உள்ளடக்கத்துக்குச் செல்

சிவஞான போதம்- மங்கலவாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து

மெய்கண்டார் அருளிச்செய்த

[தொகு]

சிவஞானபோதம்- மங்கல வாழ்த்து

[தொகு]

மாபாடிய உரை

[தொகு]

அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்

[தொகு]

மங்கல வாழ்த்து

[தொகு]

காமிகம் முதலிய சைவாகமங்களுள் ஞானபாதப் பொருளின் இகலறுத்து அவற்றின் பொருள்உண்மை போதித்தற்கு இரௌரவ ஆகமத்தில் எழுந்து சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற்பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புரைப்பான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் தமக்கு இடையூறு சிறிதும் அணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய கடவுளை வாழ்த்துவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்:-

கல்லா னிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.

-என வரும்.

வாழ்த்தும் வணக்கமும் பொருளியல்பு உரைத்தலும் என மங்கலவாழ்த்து மூவகைப்படும். அவற்றுள், இது பொருளியல்பு உரைத்தல் எனக் கொள்க.

நந்தி பெருமானுக்கு இந்நூல் அறிவுறுத்தருளிய முதலாசிரியர் என்பது உணர்த்துதற்குக் கல்லால்நிழல் என இடம் கூறினார். ஆண்டு எழுந்தருளி யிருந்து, சிவாகமப் பொருள்கள் ஒன்றோடு ஒன்று முரணுவனாக மலைந்து வினாவிய நந்தி பெருமானுக்கு, இந்நூலான் மலைவு தீர்த்து அருளினார் என்பார் மலைவில்லார் என்றார். இல்லார் = இல்லாகச் செய்தார் எனப் பண்படியிற் பிறந்த வினைப்பெயர்.

இனி, மலைவில்லார் என்பது மேருவை வில்லாகவுடையர் எனக்கொண்டு கல்லால் நிழலில் எழுந்தருளியிருந்து வீடுபேறும், மலையை வில்லாக வளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்து அருளியோர் எனினும் அமையும். எனவே, ஐந்தொழிற்கும் வினைமுதல் என்றவாறாயிற்று.

அருளிய என்பது, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். “உண்ணிய புகில்” என்றாற் போல. அது புனைவர் என்னும் பிறவினை முதல்வினைகொண்டு முடிந்தது. அருளுதல் - புனைந்தமை பற்றிக் கல்லால்நிழலில் வீற்றிருந்து மலைவு தீர்த்தருளிய ஆசிரியர் கருணைமீக்கூர்தல். அருளிய பொல்லார் எனப் பெயரெச்ச முடிபாக வைத்து உரைத்தலும் ஒன்று.

பொள்ளார் பொல்லார் என மரீஇயற்று; சுயம்புமூர்த்தி என்றதாம்.

இணைமலர் - பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய்த் திருவடியை உணர்த்திற்று. இணை என்பதனைத் திருவடிக்கு அடையாக்கி இருபெயரொட்டாகுபெயர் என்றலும் ஒன்று. இவற்று இயல்பெல்லாம் சூத்திர விருத்தியுள் உரைத்தாம்; ஆண்டுக் காண்க. புனைவர் என்றதற்கேற்பத் திருவடியை மலராக உருவகம் செய்தார் என்றலும் ஒன்று.

நல்லார் - கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து முதிர்ந்தோர். புனைதல்- “தாடலைபோல்” அடங்கி நிற்றல். ஏகாரம் ஈற்றசை; தேற்றம் எனினும் அமையும்.

இப்பாட்டு வஞ்சித்துறை. இது கல் என்பது முதல் என்பது இறுவாய்ப் பன்னிரு சொற்களாற் கூறவே, இந்நூல் பன்னிரு சூத்திரத்தாற் செய்யப்பட்டது எனவும், அவற்றுள் மும்மூன்று சொற்கள் ஒவ்வோரடியாக வைத்து நான்கடியாகக் கூறவே, இந்நூலும் அவற்றுள் மும்மூன்று சூத்திரம் ஒவ்வோர் இயலாக வைத்து நான்கு இயலாற் செய்யப்பபட்டது எனவும், அவற்றுள் முன்னீரடியும் ஒரு வினைமுடிபும், பின்னீரடியும் பிறிதோர் வினைமுடிபுமாக இருவகைப்படுத்துச் செய்யவே, முன் ஆறு சூத்திரமும் ஓர் அதிகாரமும், பின் ஆறு சூத்திரமும் வேறு ஓர் அதிகாரமும் ஆக இந்நூல் இரண்டு அதிகாரத்தாற் செய்யப்பட்டது எனவும் குறிப்பான் உணர்த்தியவாறு காண்க.

இரண்டாம் ஓத்தின் முதற்சூத்திரம் “இதுவும்அது” என முதல்ஓத்தின் இறுதிச் சூத்திரத்தோடு மாட்டெறியப்படுவது என்பது உணர்த்துதற்கு ‘மலைவு’ என்பதனை ஈரடியினும் சாரவைத்தார். ‘கல்லால்நிழல்’ என முதலடியில் இடம் கூறவே, முதல் ஓத்துப் பிரமாணம் கூறுவது என்பதூஉம், இரண்டாம் அடியில் ‘மலைவில்லார் அருளிய’ எனச் செய்கை கூறவே இரண்டாம் ஓத்து இலக்கணம் கூறுவது என்பதூஉம், மூன்றாம் அடியிற் ‘பொல்லாரிணைமலர்’ எனத் திருவடி கூறவே மூன்றாம் ஓத்துச் சாதனம் கூறுவது என்பதூஉம், நான்காம் அடியில் ‘நல்லார் புனைவர்’ எனப் பேறு கூறவே நான்காம் ஓத்துப் பயன்கூறுவது என்பதூஉம் குறிப்பாற் பெறப்படும். பிறவும் இவ்வாறு ஓர்ந்து உணர்க. இங்ஙனம் நூல்நுதல் பொருள் எல்லாம் குறிப்பால் தன்னகத்து அடக்கி நிற்றல் மங்கலவாழ்த்துக்கு இலக்கணம் என்று உணர்க. இவ்வாறு நால்வகைப் படுத்து ஓதியது இந்நூல் என்பது, “ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டும் செய்தி - முறைமைகளும் பெத்தமொடு முத்தியெல்லாம்” என வழிநூலாசிரியர் வகுத்தோதியவாறானும் கண்டுகொள்க.

மங்கலவாழ்த்து முடிந்தது

திருச்சிற்றம்பலம்


பார்க்க:

[தொகு]

சிவஞான பாடியம்

சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்

சிவஞான போதம்- அவையடக்கம்

[[]]