சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/"நமனை அஞ்சோம்!"

விக்கிமூலம் இலிருந்து
15. நமனை அஞ்சோம்!


வேலனின் காதலி நீல மயில் ஒன்றை வளர்த்து வருகிறாள். அந்த மயிலைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு முருகனுடைய நினைவு வருகிறது, காதலின் தாபம் அதிகமாகிறது. ஒருநாள் மயிலைப் பார்த்துச் சொல்கிறாள்; "நீ பெருமான் முருகனுடைய வாகனமல்லவா? போ! போய் அவரை இங்கு விரைவில் அழைத்து வா!" என்று கட்டளை இடுகிறாள். கட்டளையிடுவதுடன் நிற்காமல் மயிலை அடிப்பதாக பயமுறுத்தி விரட்டி விடுகிறாள். நீலமயில் விரைவில் திரும்பி வரும் என்றும், வரும்போது தன்மீது வேலனை ஏற்றிக்கொண்டு ஆடிவருமென்றும் காதலி வழிபார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் நெடுநேரம் காத்திருந்தும் மயிலையும் காணவில்லை; வேலனையும் காணவில்லை. "வேலன் ஒருவேளை அடியோடு தன்னை மறந்து விட்டிருப்பாரோ?" என்று ஒரு கணம் தோன்றுகிறது.

உடனே அந்த பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. கடைசித் தடவை வேலனை அவள் சந்தித்தபோது, "என்னை மறந்து விடக் கூடாது" என்று தான் இரந்து கேட்டுக் கொண்டதும், அவர் தம் வேலின் மேல் ஆணையாக "உன்னை ஒரு நாளும் மறக்க மாட்டேன்!" என்று வாக்களித்ததும் நினைவுக்கு வருகின்றன. உடனே, "இல்லை, அவர் ஒருநாளும் மறந்திருக்க மாட்டார். இந்த மயில்தான் தாமதம் செய்கிறது" என்று தீர்மானித்துக் கொள்கிறாள். தன் மனக் கண்ணின் முன்னால் மயிலை உருவகப்படுத்தி நிறுத்திக் கொண்டு சொல்கிறாள்; "மறவேன் மறவேன் என்று வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறப்பாரோ நீல மயிலே!" என்று சிவகாமி பாடிக் கொண்டு அபிநயமும் பிடித்தபோது, சபையோரின் கண் முன்னாலிருந்து சிவகாமி மறைந்து விட்டாள். தமிழகத்தின் அதிதெய்வமான ஸரீசுப்ரமண்யர் கையில் வேலுடனே அவர்கள் கண் முன்னால் நின்றார். கருணையும் அன்பும் ததும்பிய கண்களினால் முருகப் பெருமான் தன்னிடம் காதல் கொண்ட பெண்ணை நோக்குவதையும், கையில் பிடித்த வேலின் மேல் ஆணை வைப்பதையும், 'உன்னை என்றும் மறவேன்!' என்று உறுதி கூறுவதையும் சபையோர் பிரத்தியட்சமாய்க் கண்டார்கள்.

அடுத்த கணத்தில் வேலனும் வேலும் மறைய, வேலனைப் பிரிந்த காதலியையும் நீல மயிலையும் சபையோர்கள் தங்கள் எதிரே பார்த்தார்கள். காதலியின் உயிர் வேலனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமையினால் உருகிக் கரைவதையும் அவர்கள் கண்டார்கள். "அன்பர் வரவுநோக்கி இங்குநான் காத்திருக்க அன்னநடை பயில்வாயோ வன்ன மயிலே!" என்னும் அடிக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, முதலிலே தன்னந் தனியான ஒரு பெண், கண்களில் அளவற்ற ஆசையுடனும் ஆர்வத்துடனும், முடிவில்லாமல் நீண்டு சென்ற வழியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். பிறகு, அந்தப் பெண், அன்னநடை பயிலும் வன்ன மயிலைப் பரிகசிப்பதற்காகத் தானும் அன்ன நடை நடந்து காட்டியபோது, சபையில் 'கலீர்' என்ற சிரிப்பு உண்டாயிற்று. அவ்விதமே, முருகன் தன்னை வாகனமாய்க் கொண்ட பெருமிதத்தினால் மயிலின் தலைக்கேறிய போதையைக் காட்டியபோதும், அதனால் மயில் பாதையை மறந்து திண்டாடிய பேதைத் தனத்தைக் குறிப்பிட்ட போதும் சபையில் ஒரே குதூகலமாயிருந்தது.

