உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/மூன்று உள்ளங்கள்

விக்கிமூலம் இலிருந்து
12. மூன்று உள்ளங்கள்


காஞ்சி மாநகரின் வடக்குக் கோட்டை வாசல் வழியாக வாதாபிச் சக்கரவர்த்தி அந்நகருக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது, தெற்குக் கோட்டை வாசல் வழியாகக் குமார சக்கரவர்த்தி வௌியேறிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் முப்பதினாயிரம் பல்லவ வீரர்கள் அடங்கிய காலாட்படையும், ஐயாயிரம் போர்க் குதிரைகளும், நூறு போர் யானைகளும், மற்றும் சேனைப் பரிவாரங்களும் நகரிலிருந்து வௌியேறி, கோட்டைக்குச் சற்று தூரத்தில் அணிவகுத்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாக நின்றன. இடிந்து தகர்ந்து, பாதி தூர்ந்து போயிருந்த அகழியின் மேல், அவசரமாக அமைத்த பாலத்தின் மீது கண்ணபிரான் ஓட்டிய ரதம் விரைந்து சென்றபோது, அதன் சக்கரங்கள் கடகட சடசடவென்று சப்தம் செய்தன. ரதத்தில் மாமல்லரும் பரஞ்சோதியும் வீற்றிருந்தார்கள். அகழிப் பாலத்தை ரதம் கடந்து அக்கரை சென்றதும், பாலம் அகற்றப்பட்டது. உடனே, கோட்டை வாசல் கதவுகள் தடார் தடார் என்று சாத்தப்பட்டன. அக்கதவுகளின் தாழ்களைப் போடும் 'லொடக்' 'லொடக்' என்ற சப்தமும், பூட்டுக்கள் பூட்டப்படும் 'டடக்', 'டடக்' என்ற சப்தமும், ரதச் சக்கரங்களின் 'கடகட, சடசட' என்ற சப்தத்துடன் கலந்து கொண்டன. அச்சமயம் அந்த ரதத்தில் வீற்றிருந்த மூன்று பேரின் இருதயங்களுங்கூடப் 'படக்' 'படக்' என்று அடித்துக் கொண்டிருந்தன.

மாமல்லர் புறப்படுவதற்குமுன்னால் தமது அன்னை புவனமாதேவியிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகச் சென்றார். அப்போது அந்த வீர மாதரசியின் கண்கள் கலங்கியிருந்தன. அவளுடைய உள்ளமும் கலக்கமடைந்திருந்ததாகத் தோன்றியது. துர்விநீதனைத் தண்டிப்பதற்காகப் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு மாமல்லர் புறப்பட்டபோது, புவனமகாதேவி இத்தகைய மனக் கலக்கத்தைக் காட்டவில்லை. அச்சமயம் முக மலர்ச்சியுடனும் பெருமிதத்துடனும் வீரமகனை ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பினாள்.

"அம்மா! இது என்ன, ஏன் கலங்குகிறீர்கள்? போர்க்களம் எனக்குப் புதியதா? யுத்தந்தான் புதியதா?" என்று மாமல்லர் கேட்டதற்குச் சக்கரவர்த்தினி, "குழந்தாய்! அதைக் குறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை. உன்னுடைய தந்தையின் காரியந்தான் என்னை வருத்துகிறது. தசரதர் செய்ததைக் காட்டிலும் கொடுமையான காரியத்தை உன் தந்தை செய்கிறார். தசரதர் இராமனைக் காட்டுக்கு அனுப்புவதோடு நின்றார். உன் தந்தையோ இராமனைக் காட்டுக்கு அனுப்பி விட்டு, அதே சமயத்தில் இராவணனையும் விருந்தாளியாக வரவேற்கப் போகிறார்!" என்றாள். இதைக் கேட்ட மாமல்லரின் முகத்தில் சென்ற சில காலமாகக் காணப்படாத குறுநகை மலர்ந்தது.

"தாயே! நான் இராமன் அல்ல; இராமனாயிருந்தால், சீதையையும் கூட்டிக் கொண்டல்லவா காட்டுக்குப் போக வேண்டும்? என் தந்தையும் தசரதர் இல்லை; ஏனென்றால் கைகேயி வார்த்தையைக் கேட்டுக் கொண்டு அவர் என்னை வனத்துக்கு அனுப்பவில்லை. புலிகேசியோ நிச்சயமாக இராவணன் இல்லை. இராவணன் சுத்த வீரன், அம்மா! போர்க்களத்தில் சகலமும் போய்த் தன்னந்தனியாக நின்ற போதும் சரணாகதி அடைய மறுத்து உயிரை விட்டான். அந்த மகாவீரன் எங்கே, இந்தக் கோழைப் புலிகேசி எங்கே? நூறு காத தூரம் படையெடுத்து வந்து விட்டு யுத்தம் செய்யாமலே அல்லவா இவன் திரும்பிப் போகப் போகிறான்?" என்றார் மாமல்லர். "குமாரா! நீ என்னதான் சொன்னாலும் மொத்தத்தில் என் மனத்தில் அமைதி இல்லை. பல்லவ குலத்தின் தீரா விரோதியுடன் உன் தந்தை சிநேகம் கொண்டாடுவது எனக்குப் பிடிக்கவில்லை; இந்தச் சமயத்தில் நீ காஞ்சியைவிட்டுப் போவதும் எனக்குச் சம்மதமாயில்லை. இதனாலெல்லாம் என்ன விபரீதம் வருமோ எனனவோ என்று என் மனம் சஞ்சலமடைகிறது!" என்றாள் பல்லவ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினி.

