உள்ளடக்கத்துக்குச் செல்

செயலும் செயல்திறனும்/இடையூறு கண்டு மனந்தளராமை

விக்கிமூலம் இலிருந்து

18. இடையூறு கண்டு மனந்தளராமை

இது, 15ஆவது தலைப்புக் கட்டுரையான உறுதி கொள்ளுதல்' என்னும் கட்டுரை போன்றதொரு தலைப்புப் போல இருந்தாலும், அஃது, ஒரு செயல் தொடக்கத்தில், அதைத் தொடங்கும் முன்னரோ, தொடங்கிய பின்னரோ ஏற்படும் எதிர்பாராத எதிர்ப்புகளையும் அல்லது சுமைகளையும் கண்டு, உள்ள உறுதியும் உடல் உறுதியும் தளர்ந்து விடாமல் இருத்தல் வேண்டும் என்னும் கருத்துகளை உள்ளடக்கியதாகும். ஆனால், இக்கட்டுரை, ஒரு செயல் தொடங்கி நடைபெற்று வருங்கால், அச் செயல்நிலையிலிருந்தோ, அச்செயலுக்கு அயலான, ஆனால் அதற்குத் தொடர்பான புறநிலைகளிலிருந்தோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளையும், இடையூறுகளையும் கண்டு, தாம் தொடக்கத்தில் கொண்ட மன உறுதியிலிருந்து, தளர்ந்துவிடாமை ஆகும். எனவே இந்நிலை, ஒரு செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் ஒரு நெகிழ்ச்சி நிலையைக் குறித்ததாகும் என்க.

1. அஞ்சாமையும் பிறதுணையும்

ஒரு செயலைச் செய்ய முற்பட்டவர்க்குப் பொருளும் கருவியும் முதல் துணைகளாகவும், அத்துறைச் செயல் வல்லார், அல்லது தம் நலம் நாடுகின்ற நண்பர் இரண்டாந் துணையாகவும் அமைதல் போலவே, வேறோர் இன்றியமையாத் துணையும் உண்டு. அவ்வின்றியமையாத் துணையிருப்பின் பிறதுணைகள் இல்லாமற் போயினும் தாழ்வில்லை என்பார் திருக்குறள் ஆசான். அந்தத் துணைதான் அஞ்சாமை ஆகும். இந்த அஞ்சாமை என்னும், உள்ளத்தின் உணர்வு ஒன்று துணை வருமாயின் எவ்வகைக் கடினமான செயலுக்கும் வேறு பிறதுணைகள் இல்லாமற் போயினும், தாழ்வில்லை. ஆனால், செயலை மட்டும் எச்சமில்லாமல், மிச்சம் வைக்காமல், மீதியாக விடாமல் பிறகு செய்து கொள்ளலாம் என்று எண்ணி விடாமல், செய்துவிட வேண்டும்.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

(497)

அஞ்சாமை இருந்தால் பிறதுணைகள் வேண்டாம் என்றே

சொல்லுவார் ஆசான். பிறதுணைகள் ஒரு வேளை இடையில், பூசல் கொண்டு, இகல் விளைவித்துப் பகையாக மாறினும் மாறலாம் என்பதால் துணைகள் வேண்டா என்பார். மனவேறுபாடு கொள்ளாத துணை கிடைத்தற்கு அரிது என்னும் உலகியற் குறிப்பு இவ்வாய்மை மொழியுள் உணர்வாய் அடங்கியுள்ளதை உய்த்துணர்க.

2. அஞ்சாமை வேண்டும்

அஞ்சாமை, ஒரு செந்துணிவை மனத்திற்கும் அறிவிற்கும் வழங்கிக் கொண்டே இருக்கும் ஒர் ஊக்க உணர்வு. இது, குழந்தைப் பருவத்தில் மாந்தரிடம் விளங்கித் தோன்றிப் பின் படிப்படியாக, பல்வேறு வகைப்பட்ட அகப் புறச்சூழல்களால் பலரிடத்து அமுங்கியும், சிலரிடத்து எழுந்தும் இயலும் ஓர் உள்ளுணர்வாகும். இது, பிறப்பியல், வாழ்வியல், உடலியல், அறிவியல், சூழ்வியல் ஆகிய அகப்புறக் காரணங்களால் அவ்வாறு வளர்ந்தும் வளராமலும் இருக்கும். இது முற்றுற வளர்ந்தால் பல வினைகளுக்கு ஆக்கமாகவும், முற்றுறத் தளர்ந்தால், பல அழிவுகளுக்கு ஊக்கமாகவும் அமைந்துவிடும். எனவே, அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகிய அஞ்சாமை என்னும் உணர்வே உயிர்க்கு அனைத்து வளர்ச்சிகளுக்கும் காரணமாக அமைகிறது.

அஞ்சாமை உணர்வு அறிவொடு கலக்கும் பொழுது ஒர் ஆக்கத் துணிவையும், அறியாமையுடன் கலக்கும் பொழுது ஒரு கொடுமை விளைவையும் மாந்தர்க்குத் தரும் அஞ்சாமை உணர்வு துளியும் அற்ற ஒருவன் வெறும் கோழையாகவே இருப்பான். இக்கோழைமை உணர்வு ஒருவனிடம் நன்கு வளர்ந்துவிட்டால், அவன் அறிவுள்ளவனாக இருந்தாலும் எதிலும் முன்னேறி விடமுடியாது. ஏதோ, தனக்குக் கிடைத்த ஒரு தனிப்பட்ட நிலையிலேயே, நிலையாகத் தங்கிவிடுவான். அந்நிலையினின்று அவனால் மேம்பட்டு வளரவே இயலாது. வளர்ந் தாலும், கிளையற்ற மரம்போல், தனித்தே நின்று இயங்குவான். அவனால் பிறர்க்கு ஒர் எள்ளின் மூக்கத் துணையும் உதவியாக இருத்தல் இயலாது.

அஞ்சாமை உணர்வுள்ள ஒருவன் அறிவற்றவனாக இருப்பினும் வீரனாக மலர்ச்சியுறுவான். அவனால் நல்ல பல ஆக்கமான வினைகள் கூட நடந்து விடலாம். அவ்வினைகளின் பயன், அவனைச் சார்ர்த பலருக்கும் கிடைக்கலாம். ஆனால் அஞ்சாமை அறிவொடு இனையும் பொழுது பல்வேறு வகையான செயல்களுக்கு அஃது ஊற்றமாக அமைந்து விடும். எனவே, அஞ்சாமையில்லாத அறிவை விட, அஞ்சாமை மட்டுமே உள்ள வீரம், ஒரளவு பொதுப்பயனுக்கு பொதுச் செயல்களுக்கு நலந்தருவதாகும். இவ்வுணர்வு நிலைகளைக் கீழ்வரும் சமனியங்களாக வகுத்துச் சொல்லலாம்.

அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்
அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்
அஞ்சாமை + அறியாமை > கொடுமை
அஞ்சாமை + அறிவு > செயலாண்மை

எனவே, உலகில் ஒரு செயலுக்கு அஞ்சாமை தான் மூலமுதல். அஃது ஒருவனிடம் இயற்கையாகவே அமைந்துவிடுமானால், அவன் எவ்வகையானும் இவ்வுலகில் வேறு பொருள்களைத் துணையாக்கிக் கொண்டு, தான் எண்ணிய செயற்பாடுகளைக் கட்டாயம் செய்வான். அதனால் பிறர்க்கு நன்மையுடையவனாகவும் இருப்பான். அஞ்சாமை அறிவுடன் சேர்ந்து இயங்கவில்லையானால், முரட்டுத் துணிவாகிக் கொடுமை உணர்வாக வளர்ந்துவிடும். அசைவிலாத ஊக்கமே அஞ்சாமையின் விளைவுதான். ஒருவனிடம் அறிவு கலந்த அஞ்சாமை இருந்தால்தான் ஊக்கம் தோன்றும். அந்த ஊக்கம் அஞ்சாமையொடு கலந்தே அசைவின்மையைத் தரும். அசைவின்மை என்பது நடுக்கமின்மை. ஒன்றை நினைக்கவும் நினைத்ததை வெளிப்படுத்தவும் வெளிப்படுத்தியதைச் செய்யவும் அஞ்சாமை உதவுகிறது. மேலும் அஞ்சாமை, மனவுணர்வுடன் கலக்கின்ற பொழுதுதான் உண்மையுணர்வைத் தோற்றுவிக்கிறது. உண்மையுணர்வு நேர்மையைத் தோற்றுவிக்கிறது. மற்றபடி அஞ்சாமையற்ற உள்ளம் உண்மையை உணரு மானாலும் கூட அது செயலுக்குரிய ஊக்கத்தைத் தோற்றுவிக்காது.

3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை

ஒரு செயலைத் தொடங்குவதற்கும் தொடங்கிய செயலுக்கிடையில் பல இடர்ப்பாடுகள் வந்தாலும் மேன்மேலும் அதைத் தொடர்ந்து செய்வதற்கும் அஞ்சாமை அடிப்படை உணர்வாகும். அஞ்சாமை உணர்வு ஒருவனிடம் நன்கு கால் கொண்டிருந்தால், அது மன ஊக்கத்திற்கு உறுதுணையாக நின்று, எத்தகைய துன்பத்திலும் அதைத் தளரவிடாமல் காத்துக் கொள்ளும், துன்பம் வரும் பொழுது துவண்டு விடுகிற உள்ளம், மேற்கொண்டு துணிவாக இயங்குவதற்கு அவனை. விடாது. எனவேதான் 'இடுக்கண் வருங்கால் நகுக' (621) என்றார் பேரறிஞர்.

