உள்ளடக்கத்துக்குச் செல்

சிலம்பு பிறந்த கதை/சிலம்பின் உதயம்

விக்கிமூலம் இலிருந்து
12. சிலம்பின் உதயம்

புலவர் சாத்தனாரால் கண்ணகியின் வரலாற்றை உணர்ந்து, சிலப்பதிகாரம் என்ற பெயரால் அந்த வரலாற்றைக் காவியமாகப் பாடத் தொடங்கினார் இளங்கோவடிகள் என்பதை முன்பு பார்த்தோம். அது முதல் அவர் அந்த வரலாற்றுக்குரிய செய்திகளை யெல்லாம் மெல்ல மெல்ல விசாரித்து அறிந்து கொண்டார். சோழநாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் வந்த மக்களை உசாவிப் பலவற்றைத் தெரிந்துகொண்டார். எப்படி எப்படிக் காவியத்தை அமைக்கவேண்டும் என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஒருவாறு திட்டம் செய்துகொண்டு காவியத்தை இயற்றத் தொடங்கினார். தம்மிடம் தமிழ் பயிலும் மாணாக்கர்களுக்குச் சொல்லி, எழுதும்படி செய்தார். எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான காவியமாக அமைக்கவேண்டும் என்பது அவர் விருப்பம்.

சிலப்பதிகாரக் கதையை மூன்று காண்டங்களாகப் பகுத்துக்கொண்டார். பூம்புகாராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் கண்ணகியை மணம் செய்து கொண்டு வாழ்ந்ததும், பின்பு மாதவியினிடம் மனம் செல்ல அவளுடன் சென்று இருந்ததும், பின்பு மனம் வேறுபட்டு அவளிடமிருந்து வந்து கண்ணகியோடு புறப்பட்டு உறையூரை அடைந்ததும் ஆகிய வரலாறுகள் உள்ள கதைப் பகுதிக்குப் புகார்க் காண்டம் என்று பெயர் கொடுத்தார். கோவலன் காட்டின் வழியே சென்று மதுரையை அடைந்ததும், கண்ணகியை ஆயர் சேரியிலே விட்டுவிட்டுச் சிலம்பு விற்கச் சென்றதும், கொலையுண்டதும், பிறகு கண்ணகி பாண்டியன்முன் சென்று வழக்கிட்டதும், மதுரைமா நகரத்தை எரித்துவிட்டுப் புறப்பட்டு வந்து மலை நாட்டை அடைந்ததும், வானவிமானத்தில் கோவலனோடு ஏறிச் சென்றதும் ஆகியவற்றைச் சொல்லும் பகுதிக்கு மதுரைக் காண்டம் என்று பெயர் இட்டார். மூன்றாவது வஞ்சிக் காண்டம். அதில் கண்ணகி வான விமானத்தில் சென்றதைக் குறவர்கள் செங்குட்டுவனிடத்தில் வந்து சொன்னது, அவன் கோயில் எடுக்க முடிவு செய்து இமயம் நோக்கிச் சென்றது, வடநாட்டு அரசரோடு பொருது வென்றது, இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கங்கையில் நீர்ப்படை செய்தது, அங்கிருந்து வஞ்சிமாநகர் வந்து பத்தினித் தெய்வத்துக்குக் கடவுள் மங்கலம் செய்து வழிபட்டது முதலிய செய்திகள் அடங்கியிருக்கின்றன.

முதலில் திங்களுக்கும், கதிரவனுக்கும், புகார் நகருக்கும் வாழ்த்துக் கூறிக் காவியத்தைத் தொடங்கினர். இடையிலே, காடு முதலிய இடங்களில் உள்ள மக்கள் தங்கள் தங்கள் கடவுளரை வழிபடுவதாகச் சொல்லி, அந்தக் கடவுளரின் துதிகளை அமைத்தார். இந்த வகையில் வேட்டுவ வரி என்னும் பகுதியில் துர்க்கையின் துதியும், ஆய்ச்சியர் குரவை என்பதில் திருமாலின் தோத்திரமும், குன்றக் குரவையில் முருகனுடைய வாழ்த்தும் வருகின்றன. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழின் கூறுபாடுகளும் இடையிடையே விரவி வரும்படி அமைத்தார்.

