சிலம்பு பிறந்த கதை/இமயத்துச் சிலை

விக்கிமூலம் இலிருந்து

8. இமயத்துச் சிலை

பாடிவீட்டில் செங்குட்டுவன் தங்கியிருந்தபோது அவனைப் பார்ப்பதற்கு வடநாட்டிலிருந்து ஒரு கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தில் நடனமாடும் மகளிர் நூற்றுநான்கு பேர் இருந்தனர். இசைக் கருவிகளை வாசிப்பவர் இருநூற்றெட்டுப்பேர், விகடம் பண்ணுகிறவர்கள் நூறுபேர் வந்தர்கள். தேர்கள் நூறு வந்தன; யானை ஐந்நூறும், குதிரைகள் பதினாயிரமும் வந்தன. வடநாட்டில் கிடைக்கும் பலவகைப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு இருபதினாயிரம் வண்டிகள் வந்தன. சட்டையும் தலைப்பாகையுமுடைய பிரதானிகள் ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்துடன் வந்தனர். அவர்களைக் காஞ்சுகிகள் என்பார்கள்; சட்டையிட்டவர்கள் என்பது அந்தச் சொல்லுக்குப் பொருள். அந்த ஆயிரம் பேர்களுக்கும் தலைமை தாங்கி வந்தவன் சஞ்சயன் என்பவன்.

அவர்கள் வந்திருப்பதை வாயிலோரால் அறிந்த செங்குட்டுவன் அவர்களை வருக என்று சொல்லி அழைக்கச் சொன்னான். அந்தக் கூட்டத்தின் தலைவனாகிய சஞ்சயன் உள்ளே வந்து அரசனை வணங்கினான். “நீங்கள் யார்?” என்று அரசன் கேட்க, “நாங்கள் நூற்றுவர் கன்னராகிய வடநாட்டு மன்னர் அனுப்ப வந்தவர்கள். அவர்கள் தங்களோடு சேர்ந்து கொண்டு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். தாங்கள் இமயத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டதை அறிந்து எங்களை அனுப்பினார்கள். அதோடு ஒரு விண்ணப்பமும் செய்து கொள்ளும்படி பணித்தார்கள்” என்று சொல்லி நிறுத்தினான் சஞ்சயன்.

“என்ன விண்ணப்பம்? அஞ்சாமல் தெளிவாகச் சொல்லுங்கள்” என்று சேரன் ஏவினான்.

“தாங்கள் வடதிசைக்குச் செல்வது, இமயத்தில் கடவுட்சிலை வடிக்க ஒரு கல்லை எடுத்துக் கொணர்வதற்காக என்றால், தங்களுக்கு இந்தத் தொல்லை வேண்டாமே என்று தெரிவிக்கச் சொன்னார்கள். ‘நாங்களே இமயம் சென்று ஒரு கல்லை உரிய முறையில் எடுத்துக் கொணர்ந்து, சிலை வடித்துக் கங்கையில் நீர்ப்படை செய்து கொடுப்போம். அது எங்களால் முடியும் காரியம்’ என்று தங்களிடம் பணிந்து சொல்லச் சொன்னார்கள். திருவுள்ளக் குறிப்பு எப்படியோ அறியேன்” என்று சஞ்சயன் கூறி முடித்தான்.

செங்குட்டுவன் புன்னகை பூத்தான்; “எனக்குத் தோழர்களாக இருந்து துணைபுரிவதாகச் சொன்னதற்கு நன்றி பாராட்டுகிறேன். ஆனால் நான் இந்த வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டதற்கு இமயத்திலிருந்து கல்லைக்கொண்டு வருவது மட்டும் காரணம் அன்று. வடநாட்டில் உள்ள பாலகுமரன் என்ற வேந்தனுக்குப் புதல்வர்களாகிய கனகன், விசயன் என்ற இருவர் வாய்த்துடுக்கு மிக்கவர்களாம். ஒரு கல்யாணத்தில் ஏதோ பேசினார்களாம். தமிழ் நாட்டு மன்னர்களின் ஆற்றலை அறியாமல் ஏதோ உளறினார்களாம். அவர்களுக்கு அறிவு புகட்டவே இந்தச் சேனையோடு புறப்பட்டேன்” என்றான்.

அதைக்கேட்ட சஞ்சயன், “எங்களை அனுப்பிய மன்னர்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமானால் பணியுங்கள்; போய்ச் சொல்கிறேன்” என்றான்.

“இமயத்துக்குப் போவதற்கிடையிலே கங்கையாற்றைக் கடக்க வேண்டியிருக்கும். ஆதலின், இந்தப் படை முழுவதும் ஏறி ஆற்றைக் கடப்பதற்கு ஏற்ற வகையில் கப்பல்களை வைத்திருக்கும்படி நூற்றுவர் கன்னரிடம் சொல்லுங்கள்” என்று அரசன் கூறச் சஞ்சயன், அப்படியே சொல்வதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவனுடன் வந்த காஞ்சுகி மக்களும் தாங்கள் கொண்டுவந்த கையுறைகளையும், வண்டிகளில் வந்த பண்டங்களையும் அரசனிடம் சேர்ப்பித்து விட்டுப் போனார்கள்.

