சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்

விக்கிமூலம் இலிருந்து

மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம்-[தொகு]

சிறப்புப்பாயிரம்[தொகு]

மாபாடிய உரை[தொகு]

உரை அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்[தொகு]

சிறப்புப்பாயிரம்[தொகு]

சைவ ஆகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்து ஓதிய பொருளை ஆராயும் ஆராய்ச்சி இந்நூலின்கண் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பயன்யாதோ எனவும், இது கேட்டற்குரியார் யாவர் எனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாது எனவும், இதனைப் பயப்பிக்குங் கருவியாய் இதற்குமுன் ஒருதலையான் உணர்தற்பாலது யாது எனவும், இதனை வழங்குதற்கு இட்ட பெயர் யாது எனவும், இஃது யாண்டு வழங்குவது எனவும், இதன் முதனூல் யாது எனவும், இந்நூல் செய்தார் யாவர் எனவும் கேட்போர்க்குப் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவர்க்கு அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறல் பொருட்டு இந்நூன்முகத்து உரைக்கப்படுவதாகிய சிறப்புப் பாயிரம்:-


சிறப்புப் பாயிரம்[தொகு]

மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்மலர் தலை உலகின் மா இருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போ லீண்டியகாண்டல் செல்லாக் கண் போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் இருள் தீர்ந்து
தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடிஅரும் துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வற நந்தி முனிகணத் தளித்தமயர்வு அற நந்தி முனி கணத்து அளித்த
வுயர்சிவ ஞான போத முரைத்தோன்உயர் சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்பெண்ணைப் புனல் சூழ் வெண்ணெய்ச் சுவேத வனன் ( )
பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்பொய் கண்டு அகன்ற மெய் கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த பவ நனி வன் பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே. தவர் அடி புனைந்த தலைமை யோனே. (அடி. 11)

- என வரும்.

இதன் பிண்டப்பொழிப்பு உரைத்துக் கொள்க.

இப்பாயிரப் பொருள் நூல் இறுதியின் “எந்தை சனற் குமரன்” என்னும் வெண்பாவாற் பெறப்படுதலின் ஈண்டும் கூறுதல், கூறியது கூறலாம் பிறவெனின், - ஆகாது; எந்தை சனற்குமரன் என்பதனால் பெறப்பட்டதனையே மாணாக்கர்க்கு நூன்முகத்து உணர்த்துதல் பொருட்டு ஈண்டுத் தந்து உரைத்தது ஆகலான் என்பது.

மிருகேந்திரத்து இறுதியில் கூறும் வரலாற்றினை, நாராயணகண்ட ஆசிரியர் நூன்முகத்துத் தந்து உரைத்ததூஉம் இக்கருத்தே பற்றியென்க.

அல்லதூஉம் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருதிறப்படுத்து உணர்த்தியது இந்நூல் என்னும் பாகுபாடு ஆண்டுப் பெறப்படாமையின், அது கூறப்புகுந்தார் ஏனையவும் உடன்கூறினார் என்றலும் ஒன்று.

நிலவுலகம் முழுதும் பரந்த இருளென அதன் பெருமை கூறுவார், மலர்தலை யுலகின் மாயிருள் என்றார். மா= பெருமை.

ஆகாரம் முன்னும் யகர உடம்படுமெய் சிறுபான்மை அருகி வருதலை, “மாயிரு ஞாலம்” என்றாற் போலக் கொள்க.

மாயாத இருளின் நீக்குதற்கு மாயிருள் என்றார் என, வினைத்தொகை ஆக்கலும் ஒன்று.

இவ்விருள் என்னும் பொருளது இயல்பும், இதன் தோற்றமும், கண் இந்திரியத்தின் இயல்பு உரைப்புழிக் காட்டுதும்.

ஒன்றோடு ஒன்று ஒவ்வாத எல்லாச் சமயத்தாரானும் புகழப்படுதலின் பலர்புகழ் ஞாயிறு என்றார். முற்றும்மை விகாரத்தான் தொக்கது.

ஏனை ஒளிகளான் மடங்காது யாண்டும் பரந்த புறவிருளை ஒருபால் எழுந்த ஞாயிறு துமிப்பதுபோல, ஏனைச் சமயநூல்களான் மடங்காது யாங்கணும் நிறைந்த அகவிருளை ஓர் ஆகமத்தின் ஒருபடலத்தின் எழுந்த பன்னிரு சூத்திரம் துமிக்கும் என்பது குறிப்பான் விளக்குதற்குப் படரின் என்றார். அல்லதை என்பது, “தன்மனைக் கிழத்தி யல்லதை பிறர்மனை- அன்னையிற் றீரா நன்னர் ஆண்மை” என்றாற் போல அன்றி என்னும் பொருள்பட வந்த வினையெச்சக்குறிப்பு ஐயீற்றுடைக் குற்றுகரம். படரிற் காண்டல் செல்லும் கண் எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு; “வாராமை யில்லை” என்றாற் போல்வனவுந் தேற்றப்பொருள் பயப்ப வந்தவாறு காண்க. இது வடமொழி மதம். இப்பொருள் விளங்குதற்பொருட்டுக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், உவமேயப் பொருட்கு ஏற்பக் கண் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல் என ஞாயிற்றின்மேல் வைத்துரைத்தல் கருத்தாகக் கொள்க.

இருட்கேட்டிற்கும், நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாயவாறு போல, மலத்தீர்விற்கும், ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிறாயது இந்நூல் என்பார், துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம் என்றார். எனவே, ஞாயிறு புறவிருள் நீக்கிக் காட்டுதற்குப் பன்னிரு வகைப்பட்ட ஞாயிறுபோல, அகவிருள் நீக்கி உணர்த்துதற்குச் சூத்திரத்தாற் பன்னிருவகைப் பட்டது இந்நூல் என்பதூஉம் ஆயிற்று. இவ்வாறு அன்றி, ஞாயிற்றைக் கடவுட்கு உவமை ஆக்குவாரும் உளர். நூலுள் கூறிய அதனைப் பாயிரத்துள் கூறவேண்டாமையானும், ஈண்டைக்கு ஆவதோர் பயன் தாராமையானும், அஃது உரையன்மை அறிக.

பெரும்பெயர்க் கடவுள் என ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருளாகக் கூறினார்; ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலின், தலைமை பற்றி என்று உணர்க. பெரும்பெயர் எனினும், மகா வாக்கியம் எனினும், ஒருவார்த்தை எனினும் ஒக்கும். பெரும்பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின், பெரும்பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மை உணர்க.

