சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/கர்வ பங்கம்

விக்கிமூலம் இலிருந்து
26. கர்வ பங்கம்


காஞ்சி அரண்மனையின் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில் மகேந்திர பல்லவர் வீற்றிருந்தார். அவருக்கு எதிரே சேனாதிபதி கலிப்பகை, முதன் மந்திரி சாரங்கதேவர், முதல் அமைச்சர் ரணதீரர், ஒற்றர் தலைவன் சத்ருக்னன், குண்டோதரன் ஆகியவர்கள் நின்றார்கள். மகேந்திர பல்லவருடைய முகம் பிரகாசமாய்ப் புன்னகை மலர்ந்து விளங்கிற்று. "குண்டோதரா! நீயே உன் கண்ணால் பார்த்தாயா? உண்மையாகவே மாமல்லபுரத்திலிருந்து சளுக்கர் படைகள் திரும்பிப் போயினவா? சிற்பங்களுக்கு ஒரு கேடும் நேரவில்லையே நிச்சயந்தானே?" என்று கேட்டார்.

"ஆம், பல்லவேந்திரா! எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியத்தை என்னவென்று சொல்வேன்? சளுக்க ராட்சதர்கள் இரண்டாயிரம் பேர் கைகளில் கடப்பாரைகளையும் இரும்பு உலக்கைகளையும் எடுத்துக் கொண்டு திடுதிடுவென்று ஓடி வந்தார்கள். ஐயோ! ஆயிரமாயிரம் சிற்பிகள் அரும்பாடுபட்டு வேலை செய்த ஜீவ வடிவங்கள் எல்லாம் ஒரு நொடியில் நாசமாகப் போகின்றனவே என்று என் உள்ளம் பதைத்தது. தாங்கள் அந்தக் கோரக் காட்சியைப் பார்க்கும் போது தங்களுடைய மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நிமிஷம் எங்கிருந்தோ திடீரென்று அந்தப் பாறை உச்சி மீது புலிகேசிச் சக்கரவர்த்தி தோன்றினார். கம்பீரமாகக் கையினால் சமிக்ஞை செய்தார். அவ்வளவுதான்! ராட்சதர்களைப் போல் பயங்கரமாய் ஊளையிட்டுக் கொண்டு ஓடி வந்த சளுக்கர்கள் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். அவ்விடத்தில் அந்த நேரத்தில் வாதாபிச் சக்கரவர்த்தியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் இட்ட கட்டளையை அவரே மாற்றிச் சிற்பங்களை அழிக்காமல் திரும்பிப் போகும்படி கட்டளையிடுவார் என்றும் எதிர் பார்க்கவில்லை. பிரபு! நானே அந்த அதிசயத்தினால் சிறிது நேரம் சிலையாகப் போய் விட்டேன். எல்லாரும் அவ்விடம் விட்டுப் போன பிறகுதான் எனக்குச் சுய நினைவு வந்தது. உடனே புறப்பட்டு ஓடி வந்தேன்!" என்றான் குண்டோதரன்.

சாரங்க தேவர், "பிரபு! தங்களுடைய மாயாஜால வித்தைகளுக்கு எல்லையே கிடையாது போல் இருக்கிறதே! சளுக்க சக்கரவர்த்தி போட்ட கட்டளையை அவரே ஓடி வந்து மாற்றும்படி எப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். "ஆகா! அந்த மூர்க்கனுடைய மனத்தை - கலை உணர்ச்சி என்பதே இல்லாத கசடனுடைய மனத்தை மாற்ற முடியுமா? பிரம்மாவினால் கூட முடியாது!" என்றார் மகேந்திரர். "அப்படியானால் இந்த அதிசயம் எப்படி நடந்தது. பல்லவேந்திரா! மாமல்லபுரத்தை எப்படிக் காப்பாற்றினீர்கள்?" என்று முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர் கேட்டார். "சிறு துரும்பும் ஒரு சமயம் உதவும் என்று பழமொழி இருக்கிறதல்லவா? புத்த பிக்ஷுக்களினாலும் பிரயோஜனம் உண்டு என்று நான் எண்ணியது சரியாய்ப் போயிற்று!" "பிரபு! புதிர் போடுகிறீர்கள், ஒன்றும் விளங்கவில்லை!"