ஒருவன் துன்பத்தில்தான் துவண்டு போகின்றான். சிலர். ஏதானுமொரு சிறுதுன்பம் வந்தாலும் தாங்குவதில்லை. பெருந்துன்பம் வருமானால், அனைத்து நிலைகளும் இல்லாமற் போய்விட்டது போல் அப்படியே இடிந்து போய், தலைமேல் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர். அக்கால், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் அவர்களின் துன்பத்தை எடுத்துப் பேசி அதைப் பெரிதுபடுத்தி இல்லாத கற்பனையெல்லாம் பண்ணி அவன் துன்பத்தில்

ஏதோ தாங்கள் பங்கு கொள்பவர்களைப் போல், பலவாறு கூறி, அவனைக் கோழையாக்கி விடுகின்றனர் பின்னர், அக்கோழைமை உணர்வினின்று அவன் மீண்டெழுவதற்குள், அவன் மேற்கொண்ட வினை தொய்வடைந்து விடுகிறது. அதன் பின் மேலும் அவ்வினையைக் கட்டியெடுப்பதற்குள் நீண்டகாலம், நெடிய முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன்

நமக்கு வினையின்கண் வரும் துன்பங்கள், அல்லது இடையூறுகளில் எல்லாம் பொருள் முடையும் கருவிமுடையுந்தாம் பேரளவினவாக இருக்கும். ஆள்களால் வரும் இடையூறுகள் சில செயல்களைக் குறைவுப்படுத்திவிடும். செயல்நிலைகளில் வரும் பொருள்முடை, பொருள் கிடைக்குங்கால் நீங்கிவிடும். துன்பம் கருவிகளாலும் ஆள்களாலும் வருமானால், அவற்றையும் முறைப்பட்ட தோதுக்களால் தவிர்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் இடர்ப்பாடுகள் என்பன நம் ஊக்கத்தை மிகுதிப்படுத்தும் காரணங்களாகவே அமைகின்றன. அவை சிதறியிருக்கும் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. நம்மை நாம் மேற்கொண்ட செயலினின்று நெகிழவிடாமல், ஈடுபட வைக்கின்றன. மனத்தையும் அறிவையும் ஊக்கப்படுத்தி, நம்மை மேலும் நம் செயலில் தெளிவடையச் செய்வதற்காக இடர்ப்பாடுகள் நமக்கு உதவுகின்றன.

துன்பமெனும் ஆசிரியன் துன்னப் பயிற்றுவிக்கும்

இன்பமெனும் கல்விக்கு ஈடில்லை என்பது உலகியல் நூறு.


5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது மேலும், செயல்படும் இடங்களில் எல்லாமே காளைபோல் உழைப்பும் ஊக்கமும் உடையவனாகச் செயல்படுபவனை, அவனுக்கு வந்துறும் துன்பங்கள் ஏதும் செய்யா என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

(624)

இன்னோர் உண்மையையும் நாம் உணரும்படி திருக்குறள் நமக்குத் தெளிவிக்கிறது. செயலை விரும்பியவன் எப்பொழுதும் இன்பத்தையே எதிர்பார்த்திருத்தல் கூடாது. துன்பத்தை அவன் எதிர்கொள்ள எப்பொழுதும் அணியமாக இருத்தல் வேண்டும். இன்பத்தை மட்டும் விரும்பாமல், துன்பத்தையும் எதிர்கொண்டிருப்பவன் எந்த இடர்ப்பாட்டையும் எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியும்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

(628)

6. இடையூறு உறுதிக்கு அடிப்படை

ஒரு செயலைத் தொடங்குகையில், ஒருவன் ஈடுபாட்டை உறுதியுடையதாக ஆக்குவன, அவன் தொடக்கத்தில் பெறும் இடர்ப்பாடுகளே! பின்னர் அந்த உறுதிப்பாட்டையே துணையாகக் கொண்டு, அவன் மேற்கொண்ட வினையில் அல்லது செயலில் மூவுரமாக (மூவுரம் என்பது, உடல், உரம், உள்ள உரம், அறிவு உரம் என்பவற்றை, இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் என்னும் இச்சொல்லே, வழக்கில் முவ்வுரம் - மும்முரம் என்று திரிந்தது. இந்தச் செயலை அவன் மும்முரமாகச் செய்கிறான் - என்னும் வழக்கை அறிக - ஈடுபடுவானாகில், அடுத்து வரும் துன்பங்கள் அவனை ஒன்றும் செய்து விடுவதில்லை.

7. இடையூறுகளின் வகை

ஒரு செயலுக்கிடையில் வரும் இடர்ப்பாடுகள் பலவகையானவை. முதற்கண் ஒரு செயலுக்கு இடையூறாகவும், இடர்ப்பாடாகவும் அமைவது அவன் உடலே ஆகும். உடல் நலிவடையும் பொழுது உள்ளம் சோர்வடைகின்றது. உள்ளம் சோர்வுற்றால் அறிவு தளர்கிறது. இவை மூன்றும் அவனுக்கு வரும் அகத்தாக்கங்கள்.

இனி, அவனுக்குப் புறந்தாக்கங்களாக வருவன கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் போன்றவை ஆகும். இவற்றைக் கீழ்வருமாறு ஒரு பட்டியலில் அமைத்துக் கொள்ளலாம்.

இடர்ப்பாடுகள்

1. அகத்தாக்கம்

அ. உடல் நலிவு.
ஆ உள்ளச் சோர்வு
இ. அறிவுத் தளர்ச்சி

2. புறத்தாக்கம்

அ. கருவிச் சேதம்
ஆ துணைத் தொய்வு
இ. எதிர்ச் செயல்கள்
ஈ. பொருள் முடை
உ காலப் பிறழ்ச்சி
ஊ. இடம் பொருந்தாமை
ஏ. ஆட்சி முரண்.

8. உடல் தாக்கம்

இது நமக்குள்ளேயே ஏற்படும் தாக்கம். ஒரு செயல் தொடக்கப் பெற்று நடந்து வருகையில், உடல் அவ்வினைச் சுமை தாளாது நலிவடைதலும், அதனால் உள்ளத்தின் உணர்வு தாக்கமுற்றுச் சோர்வடைதலும், அதன் வழி நம் அறிவு தளர்ச்சியுற்றுப் போதலும், நமக்கு நாமே வருவித்துக் கொள்ளும் இடையூறுகள் ஆகும். எனவே இவை அகத் தாக்கங்களாக ஆகின்றன. இவ்வகத் தாக்கமாக வருகின்ற இம்மூன்று நிலைகளையும் படிப்படியாக ஆராய்வோம்.

1. உடல் நலிவு

ஒரு செயல் அல்லது வினை என்பது பெரும்பாலும் உடலைக் கொண்டுதான் தொடங்கப் பெறுகிறது; அதைக் கொண்டுதான் முழுமை பெறுகிறது; அல்லது வெற்றி பெறுகிறது. உடலே அனைத்துக்கும் மூலமுதல், உடல் இல்லையானால் வாழ்வே இல்லை. உடல் என்பது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் கொண்டு இயங்குவது. ஒரு பொறியில் எப்படி அனைத்து உறுப்புகளும் சரியாக அமைந்தால்தான், அப்பொறி இடர்ப்பாடின்றி இயங்குமோ, அப்படி உடலின்கண் அகவுறுப்புகளாகவும், புறவுறுப்பு களாகவும் உள்ள சிறிய, பெரிய உறுப்புகள் அத்தனையும் சரிவர இயங்குமானால்தான் உடலும் சரிவர இயங்க முடியும். உடலின்றி உலகமில்லை. உடல் நலிவடையும் பொழுது உலக வாழ்வே தொய்வடைந்து போகிறது.

2. உடல்தான் அனைத்தும்

எனவே, செயலுக்கு அடிப்படையான முதல் உடலே. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழிவழியாகக் கண்டுவரும் உண்மை. பலபேர் உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

(377)

என்று திருவள்ளுவப் பெருமான் ஊழ் அதிகாரத்துள் குறித்த உண்மை, முதலில் உடலே நோக்கியதே ஆகும். எத்தனைக் கோடி பணத்தைத் தொகுத்து வைத்திருந்தாலும், அல்லது எத்தனை ஆயிரம் செல்வங்களை ஈட்டியிருந்தாலும், அவற்றைத் துய்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முதலில் உடல் முழுத்திறன் பெற்றதாக இருத்தல் வேண்டும். உடல் நன்றாக இல்லையானால், இவ்வுலகச் செயல்கள் ஒன்றிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. உடல் இல்லையானால் அனைத்தும் இல்லை. உடல்தான் உலகம்; உடல் தான் உயிரியக்கத்திற்கு

அடிப்படை உடல்தான் செயல்; உடல்தான் அறிவுமுதல்; உடல்தான் அன்பு முதல். உடல் தான் அனைத்தும்.

3. உடல்தானம் மூலமுதல் (First Capital)

எனவே, இவ்வுலகின் அனைத்து நிலைகளுக்கும் மூல முதலாக உள்ள உடலை நாம் பேணிக் கொள்ள வில்லையானால், பழுதுபடாமல் வைத்திருக்க வில்லையானால், நாம் எத்துணை அறிவுள்ளவராக இருந்தாலும், அன்புள்ளவராக இருந்தாலும், பணம் உள்ளவராக இருந்தாலும், செல்வம் உள்ளவராக இருந்தாலும், என்ன பதவியில் இருப்பவராக இருந்தாலும், எந்த இடத்தில் வாழ்பவராக இருந்தாலும் நாம் பயனற்றவர்களே! இவ்வுலகிற்கு வேண்டாதவர்களே!

இத்தகைய அரிய, தேவையான, இன்றியமையாத, அனைத்துக்கும் அடிப்படையான உடலை நாம் எளிதாக நினைத்துவிடுகிறோம். இன்னுஞ் சொல்வதானால், நம்மில் நூற்றுக்குத் தொண்ணுறு பேர் உடலைப் பற்றியே கவலைப்படாதவர்களாக, கருத்தில்லாதவர்களாக, அக்கறையற்றவர்களாக இருந்து வருகிறோம். ஓர் அரிய கருவூலத்தைக் காப்பது போல், எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்குக் கிடைத்த உடலைத்தான் நாம் முதலில் காத்து வருதல் வேண்டும். அதனால்தான் திருமூலர் என்னும் மிகப்பெரும் மெய்ப்பொருள் அறிஞர், உடலைப்பற்றித் தம் அருமைக்கருமையான திருமந்திரம் என்னும் நூலில், கீழ்வருமாறு கூறுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தபின்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே!

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்!
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்தோம்புகின் றேனே!

உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடுயிரிடை நடப்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே

இவ்வருமையான பாடல்கள் உடம்புதான் அனைத்துக்கும் அடிப்படையாக நின்று இயங்குவது என்றும், அதனால், அதனை மிகக் கருத்துடன் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுவதை நன்கு உணர்ந்து பார்த்தல் வேண்டும்.

