சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/சித்தர் மலைச் சித்திரம்
பதினைந்து விதமான அபிநயப் பார்வைகளிலே சந்தேகமும் அருவருப்பும் தோன்றும் பார்வையைச் சிவகாமி புத்த பிக்ஷுவின் மேல் ஒருகணம் செலுத்திவிட்டு, ஆயனரைப் பார்த்து, "இவர்கள் இத்தனை நேரமும் இங்கே தான் இருந்தார்களா?" என்று கேட்டாள். "ஆம், குழந்தாய்! "புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்களா?" "ஆமாம்! ஆனால், இதைக் குறித்து நீ என்னவோ ஏதோ என்று சந்தேகப்பட வேண்டாம்.." ஆயனர் மேலே சொல்லுவதற்குள் சிவகாமி, "புத்த பகவானுடைய சிலைகளைப் பிரம்மாண்டமாய்ச் செய்வதில் எவ்வளவு உபயோகம் இருக்கிறது!" என்றாள். "அதனாலேதான் மகாயான சித்தாந்தத்தை ஏற்படுத்திய நாகார்ஜுன பிக்ஷுவை நான் போற்றுகிறேன்" என்றார் நாகநந்தி.
புத்தமதம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிலகாலம் வரையில் புத்த பகவானுடைய சிலைகள் அமைப்பிலும் சித்திரங்கள் எழுதுவதும் தடுக்கப்பட்டிருந்தன. இந்த வரலாறு நடந்த காலத்துக்கு இருநூறு வருஷத்துக்கு முன்னால், நாகார்ஜுன பிக்ஷு என்னும் மகான் தோன்றி மகாயான புத்த சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். பாரத நாட்டின் வடகோடியில் நாலந்தா என்னும் நகரில் பிரசித்தி பெற்று விளங்கிய பௌத்த மடத்தின் தலைவரான நாகார்ஜுனர் தேசமெங்கும் யாத்திரை செய்து, வாதப்போர் நடத்தி மகாயான சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்தார். ஆங்காங்கே ஸங்கிராமம் என்ற பெயரால் வழங்கிய பௌத்த மடங்களையும் நிறுவிக் கொண்டு போனார். அத்தகைய ஸங்கிராமம் ஒன்றை அவர் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள ஸரீ பர்வதத்திலும் ஸ்தாபித்தார். அதுமுதல் ஸரீ பர்வதத்துக்கு நாகார்ஜுன மலை என்ற பெயரும் வழங்கலாயிற்று. நாகார்ஜூனர் ஸ்தாபித்த மகாயான பௌத்த மதம், புத்த பகவானுடைய சிலைகளை அமைப்பதற்கும் கோயில்கள் கட்டுவதற்கும் அநுமதித்தது. "நாகார்ஜுன பிக்ஷுவைப் போற்றுகிறேன்" என்று நாகநந்தி இரண்டுமுறை கூறியதன் கருத்து என்ன என்பது இப்போது நன்கு விளங்குகிறதல்லவா?
நாகநந்தி கூறியதைப் பொருட்படுத்தாமல் சிவகாமி, "அப்பா! இவர்கள் எதற்காக ஒளிந்துகொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள். "அம்மா! நம் நாகநந்தி அடிகள் இராஜ குலத்தினரைப் பார்ப்பதில்லை என்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். உனக்குத் தெரியாதா? இந்த வாலிபன் அவருடன் வந்திருந்தபடியால்..." "அப்பா! சக்கரவர்த்தியும் மாமல்லரும் இவரைப் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்? ஒன்று கவனித்தீர்களா? மாமல்லர் கையில் ஒரு வேல் வைத்திருந்தாரே? அது இந்த வீரருடைய வேல்தான்..."
