்தது போல
- ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
- பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
- விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
- திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் 40
- வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
- ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
- விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
- இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
- மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு 45
- நன்னிற மேகம் நின்றது போலப்
- பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
- தகைபெறு தாமரைக் கையி னேந்தி
- நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
- பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய 50
- செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
- என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
- வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
- தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
- கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் 55
- வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
- தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
- மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
- கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
- கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி 60
- வேத்தியல் இழந்த வியனிலம் போல
- வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
- தானலந் திருகத் தன்மையிற் குன்றி
- முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
- நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் 65
- பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
- காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
- அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
- நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
- நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று 70
- கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
- பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
- அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
- வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
- அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் 75
- பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
- வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
- நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
- கானமும் எயினர் கடமுங் கடந்தால்
- ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் 80
- கொய்பூந் தினையும் கொழும்புன வரகும்
- காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
- வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
- மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
- தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் 85
- அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
- அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
- செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
- தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
- கடம்பல கிடந்த காடுடன் கழிந்து 90
- திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
- பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
- விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
- புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
- இட்ட சித்தி யெனும்பெயர் போகி 95
- விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
- முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
- புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
- விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
- பவகா ரணி படிந் தாடுவி ராயிற் 100
- பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
- இட்ட சித்தி எய்துவி ராயின்
- இட்ட சித்தி எய்துவிர் நீரே
- ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
- ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது 105
- சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
- வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
- நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
- பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
- கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் 110
- தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி
- இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
- இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
- செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
- வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் 115
- உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
- திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
- கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
- புதவம் பலவுள போகிடை கழியன
- ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் 120
- வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
- இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
- பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
- உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
- நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் 125
- உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
- கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
- அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
- வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
- ஒருமுறை யாக உளங்கொண் டோதி 130
- வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
- காண்டகு மரபின வல்ல மற்றவை
- மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
- பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
- உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் 135
- புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
- தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
- ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
- மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்
- காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு 140
- அந்நெறிப் படரீ ராயின் இடையது
- செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
- ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
- ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
- நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி 145
- இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
- மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
- நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
- தாள்தொழு தகையேன் போகுவல் யானென
- மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட 150
- காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
- நலம்புரி கொள்கை நான்மறை யாள
- பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
- கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
- மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் 155
- இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
- பிறந்த பிறப்பிற் காணா யோநீ
- வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
- யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
- காமுறு தெய்வங் கண்டடி பணிய 160
- நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
- என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
- குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
- அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
- பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் 165
- கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
- வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
- இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
- புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
- நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் 170
- கானுறை தெய்வம் காதலிற் சென்று
- நயந்த காதலின் நல்குவன் இவனென
- வயந்த மாலை வடிவில் தோன்றிக்
- கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
- அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து 175
- வாச மாலையின் எழுதிய மாற்றம்
- தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
- கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
- மாதவி மயங்கி வான்துய ருற்று
- மேலோ ராயினும் நூலோ ராயினும் 180
- பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
- பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
- கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
- செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
- வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் 185
- தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
- துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
- மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
- எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
- சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் 190
- பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
- மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
- வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
- வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
- ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் 195
- கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
- பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
- வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
- புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
- என்திறம் உரையா தேகென் றேகத் 200
- தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு
- அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
- மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
- தீதியல் கானஞ் செலவரி தென்று
- கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் 205
- மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக்
- குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
- விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
- ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
- மாரி வளம்பெறா வில்லேர் உழவர் 210
- கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
- வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
- கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
- விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
- மையறு சிறப்பின் வான நாடி 215
- ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.
- பார்க்க