உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/கத்தி பாய்ந்தது!

விக்கிமூலம் இலிருந்து
55. கத்தி பாய்ந்தது!


மாமல்லர் முதலியோர் சென்ற பக்கத்தைச் சிவகாமி ஒரு கணம் வெறித்து நோக்கினாள். மறுகணம் படீரென்று பூமியில் குப்புற விழுந்தாள். அவளுடைய தேகத்தை யாரோ கட்புலனாகாத ஒரு மாய அரக்கன் முறுக்கிப் பிழிவது போலிருந்தது. உடம்பிலுள்ள எலும்புகள் எல்லாம் நறநறவென்று ஒடிவது போலத் தோன்றியது. அவளுடைய நெஞ்சின் மேல் ஒரு பெரிய மலையை வைத்து அமுக்குவது போலிருந்தது. அவளுடைய குரல்வளையை ஒரு விஷநாகம் சுற்றி இறுக்குவது போலத் தோன்றியது. ஒரு கணம் சுற்றிலும் ஒரே இருள் மயமாக இருந்தது. மறுகணம் தலைக்குள்ளே ஆயிரமாயிரம் மின்னல்கள் பாய்ந்தன. வீடும் விளக்கும் அவளைச் சுற்றிக் கரகரவென்று சுழன்றன. கீழே கீழே கீழே இன்னும் கீழே அதலபாதாளத்தை நோக்கிச் சிவகாமி விழுந்து கொண்டிருந்தாள். ஆகா! இப்படி விழுவதற்கு முடிவே கிடையாதா? என்றென்றைக்கும் கீழே கீழே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானா?

"சிவகாமி! சிவகாமி!" என்று எங்கேயோயிருந்து யாரோ அழைத்தார்கள்; அது மாமல்லரின் குரல் அல்ல, நிச்சயம். முகத்தின் அருகே நாகப்பாம்பு சீறுவது போல் சத்தம் கேட்டது. உஷ்ணமான மூச்சு முகத்தின் மீது விழுந்தது. சிவகாமி கண்களைத் திறந்தாள்; ஐயோ! படமெடுத்தாடும் சர்ப்பத்தின் முகம்! தீப்பிழம்பாக ஜொலித்த பாம்பின் கண்கள்! இல்லை; இல்லை! நாகநந்தி பிக்ஷுவின் முகம். அவர் மூச்சுவிடும் விஷக் காற்றுத்தான் தன்னுடைய முகத்தின் மேல் படுகிறது.

சிவகாமி ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தாள். பிக்ஷுவை விட்டு விலகிச் சற்றுத் தூரத்துக்கு நகர்ந்து சென்றாள். அவர் தேகமெல்லாம் படபடத்து நடுங்கியது. நாகநந்தி அவளைக் கருணையுடன் பார்த்து, "பெண்ணே! உனக்கு என்ன நேர்ந்தது? என்ன ஆபத்து விளைந்தது! ஏன் அவ்வாறு தரையிலே உணர்வற்றுக் கிடந்தாய்? பாவம்! தன்னந் தனியாக இந்தப் பெரிய வீட்டில் வசிப்பது சிரமமான காரியம்தான். உன்னுடைய தாதிப் பெண்ணைக் காணோமே? எங்கே போய் விட்டாள்!..." என்று கேட்டவண்ணம் சுற்று முற்றும் பார்த்தார்.

அப்போது அவர் பார்த்த திக்கில் மாமல்லர் போகும் அவசரத்திலே விட்டு விட்டுப்போன தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கிடப்பதைச் சிவகாமி பார்த்துப் பெருந்திகிலடைந்தாள். நாகநந்தி அவற்றைக் கவனியாமல் திரும்பிச் சிவகாமியின் அருகில் வந்து, "பெண்ணே! நான் சொல்வதைக் கேள். உன்னுடைய நன்மைக்காகவே சொல்லுகிறேன்!" என்று சொல்லிய வண்ணம் சிவகாமியின் ஒரு கரத்தைத் தன் இரும்பையொத்த கரத்தினால் பற்றினார். அப்போது சிவகாமியின் உடம்பு மறுபடியும் நடுங்கிற்று. கொடிய கண்களையுடைய நாக சர்ப்பம் படமெடுத்துத் தன்னைக் கடிக்க வருவது போன்ற பிரமை ஒரு கணம் ஏற்பட்டது. சட்டென்று சமாளித்துக் கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