4. உடல் ஒரு பொறி (Working Machine)

உடல் ஒரு பொறியைப்போல் உள்ளது என்றாலும், உடல்போல் ஒரு பொறியை எங்கும் எவரும் செய்ய இயலாது. பொறிக்கும் உடலுக்கும் உள்ள எளிய ஒரு வேறு பாட்டை உணர்ந்தாலே, உடம்பின் பெருமையும் அருமையும் விளங்கிவிடும். நாம் காணுகின்ற எந்தப் பொறி (Machine)யிலும், ஒரு சிறு உறுப்பாகிய ஒரு திருகாணி இல்லையானாலும் அப்பொறி இயங்காது. ஆனால், இவ்வுடலில் பல உறுப்புகள் இல்லையானாலும், இஃது இயங்கும், அஃதாவது கால்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையானாலும், அல்லது கைகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லையென்றாலும், அல்லது இரண்டு கண்கள் இல்லையென்றாலும், காதுகள் இல்லையென்றாலும், மூக்கோ வாயோ இல்லையென்றாலும் இவ்வுடல் இயங்கும் வல்லமை உடையது. இதைப்போல் ஒர் அரிய பொறி உலகில் எங்குமே இல்லை. இத்தகைய அரிய பொறியை நாம் இயற்கையால் தரப்பெற்றிருந்தும், இதைப் பேணிப் புரக்காமல் இருப்பது எத்துணை அறியாமை. இவ்வுடலில் உள்ள உறுப்புகளின் அருமையை நாம் அவ்வுறுப்புகள் இல்லாதபொழுதுதான் உணரமுடியும்.

5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும்

காலை இழந்த பொழுதுதான், காலின் அருமை, தேவை நமக்கு விளங்குகிறது. கண்களை இழந்த பொழுதுதான், அக் கண்களின் பெருமையை நாம் உணர முடிகிறது. காதுகள் செவிடான பின்னர்தாம் காதுகள் நமக்கு எவ்வளவு இன்றியமையாத உறுப்புகள் என்பது நமக்குத் தெரிய வரும் பற்களை நாம் இழக்கின்ற பொழுதுதான், அடடா, நாம் பற்களைப் பாதுகாவாமல் போனோமே என்று அறிய முடிகிறது. உறுப்புகள் அனைத்தும் இருக்கின்றபொழுது, பேண முடியாத, பேண அறியாத நாம் அவற்றை இழந்துவிட்ட பின்னர், பெருந்துன்பம் அடைகின்றோம். அவற்றை முன்னதாகவே காக்கின்ற அறிவை நாம் பெறவில்லை யானால், நமக்கு அவை இருந்து என்னபயன்? நம் உடலும் அதிலுள்ள ஒவ்வோர் உறுப்பும், நம்முடைய ஒவ்வொரு பயனுக்காகவே இயற்கைத் தாயால் நமக்குத் தரப்பெற்றுள்ளது. இனி, அவற்றைக் காத்துக் கொள்ளும் அறிவையாகிலும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டாவா? உடலைக் காக்க அறியாதவன் உயிரையும் காத்துக் கொள்ள இயலாதவனாகப் போய் விடுகிறான் என்ற உண்மையை நாம் எப்பொழுதும் மறக்கவே கூடாது.

6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை

உடலைப் பேணிக் கொள்ளும்பொழுதுதான், மன ஊக்கத்தைக் காத்துக் கொள்கிறோம். உடல் நலமாகவும், உள்ளம் ஊக்கமாகவும்

இருந்தால்தான் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். உடலும் உள்ளமும் அறிவும் அக அளவாக நின்று நமக்கும், புற அளவாக நின்று பிறர்க்கும் பயன்படுகின்றன. உடல்நலம் இல்லாதபொழுது, மனம் ஊக்கம் தளர்கிறது. மன ஊக்கம் தளர்ந்தால், உலகச் செயல்கள் எதிலும் நாட்டம் குறைகிறது. முயற்சி இல்லாமல் போகிறது. மன ஊக்கம் குறையக் குறைய, உள்ள வலிவு குறைகிறது. உள்ள வலிவற்றவன், தன் உடலைப் பேணவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் இயலாமல் போகிறான். நம்மில் சிலர் எந்தச் செயலிலும் நாட்டம் குறைந்திருப்பதற்கு உள்ளம் நலமில்லாமல், வலிவில்லாமல் ஊக்கம் குறைந்திருப்பதே கரணியம், உடல் நலம் குறைந்தவன், எந்தவொரு செயலுக்கும் பிறர் உதவியை நாடுகின்றான். பிறரை நம்ப வேண்டியவனாகப் போகிறான். உள்ள ஊக்கம் குறைந்தவன் தன்னம்பிக்கை குறைகின்றான். தன்னம்பிக்கைக் குறைவு தன்னுக்கத்தையும் தன்னறிவையும் கெடுக்கிறது.

7. உடல் கெட அனைத்தும் கெடும்

உடல் நலமும் அதால் உள்ள நலமும் குறைந்து காணப்படுகின்றவன் பிறரை ஐயுறுகின்றான். அவர்கள்மேல் எரிச்சலுறுகின்றான்; பிறரின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு ஐயுறவை உண்டாக்கி, எரிச்சலைத் தந்து, வெறுப்பை வளர்த்துப் பொறாமையைத் துரண்டிப் பகை கொள்ளச் செய்து, மனத்தைப் பலவாறாக இடர்ப்பாடுகளுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்குகிறது. அவன் எப்பொழுதும் பிறரின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருக்கிறான். முடிந்த அளவில் அவற்றில் குற்றம் காணுகிறான். அவற்றைப் பொறாமையால் எதிர்க்கவும் முனைகிறான். பொறாமை மிகுதியால், பிறரிடம் தனக்கு வேண்டாதவனைக் குறை கூறுகிறான். நல்லறிவுத் திறம் அவனிடம் குறைகிறது. நற்சிந்தனை குறைகிறது. எனவே, அவன் அறிவுத் திரிபு கொள்கிறான். திரிந்த அறிவு எந்தச் செயலிலும் நாட்டங் கொள்ளச் செய்யாமல் அவனைத் தடுக்கிறது. உடலால் உள்ளமும், உள்ளத்தால் அறிவும், அறிவால் செயலும் படிப்படியாகக் கேடுற்றுக் கொண்டே போகின்றன. இது தொடர்வினைபோல், அவன் உடல் நலமுறுகிறவரை நீண்டு கொண்டே போகிறது. தான் செய்ய இயலாத நிலை, பிறர் செயல் நிலைகளால் எரிச்சலையும், பொறாமையையும், பகையையும் தொடர்ந்து வளர்க்கவே, அவன் யாருக்கும் பயனற்றவனாகவே, போகின்றான். இறுதிவரை அவன் ஒரு மன நோயாளியாகவே அல்லலுறுகின்றான்.

உடல்நலமே அனைத்துச் செயலுக்கும் மூலகாரணமாக நிற்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை. எனவே, உடல் நலமின்மையே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

8. உடல் நலத்துக்கே உணவு வகை

உடலை நலமாக வைத்திருப்பதற்கு ஓரளவு நல்ல உணவு தேவையே. ஆனால் பலர் உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும் என்பது தெரியாமல், பசிக்காகவே உண்ண வேண்டும் என்று நினைக்கின்றனர். மிகப்பலர் ஆசைக்காகவே உண்கின்றனர். எனவே, நல்ல உணவைத் தேர்ந்து தேடி உண்ணாமல், கிடைத்த உணவை உண்ணுகின்றனர். ஆசைக்காக உண்பது தாழ்ந்த நிலை; பசிக்காக உண்டது அதனினும் சிறிது உயர்ந்த நிலை; உடல் நலத்திற்காக உண்பதே மிக உயர்ந்த நிலை; இனி, செயலுக்காக உண்பதும், அறிவுக்காக உண்டதும் மிக மிக உயர்ந்த நிலைகள். அறிவுக்காக உண்பவர்கள் வயிற்றுப் பசிக்காக உண்ணும் நிலையைக் கூடிய மட்டில் தவிர்க்கிறார்கள்; குறைவாக மதிக்கிறார்கள். பசி, உடலுக்கு உணவு தேவை என்று உணர்த்துகிற ஓர் இயற்கை உணர்வே, உண்ணும் நேரத்தை அறிவிக்கின்ற ஓர் எச்சரிக்கை அறிவிப்பே. பசிக்காக உண்ணும் நிலை என்பது தவறு. உண்ணுவதற்காகவே பசிக்கிறது. உண்ண வேண்டும் என்பதால் எதையும் உண்ணவேண்டும் என்பதில்லை. உடலுக்காக உண்ணக் கூடாது. உடல் நலத்துக்காகவே உண்ண வேண்டும். உடல் நலம் என்கிற பொழுது, உடலில் எந்த ஆற்றல் குறைகிறதோ, அந்த ஆற்றலை நிறைவு செய்வதற்காகவே உண்ண வேண்டும். பார்வையைக் கூர்மையாக்கவும், செவியை நன்றாகக் கேட்கச் செய்யவும், பிற உடல் கருவிகளை வலுப்படுத்தவும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையான மூளையை நன்றாகச் செயல்படச் செய்யவும் உயிரியக்கத்தைக் காத்துக் கொள்ளவும் பலவாறான உணவுகள் தேவை. ஒரே வகை உணவால், இவை அனைத்தையும் நலமுறச் செய்ய முடியாது.

எலும்பை உறுதியாக வைத்துக் கொள்ள உதவும் உணவு, தசை வளர்ச்சிக்குப் பயன்படுவதில்லை. தசை வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான உணவு, நரம்பு மண்டிலங்களை வலுப்படுத்துவதில்லை. இனி, நரம்பு மண்டிலங்களுக்கு ஏற்ற உணவு, மூளை நலத்துக்கு உகந்ததாக இருப்பதில்லை. உடல் வலிவு வேறு; உடல் நலம் வேறு. உடல் வலிவு என்பது தசைகளின் உறுதி, நரம்புகளின் உறுதி, எலும்புகளின் உறுதி ஆகியவற்றைப் பொறுத்தது. உடல் நலம் என்பது, நெஞ்சாங்குலை இயக்கம், கல்லீரல், மண்ணிரல் இயக்கம், கழிவுப் பொருள்களுக்குரிய உள்ளுறுப்புகளின் இயக்கம், அறிவுக் கருவிகளுக்கான இயக்கம், குருதித் தூய்மை முதலியவற்றைப் பொறுத்தது.