மேற்கண்டவாறு அன்று காலையில் அன்னை கூறிய வார்த்தைகள் மாமல்லருடைய மனத்தில் ஆழமாய்ப் பதிந்து கிடந்தன. இன்னதென்று சொல்ல முடியாத சோர்வு அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. பெருமுயற்சி செய்து அந்தச் சோர்வைப் போக்கிக் கொள்ள முயன்றார். வரப் போகும் யுத்தத்தையும் பாண்டியனைத் தாக்கி அவனைத் தண்டிக்கப் போவதையும் நினைத்துக் கொண்டார். அதனோடு மண்டபப்பட்டுக் கிராமத்தில் இருக்கும் ஆயனர் மகளையும் எண்ணிக் கொண்டார். தாம் போகின்ற மார்க்கத்தை விட்டுக் கொஞ்சம் விலகிச் சென்றால், சிவகாமியைப் பார்த்து விட்டுப் போகலாம். ஆனால், அது உசிதமாகாது என்று அவருடைய மனமே சொல்லிற்று. புலிகேசியைப் புறங்காட்டி ஓடச் செய்து விட்டுத் திரும்பி அவளிடம் வருவதாக அல்லவா அன்றைக்குச் சொல்லிக் கொண்டு விடைபெற்றோம்? பாண்டியனையாவது போர்க்களத்தில் புறங்கண்ட பிறகுதான் சிவகாமியைச் சந்திக்க வேண்டும். இவ்வாறான பற்பல எண்ணங்கள் அலை மேல் அலை எறிந்து மாமல்லரின் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தன.

தளபதி பரஞ்சோதியும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் கடுமையாகத் தம்முடைய முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு பெரிய பொறுப்பு உணர்ச்சியானது அவருடைய மனத்தில் பெரும் பாரமாய் அமர்ந்து அதை அமுக்கிக் கொண்டிருந்தது. அன்று காலையில் சக்கரவர்த்தி அவரை அந்தரங்கமாக அழைத்து, "தம்பி! உன்னை நம்பித்தான் மாமல்லனை இப்போது போர்க்களத்துக்கு அனுப்புகிறேன். அவனுடைய இப்போதைய மனநிலையில் முன்பின் யோசனையில்லாமல் முரட்டுத்தனமாகக் காரியம் செய்வான். அவனுக்கு யாதோர் அபாயமும் நேரிடாதபடி நீதான் பார்த்துக் கொள்ள வேணும். இந்தப் புராதன பல்லவ குலம் நீடிப்பதற்கு அவன் ஒருவன் தான் இருக்கிறான். தளபதி! பாண்டிய நாட்டு மறவர்கள் மகாவீரர்கள். அவர்களையும் கங்க நாட்டார்கள் என்று நினைத்து விடாதே. எளிதாக அவர்களைப் புறங்காண முடியாது. ஆகையால், சர்வ ஜாக்கிரதையாகவே நீ இந்த யுத்தத்தை நடத்த வேணும்" என்று சொன்னார். மீண்டும் அவர், "மாமல்லனை நீ போர்க்களத்தில் வேல்கள் அம்புகளிடமிருந்து மட்டும் காப்பாற்றினால் போதாது" என்று கூறி விட்டு, மர்மமான புன்னகையுடன், "மண்டபப்பட்டுக் கிராமத்தில் இருக்கிறாளே, சிற்பியின் மகள் சிவகாமி, அவளுடைய கண்ணாகிய கூரிய அம்பிலிருந்தும் காப்பாற்ற வேண்டும், தெரிகிறதா? முன் தடவை துர்விநீதனைத் தொடர்ந்து போனபோது ஏற்பட்டதைப் போல் இந்தத் தடவை ஏற்பட்டு விடக் கூடாது. போகும் காரியத்தை முடித்து விட்டு நேரே காஞ்சிக்குத் திரும்பி வந்து சேர வேண்டும்" என்றார்.