நாகநந்தி மீண்டும் குறுக்கிட்டு, "அதில் என்ன வியப்பு, சிவகாமி! இப்போதுதான் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஆயுதம் தேவையாயிருக்கிறதே? ஊரிலுள்ள உடைந்த வேல், வாள், ஈட்டி எல்லாவற்றையும் தேடிச் சேகரிக்கிறார்களே?" என்றார். சிவகாமி அவரை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு, "அப்பா! குமார சக்கரவர்த்தி இந்த வீரரிடம் திருப்பிக் கொடுப்பதற்காகவே அந்த வேலைத் தம் கையிலே வைத்திருக்கலாம். சுத்த வீரத்தைப் பாராட்டுவதில் மாமல்லரைப்போல் யார் உண்டு? இவரை நீங்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு உடனே அழைத்துப் போக வேண்டும்" என்று கூறினாள். ஆயனர் தட்டுத் தடுமாறி, ஆகட்டும் "அம்மா! என் உத்தேசமும் அதுதான். பரஞ்சோதி வடக்கே போய்த் திரும்பி வந்ததும் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகிறேன்" என்றார்.
சக்கரவர்த்தி வந்திருந்த சமயத்தில் சிலையின் பின்னால் ஒளிந்திருக்க நேர்ந்த அவமானத்தினாலும், சிவகாமியின் விஷயத்தில் ஏற்பட்ட இயற்கையான சங்கோசத்தினாலும் இத்தனை நேரம் பரஞ்சோதி உள்ளமும் உடலும் குன்றி மௌனமாயிருந்தான். ஆனால், சிவகாமி பரிந்து கூறிய வார்த்தை அவனுடைய ஆன்மாவையும் நாவையும் கட்டியிருந்த தளையை அறுத்த மாதிரி இருந்தது. அவன் சிவகாமியை நன்றியுடன் நோக்கி விட்டு, ஆயனரைப் பார்த்து, "ஐயா! தங்கள் குமாரி சொல்வது உண்மைதான். குமார சக்கரவர்த்தியின் கையிலிருந்த வேல் என்னுடைய வேல் தான் என்று எனக்குக்கூடத் தோன்றியது. அதை வாங்கிக் கொடுத்தீர்களானால் நல்லது. நெடுந்தூரம் பிரயாணம் செய்வதற்குக் கையில் ஏதேனும் ஆயுதம் அவசியமல்லவா?" என்றான்.
அப்போது புத்த பிக்ஷு, 'ஆயுதத்துக்குத்தானா இப்போது அவசரம்? வேலும் ஈட்டியும் எத்தனை வேணுமானாலும் நான் சம்பாதித்துத் தருகிறேன்; முக்கியமான காரியம் ஆகவில்லையே! குதிரையும் இலச்சினையும் கேட்கத் தவறி விட்டீர்களே, ஆயனரே!" என்றார். "அது என் பொறுப்பு நாளை மாமல்லபுரத்துக்கு வரும்படி சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அங்கே கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறேன். பிரயாணத்திற்கு மற்ற ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்றார் ஆயனர்.
"அப்பா! இந்த அண்ணன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யப் போகிறாரா? எந்த ஊருக்கு? எதற்காக? என்று சிவகாமி கேட்டாள். "நான்தான் அனுப்புகிறேன், குழந்தாய்! மிகவும் முக்கியமான காரியத்துக்காக. சென்ற ஒன்பது வருஷகாலமாக இரவும் பகலும் நான் கண்டுகொண்டிருந்த கனவு நிறைவேறப்போகிறது. சிவகாமி! இந்த உத்தம புத்த பிக்ஷுவின் உதவியினால் நிறைவேறப் போகிறது" என்று ஆயனர் கூறியபோது அவருடைய மொழிகளில் முன் போலவே ஆர்வமும் பரபரப்பும் பொங்கித் ததும்பின.
"நீங்கள் என்ன கனவு கண்டீர்கள்? அது எப்படி நிறைவேறப்போகிறது? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே?" என்றாள் சிவகாமி. "அஜந்தா மலைக் குகையிலுள்ள அதிசய வர்ண சித்திரங்களைப் பற்றி உனக்குப் பல தடவை சொல்லியிருக்கிறேனல்லவா? ஐந்நூறு வருஷம் ஆகியும் அழியாத அந்த வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து வருவதற்காகத் தான் இந்தப் பிள்ளையை என் அருமை நண்பரின் மருமகனை, வடக்கே அனுப்பப் போகிறேன்..."
