உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/வாதாபி

விக்கிமூலம் இலிருந்து
46. வாதாபி


வடபெண்ணைக் கரையிலிருந்து சளுக்க சைனியத்தின் பெரும் பகுதி வடமேற்குத் திசையாக வாதாபி நகரத்தை நோக்கிக் கிளம்பிற்று. சிவகாமியும் அந்தச் சைனியத்துடன் பிரயாணம் செய்தாள். தொண்டை மண்டலத்துக் கிராமங்களிலே பார்த்த பயங்கரங்களைக் காட்டிலும் கொடுமையான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு போனாள். வீடுகளும் வைக்கோற் போர்களும் பற்றி எரிவதையும், பசுமையான தோப்புக்கள் போர் யானைகளால் அழிக்கப்படுவதையும், பயிர்கள் நாசமாக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு போனாள். குற்றமற்ற கிராமத்து ஜனங்கள் கொல்லப்படுவதையும், திடகாத்திர புருஷர்களும் இளம் வயதுப் பெண்களும் சிறைப்பிடிக்கப்படுவதையும் தாய்மாரைப் பிரிந்த குழந்தைகள் அலறி அழுவதையும் பார்த்துக் கொண்டு போனாள்.

சிவகாமியின் உள்ளத்திலும் பெரிய தீப்பிழம்பு ஜுவாலை விட்டு எரியத் தொடங்கியது. வாதாபிச் சக்கரவர்த்தியை மீண்டும் சந்தித்து இம்மாதிரி அக்கிரமக் கொடுமைகளைச் செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொள்ள விரும்பினாள். பல தடவை அதற்காகப் பிரயத்தனம் செய்தாள். தன்னுடன் வந்த காவலர்களை தன்னைப் புலிகேசியிடம் அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டாள். அந்தக் காவலர்கள் அவள் கூறியதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு சமயம் அவள் இரவில் தூங்கும் போது, 'ஹ ஹா ஹா' என்று பேய் சிரிப்பது போன்ற சிரிப்புச் சப்தம் கேட்கும். திடுக்கிட்டுக் கண்ணை விழித்துப் பார்ப்பாள். எதிரே சற்றுத் தூரத்திலிருந்து வாதாபிச் சக்கரவர்த்தியின் உருவம் திரும்பிப் போவது போலத் தோன்றும். எழுந்து உட்காருவதற்குள் அந்த உருவம் மறைந்து போய் விடும். தன்னுடைய சித்தப் பிரமையில் தோன்றிய உருவந்தான் அது என்று எண்ணிக் கொள்வாள்.

புலிகேசி இளம் பிராயத்தில் சிற்றப்பன் மங்களேசனால் பெரிதும் கொடுமை செய்யப்பட்டவன். அதன் காரணமாக, மரத்திலே வைரம் பாய்வது போல் அவனுடைய சுபாவத்திலேயே குரூரம் கலந்து இறுகிக் கெட்டிப்பட்டிருந்தது. நாகநந்தியின் உதவியால் வாதாபிச் சிம்மாசனம் ஏறிய காலத்திலிருந்து உள்நாட்டு எதிரிகளை ஒழித்தல், வெளிப் பகைவர்களோடு யுத்தம் செய்தல் முதலிய கொடுங் காரியங்களிலேயே புலிகேசியின் வாழ்நாளெல்லாம் சென்றிருந்தது. பிறருடைய துன்பங்களைப் பார்த்து வருந்துவது என்பது புலிகேசியின் சுபாவத்தில் இல்லவே இல்லை. தற்சமயம், புலிகேசியின் சுபாவக் குரூரத்தை ஒன்றுக்குப் பத்தாக வளரச் செய்த காரணங்கள் இரண்டு ஏற்பட்டிருந்தன.

