உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/புலிகேசி ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து
31. புலிகேசி ஓட்டம்


மாமல்லரும் பரஞ்சோதியும் ஆயனரின் அரண்ய வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தார்கள், என்ன மனோநிலையில் வந்து சேர்ந்தார்கள் என்பதைச் சற்று கவனிப்போம். மணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர பல்லவரின் சிறு படை, அடியோடு நாசம் செய்யப்படவிருந்த தறுவாயில், மாமல்லரும் பரஞ்சோதியும் பாண்டியனைப் புறங்கண்ட குதிரைப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் போர் நிலைமை அடியோடு மாறி விட்டது. சளுக்க வீரர் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களைத் தொடர்ந்து போய் அடியோடு அழித்து விட்டு வர மாமல்லர் எண்ணிய சமயத்தில், போர்க்களத்தின் ஒரு மூலையில் மகேந்திர பல்லவர் மரணக் காயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி கிடைத்தது. மாமல்லரும் பரஞ்சோதியும் அவ்விடத்துக்கு ஓடிப் பார்த்த போது, காயப்பட்ட மகேந்திரரைப் பக்கத்து மணிமங்கலம் கிராமத்திலிருந்த அரண்மனை விடுதிக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சிகிச்சை செய்து வருவதாகத் தெரிந்தது. சிநேகிதர்கள் இருவரும் உடனே அவ்விடத்துக்குச் சென்றார்கள். சிறிது நேரம் சிகிச்சைகள் செய்த பிற்பாடு மகேந்திரர் கண் திறந்து பார்த்தார். புதல்வனைக் கண்டதும் முதலில் அவருடைய முகத்தில் மிகிழ்ச்சி தோன்றியது. மறு கணத்திலே மகிழ்ச்சி பாவம் மாறி அளவற்ற வேதனையும் கவலையும் அந்த முகத்தில் பிரதிபலித்தன. "மகனே! உனக்குப் பெரிய துரோகம் செய்து விட்டேன்! என்னை மன்னிப்பாயா?" என்று அவருடைய உதடுகள் முணுமுணுத்தன. "அப்பா! நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள்தான் சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்து விட்டோமே! சளுக்கர் சிதறி ஓடுகிறார்கள்!...." என்று மாமல்லர் சொல்லும்போதே மகேந்திரர் நினைவை இழந்து விட்டார்.

மாமல்லரும் பரஞ்சோதியும் மகேந்திர சக்கரவர்த்தியைப் பத்திரமாகக் காஞ்சி நகருக்குக் கொண்டு போக ஏற்பாடு செய்து விட்டுப் போர்க்களத்தின் நிலைமையை ஆராய்ந்தார்கள். மகேந்திர பல்லவருடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்த சைனியத்தில் பெரும்பகுதி வீரர்கள் மணிமங்கலம் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் புகுந்து விட்டதாக அறிந்தார்கள். சேனாதிபதி கலிப்பகையாரும் அந்தப் போர்க்களத்திலேயே உயிர் துறந்த செய்தி தெரிய வந்தது. மேலே தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று மாமல்லரும் பரஞ்சோதியும் யோசனை செய்தார்கள். காஞ்சி நகரைச் சுற்றிலும் இன்னும் பல இடங்களில் சளுக்க வீரர்களின் சிறு படைகள் ஆங்காங்கே கிராமங்களில் புகுந்து ஜனங்களை ஹிம்சித்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்குத் தகவல் தெரியவந்திருந்தது. எனவே, அப்படிப்பட்ட கிராதக ராட்சதர்களை முதலில் ஒழித்துக் கிராமவாசிகளைக் காப்பாற்றுவதுதான் தங்களுடைய முதற் கடமை என்றும் காலாட் படையும் வந்து சேர்ந்த பிறகு புலிகேசியின் பெரும் படையைத் தொடர்ந்து போகலாம் என்றும் தீர்மானித்தார்கள்.