9. உடல் வலிவும் உடல் நலமும்

உடல் வலிவாகவும் இருத்தல் வேண்டும்; அதேபொழுது நலமாகவும் இருத்தல் வேண்டும்; உடல் வலிவு மிகுந்தால் நலம் கேடுறலாம்; நலம் மிகுந்தால் வலிவு கெடாது. எனவே உடல் வலிவினும், உடல்நலமே

கருதத் தக்கது. வெறும் உடல் வலிவு முரட்டுத் தனத்தை வளர்க்கும். முரட்டுத்தனம் உள்ளத்தின் உணர்வுகளைக் கேடுறச் செய்யும் திசைத் திரும்பச் செய்யும். உடல் நலமே உள்ளத்தையும் அறிவையும் நல்ல செயல்களில் ஈடுபடச் செய்யும். கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஓடும் கட்டற்ற காளைமாடு போல், உடல்வலிவு, முரட்டுத் தனமாகச் செயல்படும். வண்டியில் பூட்டிய காளை போல, ஒழுங்குறச் செயல்படச் செய்வது, உடல்நலம். உடல் வலிவு, கட்டுப்பாடற்று வளர்ந்து கிடக்கும் காட்டுப்புதர் போல்வது. அதில் முட்செடிகளும் இருக்கும்; நச்சுக் கொடிகளும் இருக்கும். ஆனால், உடல் நலம் அழகுறச் சமைத்த ஒரு பூங்கா போல்வது. அங்கே அழகிய பூஞ்செடிகளும், பழந்தரும் மரங்களும், அழகிய புல்வெளிகளும் இருக்கும். உடல் வலிவு, உடல் நலம் இவை தொடர்பாகவும், அவற்றுக்கான உணவுத் தேவை தொடர்பாகவும் சில இயற்கையான பிரிவினர்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.

சிறந்த அறிஞர்கள் அறிவு நலந்தரும் உணவையே உண்கின்றனர்.
நன்கு கற்றவர்கள் உடல் நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.
ஒரளவு கற்ற பொதுவானவர்கள் உடல் வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.
கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் உடல் தேவைக்கான எந்த உணவையும் உண்கின்றனர்.
கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.
அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.
விலங்குகளும், பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

இவ்வகைகளையே இன்னும் பலவாறாகவும் பிரித்துக் கூறலாம். அவை இங்குத் தேவையில்லை என்பதால் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம். இனி, உணவை மிகக் குறைத்து உண்கின்ற நிலைகளும், பருவுணவு அன்றிப் பருகுநிலை உணவு உண்கின்ற நிலைகளும், பருகுநிலை உணவும் இன்றி, ஒரோ ஒருகால் உண்ணும் பச்சிலை உணவு நிலைகளும், அதுவும் இன்றிக் காற்று உணவு நிலைகளும் பிறவும் உண்டு. இங்கு அவை பற்றிய அறிவு அறவே தேவையில்லையாதலால் அவற்றையும் தவிர்க்கிறோம்.

இனி, உடலை நலமாக வைத்துக்கொள்ளும் ஒரு மாந்தப் பொதுநிலையே, உடல், உள்ளம், அறிவு ஆகிய மூன்று இயக்கங்களும் கூடிய செயல் நிலைக்கு உகந்ததாகும். இந்த மூன்று உயிர்க்கூறுகளிலும் ஒன்றை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும் அல்லது, இரண்டை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அல்லது மூன்றையுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அவரவர்களின், வாழ்க்கை

முறைகளுக்கும் வளத்துக்கும் தக்கபடி, உணவு நிலைகள் வேறுபடுகின்றன: அல்லது தேவைப்படுகின்றன. அவற்றையும் அறிவு நூல்களில் கண்டு கொள்க.

{{gap}இங்கு நாம் செயலையும், அதன் திறப்பாட்டையும் மட்டுமே எடுத்துப் பேசிக் கொண்டிருப்பதால், அவற்றுக்குப் போதுமான உடல்நலக் கூறுகள் மட்டுமே, சிறிது விரிவாகக் காண்போம்.

10. உடல் மேல் ஆறுவகைக் கவனம்

இதுவரை, ஒவ்வொருவரும் ஏதாவது, ஒரு செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும், அந்தச் செயலைத் திறமையாகச் செய்வதற்கும் உடல் நலம் மிகமிக இன்றியமையாதது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். அந்த உடல் நலத்தைப் பேணுவதும் அதை வளர்த்துக் கொள்வதும் அவ்வளவு கடினமான செயலன்று; ஆனால் கவனமான செயலாகும். அந்தக் கவனம் ஆறு நிலைகளில் எப்பொழுதும் நினைவில் இருந்து கொண்டே இருத்தல் வேண்டும். அவையாவன. (1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல். 2. அளவான ஆனால் தேவையான உணவு கொள்ளுதல். 3. போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், 4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல், 5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல், 6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்)

இந்த ஆறு கூறுகளைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்ளுவது மிக மிகத் தேவையானதாகும்.

1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல்

உழைப்பு என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. செயல் உடலை அடிப்படையாகக் கொண்டது. எந்தச் செயலுக்குமே உடல்தான் காரணமூலம். எழுதுவது, பேசுவது, இயங்குவது போன்ற புறச்செயல்களுக்கும், எண்ணுவது, பார்ப்பது, கேட்டது.துய்ப்பது போன்ற அகச் செயல்களுக்குமே உடல்தான் அடிப்படைப் பொருள். உடல் நலமிழந்தால், இவை அனைத்துச் செயல்களுமே தம் தம் இயக்கத்தில் குன்றிவிடும். உடல் நலமின்மை முதன் முதலில் புறச் செயல்களைக் குன்ற வைக்கிறது. பிறகு, புறச் செயல்களுக்குக் காரணமான அகச் செயல்கள் குறைவுபடுகின்றன. இறுதியில், எண்ணவும், சிந்திக்கவும் முடியாத அளவுக்கு உடல்நலமின்மை மாந்தனைச் செயலற்றவனாக ஆக்கிவிடுகிறது. எனவே, உடல் நலமே அனைத்துக்கும் இயக்கக் களமாகி விடுகிறது.

உடல் நலமாக இருக்க வேண்டுமெனில், உடல் இயங்க வேண்டும். உடலும் அதன் இயக்கமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பன. உடல்தான்

இயக்கத்தைக் கொடுக்கிறது; இயக்கந்தான் உடலை நிலைநிற்கச் செய்கிறது. உடல் இன்றேல் இயக்கமில்லை; இயக்கம் இன்றேல் உடல் இல்லை என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, உடலை நாம் இயக்க வேண்டும்.

படுத்துக்கொண்டே உடலை நலமாக வைத்துக்கொள்ள இயலாது. உடல் ஒரு பொறி போன்றது. அந்தப் பொறி இயங்கியாக வேண்டும். அதிலுள்ள அனைத்துக் கருவிகளும் அதனதன் தேவைக்கேற்ப இயங்கியாகல் வேண்டும். எந்தக் கருவி இயங்கவில்லையோ, அந்தக் கருவி நாளடைவில் செயலை இழக்கிறது. ஒரு கருவி செயல் இழந்தபின் அதை இயங்க வைப்பது கடினம் கண் ஒளித்திறனை இழந்துவிட்டபின், அதனை மீட்டெடுப்பது மிகவும் அரிது; காது ஒலித்திறனை இழந்துவிடில், அதனைச் சரிசெய்வது மிகவும் கடினம். கை, கால்கள் இயங்காமல் தொய்ந்து போனால், அவற்றை மீண்டும் இயங்க வைத்தல் இயலாது. இப்படியே நம் உடலிலுள்ள ஒவ்வோருறுப்பும் தன்தன் ஆற்றலை இழந்து விடுமாயின், அவற்றைச் சீர் செய்தல் மிக மிகக் கடினம். பொறிக்கும், உடலுக்கும் அதுதான் வேறுபாடு. உடல் பொறி கெட்டுப்போனால், இயந்திரப் பொறியைப் போல் அதனை ஒக்கிடவோ மாற்றியமைக்கவோ அரும்பாடுபட வேண்டியிருக்கும். சில நேரங்களில் சில உடல் உறுப்புகளைச் சரி செய்யவே முடியாமற் போய்விடும். எனவேதான், நம் உடலைக் கெட்டுப் போகாமல் எச்சரிக்கையாக வைத்துக் கொள்வது உடலொடு பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் உண்டான முதற்கடமை என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

{{gap}உடல் இயங்க வேண்டும். அது தானே இயங்காது, எனவே, அதை இயக்க வேண்டும். உடலை இயக்குவதற்கு இரண்டு உள் ஆற்றல்களும், ஒரு புற ஆற்றலும் தேவை. இயந்திரப் பொறியை இயக்க மின்சாரம் தேவை. மின்சாரம் இரண்டு ஆற்றல்களால் உண்டாவது ஒன்று நேர்மின் ஆற்றல்; மற்றொன்று எதிர்மின் ஆற்றல். இரண்டும் இணையும் பொழுதுதான் மின் ஆற்றலின் இயக்கம் தொடங்குகிறது. ஆனால், இந்த இரண்டும் தாமே இணையாது. அவை இணைய ஒரு புறப்பொருள் அஃதாவது பருப்பொருள் தேவை. அதுபோலவே உடல் இயக்கம் கொள்ள, மனமும் அறிவும் இரண்டு அக ஆற்றல்களாக, அஃதாவது, இரண்டு நுண்பொருள் ஆற்றல்களாக, நின்று செயல்படுகின்றன. ஆனால், அவை இரண்டும் இணைந்து இயங்க உடல் முழுமையான பருப்பொருள் தன்மை பெற்றிருத்தல் வேண்டும். உடலியக்கத்தால் அந்தப் பருப்பொருள் தன்மை குறைபடும். அது குறைவுபட குறைவு பட மீண்டும் மீண்டும் பருப்பொருள் தன்மையை, அஃதாவது பருப்பொருள் ஆற்றலை இட்டு நிரப்ப வேண்டும். அந்தப் பருப்பொருள் ஆற்றலையே நாம் உணவிலிருந்து பெறுகிறோம்.

