உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/இந்தப் பெண் யார்?

விக்கிமூலம் இலிருந்து
34. இந்தப் பெண் யார்?


காஞ்சிமா நகரம் இதற்கு முன் எந்த நாளிலும் கண்டிராத அமைதியுடன் விளங்கிற்று. பெரிய பயங்கரமான புயல் அடித்து ஓய்ந்த பிறகு ஏற்படும் அமைதியை அது ஒத்திருந்தது. நகர வாசிகளின் மன நிலைமையும் அதற்கேற்றபடிதான் இருந்தது. வாதாபிப் படைகள் தொண்டை நாட்டில் சொல்லொணாத அட்டூழியங்களைச் செய்துவிட்டுப் பின்வாங்கிச் சென்றது பற்றியும், மணிமங்கலத்திலும் சூரமாரத்திலும் நடந்த போர்களைப் பற்றியும், காஞ்சி நகர் வாசிகளுக்கு அரைகுறையான விவரங்கள் கிடைத்திருந்தன. மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தி மணிமங்கலம் போர்க்களத்தில் அடைந்த காயங்களினால் யமன் உலகை எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதும், அவரைப் பிழைப்பிக்க அரண்மனை வைத்தியர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பதும் காஞ்சி மக்களுக்குத் தெரிந்திருந்தபடியால், எந்த நிமிஷத்திலும் அவர்கள் "சக்கரவர்த்தி காலமானார்" என்ற துக்கச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மணிமங்கலம் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த வீரர் சிலரின் மூலம் ஆயனருடைய கால் முறிந்த செய்தியையும், சிவகாமி, சளுக்கர்களால் சிறைப் பிடித்துக் கொண்டு போகப்பட்ட விவரத்தையும் காஞ்சி மக்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் அவர்களுக்கு எல்லாவற்றிலும் அதிக வேதனையை அளித்திருந்ததுடன் மகேந்திர பல்லவரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையைப் பெரிதும் குறைத்திருந்தது. இத்தகைய காரணங்களினால் காஞ்சி மாநகரம் களையற்றுக் கலகலப்பற்று, சோபிதமில்லாமல் அசாதாரணமான அமைதி குடிகொண்ட நகரமாய் விளங்கிற்று. நகரத்திலேயே இப்படி இருந்தது என்றால் அரண்மனைக்குள்ளே கேட்க வேண்டியதில்லை. புவனமகாதேவி மகேந்திர பல்லவரை மணந்து காஞ்சி அரண்மனைக்குள்ளே கால் வைத்த நாளிலிருந்து, அந்த அரண்மனை ஒரு காலத்திலும் இம்மாதிரி கலகலப்பற்றும் பிரகாசமில்லாமலும் பேய் குடிகொண்ட பழைய மாளிகையைப் போலத் தோற்றமளித்தது கிடையாது.

காஞ்சி நகரம் முற்றுகையிடப்பட்டிருந்த காலத்திலே கூட அந்த அரண்மனையில் அந்தந்த நேரத்தில் கீத வாத்தியங்களின் ஒலியும், பேரிகை முரசங்களின் கோஷமும் சங்கங்களின் முழக்கமும் ஆலாசிய மணிகளின் சத்தமும் கேட்டுக் கொண்டுதானிருந்தன. இவற்றுடன் அரண்மனைத் தாதிப் பெண்கள் கால்களில் அணிந்திருந்த பாதசரங்களின் கிண்கிணி ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும். வேத மந்திரங்களின் கோஷமும், செந்தமிழ்ப் பாடல்களின் கீதநாதமும் சில சமயங்களில் கேட்கும். அரண்மனை முன் வாசல் முற்றத்தில் வந்து போகும் குதிரைகளின் காலடிச் சத்தம் சதா கேட்டுக் கொண்டிருக்கும். இப்படியிருந்த அரண்மனையில் இப்போது ஆழ்ந்த மௌனம், பீதியை உண்டாக்கும் பயங்கர மௌனம், குடிகொண்டிருந்தது.

