சிலம்பு பிறந்த கதை/பத்தினி கோயில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
11. பத்தினி கோயில்

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரத்தை அறிந்து அவ்விருவரின் தந்தையரும் துறவு பூண்டதையும், தாய்மார் இருவரும் உயிர்நீத்ததையும் மாடலன் செங்குட்டுவனிடம் முன்பு சொன்னான் அல்லவா? கண்ணகியோடு இருந்து அவளுடன் நெருங்கிப் பழகிய தோழி ஒருத்தி உண்டு. மறைக் குலமகளாகிய அவளுக்குத் தேவந்தியென்பது பெயர். கண்ணகியை வளர்த்த செவிலித்தாய் ஒருத்தி இருந்தாள். செவிலித் தாயைக் காவற்பெண்டு என்றும் சொல்வார்கள். அந்தச் செவிலியின் மகள் ஒருத்தியும் கண்ணகிக்குத் தோழியாக இருந்தாள். இம் மூவரும் கோவலன் கொலையுண்டதையும் கண்ணகி மதுரையை எரித்துவிட்டுப் புறப்பட்டதையும் கேள்வியுற்றார்கள். கண்ணகியை விட்டுவிட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. ஆதலின் அவர்கள் மூன்று பேரும் புகார் நகரத்தை விட்டு மதுரைக்கு வந்தார்கள்.

கண்ணகி எங்கே தங்கியிருந்தாள், அவள் கணவன் எங்கிருந்து போனான், எப்படிக் கொலையுண்ணப் பட்டான் என்று அவர்கள் விசாரித்து அறிந்தார்கள். மதுரைக்குப் புறம்பேயுள்ள ஆயர்பாடியில் கண்ணகி தங்கியிருந்த செய்தி தெரிந்தது. அங்கே அவளைப் பாதுகாத்து வேண்டிய உதவிகளைச் செய்த மாதரி என்னும் ஆய்மகள் துயரம் தாங்காது இறந்த செய்தியைக் கேள்வியுற்றார்கள். அவளுடைய பெண்ணாகிய ஐயை என்பவள் அங்கே இருந்தாள். கண்ணகிக்கு வேண்டிய ஏவலைச் செய்தவள் அவள்; கண்ணகியிடம் பேரன்பு படைத்தவள். அவள் தனக்கு மணம் புரிவார் யாரும் இல்லாமல் கன்னியாகவே இருந்தாள். இம் மூவரையும் கண்ட அவள், “நானும் உங்களுடன் சேர்ந்து வருகிறேன்” என்றாள். நான்கு பேர்களும் கண்ணகி எந்த வழியாக வஞ்சிமாநகருக்குப் போனாளோ அந்த வழியை மேற்கொண்டு நடந்தார்கள். வையையாற்றின் கரை வழியே சென்று மலைநாட்டை அடைந்தார்கள், பிறகு வஞ்சிமாநகர் சென்றபோது, இன்றுதான் கண்ணகி கோயிலில் கடவுள் மங்கலமாகிய பிரதிட்டை நடக்கிறது என்று கேள்வியுற்றார்கள். தக்க காலத்தில் வந்தோம். இதுவே கண்ணகி நம்பால் வைத்திருந்த அன்புக்கு அறிகுறி என்று பெருமகிழ்ச்சியை அடைந்து, யாவரும் பத்தினி கோயிலுக்குச் சென்றனர்.

அங்கே செங்குட்டுவன் இருந்தான். பல பெரியோர்கள் குழுமியிருந்தனர். வஞ்சிமாநகரத்து ஆடவரும் மகளிரும் பக்தியுடன் நின்றிருந்தார்கள். கடவுள் மங்கலத்துக்குரிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த நான்கு பெண்மணிகளும் கோயிலுக்குள் புகுந்து செங்குட்டுவனைக் கண்டார்கள். அவன் அவர்களை, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.

“வடபேரிமயத்திலே பிறந்து கங்கைப் புனலாடிப் போந்த இந்தப் பத்தினித் தெய்வத்துக்குத் தோழி நான்; காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகியாக இருந்த போது அவளுடன் இருந்து அளவளாவும் பேறு பெற்றவள்” என்றாள் தேவந்தி.

"தன் கணவன் தன்னைப் பிரிவதற்குக் காரணமாக இருந்த மாதவியினிடம் சிறிதும் சினம் கொள்ளாமல், தன் கணவனுடன் காட்டுவழியே சென்ற கண்ணகிக்குச் செவிலித்தாய் நான்" என்றாள மற்றொருத்தி.

“தன்னைப் பெற்ற அன்னைக்கும் அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை. வளர்த்த செவிலியாகிய என் அன்னைக்கும் ஒரு சொல் இல்லை. யாரும் அறியாமல் கற்பு ஒன்றையே கருதித் தன் கணவன் பின்னே போன அந்தப் பெருமாட்டிக்குத் தோழி நான்” என்றாள் ஒருத்தி.