ஈண்டிய பெரும்பெயர்- எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெரும்பெயர் என்க. “அருணூலும் ஆரணமும் அல்லாது மஞ்சின்- பொருணூ றெரியப் புகின்” என்பதனானும் உணர்க. கண்ணிருள் வினைத்தொகை; புறவிருள் போலப் புலனாகாது கருதல் அளவையான் அறியப்படுவது என வேற்றுமை கூறுவார் கண்ணிருள் என்றார். குரம்பையின்- இன் ஏதுப்பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு.

புக்கில்போல் அன்று என்பது உணர்த்துதற்கு அருந்துயர்க் குரம்பை- எனப்பட்டது. அது, “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்- துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதனானும் அறிக.

தலைமை பற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனமாதல் பற்றிக் கரணம், புவனம் முதலாயினவும் உடன் கொள்ளப்படும்; படவே, உடம்பு முதலியவற்றால் ஆன்மாவை நாடுதலாவது, இவ்வுடம்பு சடம் ஆகலின், இதன்கண் இன்பத் துன்பங்களை அறிந்து நுகர்தற்கு இதனின் வேறாய் ஆன்மா என்று ஒருபொருள் உண்டு என்றும்; ஓர் உடம்பின் நிகழும் இன்பத்துன்பங்கள் மற்றோர் உடம்பின் அறியப்படாமையின், உடம்புதோறும் ஆன்மாக்கள் வெவ்வேறு உண்டு என்றும்; அவை இவ்வுடம்பிற் கட்டுற்று நிற்றற்கு மூலமாய் ஒரு பந்தம் அநாதியே உடையவாதல் வேண்டும் என்றும்; வேண்டவே, மூன்றவத்தை உளவாம் என்றும்; நாடோறும் நனவும் கனவும் உறக்கமும் பேருறக்கமும் உயிர்ப்படங்குதலும் காணப்படுதலான், உடம்பினும் ஐந்து அவத்தைப் படும் என்றும்; புலன்களை உணரும் நனவிடத்து நினைப்பும் மறப்பும் முறையானே மாறி மாறி நிகழ்தலின் ஆண்டும் ஐந்தவத்தைப் படும் என்றும்; இவ்வான்மாக்கள் உடம்பிற் கட்டுண்டு தம்வயத்தனவன்றி நிற்றலின், இவற்றிற்கு உடம்பு முதலியவற்றைப் படைத்து நடாத்தி ஒடுக்குதற்குப் பரமான்மா ஒருவன் உண்டு என்றும்; அவன் இம்மூன்றனுள் ஒரோவொரு தொழில்செய்யும் கடவுளர்க்கு மேலாய் இவர்களையுந் தொழிற்படுத்தி நிற்பன் என்றும்; அவன் உலகத்தைப் படைக்குங்கால் விகாரமின்றி உடனாய்நின்று தனது சமவேதசத்தியான் இருவினைகட்கு ஏற்ப மாயை என்றொரு சடசத்தியினின்றும் தோற்றுவித்து ஒடுக்குவன் என்றும்; இதனானே அவனும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையன் என்றும்; அஃது அவனுக்கு உபசாரமே என்றும்; அவன் அமலனாய் நின்றே இவ்வான்மாக்களுக்கு இன்பத்துன்பங்களைக் கருவிகளின் வழியான் நுகர்விப்பன் என்றும்; அவன் அழிபொருள்போலச் சுட்டி அறியப்படுவானும் அன்றிப், பொய்ப்பொருள் போல அறியப்படாதவனும் அன்றி, வேறாய் அறியப்படுவன் என்றும்; அங்ஙனம் அறிகின்றவன் ஆன்மாவென்றும், ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழி அளவையான் ஆராய்ந்து பொது இயல்பு துணிதல்.

வழி அளவை எனினும், கருதல் அளவை எனினும், அநுமானம் எனினும் ஒக்கும். ஆன்மா என்பது, பொதுச்சொல்லாகலிற் பரமான்மாவும் கொள்ளப்பட்டது.