"ஒருவேளை என்மேல் பழி தீர்த்துக் கொள்வதற்காக வழியில் வேணுமென்று படுத்து உறங்கி விட்டாயா?" என்று மயிலைப் பார்த்துக் கேட்டுவிட்டு, அப்பேர்ப்பட்ட அநியாயத்தைச் செய்த மயிலை, "என்னவோ, நீ எப்படியாவது சௌக்கியமாயிரு!" என்று மனங்கசந்து ஆசீர்வதிப்பதற்கு அறிகுறியாக, "வாழி நீ மயிலே!" என்று வாழ்த்தி, அதற்குரிய பாவமும் காட்டியபோது, அந்தச் சபையில் ஏற்பட்ட ஆரவாரத்தைச் சொல்லி முடியாது. மறுகணத்தில் காதலியின் உள்ளப்பாடு மாறுகிறது. "தங்க மயிலே!" என்று கொஞ்சி அழைத்து, இந்த மங்கை மீதிரங்க மாட்டாயா?" என்று கெஞ்சுகிறாள். "உனக்காகவும் தெரியாது; சொன்னாலும் நீ கேட்க மாட்டாய்! உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன்? ஏ! வன் கண் மயிலே!" என்று மயிலின் கொடுமையான கண்களின் சலனப் பார்வையைச் சிவகாமி காட்டியபோது, சபையோர் அதிசயத்தில் மூழ்கினார்கள். "உன்னை நொந்து பயனில்லை; உலகத்தில் யானைகள், குதிரைகள் என்பதாக எத்தனையோ நல்ல நல்ல பிராணிகள் இருக்க, உன்னைப் போய் வாகனமாய்ப் பிடித்தானே அவனையல்லவா நோக வேண்டும்?" என்று பாட்டை முடிக்கும் போது, அதில் அடங்கியிருந்த சோகம், மனக் கசப்பு, பரிகாசம், நகைச்சுவை ஆகிய உள்ளப் பாடுகள் அவ்வளவையும் சேர்ந்தாற்போல் முகத்தில் காட்டிய சிவகாமியின் அற்புதக் கலைத்திறமை சபையோரைப் பரவசப்படுத்தியது.

ஆம்; மேற்கூறிய பாடலும் அபிநயமும் சபையில் எல்லோரையும் பரவசப்படுத்தத்தான் செய்தன - ஒரே ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் மகேந்திர பல்லவர்தான். அவர் முகத்தில் சிணுக்கம் காணப்பட்டது. வேலனிடம் காதலை வௌியிடும் வியாஜத்தில் சிவகாமி மாமல்லரிடம் தன்னுடைய மனம் ஈடுபட்டதையும் தெரிவிக்கிறாள் போலும். 'வேலின் மேல் ஆணையிட்ட மன்னர்' என்பதில், அடங்கிய சிலேடை மிகத் தௌிவாக மகேந்திரருக்கு விளங்கியது. 'தன்னிகரில்லாதான்' என்னும்போது சிவகாமி தம்மைப் பார்த்ததின் கருத்தையும் தெரிந்து கொண்டார். ஆகா! இந்த பெண்ணுக்குத்தான் என்ன தைரியம்! தம்மைத் தோத்திரம் செய்து அவளுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள எண்ணுகிறாள், போலும்! ஆகா! மகேந்திர பல்லவனுடைய இயல்பை இவள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை! இவ்விதம் எண்ணமிட்ட சக்கரவர்த்தி, அருகிலிருந்த ஏவலாளனிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். அவன் போய் ஆயனர் காதோடு ஏதோ கூறினான். ஆயனர் சிவகாமியிடம், "அம்மா! வாகீசப் பெருமானின் பதிகம் ஒன்று பாடு!" என்று கூறினார். ஏற்கெனவே, சக்கரவர்த்தியின் சிணுங்கிய முகத்திலிருந்து அவருடைய மனப்பாங்கைச் சிவகாமி ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தாள். அவர் சொல்லி அனுப்பிய செய்தியினால் அது ஊர்ஜிதமாயிற்று.