ஒன்று, மகேந்திர பல்லவனுடைய மாய தந்திரங்களினால் தம்முடைய தென்னாட்டுப் படையெடுப்பு அபஜயமாக முடிந்ததில் ஏற்பட்டிருந்த ஆசாபங்கம். இன்னொன்று, இதுகாறும் வாதாபி இராஜ்யத்தின் பெருமையையும் தம்முடைய க்ஷேமத்தையும் தவிர வேறு கவனமே இல்லாமலிருந்த நாகநந்தியடிகளின் உள்ளத்தை ஒரு பல்லவ நாட்டுப் பெண் கவர்ந்து விட்டாளே என்ற அசூயையும் ஆத்திரமும். இக்காரணங்களினால் தம் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்த குரோதத்தையெல்லாம் புலிகேசிச் சக்கரவர்த்தி தாம் சென்ற மார்க்கத்தில் எதிர்ப்பட்ட குற்றமற்ற ஜனங்கள் மீது காட்டினார். அதனோடு, சிவகாமியின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் தக்க வழியை யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அறிந்திராத சிவகாமி, தான் மட்டும் வாதாபிச் சக்கரவர்த்தியை இன்னொரு தடவை நேருக்கு நேர் சந்திக்க முடிந்தால், அவருடைய படைகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நிறுத்தி விடலாம் என்று ஆசையுடன் நம்பினாள். அவளுடைய இந்த மனோரதம் வாதாபி போய்ச் சேரும் வரையில் நிறைவேறவில்லை.

வாதாபியில் பெரியதோர் அழகான அரண்மனையில் சிவகாமி கொண்டு வந்து சேர்க்கப்பட்டாள். அவளுக்குத் துணையாகவும், பணிவிடை புரிவதற்காகவும் இரண்டு தாதிப் பெண்கள் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் பிராகிருதமும் தமிழும் கலந்த பாஷையில் பேசினார்கள். அந்தத் தாதிப் பெண்களுடைய பேச்சையெல்லாம் சிவகாமி எளிதில் புரிந்து கொள்ளுதல் சாத்தியமாயிருந்தது. சக்கரவர்த்தி கட்டளையின் பேரிலேயே அந்த அரண்மனை சிவகாமிக்காகத் திட்டம் செய்யப்பட்டதென்றும், அவளுக்கு யாதொரு சௌகரியக் குறையும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்படி ஆக்ஞை என்றும் மேற்படி தாதிப் பெண்களிடம் சிவகாமி தெரிந்து கொண்டாள். இதெல்லாம் அவள் எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆகவே, கூடிய சீக்கிரம் புலிகேசிச் சக்கரவர்த்தி தன்னைப் பார்க்க அங்கு வருவாரென்றும் சிவகாமி தீர்மானித்தாள். அப்படி அவர் வரும் போது என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஓயாமல் சிந்தித்த வண்ணமிருந்தாள்.

சக்கரவர்த்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனோபாவம் இரண்டு விதமாயிருந்தது. ஒரு சமயம், அவருடைய சைனியம் செய்த கொடுஞ் செயல்களை எண்ணி எண்ணி அவளுடைய உள்ளம் கொதித்தது. மற்றொரு சமயம், அப்பேர்ப்பட்ட கொடுங்கோல் மன்னன் மீது அபலையாகிய தனக்கு ஏற்பட்டிருந்த சக்தியை நினைத்து அவள் உள்ளம் பெருமிதம் அடைந்தது. இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறைவைத்த சீதாதேவியின் நினைவு சிவகாமிக்கு அடிக்கடி வந்தது. சீதையின் நிலைமைதான் தன்னுடைய நிலைமையும். இராமபிரான் இராவணனை வென்று சீதையைச் சிறை மீட்டுக் கொண்டு போனது போல் மாமல்லர் ஒருநாள் வந்து இந்தப் பாதகப் புலிகேசியை வென்று தன்னைச் சிறை மீட்டுக் கொண்டு போகப் போகிறார்!