இனி, பெரும்பெயர்க் கடவுளிற் காண்டலாவது, அங்ஙனந் தன்னையும் தலைவனையும் பொதுவிலக்கணத்தான் உணர்ந்து மலநீங்கிய பின்னர்ப், பெரும்பெயர்ப் பொருளே சிறந்து எடுத்து ஓதும் ஆகம அளவை சார்பாகத் தலைநின்று அழுந்தி அறிதலே அநுபவித்தல் என்னும் சொற்குப் பொருளாதலின், அவ் அநுபவம் எனப்படுவது மேற் பொதுவியல்பான் பெறப்பட்ட முப்பொருள்களுள் அழுந்தாது நின்று அறியும் பரமான்மாவுக்கும் அறிவில்லாத சடமாகிய பாசத்திற்கும் கூடாமையின், அவ்விரண்டின் வேறாய்ச் சர்வஞ்ஞானோத்திரத்தின் ஓதியவாறு தன்னாற் பற்றப்பட்ட பொருளின் அதுவதுவேயாக அழுந்தும் இயல்புடைய ஆன்மாவே அவ்விரண்டினையும் அநுபவிக்கும் என்றும்; எனவே, மாசு நீங்கியவழி ஆடையின்குணமாகிய வெண்மை ஆடை முழுதினும் விளங்கினாற்போல, மலநீங்கியவழித் தன் வியாபக முற்றும் விரிந்து விளங்கும் இயல்புடைமை மாத்திரையே பற்றி முன் விளங்கிய ஏகதேச அறிவை நோக்கி முற்றறிவு எனப்படும் ஆன்மாவின் அறிவு, ஒன்றின் அழுந்துங்கால் மற்றொன்றினை அறியுமாறு இன்மைபற்றி முழுவதும் ஒருங்கேஅறியும் பேரறிவாகிய பரமான்மாவினை நோக்கிச் சிற்றறிவு எனப்படும் என்றும்; சார்ந்ததன் வண்ணமாய் அழுந்தி அறிவது ஆகலின், யாண்டும்தனக்கு வியஞ்சகமாய் அறிவிக்கும் அறிவையின்றி அமையாது என்றும்; சில ஆன்மா வீடு பேறு எய்தினவாகச், சில எய்தா நிற்பனவாகச், சில எய்துவனவாகக் காணப்படுதலான், அவ்வாறாதற்கு ஏதுவாய்த் தத்தம் கால எல்லைகளில் நீங்குவனவாகிய மலசத்திகள் பலவுள என்பது பெறப்படுதலின், அதுபற்றி ஆன்மாக்களும் பலவாதல் பெறப்படும் என்றும்; பலவாதல் பெறப்படவே, இலக்கணத்தால் அவற்றிற்குத் தம்முள் வேற்றுமையாவது, தத்தம்அறிவு தத்தமக்கு உரிய சோபானமுறையிற் தூலமும் சூக்குமுமாய் நிகழ்தல்பற்றி அறியப்படும் என்றும்; இதனானே ஆன்மாக்களுக்குப் பக்குவாபக்குவ பேதங்கள் ஆமாறும், அவற்றான் பெத்தமுத்திப் பேதங்களாமாறும், செயற்கை இயற்கைகளாமாறும், ஆகவே, முத்தியும் பெத்தமும் ஒன்றாகக் காணப்படுமாறும் எல்லாம் இனிது விளங்கும் என்றும்; இவ்வான்மாக்களின் வேறாகிய பரமான்மாவின் அறிவு இதுபோல் அழுந்துதல் இன்றி நின்றறியும் சுதந்தர அறிவாதலின், வியஞ்சகம் வேண்டாது முழுவதும் தானே அறிந்தும் அறிவித்தும் நிற்கும் பேரறிவாம் என்றும்; அதனால் இதுகாறும் உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்திவந்த பரமான்மாவே இப்பொழுது குருவுமாய் வந்து, இது பகை இது உறவு என்று உணர்த்தி விடுவிக்கும் என்றும்; அதனை உணர்தற்குத் தவம் காரணம் என்றும்; அது சிவஞானம் ஒன்றானே உணரப்படும் என்றும்; அது பாசப்பற்று அற்றாலன்றி விளங்காது என்றும்; அப்பற்று, முத்திபஞ்சாக்கரத்தின் முறைமை அறிந்து உச்சரிக்கவே பற்றறக்கழியும் என்றும்; மாணிக்கத்தைச்சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் நிறமும் ஒளியும் நிறமும் பெற்று தன்னொளி அதுவாய் அடங்கி அம்மாணிக்கத்துக்குச் சமமாய் நிற்குமாறு போலப், பரமான்மாவினுடைய எண்குணங்களுமே தன்குணமாகக்கொண்டு, தன்குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று, அப்பரமான்மாவே தனக்கு விடயமாக அயராவன்பு செய்யில் சிவாநந்த அநுபவம் பெறுவன் என்றும்; அடிமை என்றும் அடிமையே என்றும் திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல்.
பெத்தத்தின்நின்ற நிலைபற்றிக் கூறும் இலக்கணம் ஆகந்துகம் ஆகலின், பொதுவியல்பு என்றும்; முத்தியின் நின்றநிலைபற்றிக் கூறும் இலக்கணம் சகசம் ஆகலின், சிறப்பியல்பு என்றும் ஆயின. புடைநூல் ஆசிரியர் முதற்கண், “பொதுவுண்மை யெனக்கருதி” என்று எடுத்துக்கொண்டு, முடிவின்கண் “பெத்தமுத்திகண் மதித்தாமன்றே” என முடித்தமையின், ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளுக்கு இவையே பொருளாதல் அறிக. ஆகவே, பலபொருட்குப் பொதுவாய இலக்கணம் பொதுவியல்பு என்றும், ஒரு பொருட்கேயுரிய இலக்கணம் சிறப்பியல்பு என்றும், அளவை நூலாற் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறு; தடத்தலக்கணம், சொரூபலக்கணம் என்னும் வடசொற்குப் பரியாயப் பெயராய் ஈண்டுக் கூறப்படும் பொதுவியல்பு, சிறப்பியல்பு வேறெனத் தெரிந்து உணர்ந்து கொள்க. இவ்விரு வேறு வகைக்கும் சொல்லொருமை மாத்திரை பற்றியே மயங்கற்க.

இருவகைப்படுத்திக் கூறல்[தொகு]

அற்றேல், அஃது அங்ஙனமாக; ஆகமங்களின் இலக்கணம் இங்ஙனம் இருவகைப்படுத்துக் கூறவேண்டியது என்னை? சிறப்பியல்பு ஒன்றே கூற அமையுமாலோ எனின்- அமையாது;
“புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச்சிரம-
வறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்துஞ்-
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால் சைவத்-
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்”

-என்று ஓதுதலின், ஆன்மாக்கள் அங்ஙனந் தத்தமக்குரிய சோபானமுறையின் அறிந்துவரும் தன்மைக்கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் வேண்டும் ஆகலின் என்க.

தூலாருந்ததி நியாயமாவது, அருந்ததி மீனை அறியாதானுக்கு இஃது அருந்ததி மீன் எனக்காட்டின் அது மிகவும் நுண்ணிதாகலின் காண்டல் அரிதாகலான், அதனுடன் தோன்றுவதோர் பெருமீனை இஃது அருந்ததி எனக்காட்டி, அதனை உற்றுநோக்கி உணர்ந்தபின்னர் அருந்ததி மீன் அஃதன்று, அதன்மருங்கே தோன்றாநின்றது பார் எனக்காட்டி உணர்த்துதல் போல்வதோர் முறைமை.
அவையாவன:-
“காரணம் கழறல் வேண்டுவல் ஆரண மறியோ னமல னாதற் சுத்த-
பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு” என வினாயவழி,

“அற்றே சொற்ற தனாதி மற்றவர்க்-

கெற்றெனி லாதி யியையிற் குற்றமில்-
காரணங் கழறுவ லம்ம சீருணந்-
திகழொளிப் பளிங்கு போலப் புகழறு-
மிறைபுற் கலனுக் கென்றன்ன குறைவின்-
றறைகழ லருளொலி பரந்த-
பொறைவளர் சார லறவ னோனே”
-என்றெடுத்துக் காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்ச், சீருணம் தான்பிறந்த நிலத்தியல்பாற் களிம்புற்றதாகலின் அது காரணமின்மைக்கு எடுத்துக்காட்டு ஆமாறு என்னை என்று ஆசங்கித்து, வேறு வினாயவழி
“ஒளிக்கு மிருளுக்கும் ஒன்றே யிடம்ஒன்று மேலிடிலொன்-
றொளிக்கு எனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்-
தெளிக்கு மறிவு செறிந்துள தேனுந் திரிமலத்தே-
குளிக்கு முயிரருள் கூடும் படிகொடி கட்டினனே”
-என்று எடுத்துக் காட்டி, உண்மையான் விடைகூறி உணர்த்துதலும்;
“வினையோ அன்றிச்- சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச் சூழ்ந்த” தென வினாயவழி,
“மலமுளதா வொழிந்த வெல்லாம்-
நெல்லின்வரு தவிடுமிபோ லநாதியாக நிறுத்திடுவர்” எனவும்,
“வித்தும் மரமும் போலும்” எனவும் எடுத்துக்காட்டி உளங்கொளற் பொருட்டுத் தூலமாக விடைகூறிப், பின்னர்த் தவிடும் உமியும் ஒன்றற்கு ஒன்று காரணம் காரியம் ஆகாமையின் அவை ஒருங்கே நெல்லின்கண் உளவாதல்கூடும், வித்தும் மரமும் ஒன்றற்கொன்று காரணகாரியம் ஆயினும் அவற்றிற்கு மூலகாரணமாகிய பூதங்கள் உண்மையின் அப்பூதங்களில் ஒன்று முதற்சிருட்டியில் மரமாதல் வித்தாதல் இரண்டிலொன்று முந்தித் தோன்ற அதன்பின் ஒன்றற்கொன்று காரணகாரியமாய்த் தோன்றுதல் கூடுமாகலின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி அநவத்தைப்பட விடுத்தல் விடையாமாறு யாங்ஙனம் என வினாயவழி, அநவத்தையாகாதவாறு உண்மையான் விடைகூறி உணர்த்துதலும் போல்வனவாம் என்க.

