உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத்தின் குரல்/எதர்க்கப்பால்

விக்கிமூலம் இலிருந்து

எதர்க்கப்பால்

சியாங்-கே-ஷேக்கின் ஆதிக்க வெறியின் மருந்துக் கிடங்காயிருந்த ஷாங்கை நீதிமன்றம் தன் துணிகரமான பேனாவால் துரோகிகளுக்கு மரண தண்டனையளித்த பிறகு அந்த கொடியவர்கள் தங்கள் கடைசி நேரத்தில் தூக்கு மேடையில் தங்கள் நிழலைப் பார்த்து, சாகும் போதாகிலும் நீதியிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்ற மனித வர்க்கத்தின் மாளாத உணர்ச்சியால் உந்தப்பட்ட பிறகு, தங்களையும் அறியாமல், நாங்கள் மக்களுக்கிழைத்த கொடுமைகள் எங்கள் கல்லறையிலே எங்கள் பக்கத்திலேயே தூங்குமாக என்று வாய்விட்டு கத்திய பிறகு, 'மக்கள் அபிமானி மாசேதுங் வாழ்க' 'மறைந்த மாவீரன் சன்யாட்சன் மாசற்ற மூன்று கொள்கைகள் வாழ்க' என்று தங்கள் கண்ணீரால் தூக்கு மேடையை கழுவிய பிறகு, உடலபிமானத்தால் உலகாபிமானத்தை மறந்து எங்கள் ஊன் எந்த கொமிங்டாங் கட்சியால் வளர்க்கப்பட்டதோ, அந்த கட்சிக்கு எங்கள் உயிர்த்தியாகம் செய்து, மக்களுக்கிருந்த தீராத தொல்லை எங்கள் கடைசி மூச்சோடு கலக்குமாக என்று கண்ணீர் மல்கி பலர் மடிந்த பிறகு, ஷேக்கின் பீரங்கிப் படைகள் வெளி வராமல் தடுத்து நிறுத்திய வீரர்களின் பெயரை அட்டைகளில் எழுதி நாடு நகரங்கள் எல்லாம் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட பிறகு, 'நான் சீனன் ஆனால் மூன்று வெள்ளித் துண்டுகளுக்காக ஒரு சீனனையே கொன்றேன், மரண தண்டனையை எனக்கு நானே அளித்துக் கொள்கிறேன்', நீதி மன்றத்தார் மரணத் தீர்ப்பை பகிரங்கமாகச் சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டாம், என்று வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு கோர்ட்டுக்கு வெளியே ஓடி வந்த பல குற்றவாளிகளைக் கண்டு மக்கள் மனம் இறங்கிய பிறகு, அமெரிக்கர் போராடமாட்டார்கள். பொருள் தருவார்கள். போர்க்குணம் அவர்களிடமில்லை. நம்மை நாமே கொல்ல; நம்மிலே பலர் மடிய இனத்தின் உறுதி குலைய அதோ இறக்குமதி செய்யப்படுகின்ற பீரங்கிகள் எதற்காக என்பதையறியாமல் என் சகோதரனை நானே கொல்ல நேர்ந்தது. கொடுமை கொடுமை என்று தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொண்டு மாண்ட பல பிரேதங்களை வழி நெடுகக் கண்ட பிறகு, டாக்டர்கள் விஷக்கிருமிகளைக் கொல்லக் கற்றுக்கொள்வதை விட, சீன சமுதாயத்தை அழிக்க அன்றாடம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு விஷக் கிருமிகளையும், அதன் ஏஜெண்டுகள் ஏன் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மண்ணில் பிறந்த மடையர்களையும் கொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவ மாணவரிடையே அறிக்கைகள் நடமாடிய பிறகு 'பாட்டாளி மக்களே' படை திரட்டி வாரீர் என்ற கோஷமெழுந்த பிறகு, 'தொழிலாளத் தோழர்களே ! தோள் தட்டி வாரீர்' என்று வான் பிளக்கப் பேரொலி எழுந்த பிறகு, விவசாய மக்களே வீறு கொண்டெழுவீர்' என்ற விண்ணப்பம் விண்ணதிரக் கேட்ட பிறகு, நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சச்சரவுகள் சரிபார்த்த பிறகு, கொமிங்டாங் கம்யூனிஸ்டு கலந்த கூட்டு சர்க்கார், அமைக்க அவர்கள் செய்து கொண்ட வேண்டாத திருமணம் விலக்கான பிறகு, கொரில்லா படைகளின் கை கோர நடனம் ஓய்ந்த பிறகு, மஞ்சள் சீனம் மடிந்தது தேய்பிறை சந்திரன் போல, செஞ்சீனம் தோன்றியது காலைக் கதிரவன் போல, என்று மக்கள் குதூகலத்தாலாடிய பிறகு, பெரிய மீன் சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் ஷ்ரிம்ப் என்ற புழுவைத் தின்கிறது, புழு மண்ணைத் தின்கிறது.