மணிமங்கலம் போர்க்களத்திலிருந்து மகேந்திர பல்லவரை எடுத்து வந்த பிறகு இராஜ வைத்தியர்கள் அல்லும் பகலும் அவர் பக்கத்தில் இருந்து சிகிச்சை செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் பல நாள் நினைவற்ற நிலையிலேயே இருந்தார். சூரமாரம் போர்க்களத்திலிருந்து மாமல்லர் திரும்பி வந்த பிறகு கூடச் சக்கரவர்த்திக்குச் சுய நினைவு இல்லாமலிருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கண் விழித்துப் பார்க்கவும் தம் எதிரிலுள்ளவர்களைத் தெரிந்து கொள்ளவும் ஆரம்பித்தார். இனிமேல் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வார் என்றும், ஆனால், இன்னும் சில காலம் அவரைக் கவலையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் சொன்னார்கள். மாமல்லரைப் பார்க்கும் போதெல்லாம் மகேந்திரருக்கு உணர்ச்சி அதிகமாகிப் பேசுவதற்கு முயன்றபடியால் மாமல்லர் தந்தையிடம் அதிகமாகப் போகாமலிருப்பதே நல்லதென்று அபிப்பிராயப்பட்டார்கள்.

இதனால் மாமல்லரின் மனவேதனையும் அமைதிக் குலைவும் அதிகமாயின. அவர் மனம் விட்டுப் பேசுவதற்கு அரண்மனையில் யாரும் இல்லை. தளபதி பரஞ்சோதியோ சேனைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்கு வெளியே சென்று, வாதாபிப் படையால் ஹிம்சிக்கப்பட்ட கிராம வாசிகளுக்கு உதவி செய்வதில் ஈடுபட்டிருந்தார். புவனமகாதேவி எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாயிருந்தார். புலிகேசியை நகருக்குள் அழைப்பதால் கேடுதான் விளையும் என்று தாம் முன்னாலேயே எச்சரித்ததை இப்போது சொல்லிச் சொல்லி வருந்தினார். அதோடு மாமல்லருக்குப் பாண்டிய ராஜ குமாரியை அப்போதே மணம் முடிக்காதது எவ்வளவு தவறு என்பதையும் அடிக்கடி குறிப்பிட்டார். இந்த பேச்சு மாமல்லரின் காதில் நாராசமாக விழுந்தது.

நாளாக ஆக, மாமல்லருக்குச் சிவகாமியைப் பற்றி யாருடனாவது மனத்தைத் திறந்து பேசாவிட்டால் இருதயம் வெடித்து விடும் போலிருந்தது. அப்படிப் பேசக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆயனர் ஒருவர்தான். அவர்தான் சிவகாமியைப் பற்றித் தாம் பேசுவதை ஒத்த உள்ளத்துடன் கேட்கக் கூடியவர். மேலும் அவருடைய உடல் நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? பார்க்கப் போனால், தமக்கு மகேந்திர பல்லவர் எப்படியோ, அப்படியே ஆயனரும் தந்தை தானே? அவரைக் கவனியாமலிருப்பது எவ்வளவு பிசகு? இவ்விதம் எண்ணி ஒருநாள் மாமல்லர் ஆயனரை அவருடைய அரண்ய வீட்டில் பார்ப்பதற்காகத் தன்னந்தனியே குதிரை மீதேறிப் பிரயாணமானார்.

காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில், அவருக்குத் தாமரைக்குளம் ஞாபகம் வந்தது. தானும் சிவகாமியும் எத்தனையோ ஆனந்தமான நாட்களைக் கழித்த இடம், ஒருவர்க்கொருவர் எத்தனையோ அன்பு மொழிகளைக் கூறிப் பரவசமடைந்த இடம் அப்பேர்ப்பட்ட குளக்கரையைப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. எனவே, பாதையை விட்டுச் சிறிது விலகித் தாமரைக் குளக்கரையை நோக்கிக் குதிரையை மெதுவாகச் செலுத்தினார். சற்றுத் தூரம் போனதும் அந்தக் காட்டு வழியில் எதிரே பெண் ஒருத்தி வருவது தெரிந்தது. மாமல்லர் வருவது கண்டு திடுக்கிட்ட தோற்றத்துடன் அவள் ஒதுங்கி நின்றாள். மாமல்லர் தமது பரம்பரையான குலப் பண்பாட்டுக்கு உகந்தபடி அவளுடைய முகத்தை மறுமுறை ஏறிட்டுப் பாராமல் தம் வழியே சென்றார். ஆனால், சிறிது தூரம் சென்றதும் அந்த ஸ்திரீயின் முகம் ஏற்கெனவே பார்த்த முகம்போல் ஞாபகத்துக்கு வந்தது. "அவள் யார்? அவளை எங்கே பார்த்திருக்கிறோம்?" என்று எண்ணமிட்டுக் கொண்டே மாமல்லர் தாமரைக் குளத்தை அடைந்தார்.