"ஐந்நூறு வருஷத்து வர்ணமாவது, அழியாதிருக்கவாவது? எனக்கு நம்பிக்கைப்படவில்லை, அப்பா!" என்று சிவகாமி கூறி, சந்தேகமும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தோன்றிய பார்வையுடன் பிக்ஷுவை நோக்கினாள். "அதை நம்புவது கஷ்டந்தான் முதன் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஐந்நூறு வருஷம் அழியாத வர்ணம் எப்படி இருக்கமுடியும் என்றுதான் எண்ணினேன். நானே கண்ணால் பார்த்த பிறகு தான் நம்பிக்கை உண்டாயிற்று!" என்றார்.
ஆயனர் இவ்விதம் கூறியதும், புத்த பிக்ஷுவும் சிவகாமியும் தங்களுடைய வியப்பை ஏககாலத்தில் தெரிவித்துக் கொண்டார்கள். "கண்ணால் பார்த்தீர்களா? எப்போது?" என்றாள் சிவகாமி. "என்னிடம் இத்தனை காலமும் சொல்லவில்லையே? தாங்கள் அஜந்தாவுக்குப் போனதுண்டா?" என்று பிக்ஷு கேட்டார். "இல்லை; அஜந்தாவுக்குப் போனதில்லை ஆனால், சித்தர் மலையிலே பார்த்தேன். அடிகளே! தாங்களும் சித்தர் மலைக்குப் போய்வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே என்ன என்ன அதிசயங்களைக் கண்டீர்கள்?" என்று ஆயனர் வினவியதும், பிக்ஷுவின் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று.
"ஆ! தெரிகிறது... சித்தர் மலைக்குகையில் ஜீன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அழியா வர்ணங்கொண்டு எழுதியிருப்பதைக் கண்டேன். குகையின் வாசற்புறத்தில் இரண்டு அப்ஸர ஸ்திரீகளின் திவ்ய வடிவங்களைப் பரத சாஸ்திரத்தில் சொல்லிய இரண்டு அபூர்வ அபிநயத் தோற்றங்களில் பார்த்தேன். அவற்றை எழுதிய மகா சித்திரக்காரர் யாரோ என்று அதிசயித்தேன்..." "யார் என்று தெரிந்ததா, சுவாமி?"
"இப்போது தெரிகிறது அப்பேர்ப்பட்ட தத்ரூபமான ஜீவ வடிவங்களை எழுதக்கூடிய மகா சித்திரக்காரர் தென்னாட்டிலே ஆயனச் சிற்பியைத் தவிர வேறு யார்?" "ஆம், அடிகளே! அந்த உருவங்களை எழுதியவன் அடியேன்தான். இன்னும் ஏதாவது விசித்திரத்தைக் கவனித்தீர்களா?" "அந்த அப்ஸர மாதரின் நடன உருவங்கள் இடைக்கு மேலே பிரகாசமாய் நேற்று எழுதியவைபோல் விளங்குகின்றன; இடைக்குக் கீழே வர்ணம் மங்கி விளக்கமின்றி இருக்கின்றன." "ஆ! ஒன்பது வருஷ காலத்தில் அதிகமாக மங்கித்தான் இருக்கும்!" என்றார் ஆயனர். பின்னர், மேற்சொன்ன சித்தர் மலைச் சித்திரங்களைக் குறித்து ஆயனர் முன்னும் பின்னுமாகத் தட்டுத்தடுமாறிக் கூறிய வரலாறு வருமாறு.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தி சமண சமயத்தினராயிருந்த காலத்தில் சோழ மண்டலத்துக்கு அவர் பிரயாணம் சென்றபோது ஆயனரையுங்கூட அழைத்துப் போயிருந்தார். உறையூரில் சோழ மன்னனுடைய உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சித்தர்வாச மலையில் சமண முனிவர்கள் ஏற்படுத்தியிருந்த பிரசித்திபெற்ற சமணப் பள்ளியைப் பார்க்கச் சென்றார். அந்தக் குகைப் பள்ளியில் தீட்டியிருந்த வர்ணச் சித்திரங்களைக் கண்டு சக்கரவர்த்தியும் ஆயனரும் அதிசயித்தனர்.