அந்தக் கல் நெஞ்சரைத் தன்னுடைய கலையின் மூலம் இளகச் செய்து, அவருடைய ஆதரவைப் பெறலாம் என்று எண்ணிய தன்னுடைய பிசகை நினைக்க அவளுக்கு வெட்கமாயிருந்தது. அந்த வெட்கமே மறுகணம் கோபமாக மாறி அவள் உள்ளத்தில் கொந்தளித்தது. பின்வரும் பாடலை ஆரம்பித்தாள்: "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!..." அதுவரையில் ஒரே ஆனந்தத்திலும் குதூகலத்திலும் ஆழ்ந்திருந்த அந்தச் சபையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. ஒரு கல்யாண வைபவத்தின்போது, எதிர்பாராத அபசகுனம் ஏதேனும் ஏற்பட்டால் எல்லாருடைய மனமும் முகமும் எப்படி மாறுமோ அப்படிப்பட்ட மாறுதல். 'இந்தப் பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் பாடவேண்டும்' என்று அத்தனை பேரும் எண்ணியதாக அவர்களுடைய முகக் குறியிலிருந்து தெரிந்தது.

மேற்படி பாடலின் சரித்திரம் அத்தகையதாகும். சமண சமயத்தைத் தழுவிய மருள் நீக்கியார்மீது பாடலிபுரத்துச் சமணர்கள் பற்பல குற்றங்களைச் சுமத்திக் காஞ்சிப் பல்லவ சக்கரவர்த்திக்கு விண்ணப்பம் செய்துகொள்ள, மகேந்திர பல்லவர் உண்மையை விசாரித்து உணரும் பொருட்டு அவரைக் காஞ்சிக்கு வரும்படி கட்டளை அனுப்பினார். கட்டளையைக் கொண்டு போன இராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள். "எனக்கு இறைவன், சிவபெருமான் தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதியேன்!" என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்களைத் திடுக்கிடச் செய்தார். "உம்மைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவோம், யானையின் காலால் மிதிக்கச் செய்வோம்; கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே போடுவோம்" என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்தினார்கள். அப்போது, மருள்நீக்கியார் ஒரு பாடலைப் பாடினார்: நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளுந் துன்பமில்லை! தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதில் கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!

மேற்கண்ட பாடலை ஓலையிலே எழுதுவித்து, "இதை எடுத்துக்கொண்டு போய் உங்கள் அரசரிடம் கொடுங்கள்" என்றார் சிவனடியார். தூதர்களும் தங்களுக்கு வேறு கட்டளையில்லாமையால் திரும்பிச் சென்று பாடலைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாகக் காரியம் நடந்தது. அதாவது பாடலைப் படித்த மகேந்திர பல்லவர் அத்தகைய தெய்வப் பாடலைப் பாடக் கூடிய மகானைத் தரிசிக்க விரும்பினார். அவரைத் தரிசித்த பிறகு, தாமும் ஜைன மதத்தைவிட்டுச் சைவ சமயத்தைச் சேர்ந்தார். இதெல்லாம் தெரிந்தவர்களானபடியாலேதான் சபையோர் அத்தகைய அஸ்வாரஸ்யத்தைக் காட்டினார்கள்.