பொது- சிறப்புநூல்கள்: பொருள் கொள்ளும் முறை[தொகு]

பொதுவியல்பு உணர்த்தும் நூல்கள் பொது எனவும், சிறப்பியல்பு உணர்த்தும் நூல்கள் சிறப்பு எனவும் கூறப்படும். சிறப்பியல்பு சகசமாய் உள்ளதாதலின் உண்மை எனவும் படும். ஏனைச் சமயத்தார் கூறும் சிறப்பியல்பு எல்லாம் போலி என்பது உணர்த்துதற்கும் இஃது உண்மை எனப்படும். பவுட்கரம், மிருகேந்திரம், மதங்கம் முதலிய சிவாகமங்கள் பெத்தத்தினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை பொது எனவும், சர்வஞ்ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் முத்தியினின்ற நிலைபற்றி இலக்கணங்கூறுதலின் அவை உண்மை எனவும் கூறப்படும் ஆகலின், பவுட்கர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பச் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள்கொள்ளாது, சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கு ஏற்பப் பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கொள்வர் திருவருள் கிடைத்த நுண்ணறிவினோர் என்று உணர்க.

அன்றியும், புவுட்கர முதலிய சிவாகமங்கள் முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. சர்வஞ்ஞானோத்தர முதலிய சிவாகமங்கள் கந்தன் கணபதி முதலாயினோர்க்கு அருளிச்செய்தது. கந்தன் முதலாயினோரை நோக்க முனிவர் முதலாயினோர் பரிபாகத்தில் தாழ்ந்தவர் ஆதலின், அவர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்கேற்பக், கந்தன் முதலியோர்க்கு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாமையும், முனிவர் முதலாயினோரை நோக்கக் கந்தன் முதலாயினோர் பரிபாகத்தின் முதிர்ந்தவர் ஆதலின், அவர்க்கு நுட்பப்பொருளை உள்ளவாறு அருளிச்செய்த சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றின் பொருளுக்கேற்ப, முனிவர் முதலாயினோர்க்கு அருளிச்செய்த பவுட்கர முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருத்தமுடைமையும் தெற்றென உணர்ந்துகொள்க. இன்னும், இவற்றிற்குத் தம்முள் வன்மைமென்மைகள் பொதுவதிகாரத்து இறுதியிற் காட்டுதும். இக்கருத்து அறியாத அகோரசிவாசாரியர் முதலியோர் சர்வஞ்ஞானோத்தர முதலியவற்றிற்குச் செய்த வியாக்கியானம் போலியுரை என்று ஒழிக.

உபநிடதங்களினும் சுபாலம் முதலிய உபநிடதம் உலகம் தோன்றி ஒடுங்குமுறைமையும், தோற்றி ஒடுக்குதற்கு ஒருகருத்தா உண்டு என்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையும் கூறுதலின் பொதுவும் சிறப்புமாம். அதர்வசிகை, அதர்வசிரம், சுவேதாச்சுவதரம், கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்திநிலையே பற்றிச் சாதகமும், பயனும் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப்பொருள் பற்றிச் சுபால முதலிய உபநிடதங்களுக்குப் பொருள் கொள்வதன்றிச் சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள்கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்துகொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்று ஒழிக.

இனி, அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பொருள்களும் சிவாகமப்பொருளை நோக்கும்வழிச், சூத்திரமும் பாடியமும்போலத் தூலாருந்ததி முறைமையாம் ஆகலின், வேதம் பொதுநூல் எனவும், ஆகமம் சிறப்புநூல் எனவும் கூறப்பட்டன. “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்” என்றதூஉம் இம்முறைமை தெரிந்து உணர்ந்துகோடற்கு என்க. “வேதப்பயனாம் சைவமும் போல்” என்பதும் அது. இவ்வுண்மை உணர்ந்துகொள்ள மாட்டாதார் உபநிடதங்கள் ஒன்றோடொன்று முரணும் எனவும், உபநிடதமும் சிவாகமும் தம்முள் முரணும் எனவும், சிவாகமத்துள்ளும் ஒன்றோடு ஒன்று முரணும் எனவும் மயங்கி, ஒன்றன்பொருளேபற்றி ஏனையவற்றை இகழ்வர்; தொன்றுதொட்டுவரும் கேள்வியான் அநுபவமுடைய தேசிகன் திருவருள் பெறாமையான் என்பது.
சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் றன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ- வார்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு”

- என்றதூஉம் இக்கருத்து நோக்கி யென்க.

இனி, மொழிபெயர்த்துக் கூறும் நூல்களினும் ஞானாமிர்தம் முதலியன பெரும்பாலும் பொதுவியல்பு மாத்திரையே கூறுதலின் பொது எனவும், திருவுந்தி, திருக்களிற்றுப்படியார் முதலியன சிறப்பியல்பு மாத்திரையே கூறுதலின் உண்மை எனவுமாம் என்பது.

பொதுவியல்பு அளவைமுகத்தானும், இலக்கண முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும். சிறப்பியல்பு சாதனமுகத்தானும், பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என நான்குவகையான் உணரப்படும். சிறப்பியல்பு எனினும், தன்னியல்பு எனினும் ஒக்கும்.
நாடி என்றதனான், வழியளவையான் என்பதூஉம், கண்டு என்றதனால் அநுபூதியினால் என்பதூஉம் தாமே விளங்கும். அநுபூதி, தன்வேதனைக் காட்சி என்பன ஒருபொருட்கிளவி. பெரும்பெயர்க்கடவுளிற் காண்டற்கு மலத்தீர்வும், மலத்தீர்விற்கு அருந்துயர்க்குரம்பையின் ஆன்மா நாடலும் ஏதுவென்பது விளக்குதற்கு அம்முறையே கூறினார்; கூறினாரேனும், பொருளுக்கேற்ப மாறுதல் கருத்தெனக் கொள்க.

அற்றேல், மயர்வறுதல் பெரும்பெயர்க் கடவுளிற் காண்டல் பயனாதலின் அம்முறைபற்றி அதனை முற்கூறுக எனின், அங்ஙனமாயினும் இது சிறந்தபயன் என்பது விளக்குதற்கும், அளித்த என்பதனோடு இயைதற்கும் ஆண்டுக் கூறாது பிற்கூறினார் என்க.