இவ்விதம் நம்பிய சிவகாமி, சீதைக்கும் தனக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றியும், எண்ணமிட்டாள். சீதாதேவியை இராவணன் அவளுடைய அழகுக்காக ஆசைப்பட்டு அபகரித்துக் கொண்டு வந்தான். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், புலிகேசியோ தன்னிடமிருந்த நாட்டியக் கலையின் மேல் மோகங்கொண்டு தன்னைச் சிறைப்பிடித்து வந்திருக்கிறான். (புலிகேசியே மாறுவேடம் பூண்ட புத்த பிக்ஷு என்னும் நம்பிக்கை சிவகாமியின் உள்ளத்தில் வேரூன்றியிருந்தபடியால் இவ்விதம் எண்ணினாள்.) ஆகையால், இராவணன் மீது சீதைக்கு இல்லாத செல்வாக்கு, தனக்கு வாதாபிச் சக்கரவர்த்தியின் மீது இருக்கிறது. தன் கலையின் சக்தி கொண்டு அவரைத் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டி வைக்கலாம். ஆ! அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவைத் தான் இலேசில் விடப்போவதில்லை. வரட்டும் இங்கே! எப்படியும் என்னிடம் வந்துதானே ஆக வேண்டும்?

சிவகாமி வாதாபி வந்து சேர்ந்த எட்டாம் நாள் அவளுடைய மனோரதம் ஈடேறியது. சக்கரவர்த்தி அவளைப் பார்ப்பதற்காக அந்த அரண்மனைக்கு வந்தார். வாசற்புறமிருந்த தாதி ஓடி வந்து, "சக்கரவர்த்தி வருகிறார்!" என்று தெரிவித்ததும், சிவகாமி மிக்க பரபரப்புக் கொண்டு வாதாபிச் சக்கரவர்த்தியை வரவேற்கவும், அவர்மீது தன் கூரிய கண்ணம்புகளையும், சொல்லம்புகளையும் செலுத்தவும் ஆயத்தமானாள். ஆனால், சக்கரவர்த்தி அரண்மனைக்குள்ளே வந்து நின்று அவளை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்து விட்டு, அவள் கனவிலே கேட்டது போன்ற ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்ததும், சிவகாமி எண்ணியிருந்த எண்ணமெல்லாம் எங்கேயோ போய் விட்டன. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பீதி அவளுடைய இருதயத்தில் புகுந்து தேகமெல்லாம் வியாபித்துத் தேகத்தின் எலும்புகளுக்குள்ளே பிரவேசித்து ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. வாயைத் திறந்து பேச முடியாதபடி நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

"சிற்பி மகளே! நாட்டிய கலாராணியே! மகேந்திர பல்லவனின் கலைப் பொக்கிஷமே! சௌக்கியமா? வாதாபி வாசம் உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்று புலிகேசி கேட்ட போது, சிவகாமியின் உடம்பு படபடத்து நடுங்கிற்று. தன்னுடைய நாட்டியத் தோற்றங்களிலே வெகு சாதாரணமான தோற்றத்தைக் கண்டு அப்படியே பரவசப்பட்டு நின்ற புத்த பிக்ஷுவா இவர்? தன்னிடம் அணுகும்போதே பயபக்தியுடன் அணுகி உணர்ச்சி மிகுதியினால் தன்னுடன் பேச முடியாமல் தத்தளித்து நின்ற நாகநந்தி இவர்தானா? பொன்முகலி நதிக்கரையில் தொண்டை நாட்டுப் பெண்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தான் வரங் கேட்டுப் பெற்ற போது, அவர் இவ்விதமில்லையே? வாதாபி நகருக்கு வந்து விட்டதனாலேயே இவரிடம் இந்த வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா?

இவ்விதம் சிவகாமியின் உள்ளக் கடல் கொந்தளித்துக் குழம்ப, புலிகேசியின் கேள்விகளுக்கு மறுமொழி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள். அதைப் பார்த்த புலிகேசி, "பெண்ணே! ஏன் மௌனம் சாதிக்கிறாய்? 'கலை உணர்ச்சியில்லாத வாதாபிப் புலிகேசியுடன் நமக்கு என்ன பேச்சு' என்ற எண்ணமா? அப்படி நான் அடியோடு கலை உணர்ச்சி இல்லாதவனல்ல. அவ்விதமிருந்தால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த உன்னை இந்த அரண்மனையில் வைத்திருப்பேனா? பல்லவ நாட்டின் இணையற்ற நடன கலாராணிக்குத் தகுந்த அலங்கார மாளிகையல்லவா இது? இங்கு உனக்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா? பணிப்பெண்கள் திருப்தியாகப் பணிவிடை செய்கிறார்களா? ஏதாவது குறை இருந்தால் சொல்!" என்றார்.

