சிலம்பு பிறந்த கதை/கங்கைக் கரையில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search9. கங்கைக் கரையில்

வடபேரிமயத்திலிருந்து கொண்டுவந்த கல்லில் பத்தினித் தெய்வத்தின் திருவுருவத்தைச் சிற்பிகள் அமைத்துவிட்டார்கள். கோயிலில் தெய்வப் படிமங்களை நிறுவுவதற்கு முன் அவற்றைப் புனித நீரில் சிலகாலம் கிடத்திவைப்பது ஒரு வழக்கம். இமயக் கல்லில் உருவாகிய கண்ணகியின் படிமத்தைக் கங்கையில் நீர்ப் படை செய்ய வேண்டும் என்று முன்பே அரசன் தீர்மானித்திருந்தான். சிறைப்பட்டிருந்த கனக விசயர்களின் தலையில் அந்தச் சிலையை ஏற்றிக் கங்கைக் கரைக்குச் சுமந்து வரும்படி பணித்தான். அரசனும் கங்கைக் கரையை அடைந்து செய்ய வேண்டிய முறைப்படி சிலையை அவ்வாற்றில் நீர்ப் படை செய்தான்.

சில நாட்கள் சிலை நீரிலே இருக்கவேண்டு மாதலின் செங்குட்டுவனும் தன் படைகளுடன் அங்கே தங்கும்படி நேர்ந்தது. வடநாட்டில் இருந்த ஆரிய மன்னர்கள் கங்கையின் தென்கரையில் பெரிய பாடி வீட்டை அமைத்துத் தந்தார்கள்.

சில காலம் தங்குவதற்கு அமைத்ததுபோல அது தோன்றவில்லை. பேரரசனாகிய சேர மன்னனுக்கு ஏற்ற வகையில் விரிவாகவும் சிறப்பாகவும் அதைச் சமைத்தார்கள். அரசன் தங்குவதற்காக நடுவே அரண்மனையைப் போன்று தோற்றமளிக்கும் இடம் ஒன்றை எழுப்பினார்கள். மணிமண்டபங்களைக் கட்டினார்கள். பொன்னல் அலங்கரிக்கப் பெற்ற அரங்குகளை உண்டாக்கினார்கள். பூம்பந்தர் தோன்றியது. பூஞ்சோலையும் பொய்கையும் அமைத்தார்கள். இப்படிப் பல வகையிலும் அழகும் சிறப்பும் கொண்ட சிறிய நகரமாக அவ்விடத்தை ஆரிய மன்னர் சமைத்து விட்டார்கள். அந்தப் பாடியில் செங்குட்டுவன் தன் படைகளுடன் புகுந்தான்.

அங்கே சபை கூட்டிப் போரில் வீரம் பொலியப் போர் புரிந்த வீரர்களைப் பாராட்டிப் பரிசளிக்க எண்ணினான். அமைச்சரும் படைத்தலைவரும் வந்தனர். வீரர்கள் குழுமினார்கள். அரசன் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தான். முதலில் போரில் வீரத்துடன் பொருது உயிரை இழந்தவர்களுக்குச் சிறப்புச் செய்யத் தொடங்கினான். அவர்களுடைய மைந்தர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசு தருவதன் மூலமாக இறந்தவர்களுக்கு நன்றியறிவு காட்டலாம் என்பது அரசன் எண்ணம். ஆகவே அத்தகையவர்களை முதலில் அழைத்தான்.

போரில் இறந்து வீரசொர்க்கம் புகுந்தவர்களின் மைந்தர் வந்தனர்; தலையும் தோளும் துண்டிக்கப் பெற்று மடிந்தவர்களின் பிள்ளைகள் வந்தார்கள்; வாட்போர் செய்து மடிந்தவர் மக்களும், உறவினர் மடியத் தாமும் மடிந்தவர்களின் கான்முளைகளும் வந்தனர். அவர்களுக்கு வெற்றிச் சின்னமாகிய பொன்னாலாகிய வாகைப் பூவை அணியச் செய்தான் அரசன்.

