உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/புலிகேசி ஆக்ஞை

விக்கிமூலம் இலிருந்து
22. புலிகேசி ஆக்ஞை


அன்றிரவு மட்டுமல்ல; மறுநாளும் அதற்கு மறுநாளும் கூடப் புலிகேசி அவ்விடத்திலேயே இருந்து யோசனை செய்தார். அங்கிருந்து தெற்கே காத தூரத்தில் தெரிந்த காஞ்சிமா நகரின் கோபுரங்களையும் ஸ்தூபிகளையும் பார்க்கப் பார்க்க அவருடைய கோபம் கொந்தளித்துப் பொங்கிற்று. அந்நகரின் பாதாள காராக்கிருகம் ஒன்றில் நாகநந்தி அடிகள் சிறைப்பட்டுக் கிடக்கிறார் என்பதை நினைத்த போது அவருடைய கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவது போலிருந்தது. மகேந்திர பல்லவன் பேரில் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்னும் எண்ணம் நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து சீக்கிரத்தில் வானத்தையும் பூமியையும் அளாவி நின்றது.

இரண்டு தினங்கள் இரவு பகலாக யோசனை செய்து, கடைசியில் வாதாபிச் சக்கரவர்த்தி சில முடிவுகளுக்கு வந்தார். தமது தளபதிகளையும் பிரதானிகளையும் அழைத்து அம்முடிவுகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அந்த முடிவுகள் இவைதான்; சக்கரவர்த்தியும் முக்கிய தளபதிகளும் சைனியத்தில் பெரும் பகுதியுடன் வாதாபிக்கு உடனே புறப்பட வேண்டியது. சைனியத்தில் நல்ல தேகக்கட்டு வாய்ந்த வீரர்களாக ஐம்பதினாயிரம் பேரைப் பின்னால் நிறுத்த வேண்டியது. அவர்கள் தனித் தனிக் கூட்டமாகப் பிரிந்து காஞ்சி நகரைச் சுற்றிலும் நாலு காத தூரம் வரை உள்ள கிராமங்கள், பட்டணங்களை எல்லாம் சூறையாடிக் கொளுத்தி அழித்து விடவேண்டியது. அந்தந்தக் கிராமங்களிலுள்ள யௌவன ஸ்திரீகளை எல்லாம் சிறைப்பிடித்துக் கொண்டு, வாலிபர்களை எல்லாம் கொன்று, வயதானவர்களை எல்லாம் அங்கஹீனம் செய்து, இன்னும் என்னென்ன விதமாகவெல்லாம் பழிவாங்கலாமோ அவ்விதமெல்லாம் செய்ய வேண்டியது. முக்கியமாக, சிற்பங்கள் - சிற்ப மண்டபங்கள் முதலியவற்றைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் இடித்துத் தள்ள வேண்டியது. சிற்பிகளைக் கண்டால் ஒரு காலும் ஒரு கையும் வெட்டிப் போட்டுவிட வேண்டியது. இப்படிப்பட்ட கொடூர பயங்கரமான கட்டளைகளைப் போட்டு அவற்றை நிறைவேற்றுவதற்குத் தக்க பாத்திரங்களையும் நியமித்து ஏவி விட்டு, வாதாபிச் சக்கரவர்த்தி தமது சைனியத்தின் பெரும் பகுதியுடன் பிரயாணமானார். மேற்கூறிய கொடூர ஆக்ஞையை நிறைவேற்றுவதற்காகக் காஞ்சியைச் சுற்றிக் கொண்டிருந்த வாதாபி வீரர் கூட்டம் ஒன்றைத்தான் ஆயனரும் சிவகாமியும் காட்டு வழியில் சந்தித்தார்கள்.

வராகக் கொடியைப் பார்த்து வாதாபி வீரர்கள் என்று தெரிந்து கொண்டதும் சிவகாமிக்குத் தேகமெல்லாம் நடுங்கிற்று; உள்ளம் பதைத்தது. எதிர்ப்பட்ட வாதாபி வீரர்கள் கிட்டத்தட்ட நூறு பேர்தான் என்றாலும், சிவகாமியின் கண்களுக்குப் பதினாயிரம் பேராக அவர்கள் காட்சியளித்தார்கள். ஆனால், ஆயனருக்கோ, அம்மாதிரி அச்ச உணர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை. அவருக்கு உற்சாகமே ஏற்பட்டு விட்டதாக முகமலர்ச்சியிலிருந்து தோன்றியது. முன்னால் நின்ற வீரனைப் பார்த்து, "ஐயா, நீங்கள் வாதாபி வீரர்கள்தானே? உங்கள் மகாராஜா எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அந்த வீரனுடைய முக பாவத்தைப் பார்த்ததும் தமிழ் பாஷை அவர்களுக்குத் தெரிந்திராது என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு அதே விஷயத்தைப் பிராகிருத மொழியில் கேட்டார். அந்த வாதாபி வீரனுக்கு அதுவும் விளங்காமல் அவன் பின்னால் வந்த படைத் தலைவனைத் திரும்பிப் பார்த்தான். இதற்குள் குதிரை மேல் வந்து கொண்டிருந்த படைத் தலைவன் முன்புறத்துக்கு வந்து சேர்ந்தான். ஆயனரையும் சிவகாமியையும் உற்றுப் பார்த்ததும், அவன் "ஓஹோ!" என்ற ஒலியால் தனது வியப்பைத் தெரிவித்தான்.