சிவஞானபோதம்: காரணப்பெயர்[தொகு]

இஃது என்சொல்லியவாறோ எனின், இவ்விருவகை இயல்பும் வேறு வேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது, ஒரோவொன்று பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு, அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்துதற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று என்பது. இஃது அறியாதார் எல்லா ஆகமப்பொருள்களையும் பன்னிரு சூத்திரத்தால் தொகுத்து விளக்குதற்கு எழுந்தது இந்நூல் என்று உரைப்ப. மிருகேந்திரத்தின் முதற்கண்ணதாகிய ஒரு சூத்திரத்தானே எல்லா ஆகமப்பொருளும் தொகுத்து விளக்கப்பட்டது என்பது ஆண்டே அறியக் கிடத்தலானும், மற்றும் அங்ஙனம் தொகுத்துக் கூறும் ஆகமங்கள் பலவுள ஆதலானும், அதுபற்றி இதன்கட் போந்த விசேடம் இன்மையானும்,நாடிக் கண்டு மயர்வற அளித்த சிவஞானபோதம் என்பதற்குத் தாற்பரியம் அஃது ஆகாமையானும், அவர் உரைப்பனவெல்லாம் போலியென்று ஒழிக.

சிவஞான போதம் என்றதூஉம் இக்காரணத்தாற் பெற்றபெயர். அஃது எவ்வாறு எனின்,

“உயர்ஞானம் இரண்டாம் மாறா மலமகலாத மன்னுபோதத்-
திருவருள் ஒன்றதனைத் தெளிய ஓதும் சிவாகமம் என்றுலகறியச் செப்புநூலே”

-என்பவாகலின், பரஞானம் அபரஞானம் இரண்டும் சிவஞானம் எனப்படும். அவற்றுள், பரஞானத்தைப் போதிப்பது எல்லா அபரஞானங்கட்கும் பொதுவாதலின், ஈண்டுச் சிவஞானம் என்றது அவ்வபரஞானமாகிய சிவாகமமேயாம். போதித்தல் அவற்றின் நிச்சயப் பொருள் இதுவென உணர்த்துதலாம். ஆகவே, சைவாகமங்களின் பொருள்நிச்சயம் உணர்த்துவது சிவஞானபோதம் எனக் காரணக்குறியாயிற்று என்று உணர்க. இப்பொருள் வடமொழிச் சிவஞானபோதத்துப் பன்னிரண்டாம் சூத்திரத்துப் பிற்பாதியிற் கூறியவாறுபற்றி உரைக்கப்பட்டது.

சிவஞானம் எனப் பொதுப்படக் கூறினும் தலைமை பற்றி ஞானபாதமே கொள்ளப்படும். ஞானபாதத்திற்குத் தலைமை,

“கிரியையென மருவுமவையாவு ஞானம் கிடைத்தற்கு நிமித்தமே” என்பதனானும் அறிக.

அற்றேல், ஏனை மூன்றுபாதப் பொருள்களை ஆராயும் நூல்கள் யாவையெனின், அவை சோமசம்புசிவாசாரியர் செய்த கிரியாகாண்டக் கிரமாவலி முதலியனவாம் என்க. அற்றேல், ஞானபாதப் பொருளாராய்ச்சி நூலும் பிற்காலத்து ஆசிரியன்மாரே கூறவமையும்; ஆகமத்துட் கூறவேண்டாம் பிற வெனின், ஆசிரியன்மார் அநுட்டிக்கும் முறைமை ஆராயப் புகுந்தாரன்றி அவற்றிற்குப் பொருளொருமை ஆராயப் புகுந்தார் அல்லர். அவை சிறுபான்மை தம்முள் வேறுபாடு உடையவென்றும், “யார்யார் எவ்வாகமத்தின் முறையே தீக்கை பெற்றார், அவரவர் அவ்வாகமத்தின் முறையே அநுட்டிக்க” என்றும், “எக்கோயிலின் எவ்வாகமத்தின் முறையே பிரதிட்டை செய்யப்பட்டது அக்கோயிலுக்கு அவ்வாகமத்தின் முறையே பூசைவிழா நடத்துக” என்றும், மாறிச்செய்யிற் குற்றமென்றும் ஆகமங்களே கூறுதலின், அவற்றிற்குப் பொருளொருமை காட்டலாகாமையின், கற்ப பேதத்தானும், ஆன்மாக்கள் கருத்து வேறுபாட்டானும், அவ்வவற்றிற்கு ஏற்பப் பொருள்கூறல் பொருத்தமுடைத்து என்பதுபற்றி, அவற்றைக் கூறும் ஆகமங்கள் சிறுபான்மை அங்ஙனம் வேறுபட நிகழ்ந்தன. இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலின் ஆண்டு வேறுபடுதல் பொருந்தாது ஆயினும், ஆன்மாக்களின் மலபரிபாக தாரதம்மியத்திற்கு ஏற்பத் தூலாருந்ததி முறைமைத்தாக உணர்த்தல் மரபு என்பதுபற்றி, அங்ஙனங் கூறும் ஆகமங்களை நோக்குவோர் அவை ஒன்றோடு ஒன்று முரணுவன போலக் கருதி மயங்குவர். அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு ஞானபாதப் பொருள்களை எல்லாம் பொது, உண்மை என இருவகைப்படுத்து ஆராய்ச்சி செய்து ஒருதலையான் உணர்த்தவேண்டுதலின், அஃது ஏனையோரான் ஆகாமையின், வேண்டுமென்க.

அங்ஙனம் முரணுவன போலத் தோன்றுவன யாவை எனின், சுவாயம்புவம் முதலியவற்றிற் பதார்த்தம் ஏழென்றலும், பவுட்கரம், மதங்கம் முதலியவற்றின் ஆறென்றலும், பராக்கியை முதலியவற்றின் ஐந்தென்றலும், சர்வஞ்ஞானோத்தரம் முதலியவற்றின் நான்கென்றலும், இரௌரம் மிருகேந்திரம் முதலியவற்றின் மூன்றென்றலும் போல்வனவாம் என்க. அவையெல்லாம் மூன்றென்றதனுள் அடங்குதலின் முப்பொருள் என்றலே எல்லா ஆகமங்கட்கும் துணிபெனக் காட்டுதல் போல்வன பொருளொருமை கூறுதலாம் என்பது.

