சீனத்தின் குரல்/மீண்டும் தொல்லை
மறுபடியும் சியாங் கம்யூனிஸ்டுகளின் விரோதியாய்விட வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனத்தில் சியாங்கைவிட, செல்வாக்குப் பெற்றவர்களல்ல கம்யூனிஸ்டுவாதிகள். எனினும் சியாங் செய்த சில பல தவறுகளால் தோல்வியடைய வேண்டிய நிலையும், கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது. ஆகவே ஒரு பக்கம் சியாங்-கே-ஷேக்கும், மற்றோர் பக்கம் மாசேதுங்கும் ஆயுதமெடுத்துப் போராட வேண்டியவர்களாய் விட்டார்கள்.
"சியாங்கே ஷேக்கைத் தலைவராகக் கொண்ட கோமிங்டாங் கட்சி தலை சாய்த்துவிட்டது. தலைமையில் தவறும், தன்னம்பிக்கையில் தளர்ச்சியும், தற்பெருமையில் அளவுகடந்த ஆசையும், தறுக்குமிக்க செல்வர்களின் சுயநலத்தைக் காப்பாற்ற அவர்கள் மக்கள்மேல் எடுத்துக்கொண்ட நடவடிக்கையும், இனி எக்காலத்திலுமே ஒரு முடியாட்சியும், அன்னியர் ஆதிக்கமும், வெளிநாட்டார் சுரண்டல் பேராசைக்கொள்கையும் தலையெடுக்க ஒட்டாமல் தகர்ந்து விட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கப்பால் சென்றுவிட்டது. இனி சீனத்தை நல்வழிபடுத்துவதென்பது இயலாத காரியம். "அளவுகடந்த செல்வத்தையும் ஆயுதத்தையும் அளித்தோம், ஆயினும் அவைகள் மக்கள் கொக்கரிப்புக்கு முன் சூரியனைக்கண்ட பனியென விலகியது. இனி சீனத்தை நம்பி பயனில்லை, சியாங்-கே-ஷேக்கை ஊக்கிவிட்டதென்பது வெட்டிவேலையும் வீண் பொருள் நஷ்டமுமாகும்" என்று அமெரிக்க அரசாங்கச் செயலாளர் டீன் ஆக்கீசன் அவர்களால் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரூமன் அவர்களுக்கு எழுதியாய் விட்டது.
"புதுயுகங் காண, நவசீனத்தைக் கட்ட, புரட்சி தோன்றிய இந்த நாள் சீனத்தின் மறுமலர்ச்சியை மாலைகளோடு அழைக்கிறது. மக்கள் வாழ்க்கை, மக்கள் ஜனநாயகம், மக்களின் நாட்டுப்பற்று இவைகளே நமது தாயகத்தின் சிகரத்தில் ஜொலிக்க வேண்டிய மணிகள் என்று விடாது சொல்லி வந்த என் கணவர் சன்யாட்சன் அவர்களின் கனவு நினைவாகும் நாள் உதயம் கண்டுவிட்டது. இருள் ஒழிந்து எங்கும் ஒளிமயம் தொடங்கிவிட்டது.
பீரங்கியின் பக்கத்தில் நின்றோர் இன்று உயிர் தப்ப சுரங்கக் கதவுகளை அபயக்குரலால் தட்டுகின்றனர். இனி வரும் உலகம் உறங்காது விழிப்படையு மாக" என்று திருமதி சன்யாட்சன் ஆசி கூறியாய் விட்டது.
பல நூற்றாண்டுகள் அன்னியர் படையெடுப்பு. அயல் நாட்டாராதிக்கம், வியாபாரக் கொள்ளை, வட்டிக்கு வட்டி, ஒரு ஆங்கில உயிருக்கு ஈடாக 5 துறைமுகங்கள் நஷ்ட ஈடு, நான்கிங்கில் ஜப்பான் கொடி, ஷாங்காயில் கொமிங்டாங் கொடி, சுங்சிங்கில் கம்யூனிஸ்டு கொடி, காண்டன் துறைமுகத்தில் வெள்ளையர் கொடி, அப்பப்பா யார் இந்த நாட்டின் அதிகாரிகள், யார் இதன் அரசியல் தலைவர்கள், எது முக்கியமான கட்சி, ஏன் உள்நாட்டுப் போர், எந்த சர்க்காரின் சட்டம் பேசுகிறது என்பதே பல் நூற்றாண்டுகள் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருளடர்ந்திருந்த சீனத்தை ஒளிமயமாக்கியவர் மாசேதுங், ஒன்பது ஆண்டுகள் சியாங்-கே-ஷேக்சிடமும், அவர் தலைமையிலிருந்த கொமிங்டாங் கட்சியிடமும் போரிட்டு பெற்ற வெற்றியின் சின்னமாக விளங்குகிறது புதிய சீனம்.