புலிகேசியின் பேச்சு எவ்வளவோ அருவருப்பாயிருந்த போதிலும் இனிப் பேசாமல் இருக்கக் கூடாது என்று சிவகாமி கருதி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "பிரபு! இங்கு எல்லாம் சௌகரியமாயிருக்கிறது; ஒரு குறையும் இல்லை, மிக்க வந்தனம்!" என்றாள். "ஆஹா! வாய் திறந்து பேசுகிறாயா? நல்லவேளை! நீ மௌனமாய் நின்றதைப் பார்த்து விட்டு, நீ உயிருள்ள பெண்தானா அல்லது உன் தந்தை அமைத்த கற்சிலைகளில் ஒன்றைத்தான் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோமா என்று சந்தேகித்தேன். நீ இந்த மட்டும் பேசியது மிக்க சந்தோஷம். நீ வாயினால் சொன்னபடி உண்மையாகவே எனக்கு வந்தனம் செலுத்த விரும்பினால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது..." என்ற புலிகேசி மேலும் கூறத் தயங்கி நின்றார்.

அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பீதியுடன் சிவகாமி மௌனமாயிருந்தாள். "பெண்ணே! அந்த மூடன் மகேந்திர பல்லவன் என்னைக் கலை உணர்ச்சி அற்றவன் என்று சொன்னான்; அதை நீயும் நம்பினாய். நரிக்கும் புலிக்கும் எவ்வளவு வித்தியாசமோ, குட்டைக்கும் சமுத்திரத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, உள்ளங்கை அகலமுள்ள தொண்டை மண்டலத்துக்கும் விஸ்தாரமாகப் பரந்த சளுக்க சாம்ராஜ்யத்துக்கும் எவ்வளவு வித்தியாசமோ, அவ்வளவு வித்தியாசம் மகேந்திர பல்லவனுடைய கலை உணர்ச்சிக்கும் என்னுடைய கலை உணர்ச்சிக்கும் உண்டு. கூடிய சீக்கிரத்தில் இதை நீயே தெரிந்து கொள்வாய். கலா ராணியே! கேள்! தொலை தூரத்திலுள்ள பாரசீக நாட்டுச் சக்கரவர்த்தியிடமிருந்து என்னுடைய சபைக்குத் தூதர்கள் வந்திருக்கிறார்கள். என்னுடைய நட்பைக் கோரிப் பாரசீகச் சக்கரவர்த்தி காணிக்கைகளும் சன்மானங்களும் அனுப்பியிருக்கிறார். பாரசீகத் தூதர்களைப் பகிரங்கமாக வரவேற்பதற்கும் அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை ஏற்பதற்கும் நாளைய தினம் மகுடாபிஷேக மண்டபத்தில் மகாசபை கூடுகிறது. அந்த மகாசபையில் வந்து நீ நடனம் செய்ய வேண்டும்."

இத்தனை நேரம் பயமும் பலவகைக் குழப்பங்களும் குடிகொண்டிருந்த சிவகாமியின் உள்ளம் நடனம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அசாதாரண தைரியத்தை அடைந்தது. கொஞ்சமும் தயங்காமலும் பயப்படாமலும் தலைநிமிர்ந்து புலிகேசியை நோக்கி அழுத்தந் திருத்தமான குரலில், "முடியாது" என்றாள். புலிகேசியின் கண்கள் ஒருகணம் ஜுவாலாக்கினியைக் கக்கின. தன்னை மீறிக் கொண்டு வந்த கோபத்தைப் புலிகேசி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டதாகத் தோன்றியது. "பெண்ணே! ஏன் இவ்வளவு கண்டிப்பாக 'முடியாது' என்று சொல்லுகிறாய்? மூன்று நாள் உனக்கு அவகாசம் கொடுக்கிறேன்; யோசித்துச் சொல்!" என்றார் புலிகேசி.