"நாகநந்தி பிக்ஷுவைச் சிறைப்படுத்தி வைத்திருந்தேனல்லவா? இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் நேரலாம் என்று எண்ணித்தான் வைத்திருந்தேன். புலிகேசி இங்கிருந்து போகுமுன் கடைசியாக நாகநந்தி பிக்ஷுவைத்தான் யாசித்தான். ஒருகணம் என் மனம் கூடச் சலித்து விட்டது. ஒரு வழியாக நாகநந்தியையும் புலிகேசியுடன் கூட்டி அனுப்பி விடலாமா என்று எண்ணினேன். நல்லவேளையாக அப்படிச் செய்யாமல் அவரை நிறுத்தி வைத்துக் கொண்டேன். அதனாலேதான் இப்போது மாமல்லபுரம் பிழைத்தது!"

சத்ருக்னன், "தங்களுடைய கட்டளையின் கருத்து எனக்கு இப்போதுதான் புரிகிறது. 'சுரங்க வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திரு! வெளியில் யார் போனாலும் அதிசயப்படாதே! யோக நிஷ்டையிலேயே இருந்துவிடு!' என்று ஆக்ஞையிட்ட சமயம் ஒன்றுமே விளங்கவில்லை. நாகநந்தி வெளியில் வந்த போது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஓடிப் போய் அந்தக் கள்ள பிக்ஷுவின் கழுத்தைப் பிடித்து நெறித்து விடலாமா என்று ஒருகணம் தோன்றியது. தங்களுடைய கண்டிப்பான கட்டளையை எண்ணிச் சும்மா இருந்தேன்" என்றான். சேனாதிபதி கலிப்பகை, "எங்களுக்கெல்லாம் இன்னமும் ஒன்றும் புரியவில்லை! நாகநந்தி பிக்ஷு போய்ப் புலிகேசியை அழைத்துக் கொண்டு திரும்பி வந்து மாமல்லபுரத்தைக் காப்பாற்றியதாகவா சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"நாகநந்தி புலிகேசியை அழைத்து வரவில்லை; நாகநந்தியே புலிகேசியாகிவிட்டார்!" என்று மகேந்திரவர்மர் சொன்னதும் ஏக காலத்தில் 'ஆ' என்ற வியப்பொலி கிளம்பியது. "உங்களுக்கெல்லாம் முகத்தில் கண்கள் இருக்கின்றன. ஆனால், இருந்தும் என்ன பிரயோஜனம்? கண்களை நீங்கள் உபயோகிப்பதில்லை. நாகநந்தியின் முகத்துக்கும் புலிகேசியின் முகத்துக்கும் உள்ள ஒற்றுமையை நீங்கள் யாரும் கவனிக்கவில்லையா? நாகநந்திதான் புலிகேசியோ என்று கூட ஒரு சமயம் நான் சந்தேகித்தேன். இல்லையென்று பிற்பாடு தெரிந்தது. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படுவார் என்றுதான் நாகநந்தியைப் பத்திரமாய்ச் சிறைப்படுத்தி வைத்திருந்தேன். புலிகேசி இங்கே வந்திருந்த போது அவருடைய கிரீடத்தையும் ஆபரணங்களையும் போல் நம்பொற் கொல்லர்களைக் கொண்டு செய்வித்திருந்தேன். அவற்றுடன் நேற்று அவரை அனுப்பினேன், நேரே மாமல்லபுரம் போகச் சொன்னேன்."

"நாகநந்தி அவ்வளவு சுலபமாகச் சம்மதித்து விட்டாரா, பிரபு?" "பிக்ஷுவானாலும், ஒற்றனானாலும் உயிருக்கும் விடுதலைக்கும் ஆசைப்படாதவர் யார்?" என்றார் மகேந்திரர். "ஆனால், அந்தக் கபட வேஷதாரியிடம் தாங்கள் எப்படி நம்பிக்கை வைத்து வெளியே அனுப்பினீர்கள்?" "ஆ! நாகநந்தி மனிதனேயல்ல; மனித உருவத்திலுள்ள அரக்கன்; விஷம் ஏற்றிய கத்தியை உபயோகிக்கும் பாதகன்! ஆனாலும் அவன் கலைஞன்! அவன் உள்ளத்தில் கலைப்பிரேமை இருப்பதை நான் அறிவேன். நிச்சயமாய் மாமல்லபுரத்தைக் காப்பாற்றுவான் என்றும் எனக்குத் தெரியும், ஆகையினால், அவனை அனுப்பினேன். ஆயனரின் சிற்பக் கிருகத்தையும் காப்பாற்றி விட்டிருந்தால் அப்புறம் அவன் என்னவாய்ப் போனாலும் கவலை இல்லை!"