எனவே, உடல் இயங்க மனம், அறிவு ஆகிய இரண்டு நுண்பொருள்

ஆற்றல்களும், உணவு எனும் ஒரு பருப்பொருள் ஆற்றலும் தேவை. மனம், அறிவு, உணவு ஆகிய இந்த மூன்று கூறுகளும் சரியாக இயங்குமானால், உடல் இயங்குகிறது. இந்த மூன்று கூறுகளில், மனம், அறிவு ஆகிங் இரண்டு துண் கூறுகளும் இயற்கையால் நமக்கு அளிக்கப்பட்டவை. உணவிலிருந்து கிடைக்கும் பருப்பொருள் ஆற்றல் கூறு ஆகிய ஒன்றையே நாம் தேடி, உடலியக்கத்துக்கு அளித்தல் வேண்டும்.

மேலும், மேற்கூறிய மூன்று ஆற்றல்களும், உள்ளும் புறமுமாக உடலுக்குள் இணைந்து உடலை இயக்கினாலும் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவே இயங்குகின்றன; உடலையும் இயக்குகின்றன. எரிகின்ற மின்சாரக் குமிழ் ஒன்றைப் பாருங்கள். அதில் எரிகின்ற டங்சுடன் (Tungston) என்னும் எளியிழைப் பருப்பொருளால் ஆனது. அதைச் சூடேற்றி எரிய வைக்கின்ற மேற்கூறிய மின்னாற்றல்கள் இரண்டும் அவ்விழையில் ஒன்றிணைகின்றன; அதனாலேயே குமிழ் ஒளி பெறுகிறது. இது போன்றதுதான் உடலும்.

இனி, உடலியக்கத்துக்கு மிகு தேவையான மனம், அறிவு, உணவு (அஃதாவது உண்ணுதலின் வழியாக உள்ளே செலுத்தப்படுவதால், அதை உணஷ் என்று சிறப்பித்துச் சொல்லுகிறோமே தவிர, அஃது ஒரு பருப்பொருள் ஆற்றலை உண்டாக்குகிற ஒரு புறக்கருவியே) ஆகிய மூன்று ஆற்றல்களும் தம்முள் ஒத்து இயங்கினால்தான் உடல் இயங்கும் என்னும் ஒரு மெய்ம்மத்தை (தத்துவத்தை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கெட்டாலும் மற்ற இரண்டும் சரியாக இராது. அஃதாவது மனம் கெட்டால் அறிவும், உணவும். சரியாகப் பொருந்தா, அறிவு கெட்டால் மனமும், உணவும் சரியாகப் பொருந்தா, உணவு கெட்டாலும் அறிவும் மனமும் சரியாகப் பொருந்தா) எனவே, உடல் இயங்க மனம் இயங்க வேண்டும்; அறிவு இயங்க வேண்டும் புறப்பொருள் ஆற்றலாகிய உணவு, உடலியக்கத்தால் குறையக் குறைய, இட்டு நிரப்பப்பட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும் இந்தப் புறப் பொருளாற்றலாகிய உணவை அவ்வப்பொழுது இட்டு நிரப்பும் ஒரு பணியையே இயற்கை நமக்குக் கடமையாகக் கொடுத்திருக்கிறது. மற்ற இரண்டும் நமக்கு எளிதில் புலப்படாத நுண் ஆற்றல்களாகையால், அவ்விரண்டையும் இயக்கும் செயலை, இயற்கை தானே வைத்துக் கொண்டுள்ளது. ஏனெனில் அவற்றை இயக்குவதற்கு நமக்கு மிக மிக மேம்பட்ட துண் ஆற்றல்கள் தேவை. அதைப்பற்றியெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை.

இனி, மேற்கூறிய இவ்வடிப்படை உண்மைகளை உணர்ந்து கொண்டால்தான், நாம் நம் உடலை நோய்வாய்ப்பிடாமல், அஃதாவது கெட்டுப்போகாமல் நலம்ாக வைத்துக் கொள்ளவும், அதனை உலகச் செயல்களுக்கு ஈடுபடுத்தவும் முடியும். அதனாலேயே மேற்கூறிய விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

இனி நம் உடலை நன்றாக அஃதாவது அதற்குண்டான இயல்பான, தன்மையைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க வேண்டுமானால், உடல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அஃதாவது உடலை ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும், உடலில் உள்ள புறக் கருவிகளும், அகக் கருவிகளும் நன்றாக, முழுமையாகச் செயலில் ஈடுபடுத்தப் பெற்று. நன்கு களைப்படையும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அவை தங்களுக்குக் கொடுக்கப்பெறும், உயிர்ப்பாற்றல்களை நன்றாக உள் வாங்கிக்கொள்ளும், நிலம் நன்றாகக் காய்ந்தால்தான் ஆண்ணிரை உள்ளிழுத்துக் கொள்ளும், நமக்கு நன்றாகப் பசித்தால்தான் உணவை நாம் உண்ண முடியும். பசிக்காமல் உண்ண முடியாது. பசி என்பது நம் உடல் உறுப்புகள் இயங்கிக் களைத்துப் போய்விட்டன என்பதை அறிவிக்கும் ஒர் உணர்வு. அவற்றுக்கு மீண்டும் (அஃதாவது உணவு) தேவை என்று அறிவிக்கும் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு.

முதலில் உடலியக்கத்துக்காக கொடுக்கப் பெற்ற ஆற்றல், (உணவு) முழுவதும் தீர்ந்துவிட்டது; மீண்டும் ஆற்றல் (உணவு) தேவை என்பதை உணர்த்துவதே பசி, இந்தப் பசி ஏற்பட, உடல் முன் கொடுக்கப்பட்ட உணவாற்றலை முழுவதும் உழைப்பால் செலவிட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் உணவாற்றலை அதற்குக் கொடுக்க முடியும். இல்லெனில் முன் கொடுக்கப்பட்ட ஆற்றலை அது (உடல்) வீணாக செலவிடாமல் வைத்துக் கொள்ளும். உணவாற்றலை உடல் வெளிவிடாமல் சேமிக்கப்படுகையில் அது கொழுப்பாக மாற்றப்படும். இந்தச் சேமிப்பு மிக மிக, உடல் தன் இயக்கத்தில் தடுமாறிப் போகிறது; செயல் குன்றிப் போகிறது. ஒருவன் சுமையை எடுத்துக் கொண்டு வேகமாகவும், தடையில்லாமலும் நடக்கவோ, ஓடவோ முடியாதது போல், உடலானது, தான் உண்ட உணவாற்றலைச் செயல் செய்து செலவிடாமல், கொழுப்பாக மாற்றிச் சேமித்து வைத்துக் கொள்ளுமானால், உடலின் சுமை கூடிவிடும்; அஃதாவது உடலின் எடை மிகுந்துவிடும் உடலின் எடையாகிய சுமை கூடிவிடவே அதனால் இயங்குவதற்குத் தடை உண்டாகும். உடல் சுமையாகிய கொழுப்பை உடலில் சேமித்துக் கொண்டவர்கள் சரியாக நடக்க முடியாது செயல் செய்ய முடியாது; இயங்கவே முடியாது. உடல் மீண்டும் இயங்கினால்தான் சேமிக்கப்பெற்ற கொழுப்பு, இயக்கச் சூட்டினால் உருகி மீண்டும் ஆற்றலாக மாறி, உடல் மேலும் மேலும் இயங்குவதற்கு இடந்தரும்.

எனவே உடல் இயங்குதிறன் பெறுதற்கு அஃது இயங்க வேண்டும். மீண்டும் இயங்குவதற்கு அஃது இயங்கு திறன் பெற வேண்டும். இவ்வாறாக மாறி மாறி இயங்கவும் இயங்குதிறன் பெறவும் இயங்குதிறன்

பெறவும் இயங்கவும் ஆன முழுமையான செயல் இயக்கத்தையே நாம் ஒருவனின் வாழ்க்கை என்கிறோம். எனவே வாழ்க்கை என்பது நீடிய செயல் அதில் நாம் செய்யும் குறுஞ்செயல்கள் என்பவையே, அப்பெருஞ் செயலும் பெருமைக்குரிய செயலும் ஆகிய வாழ்க்கையை நிறைவுடைதோக் நிறைந்த பயனுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு உதவுகின்றன. இவை நிற்க.

இனி நம் உடல் களைப்புறும்படி உழைப்பது என்றால் என்ன? உடலை அப்படியும் இப்படியுமாக ஆட்டி வருத்துவதா? இல்லை, அலைக்கழிப்பதா? இல்லவே இல்லை. உடலை அதன் உறுப்புகள் அனைத்தும் அசைவுறும்படி உழைப்பில், அல்லது செயலில் ஈடுபடுத்துவது. உடலில் அகத்தும் புறத்தும் உள்ள உறுப்புகள் அசைவுறும்படி அஃதாவது இயக்கம் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்துடன் இருக்கும். இல்லையானால் இயக்கம் குன்றி நோய்ப்பட்டு, இவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உடலும், உயிரும் தம் தம் இயக்கங்களை நிறுத்திக் கொள்ளும்.

உடலை இயங்க வைப்பதே உழைப்பு உழைப்பு இல்லையானால், உடல் இயங்க வழியில்லை. உடல் இயங்காமல் போனால், அது நலம் குன்றும், நலம் குன்றுவது நலிவை உண்டாக்கும், நலிவு நோயை வருவிக்கும்; நோயுற்ற உடலில் உயிர் குடியிருக்க விரும்பாமல் வெளியேறிவிடும். பழுதாய்ப் போன வீட்டிலிருந்து நாம் வெளியேறி வேறு வீட்டிற்குக் குடிபோக விரும்புகிறோம். இல்லையா? அப்படித்தான். உயிரும் நன்றாக உள்ள உடலிலேயே குடியிருக்க விரும்பும். உயிரின் இயக்கமே உடலொடு பொருந்தித்தான் இருக்கும். உயிர் இயங்குவதற்கு உடல் தடையாக இருக்கக் கூடாது அன்றோ? அதனாலேயே உடல், உயிர் இயக்கத்துடன் ஒத்துழைப்பதற்கு நல்ல நிலையில் இருந்தாக வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

உடல் உழைப்பு என்பது உறுப்புகளை நன்றாக இயக்கிக் களைப்படையும்படி செய்கிறது. உறுப்புகள் உழைக்க உழைக்க நாம் உண்ட உணவு ஆற்றலாக மாறுவதும், பின்னர் அது செலவாகிப் போவதும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபற்றி முன்னரே நன்கு விளக்கமாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

எனவே, உடல் நலமாக இருக்க உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்கும்படி நாம் உழைத்தாகவேண்டும். இவ்வுலகில் பல பேர் நன்கு உடலை வருத்தி உழைக்கிறார்கள். சிலர் உடல் வருத்தாமல் உடலை நோயுறும்படி செய்து கொள்கிறார்கள்.