ஆனால், சபையோருடைய மனோபாவத்துக்கு நேர்மாறாக இருந்தது மகேந்திர பல்லவருடைய மனோபாவம். அந்தப் பாடல் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. பாடல் ஆரம்பித்த உடனே, அது எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதென்பதை மகேந்திரர் புலிகேசிக்கு அறிவித்தார். புலிகேசிக்கு அது எல்லையற்ற வியப்பையும் உவகையையும் அளித்ததாகத் தெரிந்தது. "அழகுதான்! தங்களுடைய அதிகாரத்தை மறுதலித்து ஒரு பரதேசி பாடல் பாடுவது; அதை ஒரு பெண், சபை நடுவில் அபிநயம் பிடிப்பது; அதை நீங்களும் பார்த்துச் சந்தோஷப்படுவது; இதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லையே!" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி. "அதுதான் கலையின் மகிமை, சத்யாச்ரயா! ஒருவன் வாய்ப் பேச்சாக என் ஆக்ஞையை மறுத்திருந்தால், உடனே அவனைச் சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன். அதுவே செந்தமிழ்க் கவிதையாக வந்தபோது, 'இத்தகைய அற்புதக் கவிதையைப் பாடியவரைப் பார்க்க வேண்டும்' என்ற விருப்பம் எனக்கு உண்டாகிவிட்டது" என்றார் ரஸிக சிகாமணியான காஞ்சிச் சக்கரவர்த்தி. இதற்குள்ளாகப் பாடல் ஒரு தடவை பாடி முடிந்து, அபிநயமும் ஆரம்பமாகியிருந்தது. 'நமனை அஞ்சோம்' என்னும் பகுதிக்குச் சிவகாமி அபிநயம் பிடிக்கத் தொடங்கியிருந்தாள். மார்க்கண்டனுடைய கதை சபையோரின் கண்முன்னால் வந்தது. மல்லிகைப் பூவின் மெல்லிய இதழ் போன்ற மிருதுவான சரீரத்தையுடைய அந்த யுவதி ஒரு கணத்தில் கையிலே தண்டாயுதத்துடனும் பாசக் கயிற்றுடனும் கண்டவர்கள் உயிர்க் குலையும் பயங்கரத் தோற்றத்துடன் வரும் யமதர்மராஜனாக மாறுகிறாள்! அடுத்த கணத்தில் அவளே பதினாறு வயதுள்ள இளம் பாலகனாக மாறி, முகத்தில் சொல்ல முடியாத பீதியுடன், சிவலிங்கத்தை அணைத்து ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறாள். மறுகணத்தில் யமதர்மராஜன் தன் பாசக் கயிற்றை வீசி எறிந்து மார்க்கண்டனுடைய உயிரை வலிந்து கவரப் பார்க்கிறான். அந்த இளம் பிள்ளையின் முகமோ முன்னைக் காட்டிலும் பதின்மடங்கு பீதியையும் பரிதாபத்தையும் காட்டுகிறது.

ஆஹா! அடுத்தகணத்தில் அந்தச் சிவலிங்கத்திலிருந்து சம்ஹார ருத்ரமூர்த்தி கிளம்புகிறார்! சிவகாமியின் நெடிதுயர்ந்த ஆகிருதி இப்போது இன்னும் உயர்ந்து தோற்றமளிக்கிறது. ஒரு கணம் கருணை ததும்பிய கண்கள் சற்று கீழ்நோக்கிப் பார்க்கின்றன. கரங்கள், பாலன் மார்க்கண்டனுக்கு அபாயம் அளிக்கின்றன. மறு கணத்தில் கண்கள் எதிர்ப்புறம் நோக்குகின்றன. யமனைக் கோபத்துடனே பார்க்கும் கண்களில் அக்னி ஜுவாலை தழல் விடுகிறது. புருவங்களுக்கு மத்தியிலே நெற்றிக் கண் இதோ திறந்துவிடப்போகிறது என்று நினைக்கும்படியாக ஒரு துடிதுடிப்புக் காணப்படுகிறது. கோர பயங்கர உருவம் கொண்ட யமதர்மனிடம் இப்போது சிறிது பணிவைக் காண்கிறோம். "என் பேரில் ஏன் கோபம்? என்னுடைய கடமையைத்தானே செய்கிறேன்?" என்று சொல்லும் தோற்றம். கோபம் கொண்ட சம்ஹார ருத்ரமூர்த்தி மீண்டும் சபையோருக்கு தரிசனம் தருகிறார். ஒரு காலைத் தூக்கி ஓங்கி உதைக்கிறார். 'தடார்' என்ற சத்தத்துடன் யமன் உதைபட்டுக் கீழே விழுகிறான். மீண்டும், பாலன் மார்க்கண்டனின் பால் வடியும் முகம். ஆகா! அந்த முகத்தில் இப்போது பயம் இல்லை, பீதி இல்லை! பக்திப் பரவசமும் நன்றியும் ததும்புகின்றன.