ஏனெனில், புலிகேசியுடன் காஞ்சி நகருக்குள் வந்து, பல்லவ சக்கரவர்த்தியின் சபையில் சிவகாமியின் நடனத்தைப் பார்த்தவர்களிலே இவனும் ஒருவன். எனவே அவர்களை அடையாளம் தெரிந்து கொண்டதும் அவனுக்கு வியப்பும் குதூகலமும் உண்டாயின. இன்னும் அவர்கள் அருகில் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்து அவர்களை விழித்துப் பார்த்து விட்டு ஆயனரை நோக்கி, "என்ன கேட்கிறீர்?" என்றான். ஆயனர் உற்சாகத்துடன், "ஐயா, உங்கள் சக்கரவர்த்தி எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்க வேண்டும்" என்றார். தளபதி சசாங்கனின் புருவங்கள் நெரிந்தன. முகத்தில் வேடிக்கைப் புன்னகையுடன், "வாதாபிச் சக்கரவர்த்தியை நீர் எதற்காகப் பார்க்க வேண்டும்? அவரிடம் உமக்கு என்ன காரியம்?" என்று கேட்டான்.

"காரியத்தைச் சக்கரவர்த்தியிடம் மாத்திரந்தான் சொல்ல வேண்டும்; அந்தரங்கமான விஷயம்" என்றார் ஆயனர். அதைக் கேட்டு அவ்வீரன் பரிகாசச் சிரிப்புச் சிரிப்பதைப் பார்த்து விட்டு, ஒருவேளை விஷயத்தைச் சொல்லாவிட்டால் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் தங்களை அழைத்துப் போகமாட்டார்கள் என்று எண்ணி, "இருந்தாலும், உங்களிடம் சொல்லவே கூடாது என்பதில்லை. அஜந்தா சித்திரங்களின் அழியாத வர்ண இரகசியத்தைப் பற்றி உங்கள் சக்கரவர்த்திக்குத் தெரியுமாமே, அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். தயவு செய்து என்னைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போவீர்களா?" என்றார். இதைக் கேட்டதும் தளபதி சசாங்கன் முன்னை விடப் பலமாகச் சீறினான். பக்கத்தில் நின்ற வீரர்களைப் பார்த்து, "ஏன் நிற்கிறீர்கள்? இவர்களுடைய கண்களைக் கட்டுங்கள்" என்றான்.

ஆயனர் திடுக்கிட்ட குரலில், "கண்களைக் கட்டுவதா? எதற்காக?" என்று வினவினார். அதற்குக் குதிரை மேலிருந்த தளபதி சசாங்கன், "உமக்கு அவசியம் தெரியத்தான் வேண்டுமா? அப்படியானால் சொல்லுகிறேன். இந்தப் பல்லவ நாட்டிலுள்ள யௌவன ஸ்தீரிகளை எல்லாம் சிறை பிடித்துக் கொண்டு வரும்படி வாதாபிச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அதோடு இந்த ராஜ்யத்தில் உள்ள சிற்பிகளையெல்லாம், ஒரு காலையும், ஒரு கையையும் வெட்டிப் போடும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். சாதாரண சிற்பிகளுக்கு இந்த ஆக்ஞை. நீரோ சிற்பிகளுக்கெல்லாம் குருவான மகா சிற்பி. ஆகையால், உம்முடைய இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் துணித்து விடப் போகிறேன். அதை இந்தப் பெண் பார்க்க வேண்டாமென்றுதான் கண்ணைக் கட்டச் சொன்னேன்!" என்றான். அம்பினால் அடிபட்ட குயிலின் கடைசி மரணக் குரலைப் போல வேதனை ததும்பிய ஒரு குரல் 'கீச்' என்று கேட்டது. சிவகாமி தரையில் விழுந்து உயிரற்ற சவம் போலக் கிடந்தாள்.

சிவகாமிக்கு மறுபடியும் தன்னுணர்வு வந்த போது தன் தலை இன்னும் சுழன்று கொண்டிருப்பதையும், தன் கால்கள் நடந்து கொண்டிருப்பதையும் இரு பக்கத்திலும் இருவர் தன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடத்தி வருவதையும் கண்டாள். சிறிது சிறிதாக அவளுக்குப் பிரக்ஞை வந்து சற்று முன் நடந்த சம்பவங்களும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் தன் தந்தை இல்லை என்பதை உணர்ந்தபோது அவளுடைய வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத இதய வேதனை உண்டாயிற்று. பிரமை பிடித்த நிலையில் பக்கத்தில் நின்ற வீரர்களால் உந்தப்பட்டு இன்னும் சில அடி தூரம் நடந்து சென்ற போது, அருகில் அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து திடீரென்று ஓர் உருவம் வெளிப்பட்டதைக் கண்டாள். பார்த்த கணத்திலேயே அந்த உருவம் நாகநந்தி அடிகளின் உருவந்தான் என்பதும் தெரிந்து விட்டது. உடனே ஆவேசம் வந்தவள் போலத் தன்னைப் பற்றியிருந்த வீரர்களின் கைகளிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டு நாகநந்தி அடிகளின் முன்னால் சிவகாமி பாய்ந்து சென்றாள். அவருடைய காலடியில் விழுந்து நமஸ்கரித்து, "சுவாமி! தாங்கள்தான் கதி! காப்பாற்ற வேண்டும்!" என்று கதறினாள்.