சிவாகமம் வந்த வரலாறு[தொகு]

அஃது அங்ஙனமாக; இந்நூல் நந்திபெருமான் பெறுதற்கு வரலாறு என்னையெனின், கூறுதும்:- மகா சங்காரகால முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற்பொருட்டுப் பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசத்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன்பின் விந்துவடிவாயும், அதன்பின் அக்கரவடிவாயும் முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற்பொருட்டுப் பரமசிவன் ஈசானமுதலிய பஞ்சப்பிரம மநுக்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத் திருமேனி கொண்டருளிச் சதாசிவமூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திருமுகங்களான் வேதங்களைத் தோற்றுவித்து, மேற்கண்ணதாகிய ஈசான முதலாகிய ஐந்து திருமுகங்களானும் காமிகம்முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்து, வேதங்களை அநந்ததேவர் வழியானே பிரமனுக்கு அருளிச்செய்து, சிவாகமங்களைப் பிரதிசங்கை முறையானே பிரணவர்முதலிய பதின்மரும், மகாருத்திரர் முதலிய பதினெண்மரும் ஆகிய இருபத்தெண்மருக்கும் சிவபேதம் உருத்திரபேதம் எனப் பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச்செய்து, பின்பு மகௌள முறையானே அவ்விருபத்தெட்டினையும் வித்தியேசர் எண்மரின் முதல்வராகிய அநந்ததேவருக்கு அருளிச்செய்தான். அவற்றை அநந்ததேவர் நூற்றுப் பதினெட்டு உருத்திரரின் முதல்வராகிய சீகண்டருத்திரருக்கு அருளிச்செய்தார். அவற்றைச் சீகண்டருத்திரர் கணங்கட்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் அளித்தற்பொருட்டு முதற்கண் நந்திபெருமானுக்கு அருளிச்செய்தார். இது சிவாகமம் வந்த வரலாறு என்றுணர்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; ஆகமங்களிற் கண்டுகொள்க.

நூல் (சிவஞானபோதம்) வந்த வரலாறு[தொகு]

அங்ஙனம் ஆகமங்களெல்லாம் கேட்டருளிய நந்திபெருமான் சீகண்டமுதல்வரை வணங்கிநின்று, சிவாகமந்தோறும் சரியை முதலிய நாற்பாதங்களும் சிறுபான்மை வேறுவேறாக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச்செய்யவேண்டுமென இரந்து விண்ணப்பம் செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணைகூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச்செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளிக் “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும், கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்றுபாதங்களும் ஆகமங்களின் வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கைபெற்றார், அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாதமாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டனவன்றி மாறுகோளல்ல என்பது வகுத்துணர்த்துதற் பொருட்டு, இரௌரவாகமத்துள் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது, சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா ஆகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக்கூறி, அச் சிவஞான போதத்தை நந்திபெருமானுக்கு அருளிச் செய்தார்.

நந்திபெருமானும் அதுகேட்டதுணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச்செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளி மெய்யுணர்வின் முற்றுப்பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால்வந்து சிவஞானபோதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்பும் உரைக்க” என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறும் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையும் செய்தருளித் தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இஃது இந்நூல் வந்த வரலாறெனக் கொள்க.

இனி இப்பொழிப்புரையை வடநூலார் வார்த்திகம் என்பர். பொழிப்பு எனினும் காண்டிகை எனினும் ஒக்கும். பொழிப்புரை இருவகைப்படும்; அது முன்னர்க்கூறுதும்.

நூல்உணர்த்தல்[தொகு]

உயர்சிவஞானபோதம் என்றது, ஏனை மூன்றுபாதத்தை ஆராயும் நூல்கட்கு மேற்பட்ட சிவஞானபோதம் என்றவாறு; எனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர், இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெற்றாம்; பெறவே, முன்னர்த்தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன்பின் ஏனை மூன்று பாதங்களை ஆராயும் நூலை முறையே கேட்டு அவ்வாறு ஒழுகி, மனந்தூயராய் நித்தியாநித்திய உணர்வுதோன்றிப், பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குண்டாயவழி, அவர்க்கு இந்நூலை உணர்த்துக என்பது போந்ததெனக் கொள்க.

அற்றேல், முற்பிறவியிற் சரியை, கிரியை யோகங்களைச் செய்து முற்றுப்பெற்று அறியாமையின் நீங்கினார்க்கு இப்பிறவியின் அவை செய்யவேண்டாமையிற், சரியைநூல் முதலிய மூன்றும் ஆராய்ந்தபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்பது ஒருதலையன்றால் எனின், அற்றன்று; “ஆலயந்தானு மரனெனத்தொழுமே” எனவும், “மண்முதனாளம்” எனவும், “குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில்” எனவும் கூறுதலின் ஞானநிலையின் நிற்போர்க்கும் மயர்வறுத்தற்குச் சாதகமாகச் சரியை முதலியன செய்யவேண்டுதலின்,அந்நூல்கள் ஒருதலையான் முன்னர் ஆராய வேண்டுமென்க. அகன்ற, புனைந்த என்னும் பெயரெச்சங்கள் முறையே காரியப்பெயரும், ஏதுப்பெயரும் கொண்டு முடிந்தன.

சிறப்புப் பாயிரம் உணர்த்துவன[தொகு]

‘உயர் சிவஞானபோதம்’ என்பதனால் யாப்பும் கேட்போரும் நுதலியபொருளும் நூற்பெயரும், ‘நாடித் தீர்ந்து கண்டு மயர்வற’ என்பதனால் நுதலிய பொருளின் வகையும் பயனும், ‘நந்தி முனிகணத்து அளித்த’ என்பதனால் வழியும், ’வெண்ணெய்ச்சுவேதவனன் மெய்கண்டதேவன்’ என்பவற்றால் ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமென எல்லையும் உணர்ந்துகொள்க. ஈண்டுக் கூறும் பயன் முதலாயின ஏனையாகமங்களுக்கு ஏலாமையின், இவ்வொருநூற்கே சிறப்புப்பாயிரம் ஆயவாறு உணர்க. வடநூலார் யாப்பை ‘ஆநந்தரியம்’ என்றும், நுதலிய பொருளை ‘விடயம்’ என்றும், கேட்போரை ‘அதிகாரிகள்’ என்றும், பயனைப் ‘பிரயோசனம்’ என்றும் கூறுப. யாப்புச் சம்பந்தம் என்பாரும் உளர்.
இஃதறியாது வழியின் வகையாய் அடங்கும் தொகுத்தல் முதலியவற்றை யாப்பு என்றும், நூல் அரங்கேறும் அவைக்களத்துள்ளோரைக் கேட்போர் என்றும் உரைப்பார் உரையெல்லாம் போலியென்பதும் பிறவும் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் விரித்துரைத்தாம். ஆண்டுக்காண்க.