அதனைப் பாடப் பாட இளங்கோவடிகளுக்கு ஊக்கம் பெருகிவந்தது. பாடி முடித்தபோது அவருக்கு என்றும் இல்லாத மனநிறைவு உண்டாயிற்று. இடையே சில முறை சாத்தனார் வந்து சென்றார். “காவியம் முடிந்த பிறகு வந்து வழக்கம் போல் சில நாள் தங்குகிறேன்” என்று சொல்லி அவர் போய் விட்டார்.

சிலப்பதிகாரத்தை இயற்றும் வாய்ப்புத் தமக்குக் கிடைக்கவில்லையே என்று சாத்தனார் முதலில் எண்ணினார். பிறகு மாதவியின் மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை இயற்றத் தொடங்கினார். அதனால் அடிக்கடி வஞ்சிமாநகர் வருவதற்கு அவரால் இயலவில்லை. அவர் மணிமேகலை என்னும் காவியத்தை எழுதி முடித்துவிட்டார். ‘எப்படியாவது ஒரு காவியம் செய்துவிட வேண்டும்’ என்ற வீறு அவருக்கு இருந்தது. அதனால் அதை முழுமூச்சாக இருந்து முடித்தார்.

இளங்கோவடிகள் சிந்தனை செய்து செய்து மெருகேற்றிக் காவியத்தை நிறைவேற்றினார். சாத்தனார் மதுரையிலிருந்து வந்தார். அவர் தாம் இயற்றி முடித்திருந்த மணிமேகலை என்னும் காவியத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் இளங்கோவடிகளிடம் வந்தார். அடிகள், “இரண்டு நாட்களுக்கு முன்தான் சிலப்பதிகாரத்தை இயற்றி முடித்தேன். உங்களுக்குச் சொல்லியனுப்பவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்!” என்று மகிழ்ச்சியுடன் கூறி, அவரை வரவேற்றார்.

அப்போதுதான் சாத்தனர், “நானும் ஒரு காவியம் செய்திருக்கிறேன். மணிமேகலையின் கதையைச் சொல்வது அது” என்று சொன்னார்.

இளங்கோ, “நாம் முன்பு ஒருகால் பேசிக் கொண்டது இறைவன் அருளால் நிறைவேறி விட்டது. இருவரும் பெருநூல்களைச் செய்யவேண்டுமென்று உரையாடியது நினைவு இருக்கிறதா?” என்றார்,

“ஆம் நன்றாக நினைவில் இருக்கிறது. நான் இந்தக் காவியத்தை முடித்துப் பல நாட்களாயின. வேறு வேலைகள் இருந்தமையால் முன்பே வர முடியாமற் போயிற்று” என்று சாத்தனார் சொன்னார்.

இரண்டு புலவர்களும் ஒருவருக்கொருவர் தம் காவியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டார்கள். அடுத்தடுத்து இந்தக் காவியங்களை அரங்கேற்றுவது என்று தீர்மானித்தார்கள்.

சாத்தனார் செங்குட்டுவனிடம் சென்று தங்கள் கருத்தை எடுத்துச் சொன்னார். அவன் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தான்.

அரங்கேற்றம் நடைபெற்றது. முதலில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினார். அந்த அவையில் தலைவராகச் சாத்தனார் இருந்தார். அடுத்து, சாத்தனார் மணிமேகலையை அரங்கேற்றும்போது இளங்கோவடிகள் தலைவராக இருந்தார்.