ஐயை இன்னாள் என்பதையும் தேவந்தி சொன்னாள். யாவரும் கண்ணகியின் உருவச் சிலையைக் கண்டு ஆராமை மீதூரப் பார்த்தார்கள்.

அப்போது செங்குட்டுவன் வானத்தில் ஒரு காட்சியைக் கண்டு வியந்தான்; “என்னே இது! என்னே இது! பொற்சிலம்பும் மேகலையும் வளைக்கையும் வயிரத் தோடும் பொன்னாபரணங்களும் அணிந்து, மின்னற்கொடி போன்ற ஓர் உருவம் அதோ வானத்தில் தோன்றுகிறது!” என்று அவன் கூவினான். எல்லாரும் அத்திசையை நோக்கினார்கள். அப்போது வானிலே ஓர் ஒலி எழுந்தது. “நெடுஞ் செழியனாகிய பாண்டியன் சிறிதும் குற்றம் இல்லாதவன். அவன் தேவ அரசனுடைய அரண்மனையில் நல் விருந்தாக இருக்கிறான். நான் முருகன் எழுந்தருளியிருக்கும் குன்றில் என்றும் விளையாடுவேன். தோழிமார் எல்லாரும் வாருங்கள்” என்று அந்த ஒலி கூறியது.

அங்கே இருந்த மகளிர் யாவரும் கண்ணகியைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார்கள். தரிசனம் செய்ய வந்தவர்கள் எல்லாம் வியப்பிலே மூழ்கினார்கள், கண்ணகி தெய்வம் என்பது முக்காலும் உண்மை. பாண்டியன் செய்த தீங்கினால் அவள் கணவனை இழந்தாள் என்று உலகம் சொல்கிறது. தன் பேரருளால் அதை மறந்தல்லவா இந்தத் தெய்வமங்கை பேசுகிறாள்? நாமெல்லாம் இந்தத் தெய்வத்தை நம்முடைய சேரமான் உருவாக்கினமையால் எங்கள் அரசனுடைய மகள் என்று சொல்கிறோம். ஆனால் இவளோ தான் பாண்டியன் மகள் என்றல்லவா சொல்கிறாள்? நாம் சேரமானை வாழ்த்திக்கொண்டிருக்க, இந்தப் பிராட்டியோ பாண்டியனை வாழ்த்துகிறாள்! என்ன அருள்!” என்று சொல்லிச் சொல்லி அதிசயித்தார்கள்.

பெண்கள் சோழனையும் பாண்டியனையும் சேரனையும் பாடி வாழ்த்தினார்கள். கண்ணகியின் பெருமையைப் பாடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

கடவுள் மங்கலம் நிறைவேறியது. கண்ணகி தெய்வத்தன்மையுடன் அந்தக் கோயிலில் எழுந்தருளி நலம் செய்வாள் என்று யாவரும் நம்பி வணங்கினர். அரசன், திருக்கோயிலில் நாள்தோறும் நடக்கவேண்டிய பூசைக்கும் அவ்வப்போது சிறப்பாக நடக்கவேண்டிய விழாக்களுக்கும் உரிய நிபந்தங்களை அமைத்தான். “இந்தப் பெருமாட்டிக்குரிய பூசனையை நீயே செய்வாயாக!” என்று தேவந்தியைப் பணித்தான்.

கோயிலை வலமாக மும்முறை வந்து சேர அரசன் பத்தினித் தெய்வத்தை வணங்கினான். பிறகு அங்கே வந்திருந்த வேறு மன்னர்களும் பணிந்து வணங்கி னார்கள். வடநாட்டு அரசர்களும், கொங்குநாட்டு மன்னரும், மாளுவ வேந்தரும், இலங்கையிலிருந்து வந்திருந்த கயவாகு வேந்தனும், “பத்தினிக் கடவுளே! எங்கள் நாட்டிலும் உன்னை நிறுவி வணங்க எண்ணியிருக்கிறோம். இங்கே நீ இருந்து அருள் செய்தது போல அங்கும் எழுந்தருளி வரம் தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். “அவ்வாறே தந்தேன் வரம்” என்று ஒரு குரல் வானில் எழுந்தது. யாவரும் மனம் உருகி அத்தெய்வத்தை வாழ்த்தினார்கள். செங்குட்டுவன் அங்கிருந்து அகன்றான்.

அதன் பின்பு இளங்கோவடிகள் கோயிலுக்கு வந்தார். கண்ணகியை வாழ்த்தி வணங்கினார். அப்போது தேவந்தியின்மேல் கண்ணகி ஆவேசமாக வந்து, இளமையில் இளங்கோவடிகள் துறவுபூண்ட வரலாற்றை எடுத்துரைத்தாள்; “செங்குட்டுவனுக்கு உண்டான கவலையை நீக்கி, இந்தப் பூபாரம் எனக்கு வேண்டாம் என்று துறந்து, சிந்தை செல்லாத பேரின்ப அரசை ஆள்கின்ற வேந்தன் நீ அல்லவோ?’ என்று பாராட்டினாள். இளங்கோவடிகள் பத்தினித் தெய்வத்தைப் பரவிப் பாடினார்.