அபிநயம் ஆரம்பித்தவுடனேயே சபையோர் தங்களுடைய பழைய விரஸ உணர்ச்சியை மறந்துவிட்டார்கள். பாட்டு யார் பாடியது; எந்தச் சந்தர்ப்பத்தில் பாடியது என்பதெல்லாம் அவர்களுக்கு அடியோடு மறந்து போய்விட்டது. வௌியுலகத்தை மறந்து, தங்களையும் அடியோடு மறந்துவிட்டார்கள். பாடல் முழுவதும் முடிந்து, பூலோகத்திற்கு வந்தவுடனே "எப்படி?" என்று மகேந்திர பல்லவர் புலிகேசியைக் கேட்டார். "நாகநந்தி எழுதியது உண்மைதான்!" என்று வாதாபி மன்னர் சொல்லிவிட்டு மகேந்திர பல்லவரை உற்று நோக்கினார். மகேந்திரரின் முகத்தில் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை. "நாகநந்தி யார்?" என்று சாவதானமாக மகேந்திரர் கேட்டார். "நீங்கள் நாகநந்தி பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையா? தென்னாடெங்கும் பலநாள் யாத்திரை செய்த புத்த பிக்ஷு." "பிக்ஷு என்ன எழுதியிருந்தார் தங்களுக்கு?" "அவருடைய யாத்திரை விவரங்களை எனக்கு அவ்வப்போது தெரிவுக்கும்படி கேட்டிருந்தேன். அந்தப்படியே எழுதிக் கொண்டு வந்தார். 'ஆயனரைப் போன்ற மகா சிற்பியும் சிவகாமியைப் போன்ற நடன கலா ராணியும் இந்தப் பரத கண்டத்தில் வேறு எங்கும் இல்லை!' என்று ஒரு தடவை எழுதியிருந்தார்." "நாகநந்தி பிக்ஷு நல்ல ரசிகர் போலிருக்கிறது; அவர் இப்போது எங்கேயோ?" "அதுதான் தெரியவில்லை; ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைத்தேன். மகேந்திரர் மௌனமாயிருந்தார். "நாட்டில் இருந்த புத்தபிக்ஷுக்களையெல்லாம் ஒற்றர்கள் என்று நீங்கள் பிடித்துச் சிறைப்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை நாகநந்தி பிக்ஷுவையும் ஒற்றர் என்று சந்தேகித்துச் சிறைப்படுத்தி விட்டீர்களோ, என்னவோ?"

மேற்குறித்த சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில், சிவகாமியின் கண்கள் கரகோஷம் செய்து ஆரவாரித்துக் கொண்டிருந்த சபையோரின் மலர்ந்த முகங்களைப் பார்த்த வண்ணம் சுற்றிக் கொண்டு வந்து, மகேந்திர பல்லவரின் உற்சாகம் ததும்பும் முகத்தைப் பார்த்து விட்டு, அடுத்தாற்போல் வாதாபிச் சக்கரவர்த்தியின் கிளர்ச்சி கொண்ட முகத்தில் வந்து நின்றன. அவ்விதம் நின்றதும் சிவகாமியின் உள்ளத்தில் இத்தனை நேரமும் படர்ந்து வேதனை செய்து கொண்டிருந்த மாயத்திரை பளிச்சென்று விலகிற்று. நிழலாயிருந்த ஞாபகம் தௌிந்த உருவெருத்து மனக்கண் முன்னால் நின்றது. ஆ! அந்த முகம்! அப்படியும் இருக்க முடியுமா? இரு மனிதருக்குள் அத்தகைய முக ஒற்றுமை சாத்தியமா? அல்லது இருவரும் ஒருவர்தானா? மகேந்திர சக்கரவர்த்தி பலவித மாறுவேஷங்கள் போட்டுக் கொண்டு திரிவதுண்டு அல்லவா? அதுபோலவே, வாதாபிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவாகத் தென்னாட்டில் உலவிக் கொண்டிருந்தாரா?