அவ்விதமே மூன்று நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து காஞ்சிக்குக் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் சளுக்கர் படையே இல்லாமல் துவம்சம் செய்தார்கள். இதற்குள்ளாகக் காலாட் படையும் வந்து சேரவே மீண்டும் வடக்கு நோக்கிப் புறப்பட்டார்கள். காஞ்சிக்கு வடக்கே மூன்று காத தூரத்தில் சூரமாரம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஒரு பெரும் போர் நடந்தது. இங்கே சளுக்கர் படைக்குத் தலைமை வகித்தவன் தளபதி சசாங்கன். இந்தச் சண்டையில் தளபதி சசாங்கனும் சளுக்க வீரர்களில் பெரும் பகுதியினரும் மாண்டார்கள், மற்றவர்கள் பின்வாங்கிச் சிதறி ஓடினார்கள். பல்லவர் படை அவர்களைத் துரத்திக் கொண்டு வெள்ளாறு வரையில் சென்றது. தளபதி சசாங்கனைப் பின்னால் நிறுத்தி விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி முன்னதாகவே வெள்ளாற்றைக் கடந்து போய் விட்டதாக மாமல்லரும் பரஞ்சோதியும் அறிந்தார்கள். மாமல்லர் வெள்ளாற்றையும் கடந்து அப்பால் புலிகேசியைத் துரத்திக் கொண்டு போக விரும்பினார். கலிப்பகையின் மரணத்தினால் இப்போது பல்லவ சேனாதிபதியாகி விட்ட பரஞ்சோதியார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

"பிரபு! சக்கரவர்த்தியை எந்த நிலைமையில் நாம் விட்டு விட்டு வந்தோம் என்பது தங்களுக்கு நினைவில்லையா? அவரை அப்படி விட்டுவிட்டு நாம் நெடுகிலும் போய்க் கொண்டேயிருப்பது நியாயமா? கலிப்பகையும் போர்க்களத்தில் காலமாகி விட்டார். நாம் இல்லாத சமயத்தில் சக்கரவர்த்திக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பல்லவ ராஜ்யம் என்ன கதி ஆவது? சளுக்கர்களால் சூறையாடப்பட்டும் ஹிம்சிக்கப்பட்டும் தவித்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகளின் கதி என்ன? அவர்களுக்கு அன்னவஸ்திரம் அளித்துக் காப்பாற்றும் கடமையை யார் நிறைவேற்றுவார்கள்? மதுரைப் பாண்டியன் மீண்டும் பல்லவ ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? பிரபு! இதையெல்லாம் யோசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்" என்றார் பரஞ்சோதி.

மகேந்திரருடைய தேக நிலைமையைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே மாமல்லருடைய மனவுறுதி தளர்ந்து விட்டது. சற்று நேரம் தலைகுனிந்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் "சேனாதிபதி! நீங்கள் சொல்லுவது உண்மைதான். அது மட்டுமல்ல, நாம் இப்போது நமது சைனியத்துடன் முன்னேறினால் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் இல்லை. போகும் வழியில் ஏற்கெனவே சளுக்க அரக்கர்கள் கிராமங்களைச் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நாமும் போனால் கிராமவாசிகள் எங்கிருந்து உணவு அளிப்பார்கள்? நாமும் சேர்ந்து அவர்களை ஹிம்சிப்பதாகவே முடியும். எல்லாவற்றுக்கும் காஞ்சிக்குத் திரும்பிச் சென்று தந்தையின் உடல்நிலை எப்படியிருக்கிறதென்று தெரிந்து கொள்வோம். தக்க ஏற்பாட்டுடன் பிறகு திரும்புவோம்" என்றார்.