ஆகமங்களைப் பிரமாணங்களாக ஏற்றுக்கொள்ளலாமா?[தொகு]

சைவாகமப்பிராமாணியம்

அற்றேல், அஃது அங்ஙனமாக; வேதங்கள் ஒருவரால் செய்யப்படாது நிலைபேறு உடைமையானும், ஆன்றோரால் தழுவப்படுதலானும் குற்றமின்றிப் பிரமாணமாம் என்பது துணியப்படும். ஆகமங்கள் அவ்வாறு நித்தமன்றி ஒருவராற் செய்யப்பட்டமையானும்; பிரமப்பொருள் வேதம் ஒன்றானே உணர்த்தப்படும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும்; அங்ஙனமாயினும் மிருதிநூல் முதலியனபோல வேதம் முதனூலாகக் கொண்டு ஆகமங்கள் செய்யப்பட்டன எனின், அது நும்மனோர்க்குக் கொள்கை அன்மையானும்; அங்ஙனம் கொள்ளின், வேதப்பொருள் உணர்ந்து நூல்செய்த மனு முதலியோர் போல, ஆகமம் செய்த இறைவனுக்கு முற்றுணர்வின்மை பெறப்படுதலானும்; அவ்வாறன்றி முற்றுணர்வு இயல்பாகவுடைய இறைவனாற் செய்யப்பட்டமையின் ஆகமங்கள் பிரமாணம் எனக் கூறின், முற்றுணர்வுடைய இறைவன் உண்மை துணிந்த பின்னர் அவனாற் செய்யப்பட்டமையின் ஆகமம் பிரமாணம் எனத் துணியப்படும், ஆகமம் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அதனால் இறைவன் உண்மை துணியப்படும் என, “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றம் ஆகலானும், ஆகமம் பிரமாணம் என்பது தெளியப்படாதாம்.

அல்லதூஉம், வாசட்டலைங்கத்திற் “பாஞ்ச ராத்திரம் புகழ்ந்தெடுத்தொருசிலர் பகர்வார்” என்பது முதலாகத் தந்திரவழி ஒழுகுவோரை எடுத்துக்கூறி, “அவர் மா மூடர்” எனவும், பத்மபுராணத்தில் வசிட்டனுக்கும் திலீபனுக்கும் கூற்று நிகழ்வுழித் “திராவிட தேசந் தன்னில் சித்திரசேனன் என்னும் அரசன் பாசண்டர் கூற்றே பற்றி வைதிக ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பாசுபதவழி ஒழுகி நரகத்தில் வீழ்ந்தான்” எனவும், வாசிட்டலைங்கத்திற் “சாண்டில்லியன் என்பான் ஒருவன் தறுகண்ணனாய்ப் பிறர்மனை நயந்து வாசுதேவனைத் தீங்குநெறியானே வழிபட்டு நிரயத்தில் வீழ்ந்தான்” எனவும், சூதசங்கிதையில், “மொழிபாஞ்ச ராத்திரம்கா பாலம் காளாமுகம் சாக்தம் பவுத்தம் ஆருகதம் தன்னில்- கழிபாசு பதநூல்சாம் பவத்திற் தீக்கை காதலிப்பீர் வேதியரிற் கடையர் காணீர்” என்றல் தொடக்கத்தால் “தந்திரவழி ஒழுகுதல் பொய்த்தொழில் உணர்ந்து வெகுண்ட கவுதமன் சாபப்பயன்” எனவும் கூர்மபுராணத்தில், “அனைவரும் அரன்றனை அரியை அண்மி” என்று எடுத்துக்கொண்டு “அறுமுனிவர் இட்ட சாபவயத்தானே வேட்பித்தல் முதலியவற்றின் அதிகாரமின்மையான் விருத்தியின்றி வருந்துவோர்க்கு விருத்தியின்பொருட்டுத் தந்திரம் செய்யப்பட்டது” எனவும், அதனுள், “மோகநூ லிருவேமும் செய்வோம் விடைக்கொடியாய்” என்பதனால், ஆகமங்கள் மோகிப்பிக்கும் நூல் எனவும் கூறுதலால், ஆகமம் பிரமாணமல்ல என்பதே தெற்றென விளங்குமாகலின், அவை வீடுபேறு முதலிய மறுமைப் பயன் பயப்பிக்குமாறு என்னை எனின் கூறுதும்:-

வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலான் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், “அந்தக் ககரமே இது” என்னும் மறித்துணர்வு “அந்தச் சுடரே இது” என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தம் எனக்கொள்ளினும், அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்றுவரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையில் பிரவாகநித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லா உயிர்கள்மாட்டும் பேரருளுடைய பரமசிவனால் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுன்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதமுதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லா நெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமாம் எனச் சூதசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக.

ஒருவன் இன்னேன் வந்தேன் என்புழி, அவனும்அவன் வாய்மொழியும்போல, முதல்வனும் முதல்வனாற் செய்யப்படும் வேதாகமங்களும் தம்முள் காரக ஏதுவும், ஞாபக ஏதுவுமாகிய வேறுபாடு உடைமையின், இன்னோரன்னவை “ஒன்றனை யொன்று பற்றுதல்” என்னும் குற்றமாகா என்க. இனி ஆன்றோரால் தழுவப்பட்டமைபற்றி வேதம் சிவாகமம் இரண்டும் பிரமாணம் எனத் துணிந்தபின்னர் அவற்றானே அவை பரமசிவனாற் செய்யப்பட்டன என்பது துணியப்படும் ஆகலானும் ஒன்றனையொன்று பற்றுதல் ஆகாமை உணர்க. ஆன்றோரால் தழுவப்படுதல் ஆகமப்பகுதியின் இன்றால் எனின், அற்றன்று; “துறக்கம் வேண்டியோன் சோதிட்டோமத்தான் வேட்க” என்றல் தொடக்கத்துச் சுருதிகட்கு அவை வேட்குமாறு வகுத்துக் கூறும் சுருதிகளும்,அத்தன்மையவாகிய கற்பசூத்திரங்களும் இன்றியமையாது வேண்டப்படுமாறு போல, வேதத்துள் விதிக்கப்படும் சிவபூசை முதலிய விதிகட்கும் அவற்றை வகுத்துக்கூறும் காமிகம் முதலிய சிவாகமங்கள் இன்றியமையாது வேண்டப்பட்டு நிற்றலின், அவை ஆன்றோரால் தழுவப்படுவது ஒருதலை; ஆதலான் என்க. இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் அரதத்தாசாரியார் கூறியவாற்றான் அறிக.

தீக்கை[தொகு]

அங்ஙனமாயினும் தீக்கைப்பேறு ஆன்றோரால் தழுவப்படாமையின், அப்பகுதியிற் பிரமாணம் ஆமாறு என்னையெனின், அற்றன்று; சுவேதன், உபமன்னியன், அகத்தியன் முதலியோர்க்குத் தீக்கைப் பேறு காண்டலான் என்க. உபமன்னியன் அகத்தியன் முதலியோர் பால் கண்ணன், இராமன் முதலியோர்க்குத் தீக்கைப்பேறு அரிவஞ்சம் பாரதம் பாத்மபுராணம் முதலியவற்றின் விரித்துக் கூறியவாறும் காண்க. அஃது எல்லாரும் பெறாமை, எல்லாருக்கும் மலபரிபாகம்இன்மையால், பரமகஞ்ச சந்நியாசம் போல, அதற்கு உரிய அதிகாரிகள் சிலரேயாகலான் என்பது.