சித்தர் மலைப் பள்ளியில் மேற்படி ஓவியங்களைத் தீட்டிய முனிவர் அச்சமயம் அங்கே வாசம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சித்திரங்கள் ஆயிரம் வருஷம் ஆனாலும் அழியாதவை என்று அம்முனிவர் கூறியதைச் சக்கரவர்த்தியும் ஆயனரும் நம்பவில்லை. அஜந்தா சித்திரங்களைப்பற்றி அந்த முனிவர் கூறியதையும் இவர்கள் நம்பவில்லை. அதன்பேரில் அந்தச் சமண முனிவர் ஒரு பந்தயம் போட்டார். அந்தக் கோயிலின் வாசலில் ஆயனர் இரண்டு அப்ஸர மாதரின் நடனத் தோற்றங்களை எழுதவேண்டுமென்றும், மேற்பாதி உருவங்களைத் தாம் குழைத்துக் கொடுக்கும் வர்ணங்களைக்கொண்டும், இடைக்குக் கீழே ஆயனரின் சொந்த வர்ணங்களைக்கொண்டும் எழுத வேண்டுமென்றும், மூன்று வருஷம் கழித்து மீண்டும் வந்து பார்த்து, தாம் கூறுவது உண்மை என்று நிச்சயிக்கப்பட்டால், ஆயனர் சமண சமயத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் முனிவர் பந்தயத்துக்கு நிபந்தனை விதித்தார். அப்படி ஒப்புக் கொண்டால் மேற்படி வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தைச் சொல்லிக் கொடுப்பதாகவும் கூறினார்.
நிபந்தனையை ஒப்புக்கொண்ட ஆயனர் மேற்சொன்ன இரு வகை வர்ணங்களை உபயோகித்து அப்ஸர மாதர் சித்திரங்களை எழுதினார். மூன்று வருஷத்துக்குப் பிற்பாடு சித்தர் மலைக்கு மறுபடியும் போய்ப் பார்த்தபோது, ஆயனர் தீட்டிய நடன உருவங்களின் மேற்பகுதிகள் அன்று எழுதியவைபோல் வர்ணம் மங்காமல் விளங்கின; கீழ்ப் பகுதிகள் பெரிதும் மங்கிப்போயிருந்தன. இதனால் பெரிதும் அதிசயமடைந்த ஆயனர், நிபந்தனைப்படி சமண மதத்தைத் தழுவி, அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளச் சித்தமாயிருந்தார். ஆனால், நிபந்தனை விதித்த சமண ஓவியர் அப்போது அங்கு இல்லை! சக்கரவர்த்தி சைவரானது பற்றிக் கோபங்கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்து போய்விட்ட அநேக சமண முனிவர்களைப்போல் அவரும் போய் விட்டார்! ஆனால், அந்த அழியாத வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் ஆயனருக்கு அன்று ஏற்பட்ட ஆவல் இன்று வரையில் வளர்ந்துகொண்டே இருந்தது.
மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த புத்த பிக்ஷு முடிவில், "ஆயனரே! கவலை வேண்டாம்! உங்களுடைய ஆவல் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. பரஞ்சோதிக்கு நீங்கள் குதிரையும் பிரயாண அனுமதியும் வாங்கிக் கொடுப்பதுதான் தாமதம், வெகு சீக்கிரத்தில் உங்கள் மனோரதம் நிறைவேறும்!" என்றார். பரஞ்சோதியும் மிக்க உற்சாகத்துடன், "ஆம், ஐயா! தங்களுடைய மனோரதம் என்னால் நிறைவேறுவதாயிருந்தால் அது என்னுடைய பாக்கியம் தான். என்ன அபாயம் வந்தாலும் பின் வாங்காமல் காரியத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்" என்றான்.
சிவகாமியின் உள்ளத்திலோ முரண்பட்ட எண்ணங்கள் தோன்றிப் போட்டியிட்டன. ஆயனருடைய ஆவலையும், அந்த ஆவல் நிறைவேறினால் அவர் அடையக்கூடிய மகத்தான ஆனந்தத்தையும் அவள் அறிந்துதான் இருந்தாள். ஆனாலும், புத்த பிக்ஷுவின் தூண்டுதலால் நடக்கும் இந்தக் காரியத்தில் ஏதாவது சூதும் சூழ்ச்சியும் இருக்குமோ என்று அவள் மனம் ஐயுற்றது. ஆகவே, பரஞ்சோதியைத் தனியாகப் பார்த்து எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று அவள் தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டாள்.