உடல் உழைப்பு பலவகையானது. உழைப்பு பயன் கருதியே

செய்யப்படுகிறது. பயனற்ற உழைப்பை எவரும் செய்யமாட்டார்கள். உடலின் உழைப்பால் வரும் பயன் நம் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. எனவே, முதலில் நமக்காகவாகிலும் நாம் உழைத்தாக வேண்டும். அஃது ஒரு வகையில் தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டது என்றாலும், நாம் உழைத்துச் சாப்பிடுகிறோம் என்ற மண், நிறைவை நாம் பெறுகிறோம். உலகில் உள்ள பெரும்பாலோர் அவர்களுக்காகவே உழைக்கிறார்கள். ஆனால் பலர் முழு உழைப்புத் தராமல் அரைகுறை உழைப்பாலேயே முழுப் பயன் பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர் அறவே உழைக்காமலேயே உண்ண - உயிர்வாழ விரும்புகிறார்கள். அவர்கள் பிறரின் உழைப்பைச் சுரண்டி வாழ்கிறார்கள். அவர்கள் சிறுமைக்குரியவர்கள். கண்டிக்கவும் தண்டிக்கவும் தக்கவர்கள்.

உழைப்பை இந்த வகையில் கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.

1. உழைப்பு அல்லது செயல் நமக்காக மட்டும் பயன்படுவது.

2. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுவது.

3. அது, நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் போல் உள்ள பிறர்க்காகவும் பயன்படுவது.

4. அது நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மைப் ப்ோல் உள்ள பிறர்க்கும், எப்பொழுதும் பயன்படுவது.

இவ்வகைகளை இன்னும் பலவாறும் பிரித்துக் கூறலாம். இவ்வரிசையுள் உள்ள ஒன்று, முன்னுள்ள ஒன்றை விடப் பெருமையானது. நான்காம் வகை உழைப்பை நாம் செய்யும் பொழுது, நம் வாழ்க்கை மிகப் பெருமை பெறுவதாக அமைந்துவிடும். இவற்றை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு களைப்பு ஏற்படும்படி உழைத்தல் என்னும் நிலை என்பது தொடர்பாக இன்னும் சிறிது மேலே கூறுவோம்.

நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில், நம் முழு உடலையும் ஈடுபடுத்த வேண்டும். சிலர் உடல் உழைப்பே இன்றி அறிவுழைப்பில் மட்டும் ஈடுபடுவர். அத்தகையோர் காலப்போக்கில் உடல் நலம் குன்றவே செய்வர். எனவே, அத்தகையவர்கள் உடலாலும் சில உழைப்புகளைக் கட்டாயம் செய்தல் வேண்டும். சில குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கிக் கொண்டு, நடத்தல், ஒடுதல், தாண்டுதல், நீந்துதல், உடற்பயிற்சி செய்தல், விளையாடுதல் போன்ற உடலியக்க செயற்பாடுகளைச் செய்தல் வேண்டும் அல்லாக்கால் உடல் உறுப்புகள் இயக்கமின்றிக் கட்டாயம் நோயுறும் அறிவுழைப்புள்ளவர்கள் உடலை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டே செயல்பட முடியும். சில கலையுழைப்பாளர்களும் அவ்வாறே இயங்குவர். ஒவியம் வரைதல் சிலை செய்தல், எழுதுதல் முதலிய கலை, அறிவு உழைப்பாளர்களுக்கு

மேலே குறிப்பிடப்பெற்ற பயிற்சிகள், அல்லது விளையாட்டுகள் கட்டாயம் தேவை.

பொதுவில் நாம் எந்தச் செயலை அல்லது பணியை அல்லது உழைப்பைச் செய்தாலும், அதைத் திறமையுடன் செய்வதற்கு முதலில் நம் உடலே அடிப்படையானது. ஆகையால் நாம் அதை நலமாகவும், வளமாகவும் வைத்துக் கொள்வதே முதற் கடமையாகும். செயல்கள் உடல்நலக் குறைவினாலேயே திறமையோடு செய்யப் பெறுவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு மூலத்தேன். வே உடல் உழைப்புத்தான். உழைப்பால்தான் உடல் நலம்தரும் உணவை ஏற்றுக் கொள்ளும் தகுதியையும், அதை ஆற்றலாக மாற்றும் திறனையும் பெறுகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடலைக் களைப்புற உழைப்பில் ஈடுபடுத்திய ஒருவர்க்கு அடுத்த தேவை உணவாகும். எனவே, அதுபற்றியும் நாம் சிறிது கூடுதலாய்த் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. அளவான உணவு (Balanced Diet)

'அற்றால் அளவறிந்து உண்க' என்பது திருக்குறள் மொழி (943) திருவள்ளுவப் பேராசான், தாம் எழுதிய திருக்குறளில், மருந்து அதிகாரத்தில், உணவுத் தொடர்பாக கூறிய அத்தனைக் கருத்துகளும் மிக மிக நன்றாக ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை.

1. முன் அருந்திய உணவு முழுவதும் செரித்தபின்பே மீண்டும் உண்ண வேண்டும். (942 உண்ட உணவு செரிப்பதற்குள் உண்ணக்கூடாது.

2. எது நமக்கு எளிதாகச் செரிக்கிறதோ அதையே போற்றி உண்ண வேண்டும் (942) (ஒருவர்க்கு எளிதாகச் செரிப்பது, இன்னொருவர்க்கு எளிதாகச் செரிக்காது.

(எனவே, எந்த வகை உணவு தமக்குப் பொருந்தியதோ அஃதாவது எளிதாகச் செரிக்கிறதோ, அந்த வகை உணவையே அவர் விரும்பி உண்ணவேண்டும். சிலர்க்கு எண்ணெய் உணவு செரிக்காது. சிலர்க்குக் கோதுமை உணவு செரிக்காது; சிலர்க்குப் புளியுணவு செரிக்காது: சிலர்க்கு சில பழவகைகள் செரிக்கா. எனவே அவரவர்க்கு எளிதில் செரிக்கும்படியான உணவையே உண்ணவேண்டும்)

3. செரித்த பின், அதுபோல் செரிக்கின்ற அளவே உண்ண வேண்டும் (943) (உணவு செரிக்கின்றது என்பதற்காக, அதிக அளவும் உண்டுவிடக்கூடாது. ஏனென்றால் செரிக்கின்றதன்மையுள்ள உணவும், அளவுக்கு மீறினால் செரிக்காமல் போகலாம்.)

4 நம்முடைய உடல் உள்ளம் அறிவு ஆகியவற்றின் இயக்கங்களுக்கு மாறுபாடு அல்லாத உணவையே உண்ண வேண்டும் (944), (உணவால்

உடல்நிலை மாற்றமும் உடலால், உள்ளம் அறிவு நிலைகளின் மாற்றங்களும் நிகழ்தலால், அவற்றிற்கும், மாறுபாடில்லாத உணவை உண்ணுதலே தக்கது என்க)

6. உணவு மாறுபாடுகளால் உடல் துன்புறுவதுடன் உயிரும் துன்பமடைவதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். (945)

7. அளவான சரியான உணவால் உடல் ஆற்றல், பெறுவது மட்டுமன்றி, இன்பமும் அடைகிறது. அதுபோல் மறுபாடலின, அளவு குறைந்த அல்லது அளவு மிகுந்த அல்லது சரியில்லாத ஆணவால், உடல் ஆற்றலை இழப்பது மட்டுமன்றித் துன்பமும் அண்டகிறது. அதனால் நோயும் படுகிறது. (94)

8. பசித் தீயின் அளவு தெரியாமல், ஆசைத்தீயின் அளவுக்கு உண்பவனிடம் பலவகையான நோய்கள் வந்து சேரும். (947)

9. மருந்தென்பது தனியாக ஒன்று இல்லை. உணவுதான் மருந்தாகவும் மருந்துதான் உணவாகவும் பயன்படுகின்றன. உடல் பூதங்களின் சேர்க்கை பூதவியல் மூலகங்களே வேறு வேறு மணமும் சுவையும் நிறமும் கொண்டு அவரவர் மனவுணர்வுக்கும் காலம், இடம் இவற்றுக்கும் பொருந்திய வகையில் வேறு வேறு பெயர்களுடனும் உருவங்களுடனும் உணவுகள் என்று பெயர் பெறுகின்றன. இனி, உடலில், உணவு வகையில் சேரும் பல்வேறு மூலகங்கள், உடலின் பல்வேறு இயக்கங்களால் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப, ஆற்றலாக மாறிச் செலவிடப் பெறுகின்றன. அவ்வாறு செலவிட்டுத் தீர்ந்துபோன மூலகங்களை அறிந்து அவற்றையே உணவாகவும் அல்லது மருந்தாகவும் உண்ண வேண்டும். பூதவியல் மூலகங்களே இயற்கையாகக் கிடைக்கின்ற பொழுது உணவாகவும், செயற்கையாகப் பிரித்தெடுக்கப் பெறுகின்றபொழுது மருந்தாகவும் கருதப்படுகின்றன. ஆனால், மூலகங்கள் மருந்து என்னும் பெயருடன் செயற்கைப் பொருள்களாக மாற்றப் பெறுகையில், அவை சுவையும், அளவும், நிறமும் மாற்றப்பெற்று விருப்பமுடன் உண்ணுவதற்கு ஏற்பில்லாத தன்மைகளை எய்துகின்றன. எனவே, மருந்து என்ற வகையில் செயற்கை மூலகங்களை உண்ணுவதைவிட உணவு என்ற வகையில் இயற்கை மூலகங்களை மன ஏற்புடன் உண்ணுவதே தக்கது. ஆகவே மருந்து என்னும் நிலை பூதங்களால் ஆக்கப் பெற்ற உடலுக்குத் தேவையில்லை. நாம் முன்னர் அருந்திய உணவாகிய மூலகத்தில் எது குறைந்துவிட்டதோ, அதையே தேடி விரும்பி உண்ணின் அதுவே உடலுக்குப் போதுமானதாகும். 84ஆஉடலில் இரும்புச் சாரம் அற்றுப்போமாயின் இரும்புச் சாரமுள்ள புளிச்சக்கீரை, முருங்கை, கரிசலாங்காணி போன்றவற்றையும், சுண்ணச்சாரம் அற்றுப்போமாயின் எலுமிச்சை, சீமைக் கத்தரி,

போன்றவற்றையும், கந்தகச் சாரம் அற்றுப்போமாயின் தூதுவளை, அகத்தி முதலியவற்றையும் பொன்சாரம் அற்றுப்போமாயின், பொன்னாங்காணி முதலியவற்றையும் மருத்துவ நூல்வழித் தெரிந்து தேர்ந்து விரும்பி உண்ணவேண்டும் என்க.