அப்பால் செங்குட்டுவன் தான் தங்கியிருந்த பாடியை விட்டு வடக்கு நோக்கிப் படைகளுடன் புறப்பட்டுச் சென்றான். போகும்போது அங்கங்கே உள்ளவர்கள் அந்தப் படையினருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தனர். படை கங்கைக்கரையை அணுகியது. அங்கே நூற்றுவர் கன்னர் இந்தப் படையின் பொருட்டு வைத்திருந்த கப்பல்களில் யாவரும் ஏறிக் கங்கையாற்றைக் கடந்தனர். “இவ்வளவு பெரும் படையும் கடப்பதற்கு ஏற்றபடி மரக்கலங்களும் கப்பல்களும் சித்தமாக வைத்திருந்தது, இந்த மன்னர்களின் அன்பைப் புலப்படுத்துகிறது” என்று செங்குட்டுவன் மனம் மகிழ்ந்தான்.

படை வடகரையை அடைந்தவுடன் அங்கே காத்திருந்த நூற்றுவர் கன்னராகிய வேந்தர்கள் சேரனை வரவேற்றார்கள். படைகளுக்கு வேண்டிய உணவு முதலியவற்றை உதவினார்கள். அவர்களுடைய நாட்டையும் சேரன் படை கடந்து சென்றது. தங்கள் நாட்டின் எல்லைவரையிலும் கன்னர்கள் செங்குட்டுவனுடன் இருந்து வழியனுப்பி வைத்தார்கள். அப்பால் பாலகுமரனென்னும் வேந்தனுக்குரிய நாடு இருந்தது. அதன் எல்லையில் படைகள் பாசறை இறங்கின.

அதனை அறிந்த பாலகுமரன் மக்களாகிய கனகனும் விசயனும் சினந்து எழுந்தார்கள். “நாங்கள் அன்று ஒரு திருமணத்தில் சொன்ன வார்த்தை பலித்துவிட்டது. எங்கள் தோள்வலியை உலகுக்குக் காட்டும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. தென்னாட்டிலிருந்து வந்த வேந்தனை எளிதில் வென்று வாகை சூடுவோம்” என்று வஞ்சினம் கூறினர்கள்.

வந்திருக்கும் படை எளியதன்று, பெரிய படை என்று அவர்கள் கேள்வியுற்றார்கள். அன்றியும், தமிழ் நாட்டு வீரர்கள் மிக்க விறல் உடையவர்கள் என்பதையும் ஒற்றர் மூலம் அவர்கள் அறிந்திருந்தார்கள். கங்கைக்கரை நாட்டுக் கன்னர்களும் வேறுமன்னர்களும் சேரமன்னனுக்குத் தோழர்களாக இருப்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. துணையாக வேறு மன்னர்களை நாமும் சேர்த்துக்கொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகவே துணை சேர்க்கலானார்கள். அவர்களுடைய நாட்டைச் சூழ இருந்த நாட்டுச் சிறு மன்னர் பலர் அவர்களுடன் சேர்ந்தனர். உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன் என்ற பெயருடைய மன்னர்கள் துணையாக வந்தார்கள். சித்திரன், சிங்கன், தனுர்த்தரன், சிவேதன் என்ற பெயருடைய சிலரும் கூடினர். வேறு சில மன்னர்களும் கனகவிசயர்களோடு சேர்ந்தார்கள். யாவரும் சேர்ந்துகொண்டு, "தமிழ் நாட்டு வீரர்களின் ஆற்றலை ஒருகை பார்த்துவிடுவோம்" என்று படைகளுடன் பாசறை இறங்கியிருந்த சேரனை எதிர்த்தனர். போர் மூண்டது.

இரு பக்கத்து வீரர்களும் பேராற்றலுடன் போர் புரிந்தார்கள். முரசுகள் அதிர்ந்தன. பறைகள் முழங்கின. சங்குகள் ஒலித்தன. ஊது கொம்புகளின் ஓசை எழுந்தது. தாளங்களைக் கொட்டினார்கள். யானையும் யானையும் மோதின. குதிரை வீரரும் குதிரை வீரரும் முட்டினர். தேரில் வரும் வீரர்கள் தேர் வீரர்களின்மேல் அம்பை எய்தனர். வாளெடுத்த வீரர் வாள் வீரரோடு மலைந்தனர். வில் எடுத்தவர் வில் எடுத்தவரோடு பொருதனர். வெறுங்கையுடன் மற்போரிட்டனர் சிலர்.

