சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/யுத்த நிறுத்தம்

விக்கிமூலம் இலிருந்து
9. யுத்த நிறுத்தம்


அன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் மந்திராலோசனை சபை மறுபடியும் கூடிய போது, சபையில் கூடியிருந்த எல்லோருடைய முகத்திலும் பரபரப்புக் காணப்பட்டது. வாதாபி வீரர்கள் இருவரும் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு தெற்குக் கோட்டை வாசலில் வந்து நின்றதாகவும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மகேந்திரச் சக்கரவர்த்தியிடம் சேர்க்கப்பட்டதாகவும் நகரம் முழுவதும் வதந்தி பரவிவிட்டது. ஓலையில் என்ன எழுதியிருந்தது, மகேந்திர பல்லவர் என்ன மறு ஓலை அனுப்பப் போகிறார் என்று அறிந்து கொள்ள அவ்வளவு பேரும் ஆவலாக இருந்தார்கள். முக்கியமாக, நரசிம்மவர்மரின் முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவருடைய கண்களில் பளிச் பளிச்சென்று மின்னல் தோன்றி மறைந்தன. தம் பக்கத்தில் நின்ற பரஞ்சோதியுடன் அடிக்கடி சமிக்ஞா பாஷையினால் அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவருடைய மார்பு புயலால் தாக்குண்ட கடலைப் போல் மேலே பொங்குவதும் கீழே அடங்குவதுமாக இருந்தது.

சக்கரவர்த்தி வழக்கத்தைவிட மிடுக்கான நடையுடன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவர் கையிலிருந்த ஓலை மீது எல்லாருடைய கண்களும் கவனமும் சென்றன. "சபையோர்களே! இன்று மாலை சபை கலையும் சமயத்தில் முக்கியமான செய்தியை எதிர்பார்ப்பதாகச் சொன்னேன். நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் முக்கியமான ஆச்சரியமான செய்தி வந்திருக்கிறது. மந்திரிகளே! அமைச்சர்களே! தளபதிகளே! அனைவரும் கேளுங்கள்! வாதாபிச் சக்கரவர்த்தி யுத்தத்தை நிறுத்தி விட்டார். சமாதானத்தையும் சிநேகத்தையும் வேண்டி ஓலை அனுப்பியிருக்கிறார்!" என்று சொல்லி மகேந்திர பல்லவர் தம் கையிலிருந்த ஓலையைத் தூக்கிக் காட்டியதும் சபையில் ஏற்பட்ட 'ஹா ஹா' காரத்தையும் மற்றும் பலவியப்பொலிகளையும், குதூகல சப்தங்களையும் வர்ணிக்க முடியாது. இவ்வளவுக்கிடையில் 'ஹூம்' என்ற ஆட்சேபிக்கும் சப்தம் ஒன்றும் கிளம்பியது. அது மாமல்லர் இருந்த இடத்திலிருந்து வந்ததென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

"மந்திரிகளே! அமைச்சர்களே! உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். துங்கபத்ரா நதியிலிருந்து நர்மதை நதிவரையிலும் உள்ள மத்திய பாரத தேசத்தின் ஏக சக்கராதிபதி நம்முடைய சிநேகத்தைக் கோருகிறார். நம்முடன் சமாதானத்தை நாடுகிறார். அவருக்கு நான் என்ன மறுமொழி அனுப்பட்டும்? யுத்தத்தை நிறுத்த முடியாது; போர் நடத்தியே தீருவோம் என்று சொல்லியனுப்பட்டுமா? அல்லது பல்லவ குலத்தின் பரம்பரைத் தர்மத்தை அனுசரித்து, சிநேகத்தைக் கோருகிற வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாமும் சிநேகத்தைக் கைக்கொள்ளலாமா? சபையோர்களே! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். பதினையாயிரம் யானைப்படையையும், ஐந்து இலட்சம் காலாட் படையையும் உடைய வாதாபிப் புலிகேசி மன்னர், யுத்தத்தை நிறுத்திவிட்டு நமது விருந்தினராகக் காஞ்சி நகருக்குள் பிரவேசிக்க விரும்புகிறார். சில தினங்கள் இங்கே தங்கி இம்மாநகரின் சிறப்புக்களைப் பார்த்துக் களித்துவிட்டுப் போக ஆசைப்படுகிறார். அவரை மரியாதையுடன் வரவேற்று உபசரிப்போமா அல்லது கோட்டைக் கதவுகளுக்கு இன்னும் சில தாழ்களைப் போட்டு அடைப்போமா? உங்களுக்குள்ளே கலந்து யோசித்துக் கொண்டு ஏகமனதாக அபிப்பிராயத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்றார் சக்கரவர்த்தி.