அற்றேல், வாமநூல் முதலாயினவும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின், காமிகம் முதலியவற்றோடு ஒப்பப் பிரமாணமாதல் வேண்டப்படும் பிறவெனின், படாது; அவற்றுட் கூறும் சுரைக்குடம் தாபித்தல் முதலிய ஆசாரங்கள் வேதத்துள் எடுத்தோதி விலக்கப்பட்டமையின், சவுத்திராமணி யாகத்தில் சுரை ஏற்றல் வேதத்துள் விதிக்கப்படாதாயினும் ஏனையோர்க்கே ஆயவாறு போல, அவையும் ஏனையோர்க்கே உரிய என்பது பெறுதும் ஆகலான், அவையும் அவற்றிற்கு உரிய அதிகாரிகள் வேறுபாட்டால் பிரமாணமாம் எனக்கொள்ளப்படும் என்க. அங்ஙனமாயின், அவற்றுள் கூறும் கிரியைகட்கு வேதநெறியில்தப்பிய மாந்தர் அதிகாரிகள் எனப் பிரித்து வைத்தலான் முரணாதென்க. இது காந்தத்துள் கூறப்பட்டது.

இனிப் பொருள்கள் முரணியவழி வலியவற்றான் மெலியவை கண்டிக்கப்படும் எனக்கொள்க. எல்லாநெறியும் இறைவனாற் செய்யப்பட்டமையான் விசேடம் இன்மையின், அவற்றுள், ஒன்றற்கொன்று வன்மை மென்மை கூறின், இதுவே மாறுகொளக் கூறலாமால் எனின், அற்றன்று; அவற்றைப் பின் வழிப்படுத்து நூல்செய்தோர் தாரதம்மியத்தானே அவற்றிற்கு வன்மை மென்மை கூறுதல் அமையுமாகலின். பின்னூல் செய்தார் அவ்வந்நெறியிற் கூறும் பொருள்களை அம்மொழியின் தாற்பரியம் அறியாது மயங்கி அவற்றோடு மாறுகொளத் தொகுத்தும் விரித்தும் செய்தார் ஆகலின், அவை மென்மை எனப்பட்டன. மாறுகோள்இல் கூற்றின் எல்லாம் பிரமாணமேயாம்.

இனி வேதத்தினும் சிவாகமத்தினும் இந்திரன் முதலியோர் அவ்வாறு வழிப்படுத்து வேறுநூல் செய்யாது, வேதத்திற்கு வியாசர் முதலியோரும், ஆகமத்துக்குப் பிரணவர் முதலியோரும் போலச் சம்பிரதாய மாத்திரமே விளக்கினார் ஆகலின், அவ்விரண்டனுள் வன்மை மென்மைகள் கூறுதல் பொருந்தாமையின், அவற்றுள் ஒரோவழி மாறுகோள் போலத் தோன்றியவழி, வேதவாக்கியங்கள் தம்முள் மாறுபட்டவழிக் கருத்துவேறுபாடு பற்றிக் கூறியது எனத் தெரிந்துரைத்துக் கொள்வதுபோல, அவை முரணாதவாறு தெரிந்துரைத்துக் கொள்வதன்றி அவை ஒன்றானொன்று மறுக்கப்படா என்க.

மற்றொருவகை நோக்கு[தொகு]

இவ்வாறன்றி, இன்னும் ஒருவாற்றான் விடுக்குமாறு:- சாருவாகம் முதலிய எல்லாச் சமயமும் பரமசிவனாற் செய்யப்பட்டமையின் பிரமாணமேயாம் ஆயினும், அவற்றுள், முதற்கண் மிகவும் மந்த உணர்வினராய் உலக இன்பமே பெரும்பயன் எனவும், தமக்குப் புறம்பாகிய மக்கள் முதலியோரே ஆன்மா எனவும், அபிமானம் செய்து உழலும் அதிகாரிகளுக்குப் பரமசிவன் இரங்கித், துன்பம் முதலியவற்றோடு விரவுதலான் உலக இன்பம் பேருறுதிப் பயன் அன்று எனவும், மக்கள் முதலியோர் ஆன்மா அல்லர் எனவும் உணர்த்தி, அவர்கள்உணர்வு அவ்வளவின் நிலைபெறுத்தற்பொருட்டு, நுட்பப்பொருள் உணர்த்தப்புகில் கொள்ளமாட்டாமையால் தூல உடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப் பெயன் எனவும் அறிவுறுத்தருளினான். பின்பு அங்ஙனம் அறிவுறுத்த நெறியே ஒழுகிப் பரமசிவன் திருவருட்கு உரியராய் மலசத்தியிற் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் என்பவற்றின் ஐயப்பாடு தோன்றிய அதிகாரிகளுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற்பொருட்டுப் புத்தநூல் அறிவுறுத்தருளினான். இவ்வாறே மேலும் சோபானமுறையான் உபதேசித்தருளியது என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப்படும்.

இங்ஙனம் சாருவாகம் முதலிய நூல்களைச் சோபான முறையாற் கொள்ளவே, அதிகாரி தாரதம்மியத்தான் மேலுள்ள நூல்கள் கீழுள்ள நூல்களை மறுக்குமுகத்தால் தோன்றினவாகலின், மாறுகோளில்லை என்பதூஉம், அவையும் ஒருவாற்றாற் பிரமாணமேயாம் என்பதூஉம் போந்தமை உணர்க.

இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம்பற்றி “அன்னமய கோசம் பிரமம்” என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய “பிராணமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “மனோமய கோசம் பிரமம்” என்றும், அதற்குமேல் “ விஞ்ஞானமயகோசம் பிரமம்” என்றும், அதற்குமேல், “ஆனந்தமய கோசம் பிரமம்” என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபானமுறைமை பற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம் ஒருவாற்றான் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க.

இங்ஙனம் கூறியவாற்றானே, வேதமும் சித்தாந்த சைவாகமும் என்னும் இரண்டுமே உத்தமநூல் எனவும், ஏனைச் சாருவாகம் முதல் பாஞ்சராத்திரம் இறுதியாகிய நூல்கள் எல்லாம் இவ்விரண்டனோடும் மாறுபட்டவழி மறுக்கப்படும் எனவும், அவற்றுள்ளும் வழிநூல் செய்தார் தாரதம்மியத்தான் கீழ்க்கீழ் நூல்கள் மேல்மேல்நூல்களான் மறுக்கப்படும் எனவும் உணர்ந்துகொள்க.





பார்க்க:[தொகு]

சிவஞான பாடியம்

சிவஞானபோதம்
சிவஞான போதம்- மங்கலவாழ்த்து

[[]]

சிவஞான போதம்- அவையடக்கம்

[[]]