இந்த விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முதன் மந்திரி முதலியவர்கள் அளவிறந்த வியப்பில் ஆழ்ந்து மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த மௌனத்தைப் பிளந்து கொண்டு வெளியே ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. காவலன் ஒருவன் உள்ளே ஓடி வந்து தண்டம் சமர்ப்பித்து விட்டு, "பிரபு! மன்னிக்க வேண்டும், கண்ணபிரான் பெண்சாதி கமலி வந்து தங்களை உடனே காணவேண்டும் என்கிறாள். நாங்கள் தடுத்ததற்கு அழுது கூக்குரல் போடுகிறாள்!" என்றான். சக்கரவர்த்தியின் முகத்தில் சிறிது கலக்கத்தின் அறிகுறி தென்பட்டது. "வரச் சொல்!" என்று உத்தரவிட்டார். அடுத்த நிமிஷம் கமலி தலைவிரி கோலமாய் உள்ளே ஓடி வந்து "பல்லவேந்திரா! இந்தச் சண்டாளியை மன்னிக்க வேண்டும்; பெரிய துரோகம் செய்து விட்டேன்" என்று கதறிச் சக்கரவர்த்தியின் காலில் விழுந்தாள்.

அன்று காலையில் கமலியின் மாமனார் அசுவபாலர் கமலியைப் பார்த்து "எங்கே அம்மா, ஆயனரையும் அவர் மகளையும் காணோம்?" என்று கேட்டார். கமலி சாதுரியமாக, "அவர்களுக்கு இந்த வீட்டில் பொழுது போகவில்லையாம். இந்தப் பச்சைக் குழந்தையின் விஷமம் பொறுக்கவில்லையாம். ஊரிலுள்ள கோயில்களையெல்லாம் பார்த்து வரப்போயிருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சிற்பம் சிலைகள் என்றால் பைத்தியமாயிற்றே?" என்றாள். "நல்லவேளை! கோட்டைக்கு வெளியே போக வேண்டும் என்று சொன்னார்களே? போயிருந்தால் என்ன கதி ஆகியிருக்கும் தெரியுமா? அந்தப் படுபாவி புலிகேசியின் ஆட்கள் ஊர்களையெல்லாம் கொளுத்துகிறார்களாம். சிற்பிகளையெல்லாம் காலையும் கையையும் வெட்டுகிறார்களாம். கன்னிப் பெண்களையெல்லாம் கவர்ந்து சிறைப்படுத்திக் கொண்டு போகிறார்களாம்..." இதைக் கேட்டதும் கமலி, "ஐயோ! என்று அலறினாள். அலறிக் கொண்டே அசுவபாலரிடம் விஷயத்தைக் கூறினாள். அவர் கமலியை மனங்கொண்ட வரையில் திட்டி விட்டு, "ஓடு! ஓடிப் போய்ச் சக்கரவர்த்தியிடம் நடந்ததைச் சொல்லு!" என்றார். அதன்படியேதான் கமலி சக்கரவர்த்தியிடம் ஓடி வந்தாள்.

விம்மலுக்கும் அழுகைக்கும் இடையே தட்டுத் தடுமாறிக் கமலி விஷயம் இன்னதென்று சொல்லி முடித்தபோது, சக்கரவர்த்தியின் முகபாவம் அடியோடு மாறிப் போயிருந்தது. கர்வத்துடன் கூடிய புன்னகைக்கு மாறாகச் சொல்ல முடியாத வேதனை இப்போது அம்முகத்தில் குடிகொண்டிருந்தது. சத்ருக்னனைப் பார்த்து, "இவள் சொல்வது உண்மையா, சத்ருக்னா! உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சத்ருக்னன் நடுங்கிய குரலில், "ஆம், பிரபு! நாகநந்தி போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் வெளிச் சென்றார்கள். ஆயனர், சிவகாமி மாதிரி தோன்றியது. யார் வெளியே போனாலும் அதிசயப்பட வேண்டாம் என்று தாங்கள் ஆக்ஞையிட்டிருந்தபடியால் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்" என்றான். மகேந்திரர், முதன் மந்திரி முதலியவர்களை நோக்கி, "சற்று முன்னால் என்னுடைய சாமர்த்தியத்தைப் பற்றி நானே கர்வப்பட்டுக் கொண்டிருந்தேனல்லவா? கடவுள் கர்வபங்கம் செய்து விட்டார். சிவகாமியைப் பறிகொடுத்து விட்டு மாமல்லனுடைய முகத்தில் நான் விழிக்க முடியாது. சேனாதிபதி! உடனே படைகளைத் திரட்டுங்கள். ஒரு முகூர்த்தப் பொழுதில் நம் படைகள் வடக்குக் கோட்டை வாசலில் ஆயத்தமாயிருக்க வேண்டும்" என்றார்.