இனி, மேலே கூறபெற்ற உணவு முறைகளை அறிந்து அவரவர் தம் அகவை, உழைப்பளவு, காலநிலை, இடநிலை, சுவை நிலை, பொருள் நிலை முதலியவற்றுக்குத் தக்கவாறான அளவு முறைகளுடன் பின்பற்றுவது, உடல் என்றும் நல்லியக்கத்துடனும் திறத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக அமையும் என்க.

3. போதுமான ஓய்வு

இனி, உடல் உழைத்தபின் அதற்குக் கட்டாயம் ஓய்வு தேவையானது. ஓய்வென்பது உழைப்புக்கும், உழைப்புக்கும் உள்ள இடைவெளி இரண்டு பொருள்களுக்கும் உள்ள இடைவெளி இடம் என்றும் இரண்டும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி காலம் என்றும், இரண்டு மாறுதல்களுக்கும் உள்ள இடைவெளி பொருள் என்றும் எவ்வாறு கணிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி இயக்கமற்றநிலை அஃதாவது ஓய்வு என்று கணிக்கப் பெறுகின்றது. உடலானது இயக்கம், அமைதி இயக்கம், அமைதி என்று மாறி மாறிச் செயல்படுகிறது. இயங்கும் நிலையால் அது வலிவும் வளர்ச்சியும், பயனும் பெறுகிறது. இயக்கமமற்ற அமைதி நிலையால், அஃது உயிர்ப்பும், ஊக்கமும், இன்பமும் பெறுகிறது. எனவே, ஓர் உடலுக்கு உழைப்பு எவ்வளவு தேவையோ, அவ்வளவு ஓய்வும் தேவை.

ஓய்வு என்பது உடலின் பழுதுபார்ப்பு முயற்சி; புத்துயிர்ப்பு நிலை; புத்தாக்கத்தேவை. எனவே ஓய்வு ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் இருக்கவேண்டிய கட்டாய நிலைப்பாடு. இதுபற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஓய்வு என்பது ஒவ்வொரு செயலுக்கும் முடிவில் உடலுக்குத் தேவைப்படும் அமைதி, உடல் மீண்டும் செயலில் ஈடுபடத் தன்னை அணியப்படுத்திக் கொள்ளும் முயற்சி அது உடல் உழைக்க உழைக்க, ஆற்றலை இழக்கிறது. அந்த ஆற்றலை உணவால் மீண்டும் உடலுக்குத் தருகிறோம். உணவு உண்ட உடனேயே அது செரித்து ஆற்றலாக மாறிவிடாது. அவ்வுணவு படிப்படியாகச் செரித்துக் குருதியாக மாறி உடலின் பல பகுதிகளுக்கும் போய்ச் சேர்ந்த பின்தான் உடலுறுப்புகள் மீண்டும் இயங்குவதற்குரிய ஆற்றல் பெறுகின்றன. எனவே அதுவரை உடல் சிறிது நேரம் ஓய்வாக இருக்க வேண்டுவது தேவையாகிறது. பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் சிறு சிறு ஓய்வு பெற்று இறுதியாக, நாள் முடிவில் ஒரு நீண்ட ஓய்வை உடல் எடுத்துக் கொள்ளுகிறது.

உடல் இயங்குவது ஒருவகைப் புறச் செயலானால், உணவு செரிக்கின்ற செயலும் ஒருவகையான அகச் செயலே. புறச்செயலை இயக்குவன புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், ஐம்பொறிகளாகிய கண்கள். காதுகள், முக்கு வாய், மெய் ஆகியன. அகச்செயலை இயக்குவன நெஞ்சாங்குலை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், கல்லீரல், நரம்புகள், நாடிகள் போலும் பல்வேறு நுண்ணிய உறுப்புகள்.

அதேபோல் அகவுறுப்புகள், அகச் செயல்களால் களைப்படைகின்றன. புறவுறுப்புகள் புறச்செயல்களால் களைப்படைகின்றன. ஆற்றல் இழப்பு என்பது வேறு; களிைப்பு என்பது வேறு. ஆற்றல் இழப்பு என்பது, உணவு வழியாகக் கிடைக்கப்பெறும் உயிர்ப்பாற்றல், உணவு முழுவதும் தீர்ந்து போனபின், இல்லாமற் போவது களைப்பு என்பது உடலும், உறுப்புகளும் உழைத்தலால் சோர்வு அடைவது.

சோர்வு அடைந்த உடலும், உடலின் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும், உழைத்த சோர்வு, அயர்வு, அல்லது தளர்வு நீங்கவும் மீண்டும் தங்களை உழைப்புக்குத் தகுதிப் படுத்திக் கொள்ள, கட்டாயம் தாங்கள் உழைத்த அளவு நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை ஓய்வில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த நேரத்தில், அவை அசைவற்று அமைந்து இருத்தல் தேவையாகிறது. எனவே உழைப்புக்குப் பின் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒய்வெடுத்துக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது.

சிலர் இளமைக் காலங்களில், முரட்டுத்தனமாக, ஓர் உந்துணர்வின் அடிப்படையில், ஓய்வின்றி உழைப்பதையே ஒரு பெருமையாகக் கருதிக்கொண்டு தொடர்ந்து உழைப்பதைப் பார்க்கிறோம். இதுபோல் உழைப்பவர்கள் விரைவில் உணர்வுகுன்றி, உடல்நலம் குன்றிக் கிழப்பருவம் எய்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, அத்தகையவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே இந்நிலைகளையெல்லாம் இங்கு விரிவாகச் சொல்லியாக வேண்டியுள்ளது.

இதில் இன்னும் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது. நாம் எடுத்துக்கொள்ளும் ஓய்வு போதுமானதாக இருக்க வேண்டும் என்பதே. எனவே, ஒவ்வொருவரும், தம் உழைப்பின் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை அவ்வாறு இயலாதவிடத்துக் கட்டாயம் நான்கில் ஒரு பகுதி நேரத்தையேனும் ஓய்வில் கழிக்க வேண்டும். அமைதியான ஓய்வு என்பது அமைதியான உறக்கமே. உறக்கத்தில்தான் அகவுறுப்புகளும், புறவுறுப்புகளும் நன்கு ஓய்வு கொள்ளுதல் முடியும். எனவே, செயலில் ஈடுபடுகிறவர்கள் போதுமான அளவு உறக்கம்

கொள்ளுவதையும், அந்தச் செயலுக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்றாகக் கருதுதல் வேண்டும். அந்நிலை, அவர்களை மேலும் அச்செயலில் ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்தோடிருந்து நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுதியாக நம்மை ஆக்கிக்கொள்ள இயலும்.

4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல்

உடல் உழைப்பே ஒருவகையான உடற்பயிற்சிதான். இருப்பினும், மனத்தை இயல்பாக இயங்க விடுவது ஒன்று; அதை நாம் சில நிலைகளில் இயக்க விரும்புவது ஒன்று. நாம் செய்யும் உழைப்பு, மனத்தை இயல்பாக இயங்க விடுவதைப் போன்றது. நாம் மனத்தைச் சில நிலைகளில் பயிற்றுவிப்பதைப் போன்றதே, உடலைச் சில நிலைகளில் பயிற்சியால் வளர்தெடுப்பதும், தகுதி பெற வைப்பதும்.

குறிப்பிட்ட உழைப்பால், உடல் ஒரே தன்மையில்தான் இயங்கிக் கொண்டிருக்க முடியும். ஒருவர் நெசவுத் தறியில் பணி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதால் குறிப்பிட்ட சில செயல் நிலைகளில் தாம் அவர் தம் உடலை இயங்க வைக்க முடியும். அதேபோல் தையல் பொறியில் பணியாற்றுபவரின், இயக்கம் எப்பொழுதும் ஒரே படியாகத் தான் இருக்கும். எழுத்தாளர்களுக்கோ, வலக்கையும், கண்கள் மட்டுமே இயங்க முடியும். பிற உறுப்புகளெல்லாம் இயங்காமல் இருப்பின் காலப்போக்கில் அவை தம் வலிமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் அன்றோ? அதற்காகத்தான் இதுபோலும் ஒரேவகைச் செயலைச் செய்பவர்கள், நாளுக்குச் சிறிது நேரமாகிலும் எளிய உடற்பயிற்சிகளால், தங்களின் பிற உறுப்புகளையும் இயக்கி, அவற்றையும் நன்னிலையில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் வலிமையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கே வலிமையான உடல் அமையும். உடலை நாம் எந்தச் செயலில் பழக்குகிறோமே அந்தச் செயலுக்குத் தக்கபடி தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. நோஞ்சான் உடலை உடைய சிலர், கொஞ்ச காலத்துக்குக் கடின உடலுழைப்புள்ள வினையைச் செய்து வருவார்களானால், அவ்வுழைப்புக் கேற்றவாறு, உடலும் வலிமைபெற்று விடுகிறது. உடல் இயக்கமற்ற பணிகளுக்கு உடல் வலிமை தேவையில்லாமல் போவதால், உடல் வலிமை குன்றுகிறது. இந்தப் பொது அறிவை நாம் உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு நம் உடலை இயக்கக் கற்றுக் கொள்ளுதல் மேலும் மேலும் ஒரு செயலைச் செய்கின்ற வகையில் தம் உடலை வலுப்படுத்திக் கொள்ள உதவும்.