"யோசிப்பதற்கு அவசியமேயில்லை, பிரபு! என்னைத் தங்களுடைய சபையில் ஆடச் சொல்லி, மகேந்திர பல்லவரைத் தாங்கள் ஜயித்து வந்தது பற்றி உலகத்துக்கெல்லாம் பறையறையப் போகிறீர்கள். 'பல்லவ நாட்டிலிருந்து கொண்டு வந்த அடிமை இவள்!' என்று சுட்டிக் காட்டப் போகிறீர்கள். ஆ! தங்கள் நோக்கம் தெரிந்தது. தாங்கள் என்னைச் சிறைப்பிடிக்கலாம், என்னுடைய தேகத்தை அடிமை கொள்ளலாம். என் ஆத்மாவையும் கட்டுப்படுத்தலாம்; ஆனால், என்னிடமுள்ள கலையைத் தங்களால் அடிமைப்படுத்த முடியாது. அதிகாரத்துக்கு அடங்கி, ஆக்ஞைக்குப் பயந்து நான் நடனம் ஆட மாட்டேன்! ஒரு நாளும் ஆட மாட்டேன்" என்றாள்.

ஆத்திரம் பொங்கிய குரலில் சிவகாமி மேற்கூறிய மொழிகளைக் கூறி வந்த போது புலிகேசியின் கண்கள் செந்தணல் நிறம் பெற்று அனல் உமிழ்ந்தன. சிவகாமி பேசி முடித்ததும் புலிகேசி பழையபடி ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தார். "பெண்ணே! பொறு! இவ்வளவு பதற்றம் உனக்கு எங்கிருந்து வந்தது? அப்படியொன்றும் உன் தேகத்தையோ, உன் கலையையோ அடிமைப்படுத்த எனக்கு உத்தேசமில்லை. உனக்கு இஷ்டமில்லாவிட்டால் நீ நடனம் ஆட வேண்டாம். இந்த அரண்மனைக்குள்ளே உன்னைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ண வேண்டாம். உனக்கு இஷ்டமான போது நீ இந்த மாளிகையை விட்டு வெளியே போகலாம். வாதாபி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். உங்கள் காஞ்சியைப் போல் எங்கள் வாதாபி அவ்வளவு அழகாயில்லாவிட்டாலும், ஏதோ பார்க்கத் தகுந்த காட்சிகள் இங்கேயும் இருக்கின்றன. இந்த அரண்மனை வாசலில் காவல் காப்பவர்கள் உன்னைச் சிறை வைப்பதற்காக இங்கு இருக்கவில்லை. உனக்கு ஏவல் புரிவதற்காக இருக்கிறார்கள். நீ எப்போது சொல்கிறாயோ அப்போது அவர்கள் உனக்குப் பல்லக்குத் தருவித்துக் கொடுப்பார்கள். மறுபடியும் என்னைப் பார்ப்பதற்கு நீ விரும்பினாலும் அவர்களிடமே சொல்லி அனுப்பலாம். சிற்பி மகளே! நீ என் அதிகாரத்துக்குப் பயந்து நடனமாட வேண்டாம். உன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுகமாகவும் இருக்கலாம்!"

இவ்விதம் சொல்லி விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி சிவகாமியைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையில் எல்லையில்லாத துவேஷமும், பழிவாங்கும் உறுதியும் குடிகொண்டிருந்ததைச் சிவகாமி கவனிக்கவில்லை. அந்த ஏழைப் பெண் அப்போது தரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொடுமைக்கும் கொடூரத்துக்கும் பெயர் போன வாதாபிப் புலிகேசியைத் தான் வென்று விட்டதாக அவளுடைய உள்ளம் இறுமாப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலை சிவகாமி வாசற் காவலரிடம் தான் வாதாபி நகரைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறிப் பல்லக்குக் கொண்டு வரச் சொன்னாள். "உன்னை இங்கே சிறை வைத்திருக்கவில்லை; உன் இஷ்டப்படி வெளியே சென்று வரலாம்" என்று புலிகேசி கூறியது அவள் மனத்தை விட்டு அகலாதிருந்தது. தன்னுடைய சுதந்திரத்தை அன்றே பரிசோதித்து விட எண்ணிப் பல்லக்கில் ஏறிக் கொண்டு புறப்பட்டாள்.