பிறகு போரில் வீரங்காட்டி வெற்றி கொண்டவரை அழைத்தான். வாட்போரில் பகைவர்களை வீழ்த்திய மறவர் பரிசு பெற்றனர். தேர்வீரர்களோடு செய்த போரில் அவர்கள் தேரையும் அவர்களையும் வீழச் செய்த வீரர் பொன்வாகை பெற்றனர். பகைவரின் தலையை அரிந்து நிலத்தில் விழச் செய்தவர், தம் மார்பிலே புண் பெற்றுப் பகைவர்களின் முதுகு கண்ட வீரர் ஆகியவர் வந்து வாகைப்பூப் பெற்றனர்.

இவ்வாறு சிறப்புச் செய்து முடிப்பதற்கு நெடு நேரமாகி விட்டது. தனக்குக் கிடைத்த வெற்றியினால் உண்டான பெருமிதத்தோடும், வீரர்களுக்குச் சிறப்புச் செய்த மன நிறைவோடும் சேரமான் வீற்றிருந்தான். “அயல் நாட்டுக்கு வந்து போர் செய்து வெற்றி பெற்றது மிகவும் அரிய செயல். இந்த வீரர்கள் இல்லா விட்டால் இந்த வெற்றி கிடைக்க வழியே இல்லை. இந்த வெற்றி எனக்கு மட்டும் உரியது அன்று; எல்லா வீரர்களுக்கும் உரியது. ஒரு வகையில் பார்த்தால் தமிழ் நாட்டு மன்னர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் உரியது என்றே சொல்ல வேண்டும்” என்று பெரு மகிழ்ச்சியோடு அவன் பேசினான்.

அந்தச் சமயத்தில் அங்கே மாடலன் என்னும் அந்தணன் வந்தான். அவன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்; கோவலனுடைய நண்பன். “எம் கோ வாழ்க! மாதவி யென்னும் பெண் பாடிய கானல்வரிப் பாட்டானது கனக விசயர்களின் முடியணிந்திருந்த தலைகள் கல்லைச் சுமக்கும்படி செய்தது. வீரத்தால் நாடுகளை அடிப்படுத்தி ஆண்ட அரசே வாழ்க!” என்று அவன் அரசனை வாழ்த்தினான்.

“பகையரசர்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொன்னீர்களே, நீங்கள் சொன்னதற்கு என்ன பொருள்?” என்று கேட்டான் அரசன்.

“சொல்லுகிறேன். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த கோவலன், மாதவி யென்னும் நாடகக் கணிகையோடு இருந்த காலத்தில் ஒரு நாள் இருவரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கே கூடாரம் அமைத்துத் தங்கினர். இருவரும் யாழ் வாசித்தார்கள். அப்போது ஒரு வரிப்பாட்டைப் பாடினாள் மாதவி. விதி வந்து விளையாடியமையால் அந்தப் பாட்டைக் கேட்ட கோவலன், அவள் தன்னைப் புறக்கணித்து விட்டதாக நினைத்தான். அதனால் அவளைப் பிரிந்து தன் மனைவியாகிய கண்ணகியிடம் வந்தான். பிறகு அவளுடன் மதுரை புகுந்து கொலையுண்டான். அவனுடைய பத்தினி மதுரையிலிருந்து நின் நாடு புகுந்து, இப்போது வடநாட்டு அரசர் மணிமுடியின்மேல் ஏறினாள்” என்று சொல்லி விளக்கினான்.

“கோவலன் மனம் திறம்புவதற்கு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டுக் காரணமாக இருந்தது; மேலே நிகழ்ந்தன வெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க அதுவே மூல காரணமாயிற்று என்று சொல்லுகிறீர்களா?” என்று கேட்டான் செங்குட்டுவன்.