"ஆ! சிவகாமி! ஏன் இப்படி என்னைக் கண்டு நடுங்குகிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! உன்னிடம் உண்மையான அபிமானம் கொண்டதல்லாமல் உனக்கு நான் ஒரு தீங்கும் செய்யவில்லையே! உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றியதன்றி வேறொரு அபசாரமும் உனக்குச் செய்யவில்லையே? ஏன் என்னை வெறுக்கிறாய்?" என்று பிக்ஷு கனிவு ததும்பும் குரலில் கேட்டார். "சுவாமி! தங்களைக் கண்டு நான் பயப்படவும் இல்லை; தங்களிடம் எனக்கு வெறுப்பும் இல்லை. தாங்கள் எனக்கு என்ன தீங்கு செய்தீர்கள், தங்களை நான் வெறுப்பதற்கு? எவ்வளவோ நன்மைதான் செய்திருக்கிறீர்கள்!" என்றாள் சிவகாமி. "சந்தோஷம், சிவகாமி! இந்த மட்டும் நீ சொன்னதே போதும். உன் தேகம் அடிக்கடி நடுங்குகிறதே, அது ஏன்? உடம்பு ஏதேனும் அசௌக்கியமா?" என்று வினவினார்.

"ஆம், அடிகளே! உடம்பு சுகமில்லை!" என்றாள் சிவகாமி. "அடடா! அப்படியா? நாளைக் காலையில் நல்ல வைத்தியனை அனுப்புகிறேன், ஆனால், இப்படி உடம்பு அசௌக்கியமாயிருக்கும் போது உன்னை விட்டு விட்டு உன் தாதிப்பெண் எங்கே போனாள்? எங்கேயாவது மூலையில் படுத்துத் தூங்குகிறாளா, என்ன?" என்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தார் பிக்ஷு. சற்றுத் தூரத்தில் தூணுக்குப் பின்னால் கிடந்த தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் இப்போது அவருடைய கண்களைக் கவர்ந்தன. "ஆ! இது என்ன இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?" என்று அருகில் சென்று உற்றுப் பார்த்தார். திரும்பிச் சிவகாமியை நோக்கி, "சபாஷ்! சிவகாமி! அதற்குள்ளே இங்கே உனக்குக் காதலர்கள் ஏற்பட்டு விட்டார்களா? உள்ளூர் மனிதர்கள்தானா! அல்லது வெளியூர்க்காரர்களா?" என்று பரிகாசச் சிரிப்புடன் கேட்டார். சிவகாமி மௌனமாய் நின்றதைப் பார்த்துவிட்டு, "நல்லது; நீ மறுமொழி சொல்ல மாட்டாய், நானே போய்க் கண்டு பிடிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.

அப்போது சிவகாமிக்கு, "இவள் புத்த பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறாள்!" என்று மாமல்லர் சொன்னது நினைவு வந்தது. பளிச்சென்று பிக்ஷு அவர்களைக் கண்டுபிடிப்பதால் நடக்கக் கூடிய விபரீதங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. சிவகாமி துடிதுடித்து அங்குமிங்கும் பார்த்தாள். இளவரசரின் அங்கவஸ்திரத்துக்கு அடியில் ஏதோ பளபளவென்று ஒரு பொருள் தெரிந்தது. சிவகாமியின் கண்களில் விசித்திரமான ஒளி தோன்றியது. பாய்ந்து சென்று அந்தப் பொருளை எடுத்தாள். அவள் எதிர் பார்த்தது போல் அது ஒரு கத்திதான். சிவகாமி அடுத்த கணம் அந்தக் கத்தியைப் புத்த பிக்ஷுவின் முதுகை நோக்கி எறிந்தாள். பிக்ஷு 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்தார். முதுகில் கத்தி பாய்ந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது. சிவகாமியைப் பிக்ஷு திரும்பிப் பார்த்து, இரக்கம் ததும்பிய குரலில், "பெண்ணே! என்ன காரியம் செய்தாய்? உன்னை உன் காதலன் மாமல்லனிடம் சேர்ப்பித்து விடலாமென்று எண்ணியல்லவா அவசரமாகக் கிளம்பினேன்?" என்றார்.