காஞ்சியை நோக்கித் திரும்பி வரும் போது ஆங்காங்கே கிராமங்களில் சளுக்க வீரர்கள் செய்துள்ள அக்கிரமங்கள் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. ஊர் ஊராக வீடுகளிலும் குடிசைகளிலும் வைக்கோற் போர்களிலும் அறுவடைக்கு ஆயத்தமாயிருந்த வயல்களிலும் சளுக்கர்கள் தீ வைத்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே சாம்பல் மயமாயிருந்தது. பல்லவ நாடே ஒரு பெரிய பயங்கர ஸ்மசான பூமியாக மாறி விட்டதாகத் தோன்றியது. இன்னும் சில கிராமங்களில் வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு ஜனங்களின் அழுகைக் குரல் எழுந்தது. மாமல்லரையும் பரஞ்சோதியையும் கண்டதும் ஜனங்கள் உரத்த சப்தமிட்டுப் புலம்பத் தொடங்கினார்கள். சளுக்க வீரர்கள் செய்த பயங்கர அட்டூழியங்களைப் பற்றி ஆங்காங்கே சொன்னார்கள். சிற்பிகள் கால் கை வெட்டப்பட்டது பற்றியும், இளம் பெண்கள் சிறைப் பிடித்துப் போகப் பட்டது பற்றியும், ஆடு மாடுகள் வதைக்கப்பட்டது பற்றியும் ஜனங்கள் சொன்னதைக் கேட்டபோது கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் மாமல்லரின் மார்பு வெடித்து விடும் போலிருந்தது. நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. பரஞ்சோதியிடம் தமது கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளியிட்டு நாலு வார்த்தை பேசுவதற்குக் கூட மாமல்லரால் முடியாமல் போய் விட்டது.

சிற்பிகள் பலருக்கு நேர்ந்த கதியைப் பற்றிக் கேட்ட போது மாமல்லரின் இருதய அந்தரங்கத்தில், நல்லவேளை! ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக் கோட்டைக்குள் இருக்கிறார்களே! என்ற எண்ணம் ஓரளவு ஆறுதலையளித்தது. எனினும் சிற்பங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றி அறிந்த போது மாமல்லபுரத்து அற்புதச் சிற்பங்களுக்கு என்ன கதி நேர்ந்ததோ என்ற ஐயம் உதித்து மிக்க வேதனையளித்தது. அதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக மாமல்லரும் பரஞ்சோதியும் அதிவிரைவாக மாமல்லபுரம் சென்றார்கள். அங்கே சிற்பங்களுக்கு அதிகச் சேதம் ஒன்றுமில்லையென்று தெரிந்து கொண்டு காஞ்சிக்குப் பயணமானார்கள். மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் வழியில் ஆயனரின் அரண்ய வீடு இருந்ததல்லவா? அந்த வீட்டையும் பார்க்க வேண்டும், அதிலிருந்த தெய்வீக நடனச் சிலைகளுக்கு ஒன்றும் சேதமில்லையென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாமல்லர் விரும்பினார். ஆயனரின் வீட்டு வழியாகப் போவது காஞ்சிக்குக் குறுக்கு வழியாகவும் இருந்ததல்லவா?

ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்கள். உடனேயே இருவருக்கும் 'திக்' என்றது. வீட்டின் முன் பக்கத் தோற்றமே மனக் கலக்கத்தை உண்டாக்கிற்று. ஏதோ ஒரு மகத்தான விபத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற உள் உணர்ச்சியுடன் வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். உடைந்தும் சிதைந்தும் அலங்கோலமாய்க் கிடந்த சிலைகளைப் பார்த்த போது இருவருக்கும் தங்களுடைய நெஞ்சு எலும்புகள் உடைவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவர்களுடைய காலடிச் சப்தத்தைக் கேட்டதும் படுத்திருந்த ஆயனர் எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். காஞ்சியில் பத்திரமாக இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த ஆயனரை இங்கே கண்டதினால் ஏற்பட்ட வியப்பு ஒருபுறமிருக்க, பயங்கரத்தால் வெளிறிய அவருடைய முகமும் வெறி கொண்ட அவருடைய பார்வையும் அவர்களுக்கு விவரிக்க முடியாத பீதியை உண்டாக்கின. "என் சிவகாமி எங்கே?" என்று ஆயனச் சிற்பியார் கேட்டதும், மாமல்லருக்கு மலை பெயர்ந்து தலையில் விழுந்து விட்டது போலிருந்தது.