“ஆம், எத்தனை விளைவுகள் அடுக்கடுக்காக நிகழ்ந்துவிட்டன! எல்லாம் ஊழ்வினையால் ஆனவை” என்று பெருமூச்சு விட்டான் மாடலன்.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்?” என்று செங்குட்டுவன் கேட்டான்.

“நான் பொதியில் மலையை வலம் கொண்டு சென்று குமரித் துறையில் ஆடிவிட்டு வருகிறேன். இப்போது கங்கை நீரில் ஆடுவதற்காக வந்தேன். மன்னர் பிரானைக் கண்டேன்” என்றான் அவ்வந்தணன்.

"கங்கை நீரில் ஆடுவதற்குக் காரணம் ஏதாவது உண்டா? அன்றி, காரணமின்றியே ஆட வந்தீர்களா?”

"காரணம் உண்டு. கோவலன் இறந்த செய்தியைப் பலருக்குச் சொன்னேன். அது கேட்டுத் துயரம் தாங்காமல் சிலர் இறந்தார்கள். அவர்கள் அப்படி இறப்பதற்கு நான் காரணமாக இருந்தமையால் அந்தப் பாவத்தைப் போக்கும் பொருட்டுக் கங்கை நீர் ஆட வந்தேன்.”

“யார் யாருக்குச் சொன்னீர்கள் ? என்ன நிகழ்ந்தது? சற்றே விரிவாகச் சொல்லவேண்டும். நான் தமிழ் நாட்டை விட்டு வந்து பல நாட்கள் ஆயினமையின் அந்தப் பக்கத்துச் செய்திகளைச் சொல்வார் இல்லை. நல்ல வேளை இப்போது நீங்கள் வந்தீர்கள். எல்லாவற்றையும் அடைவாகச் சொல்லுங்கள்.”

“நான் சொல்லப்போவது நல்ல செய்திகள் அல்ல. இறந்ததும் துறந்ததுமான செய்திகளே அவை.”

“இருக்கட்டும். அதனால் என்ன? நடந்ததைத் தானே சொல்லப் போகிறீர்கள்? சொல்லுங்கள்.”

"கோவலன் கண்ணகியோடு மதுரைக்குச் சென்றபோது ஊருக்குப் புறம்பேயுள்ள ஆயர்பாடியில் அவளை இருத்திவிட்டுச் சென்றான். அங்கே இருந்த ஆயர்குல மகளாகிய மாதரி என்பவள் அவளுக்கு வேண்டிய பண்டங்களைக் கொடுத்துச் சமைத்து உண்னும்படி சொன்னாள்; தாய் போன்ற அன்பைக் காட்டினாள். கோவலன் கொலையுண்டதையும் கண்ணகிக்கு வந்த துன்பத்தையும் அறிந்த அவள் எரியில் விழுந்து இறந்தாள். கோவலன் கண்ணகியுடன் மதுரைக்கு வழித் துணையாக வந்த கவுந்தி என்னும் பெண் துறவி உண்ணாமல் விரதமிருந்து உயிர் நீத்தாள். இவற்றையெல்லாம் அறிந்து, மதுரை மாநகர் தீக்கு இரையானதையும் தெரிந்து கொண்டு, என் ஊராகிய தலைச்செங்கானம் சென்றேன்.”

“நீங்கள் சொன்ன வார்த்தையால் யாரும் இறந்ததாகத் தெரியவில்லையே?”