இரண்டு நூல்களையும் யாவரும் கேட்டு இன்புற்றார்கள். சிலப்பதிகாரத்தின் அமைப்பும் சுவையும் சமரச எண்ணமும் மிகச் சிறந்தனவாக இருந்தன. ஆதலால் அதை அதிகமாகப் புலவர் பாராட்டத் தொடங்கினர். அழகான வருணனைகளும், பாடுவதற்குரிய இசைப் பாட்டுக்களும், பண்பு நிறைந்த உரையாடல்களும் நிரம்பிய அது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவிப் பெருமையைப் பெற்றது. அம்பிகையின் அடியார்கள் வேட்டுவ வரியில் உள்ள பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள். திருமால் அன்பர்கள் ஆய்ச்சியர் குரவையில் உள்ள துதிப்பாடல்களைப் பாடி உருகினார்கள். முருக பக்தர்கள் குன்றக் குரவையில் வரும் வாழ்த்துக்களை இசையுடன் பாடி இன்புற்றார்கள். மகளிர் வரிப்பாடல்களைப் பாடி விளையாடினார்கள்.

இவ்வாறு சுவைப்பிழம்பாக இருக்கும் சிலப்பதிகாரம் தமிழர்களுடைய நெஞ்சை அள்ளுவதாக அமைந்து விட்டது. “தமிழ்த் தாயின் திருவடிகளுக்கு இளங்கோவடிகள் அணிந்த சிலம்பு இது” என்று சிலர் பாராட்டினர். “இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் இது” என்று சிலர் புகழ்ந்தார்கள். “மூன்று மன்னர்களையும் மூன்று நாடுகளையும் பாடும் தமிழ் நாட்டு வரலாற்றுப் பனுவல்” என்று சிலர் கூறினர். “சேரமன்னனாகிய செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு அழகிய கற்கோயிலைக் கட்டினான்; அவனுடைய தம்பியாகிய இளங்கோவடிகளோ மிகமிக அழகான சொற்கோயிலைக் கட்டினார்” என்றார் ஒரு புலவர். “செங்குட்டுவன் கட்டிய கற்கோயிலைப் பார்க்க வேண்டுமானால் இந்த நகரத்துக்கு வந்துதான் காணவேண்டும்; அதற்கு இட எல்லை உண்டு. ஆனால் இளங்கோவடிகள் அமைத்த சொற்கோயிலோ எவ்விடங்களுக்கும் சென்று இன்பந் தருவது. அதனால் இது சிறந்தது” என்றார் மற்றொரு புலவர்.

சிலப்பதிகாரம் இன்றளவும் நிலைபெற்றுச் செந்தமிழ் நாட்டில் சிறந்த காவியமாய் நிலவுகிறது. ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லும் வரிசையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்று ஐந்து காவியங்கள் உண்டு. இந்த ஐந்திலும் முந்தியதும் சிறந்ததுமாக விளங்குவது சிலப்பதிகாரம். அதைப் புலவர்கள் சிலம்பு என்றும் வழங்குவார்கள்.

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதியார் பாடியிருக்கிறார். அந்தச் சிலம்பு பிறந்து தமிழ்த் தாயின் அணிகலனாக நிலவுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இதுவரையில் உள்ள வரலாறு தெரிவிக்கிறது. சிலம்பு பிறந்த கதை இதுதான்.



பயிற்சி

1. இளங்கோவடிகள் பயணத்தில் கண்டவைகளைச் சுருக்கி வரைக.

2. இளங்கோவடிகள் துறந்ததற்குக் காரணமான நிகழ்ச்சி யாது?

3. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் பழைய வினை யென்பதை விளக்கும் வரலாற்றை எழுதுக.

4. செங்குட்டுவன் வடக்கே படையெடுத்துச் செல்லக் காரணம் என்ன?

5. கடவுள் மங்கலம் செய்த நாளில் நிகழ்ந்தவற்றைச் சுருக்கி எழுதுக.

6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதுவதற்கு என்ன காரணம்?

7. சிலப்பதிகாரத்தை எப்படி எப்படி மக்கள் பாராட்டினார்கள்?