பரஞ்சோதி விடைபெற்றுக் கொண்டு புறப்பட யத்தனித்த போது, கடைசியாகச் சக்கரவர்த்தி அவரை மறுபடியும் அருகில் அழைத்து, "தளபதி! நான் மண்டபப்பட்டுக் கிராமத்தைப் பற்றிச் சொன்னது திருவெண்காட்டுக்குப் பொருந்தாது. பாண்டியனைத் துரத்தியடித்த பிறகு உனக்கு விருப்பமாயிருந்தால் திருவெண்காட்டுக்குச் சென்று உன் தாயாரையும் மாமனையும் பார்த்து விட்டு வா!" என்று அருமையுடன் கூறினார். சக்கரவர்த்தி கூறிய ஒவ்வொரு விஷயமும் பரஞ்சோதியின் பொறுப்பு உணர்ச்சியை அதிகப்படுத்துவதாகவே இருந்தது. ஆகா! மகேந்திர பல்லவர் எப்பேர்ப்பட்ட அபூர்வமான மனிதர்! அவருடைய அன்பையும் நம்பிக்கையையும் இவ்வளவு தூரம் பெறுவதற்குத் தான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! ஆனால் அவ்வளவு அன்புக்கும் நம்பிக்கைக்கும் தான் பாத்திரமாக வேண்டுமே! மாமல்லரைப் பத்திரமாய்க் காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்க்கவேண்டுமே? 'திருவெண்காட்டுக்குப் போய் விட்டு வா!' என்று சக்கரவர்த்தி கூறியது அவருடைய பெருந்தன்மைக்கு உகந்தது. ஆனால், அதற்கு இந்தச் சந்தர்ப்பம் தகுதியானதா? தன்னை இத்தகைய போர்க்கோலத்திலே பார்த்தால், தாயும் மாமனும் என்ன நினைப்பார்கள்? உமையாள் ஏற்கெனவே நாணம் அதிகம் உள்ளவள். தன்னை அணுகுவதற்கே இப்போது பயப்படுவாளோ என்னவோ? - இவ்வாறெல்லாம் தளபதி பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். ரதத்தின் முனையில் அமர்ந்திருந்த கண்ணபிரானுடைய மனக் கண்ணின் முன்னால் அடிக்கடி ஒரு காட்சி வந்து கொண்டிருந்தது. விடைபெற்றுக் கொள்ளவேண்டிய சமயம் வந்த போது கண்ணபிரான் தன் எட்டு மாதக் குழந்தையின் முகத்தோடு முகம் வைத்து "போய் வரட்டுமா, கண்ணே!" என்று கொஞ்சினான். அந்தக் குழந்தை அர்த்தம் ஒன்றுமில்லாமலும் அகாரணமாகவும் புன்னகை புரிந்ததுடன் தன் இரண்டு இனந்தளிர்க் கரங்களையும் நீட்டிக் கண்ணபிரானுடைய நீண்ட இரு காதுகளையும் பிடித்துக் கொண்டது. மேற்படி நினைவு வந்தபோதெல்லாம் குழந்தையின் தளிர்க் கரங்கள் அவன் காதைப் பிடித்த இடங்களில் அவனுக்கு என்னவோ செய்தது. மறுபடியும் அந்த மதுரமான ஸ்பரிச இன்பத்தை எப்போது அடையப் போகிறோமோ என்று அவன் மனம் ஏங்கிற்று.

அதோடு கடைசியாக அவன் புறப்பட்டபோது கமலி கூறிய மொழிகளும் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தன. முன்னெல்லாம், "யுத்தத்துக்கு எப்போது புறப்படுகிறாய்?" என்று கேட்டுக் கொண்டிருந்தவள், கண்ணபிரான் உண்மையாகப் புறப்படும் சமயம் வந்த போது, "கண்ணா மகேந்திர பல்லவருக்கு இப்படி ஏன் புத்தி கெட்டுப் போய் விட்டது? வாதாபிச் சக்கரவர்த்தியை விருந்தாளியாக வரவேற்பதாம்! பாண்டிய ராஜாவோடு சண்டை போடுவதற்கு மாமல்லரை அனுப்புவதாமே? என் மனம் ஏனோ தத்தளிக்கிறது! கண்ணா! எது எப்படியானாலும் என் தங்கை சிவகாமியை மறந்து விடாதே! மாமல்லருக்கு நினைவூட்டு!" என்றாள். இவ்விதமாக, அந்த ரதத்தில் இருந்த மூன்று பேருடைய உள்ளங்களும் வெவ்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தபோதிலும் பதைபதைப்பிலும் பரபரப்பிலும் வருங்காலத்தில் என்ன நேருமோ என்ற கவலையிலும் ஒன்றுபட்டிருந்தன. எனவே, அவர்களுடைய இருதயத் துடிப்புகள் ஒரே ஸ்வரத்தில், ஒரே தாளத்தில் சப்தித்தன.