“இனிமேல்தான் அந்தக் கதை வருகிறது. என் ஊருக்கு அருகில்தான் சோழனது தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் இருக்கிறது. அங்கே உள்ள பெரியவர்களிடம் மதுரையில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் உற்ற துன்பங்களையும் மற்றவற்றையும் சொல்லி வருந்தினேன். அந்தச் செய்தியைக் கேட்டுக் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவான் தன் பொருளையெல்லாம் தானம் பண்ணிவிட்டுப் பெளத்த சமயத் துறவியாகிவிட்டான். அவனுடைய மனைவி தன் மகன் இறந்தது கேட்டுத் தன் உயிரை நீத்தாள். கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனோ ஆசீவக சமயத் துறவி ஆனான். அவன் மனைவியும் இறந்து பட்டாள். மாதவி இந்த அவலச் செய்தியைக் கேட்டுத் தான் பெளத்த சமயத் துறவியானதோடு, தன் மகள் மணிமேகலையையும் துறவு பூணச் செய்து விட்டாள். என்னாற் செய்தியை அறிந்து கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்தார்கள் அல்லவா? அதற்குக் காரணமாகும் பாவம் என்னைத்தானே சாரும்? அதனால்தான் இங்கே கங்கையில் நீராட வந்தேன்” என்று மாடலன் கூறி முடித்து அரசனை வாழ்த்தினான்.

செங்குட்டுவன், “பாண்டி நாட்டில் இப்போது யார் அரசாள்கிறார்?” என்று கேட்டான்.

“கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் அரியணை ஏறியிருக்கிறான்” என்றான் மாடலன்.

இப்படி அவ்வந்தணனோடு சேரமான் உரையாடிக் கொண்டிருந்தபோது கதிரவன் மறைந்தான். இரவு வந்தது. வெள்ளிய பிறைவானத்திலே தோன்றியது. அதனுடைய அழகைப் பார்த்துக்கொண்டு வெளியே வந்து நின்றான் அரசன். அந்தச் சமயம் பார்த்து அரசனுடன் வந்திருந்த சோதிடன், “அரசர் பெருமான் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டு முப்பத்திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. வாழ்க நின் கொற்றம்” என்று கூறினான். இனி விரைவில் திரும்பிச் செல்லவேண்டும் என்று அரசனுக்குப் புலப்படுத்துவதற்காகவே அவன் இந்தச் செய்தியைச் சொன்னான்.

அரசன் தன் கூடாரத்தை அடைந்து மாடலனை அழைத்துவரச் சொன்னான். அம் மறையவன் வந்ததும், "காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ மன்னன் நலமாக இருக்கிறானா?” என்று கேட்டான். செங்குட்டுவனுக்கு உறவினன் அவன்.

“சோழன் செங்கோல் திறம்பாது ஆட்சி புரிந்து வருகிறான். அவனுக்குத் தீங்கு ஏதும் இல்லை” என்று விடை கூறினான் மாடலன்.

பிறகு செங்குட்டுவன் அம்மறையவனுக்குத் தன் நிறையைப்போல ஐம்பது மடங்கு நிறையுள்ள பொன்னைத் தானமாக அளித்தான். நூற்றுவர் கன்னரை அவர்கள் நாட்டுக்குப் போகும்படி விடைதந்து அனுப்பினான். வேறு சிலரை அழைத்து, “தமிழ் மன்னர்களின் ஆற்றலை அறிந்துகொள்ளாது போர் செய்த கனக விசயர்களைத் தமிழ் நாட்டிலுள்ள சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வாருங்கள்” என்று ஏவினான்.

பின்பே துயில் கொள்ளப் போனான், செங்குட்டுவன்.

விடிந்தது. “இனி நாம் நம் நகருக்கு மீளவேண்டும்” என்று அரசன் பணிக்க யாவரும் புறப்பட்டார்கள். அரசனைப் பிரிந்திருந்த மக்களும் அரசியும் மகிழ்ச்சிகொள்ள, வெற்றித் திருவோடும் பத்தினித் தெய்வச் சிலையோடும் அரசன் வஞ்சிமாநகரை அடைந்தான். நகர மாந்தர்கள் யானை வரிசைகளை முன்னிட்டுக்கொண்டு, வந்து வரவேற்றார்கள். அரசனை வாழ்த்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.