எங்கும் புழுதி எழுந்தது; யானைக்குக் கட்டிய மணியில் புகுந்து அதை ஒலிக்கவிடாமல் செய்தது; சங்குக்குள் புகுந்து அதை ஊதினால் ஒலி எழாமல் செய்தது.

பலருடைய கைகள் வெட்டுப்பட்டன. தலைகள் உருண்டன. தலைகளை இழந்த முண்டங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில குறையுடம்புகள் குதித்தன. இரத்தம் வெள்ளமாக ஓடியது.

சேரன் படையிலிருந்த வீரர்கள் வடநாட்டரசர் படையைக் குலைத்து வீழ்த்தினார்கள். கொன்று களத்திற் குவித்தார்கள். தேர்கள் முறிந்து வீழ்ந்தன. குதிரைகள் முகம் கவிழ்ந்து நிலத்தைக் கவ்வின. யானைகள் துதிக்கையை எடுத்து இடியைப் போலப் பிளிறிக்கொண்டு வீழ்ந்தன.

கனகவிசயர் தோல்வியுற்றார்கள். செங்குட்டுவன் அவர்களைச் சிறைப்படுத்தச் செய்தான். அவர்களோடு ஐம்பத்திரண்டு தேர் வீரர்கள் சிறைப்பட்டனர். மற்றவர்களில் உயிர்பிழைத்தவர்கள் ஆளுக்கு ஒருபுறமாக ஓட்டமெடுத்தனர். சிலர் துறவிகளைப்போல வேடம் பூண்டு போயினர். சிலர் சாம்பரைப் பூசிக்கொண்டு ஓடினர். சிலர் பாடுகிற பாணர்களைப்போலக் கோலம் புனைந்து தப்பிச் சென்றனர். சிலர் வாத்தியங்களைத் தோளில் மாட்டிக்கொண்டு ஓடினர். வேறு சிலர் கூத்தரைப்போல வேடம் அணிந்து சென்றார்கள். பாணர் முதலியவர்களைக் கொல்லுவது தகாது என்பது அக்காலத்தினர் கொள்கை. அதனால் அவர்கள் அத்தகையவர்களைப்போல உருமாறி, பெற்றோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.

வெற்றிபெற்ற செங்குட்டுவன் தன் பாசறையில் அமர்ந்து அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் கூட்டி, மேலே செய்வதற்குரிய செயல்களைப்பற்றி ஆராய்ந்தான். "நாம் இனி யாதொரு தடையும் இன்றி இமயமலைக்குச் செல்லலாம். இங்கே நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு வந்த மன்னர்கள் யாவரும் தோல்வியுற்றனர். ஆதலின் விரைவில் இமயம் செல்ல வேண்டியதுதான்” என்று சேரமான் தன் கருத்தைச் சொன்னான்.

அமைச்சன் ஒருவன், “மன்னர் பிரான் வரவேண்டுமென்பது இல்லையே! நாங்களே சென்று கல்லை எடுத்து வந்துவிடலாம். தடையும் படையும் இருந்தால்தானே போர் எழும்? இப்போது அப்படி ஒன்றும் இல்லை. ஆதலின் அரசர் பெருமான் இங்கே இருந்து இளைப்பாறட்டும். எங்களுடன் ஒரு சிறு படை வந்தால் போதும் என்றான்.

அரசன் இந்த யோசனைக்கு இசைந்தான். ஆனால் பெரிய படை ஒன்று செல்லவேண்டும் என்று விரும்பினான். “ஒருகால் திடீரென்று யாரேனும் எதிர்த்தால் நாம் ஏமாந்துபோகக் கூடாதல்லவா?” என்று கேட்டான்.

கடைசியில் அமைச்சரில் ஒருவனாகிய வில்லவன் கோதையைத் தலைவனாகக் கொண்டு பல படை வீரர்கள் இமயமலையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் புறப்படும்போது அரசனுக்கு, நீலகிரிக்கு அருகில் பாடி இறங்கியிருந்தபோது இமயத்திலிருந்து வந்த தவமுனிவர் சொன்னது நினைவுக்கு வந்தது. “இமயப் பகுதியில் வேதம் பாடும் அந்தணர் இருப்பார்கள். எப்போதும் அவியாதவாறு எரி ஓம்புவார்கள். அத்தகையவர்களிடம் பணிவாக நடந்து அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வீரர்களிடம் சொல்லியனுப்பினான்.

அவர்கள் இமய மலையை அடைந்து ஓரிடத்தில் பெரிய உருவத்தை வடிக்கும் அளவுக்குக் கல்லை வெட்டி எடுத்தார்கள். அதை எடுத்து அரசன் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்தார்கள். நல்ல நாள் பார்த்து அதை விக்கிரகமாகச் செதுக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தினிக் கடவுளின் வடிவம் சிற்பியின் உளியில் உருவாகி வந்தது.