பிறகு சற்று நேரம் சபையில் ஒரே கலகலப்பாய் இருந்தது. மந்திரிகளும், அமைச்சர்களும் ஒருவரோடொருவர் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டார்கள். கடைசியாக, பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர் பேசுவதற்கு எழுந்து நின்ற போது, சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. "பல்லவேந்திரா! தங்களுடைய இராஜ தந்திரத்திலும் தீர்க்காலோசனையிலும் இச்சபையோர் அனைவருக்கும் பூரண நம்பிக்கை இருக்கிறது. எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படித் தாங்கள் செய்து முடிப்பீர்கள் என்று எல்லாரும் உறுதி கொண்டிருக்கிறோம். ஆகவே, முதலில் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்றார்.

அப்போது சக்கரவர்த்தி, "பட்டரே! என் அபிப்பிராயத்தைக் கேட்கவும் வேண்டுமா? அவசியத்துக்கு மேலே ஒரு வினாடியும் யுத்தத்தை நடத்துவதில் எனக்குப் பிரியமில்லை. ஓர் உயிரேனும் வீணாகச் சேதம் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. இந்தக் கோட்டைக்குள் இருக்கும் நாமெல்லோரும் கூடியவரையில் ஒரு குறையும் இல்லாமல் சௌகரியமாயிருக்கிறோம். ஆனால், கோட்டைக்கு வௌியே கிராமங்களிலும் பட்டணங்களிலும் உள்ள பல்லவ நாட்டுப் பிரஜைகள் பெருங்கஷ்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொண்டை மண்டலத்தில் இந்தக் கோடை காலத்தில் பயிர்த் தொழிலே நடக்கவில்லை. இன்னும் சில மாத காலத்தில் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பெரும் பஞ்சம் பீடிக்கக் கூடும். இப்பேர்ப்பட்ட நிலைமையில், அநாவசியமாக யுத்தத்தை வளர்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மேலும், உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியைப் போர்க்களத்தில் புறங்காட்டச் செய்த வீராதி வீரரான புலிகேசி மன்னர் யுத்தத்தைத் தாமே நிறுத்தி விட்டு வலிய வந்து சமாதானத்தைக் கோரும் போது நாம் அதை எதற்காக நிராகரிக்க வேண்டும்? என்னுடைய அபிப்பிராயம் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதுதான்" என்றார்.

இவ்விதம் சக்கரவர்த்தி கூறி நிறுத்தியதும், சாரங்கதேவ பட்டர், "பல்லவேந்திரா! தாங்கள் இப்பொழுது கூறிய விஷயங்கள் எல்லாம் மந்திரி மண்டலத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உடன்பாடுதான். ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி எங்களிலே சிலருக்கு ஓர் ஐயப்பாடு இருக்கிறது. வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சி நகருக்குள் விருந்தினராக வரவேற்பது பற்றித் தாங்கள் சொன்னீர்கள், அது உசிதமான காரியமா என்றுதான் சந்தேகப்படுகிறோம். வாதாபி மன்னர் பழி பாவங்களுக்கு அஞ்சாத வஞ்சகர் என்றும், அசுர குணம் படைத்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். காஞ்சியைப் பார்க்க வருவதாக அவர் சொல்லுவதில் ஏதேனும் அந்தரங்க சூழ்ச்சி இருக்கக்கூடுமல்லவா?" என்றார்.

மகேந்திர பல்லவர் புன்னகையுடன் கூறினார்; "சாரங்க தேவரே! முன் ஜாக்கிரதையுள்ள மதி மந்திரிகள் சொல்ல வேண்டியதைத்தான் நீங்கள் சொன்னீர்கள். யோசிக்க வேண்டிய காரியந்தான், ஆனால் வாதாபி அரசர் கேட்டிருப்பதில் ஒருவிதமான சூழ்ச்சியும் இருக்க நியாயமில்லை. அவருடைய யானைப்படை, காலாட் படை எல்லாவற்றையும் காஞ்சிக்கு இரண்டு காத தூரத்துக்கப்பால் அனுப்பி விடச் சம்மதிக்கிறார். அவருடைய முக்கிய மந்திரிப் பிரதானிகள் பத்துப் பதினைந்து பேருடன் நிராயுதபாணியாகக் காஞ்சிக்குள் பிரவேசிக்கச் சித்தமாயிருக்கிறார். சபையோர்களே! நம்மிடம் இவ்வளவு பூரண நம்பிக்கை வைத்துச் செய்தி அனுப்பியுள்ளவரிடம் நாம் எவ்விதத்தில் சந்தேகம் கொள்வது? ஆகவே, யுத்தமா, சமாதானமா என்பதைப் பற்றித்தான் உங்களுடைய அபிப்பிராயம் வேண்டும்!" மறுபடியும் மந்திரிமார்களும் அமைச்சர்களும் ஒருவரோடொருவர் கலந்து, ஆலோசித்தார்கள். கடைசியில், சாரங்க தேவபட்டர் எழுந்து, "பல்லவேந்திரா! மந்திரி மண்டலத்தார் சமாதானத்தையே விரும்புகிறார்கள். வாதாபிச் சக்கரவர்த்தியைக் காஞ்சிக்குள் வரவேற்கும் விஷயத்தில் தங்களுடைய கருத்து எதுவோ அதன்படி செய்யலாமென்று அபிப்பிராயப்படுகிறார்கள்" என்றார்.