இத்தகைய எண்ணங்களினால் சிவகாமியின் உள்ளம் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, மகேந்திர பல்லவர் நடனத்தை முடித்து விடலாம் என்று ஆயனருக்குச் சமிக்ஞை செய்தார். நடனக் கலையின் அதி தெய்வமும் தமிழ் நாட்டின் தனிப் பெருந்தெய்வமுமான ஸரீ நடராஜமூர்த்தி தில்லைப் பதியில் ஆடிய ஆனந்த நடனத்தை வர்ணிக்கும் பாடலோடும், அதற்குரிய நடன அபிநயத்துடனும் அன்றைய நடன வினிகை முடிவுற்றது. "இம்மாதிரி ஒரு நடனம் இதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேலும் நடக்கப் போவதில்லை!" என்று அம்மகாசபையில் கூடியிருந்த ரஸிகர்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டார்கள்.

மகேந்திர பல்லவர் மீண்டும் சமிக்ஞை செய்ததின் பேரில் ஆயனரும் சிவகாமியும் இரு சக்கரவர்த்திகளும் அமர்ந்திருந்த சிம்மாசனங்களுக்கு அருகே சென்று வணங்கி நின்றார்கள். மகேந்திர பல்லவர், "ஆயனரே! முன் தடவை இதே இடத்தில் சிவகாமியின் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்த போது, இடையிலே தடைப்பட்டதல்லவா? அந்தத் தடைக்குக் காரணமான வாதாபிச் சக்கரவர்த்தியே இங்கு இன்று வீற்றிருப்பது உமது குமாரியின் அற்புத நடனத்தைப் பார்த்துக் களித்தார்!" என்று கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, "அம்மா, சிவகாமி! வாதாபிச் சக்கரவர்த்தி உன்னுடைய நடனக் கலைத்திறமையில் ஒரேயடியாக மயங்கிப் போய்விட்டார். உன்னையும் உன் தகப்பனாரையும் தம்முடன் வாதாபிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கிறார். உனக்குப் போகச் சம்மதமா?" என்று வினவினார்.

சிவகாமி கோபத்தினால் தன்னடக்கத்தை இழந்து, "பிரபு இந்த ஏழைப் பெண் இந்தத் தேசத்தில் இருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லையா?" என்றாள். இம்மொழிகள் ஆயனருக்கும் இன்னும் பக்கத்தில் நின்றவர்களுக்கும் வியப்பையும் பயத்தையும் அளித்தன. ஆனால் மகேந்திர பல்லவரின் முகத்தில் மட்டும் புன்னகைதான் தவழ்ந்தது. அவர் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்து, "சத்யாச்ரயா! பார்த்தீர்களா? சாட்டையினால் அடித்து நடனம் ஆடச் சொல்லும் நாட்டுக்குக் கலைஞர்கள் போக விரும்புவார்களா?" என்றார்.

அப்போது புலிகேசியின் முகம் கறுத்ததையும், அவருடைய கண்களில் கனல் எழுந்ததையும் கவனியாமல், மகேந்திரர் "அம்மா சிவகாமி! உன்னை நாட்டை விட்டுத் துரத்த நான் விரும்பவில்லை. இந்த நகரத்தை விட்டு உங்களைப் போகச் சொல்லவே எனக்கு இஷ்டமில்லை. ஆயனரே! இன்று இவ்வளவு அற்புதமாக நடனம் ஆடிய சிவகாமிக்கு நான் பரிசுகள் கொடுக்க வேண்டும். அதுவரை சில தினங்கள் நீங்கள் நகரிலேயே இருக்க வேண்டும். கமலியின் வீட்டில் போயிருங்கள்; கமலியும் சிவகாமியைப் பார்க்க ஆவலாயிருக்கிறாள். பின்னர் அங்கு நான் வந்து உங்களுடன் சாவகாசமாகப் பேசுகிறேன்!" என்றார்.