அதேபோல் வெளிநாட்டு பெரிய மீன் சியாங்கே ஷேக் என்ற சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் போன்ற சியாங்கே ஷேக், நெளிவதைப் போன்ற ஷாங்காய் சர்க்கார் என்ற புழுவைத் தின்றார். அந்த புழு மக்கள் என்ற மண்ணைத் தின்னவேண்டியதுதான் முறையென்ற வெட்டி வேதாந்தம் பேசிய கண்மூடிகளைக் கதிகலங்க வைத்தனர் மக்கள் என்ற வீர உரையை எட்டு திக்கிலும் எழுதி காட்டிய பிறகு, அளவுகடந்து உண்பதும் தேவையின் அளவே கிடைக்காததுமான கொடிய நிலையை நீண்ட நாட்களாக போரிட்டு போரிட்டு, மக்கள் வாழ்க்கைக்கு மட்டக்கோல் அமைத்துவிட்டோம் என்ற ஜெய பேரிகை முழக்கத்தை நிரபராதிகள் செவியில் புகுத்திய பிறகு, இல்லாதவனையும், அதை வெளியில் சொல்லாதவனையும், எதிர்த்து நில்லாதவனையும், ஈயாத பொல்லாதவனையும், மக்கள் நிலையை கல்லாதவனையும், குடிலர்கள் ஏவிய வழி செல்லாதவனையும், கொடுமைகளைக் கண்டு கண்டு குடல் நடுங்கி சாய்ந்த தள்ளாதவனையும், பிறந்த தாயகம் புதைக்குழியில்விழ பொய்வழி காட்டிய பொல்லாதவனையும்,

அறத்தாலாற்றியபணி, அன்பால் அயலாருக்குக் காட்டிய வழி, அபினியால் வந்தபழி, அஞ்சை யால் வந்த தாழ்வு, அச்சத்தால் வந்தபயம் ஆகிய அவ்வளவையும் விட்டு இனி ஆயுதமெடுத்தாலன்றி வாழமுடியாதென்ற விதியை நிர்ணயித்த சீனத்தின் இன்றைய தலைவன் மா -சே. அந்த மாவீரன் தான் நீண்ட உறக்கத்திலிருந்த' சீனத்தை காலைக்கதிரவன் வராமுன் எழுப்பிய செஞ்சேவல்.

பள்ளத்தாக்குகளில் விழுந்து பராமரிப்பற்று பல ஆற்றோடு ஓடி கடலில் கலந்த நீர் இன்று அணைகள் முன்நின்று ஆலோலம் பாடுகிறது. ஒளி தரும் மின்சாரமாக விசைதரும் இயந்திர இயக்கத்தின் சக்தியாக விளங்குகிறது.

காடுகளென ஒதுக்கப்பட்டவைகள். கறம்பு நிலங்களென கைவிடப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று கதிர்குலுங்கும் நஞ்சைகளாக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளத்தையும் நிலவளத்தையும் மக்கள் வளத்துக்கும் ஈடாக்கி மக்களை மக்களாகவே வாழ வைத்த மாபெரும் சாதனையை மூன்று ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது சீனம்.

இன்பக் குரல் தவிர வேறு எந்தக் குரலும் கேட்க முடியாத அளவுக்கு வேர்த்து சலித்து விழாத, உழைப்பால், உறக்கமற்ற விழிப்புணர்ச்சியால், இரத்தம் சிந்த அஞ்சாமையால், ஈடிணையற்ற படையெடுப்பால், இறுதிவரை போராடி நெடுங்காலமாக இடிந்திருந்த செல்வாக்கை மீண்டும் அகில உலக கெளரவ சிங்காதனத்திலேற்றிய சீனம் நல்லதோர் பெருமையை நானிலத்தில் பெற்றிருக்கிறது என்று நல்லோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இலவசமாக, அல்லது யாரோ தானமாகக் கொடுக்க இந்தநிலை அடையவில்லை சீனம். எங்கும் எலும்புக் கூடுகளாலாக்கப்பட்ட கோட்டையை செங்குறுதியென்ற சேற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இனி எக்காலத்திலும் அழிவே இல்லை என்ற அளவுக்கு பாதையை செப்பனிட்டுச் சென்ற பல அறிஞர்கள், அரசியல்வாதிகள், புரட்சிகர்த்தாக்கள் அடிச்சுவட்டின் அகண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறது சீனம்.

ஐரோப்பாவின் நோயாளி என்று தூற்றப்பட்ட நாடும் அதிவிரைவில் முன்னேறியது. ஆயினும் சீனம் சற்றொப்ப 25 தலைமுறைகள் தலையெடுக்காமலே இருந்துவிட்டது. சீன சரித்திரத்தில் உதயமே இல்லை என்று பலர் கைவிட்டனர். எனினும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டது. வெளிநாட்டார் வரலாம், விருந்தாளிகளாக, அயலார் அன்பாக வரவேற்கப்படுவார்கள். ஆனால் ஆயுதத்தோடு உள்ளே நுழையக்கூடாது. எங்களுக்கு வெளிநாட்டு உணவு தேவையில்லை, யாருக்கு உணவு தேவை என்ற வாசகங்களே எங்கும் காட்சியளிக்கின்றன.

"நாதியற்றவர்களாய் இனி யாரையும் நடுத்தெருவில் நடமாட விடமாட்டோம். எங்கள் மரணத்தின் மேல் ஆணை, மங்காத வாழ்வின்மேல் ஆணை, மன சாட்சியின் மேல் ஆணை, மாசற்ற சட்டங்கள் மேல் ஆணை" என்று சீன சமுதாயம் தன் விரிந்த முகம் காட்டி. பரந்த உள்ளத்தால் பராக்குக் கூறும் பலத்தைப் பெற்றிருக்கிறது.