எழுத்துப்பணி போலும் மென்மையான, அறிவுழைப் புள்ள

செயல்களில் ஈடுபடுவோர்க்கு, நாளடைவில் உடலில் உள்ள பிற உறுப்புகள் வலிமை குன்றும் அறிவு வளர்ந்தால் மட்டும் போதுமா? உடலும் வலிமை குன்றாமல் இருந்தால்தானே, அறிவுப் பணியையும் நாம் தொடர்ந்தும், திறம்படவும் செய்ய முடியும். எனவே, மென்மையான செயல் செய்பவர்கள் கட்டாயம் அதிகாலைப் பொழுதுகளில், உடல் முழுவதையும் இயக்க வல்ல உடற்பயிற்சிகளில் கட்டாயம் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், அவர்களின் உடல் அவர்களின் பணிக்கே, நாளடைவில் ஒத்துழைக்காமல் போய்விடும் என்பதை முன்னெச்சரிக்கையாகக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இதில், இன்னொன்றையும் நாம் கவனித்தல் மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சி என்று நாம் சொல்லும் பொழுது, மல்லர்கள், கடும் களரிப் பயிற்சியாளர்கள் (Gymnasts) போல், கடும் பயிற்சிகளை (Gymnastics) நாம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது தேவையில்லை. அதே துறையில் சிறந்து விளங்க வேண்டும், போட்டிகளில் ஈடுபட்டுப் பரிசுகளைப் பெறவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஈடுபட விரும்புவர்களே அவ்வாறு பல கடும் பயிற்சி முறைகளில் ஆர்வம் செலுத்தலாம்; கவனம் கொள்ளலாம்; காலையிலும் மாலையிலும் இதே வேலையாக உடற்பயிற்சிகளுல் ஈடுபடலாம். ஆனால் பொதுவான பிற வாழ்வியல் செயற்பாடுகளில் ஈடுபடும் பிறரும் அவ்வாறு கடுமையான பயிற்சிகளைச் செய்துதான் உடலை வலிவுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது அகத்தியமன்று. அத்தகையவர்கள், மென்மையான உடற்பயிற்சிகளை ஒவ்வொருநாள் காலையிலும், தவறாமல், தொடர்ந்து ஒர் அரை மணி நேரமோ, அதுவும் செய்ய நேரமில்லாதவர்கள் இருபது நிமையமோ (அதற்கும் குறைவான நேரத்தில் செய்யும் உடற்பயிற்சிகளால் அவ்வளவு பயன் ஏற்பட்டு விடாது. எனவே, அந்த அளவு நேரமாகிலும்) உடற்பயிற்சி செய்தால் போதுமானது. இயன்றால் மாலையிலும் அதே நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கலாம். ஆனால் இதை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிப்பது, உடல் நலத்தைப் பேணிக் காத்திடவும், உடலைச் சீராக நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும்.

பெரும்பாலும் இளமைக் காலத்திலிருந்தே, அல்லது தாம் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடும் காலத்திலிருந்தே இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. அத்தகையவர்களுக்கு, உடல் தொடர்ந்து நலமுடனும் உறுதியுடனும் இருப்பது உறுதி, அவர்களுக்குத் தலைவலி வயிற்றுத் தொடர்பான செரியாமை, வளித்தொல்லை, தொந்தி சரிதல், குடலிறக்கம், சிறுநீர்க்கோளாறு, மலச்சிக்கல் முதலியனவும், உடல் கொழுப்பேறி சதைபோடுதல், கைகால் மூட்டுகளில் வலியேற்படுதல், இடுப்பு வலித்தல், முதுகு வலித்தல், தோள் வலித்தல், கூன் போடுதல்,

விரைந்து முதுமையடைதல், உடல் தளர்ச்சி, சோர்வடைதல், அடிக்கடி களைப்புறுதல் முதலிய உடல் கோளாறுகள், நோய்கள் ஆகியவும் கட்டாயம் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை. உறுதியாக இவை வரவே வரா. உடல் நோயின்றி இருந்தால்தான் எடுத்த செயலைத் திறம்படவும், ஊக்கத்துடன் விடாமலும் செய்ய இயலும் இல்லெனில், உடல் நலிவால் செயலும் கெடும்; செயல் திறனும் குன்றும் வாழ்வும் கெட்டுப்போய், மனமும் மகிழ்வை இழக்கும்; இனி, அறிவு நலமும் குறைந்துவிடும். எவ்வளவு பணம் இருந்தாலும், உடல் நலமில்லாத நிலையை எய்தியவனால் ஒன்றுமே செய்ய இயலாது. அவன் பிறர் நலத்தோடு வாழ்வதைப் பார்த்துப் பொருமிக் கொண்டே இருப்பான்; தன்னையே உள்ளுர வெறுப்பான், நாளடைவில் அவன் ஒரு மனநோயாளியாகி, நடைப்பிணம் போல் வாழ்ந்து சாக வேண்டியதுதான். இந்த நிலையில் அவன் பல செயல்களைத் தெரிந்து கொண்டிருந்தாலும் எவ்வாறு அவற்றைச் செய்ய முடியும்? அந்த நிலையை அடைந்த சிலர், தம்மிடம் உள்ள பெரும் பணத்தால், பிறரை வைத்தேனும், அவர்களை ஏவியேனும், தாம் எண்ணிய செயல்களைச் செய்து விடமுடியும் என்று நம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், உடல் நலமில்லாத தொழில் முதல் உள்ளவர்களை, மற்றவர்கள் எளிதில் ஏமாற்றவே செய்வர். ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களையும் அத்தகைய முதலாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராமல் செய்து விடுவார்கள்.

நோயுள்ள ஒருவன் முதலில் தன் உடல் நலத்தை இழக்கிறான். அதன்பின் தன் மன உறுதியை இழக்கிறான்; மனவுறுதியிழந்தவுடன், தன்னம்பிக்கை போய்விடுகிறது. பிறரையே நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான்; பிறரை நம்பி ஒரு செயலைத் தொடங்குபவன், தன்னறிவை இழக்கிறான்; எனவே, பிறர்மேல் ஐயப்பாட்டையும் அவநம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுகிறான். உடனே குறுக்கு வழிகளில் பயன்கான விரும்புகிறான். அதற்காகக் குறுகிய மனப்பாங்கு உள்ள தீயவர்களின் துணையை நாடுகிறான். அவர்களால் அவனுக்கு ஒவ்வொரு நொடியும், நேரமும், நாளும் துன்பமே படர்கிறது.துன்பங்கள் படரப் படர எல்லா நல்லுணர்வுகளும் அவனிடத்தில் அழிந்து விடுகின்றன. அழிந்து விடவே, அவன் கடும் நோய்ப்பட்டு உடலையும் பிறகு உயிரையும் துறந்து விடுகிறான். அதன் பின் அவன் நன்னிலையில் உள்ளபொழுது தேடிய செல்வங்கள், அவனைச் சுற்றியுள்ள சோம்பேறிகளுக்குப் போய் வீணாகிக் கரைந்துவிடுகின்றன. இந்த விரிவான விளைவுப் படிநிலைகளை ஒவ்வொருவரும் மனத்தில் இருத்தி, நம்முடைய அரிய வாழ்க்கையை எவ்வாறு செயற்கரிய செய்து, அதால் வாழ்வாங்கு வாழ்ந்து வசையொழிந்து இசைபெற்று என்றும் நீடுபுகழ் எய்திட, நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல்

இனி, வினைத்திறன் உள்ளவர்கள் வினைகளில் அதிகம் ஈடுபாடு கொள்பவர் ஆகையால், உடல் அடிக்கடி அழுக்கடைவதற்கு இடம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் தம் உடலைச் சுறுசுறுப்புடனும், தூய்மையுடனும், நோயில்லாமலும் வைத்துக் கொள்ளத் தேவை உண்டாகிறது. உடல் தூய்மையுடன் இருந்தால்தான் மனமும் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால்தான் அறிவும் தூய்மையாக இருக்கும்.

உடல் தூய்மையில்லாத ஒருவர் அடிக்கடி உடல் நோயுறுகின்றார். அதனால், மனம் கெடுகிறது. உடல்மேல் நாட்டம் உண்டாகிறது. உடல்மேல் நாட்டம் கொண்டவர் மனவுணர்விலோ, அறிவுணர்விலோ, அவற்றின் வழிச் செயலிலோ நாட்டம் குறைகிறது.

புறந்துாய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

(298)

எனும் வாய்மை மொழியில் புறந்துாய்மை, அகந் துாய்மைக்கு அடிப்படையாகப் பேசப் பெறுதல் காண்க.

புறந்துய்மை என்பது உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நிலையையே வலியுறுத்துகிறது. அது நீரால் அமையும் என்பது. உடலை நாளுக்கு ஒரு முறையாகிலும் முழுவதும் நீர்விட்டுக் கழுவுதலும் மற்று எப்பொழுதும் திறந்தே கிடக்கின்ற புறவுறுப்புகளாகிய கைகள், கால்கள், முகம், வாய் இவற்றை அவ்வப்பொழுது நீரால் கழுவித் தூய்மை செய்து கொள்வதும் ஆகும். நம்மில் பலர் நாள்தோறும் குளிப்பதில்லை. உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் சூடு தணியவும், வியர்வை கழுவப்படவும் நீர்க்குளிப்பு மிகமிகத் தேவை என்று அவர்கள் உணர்வதில்லை. நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்து கொண்டிருப்பது போல், உடலாகிய கருவிப் பொருளையும் அவ்வப்பொழுது தூய்மை செய்யவே வேண்டும். அல்லாக்கால் அஃது அழுக்கடைகிறது; துய்மை கெடுகிறது. நலிவுறுகிறது; தன் இயக்கத்தில் குறைபடுகிறது; அக்கால் நாம் நினைத்த அல்லது எடுத்துக் கொண்ட செயல்களுக்கு அது தடையாக இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்த செயலாளர்கள், தங்கள் உடல்களை எப்பொழுதுமே தூய்மையாக வைத்திருப்பதன் தேவையை இயல்பாகவே உணருகின்றனர்.

பலரும் உடல் தூய்மை என்றால் வெறும் குளித்தல் என்றும், குளித்தல் என்றால் உடலில் நீர் வார்த்துக் கொள்ளுதல் என்றுமே பொதுவாக எண்ணியிருக்கின்றனர். ஆனால், குளித்தலின் இன்றியமையாமையை உணர்ந்திருப்பவர்கள், வெறும் நீர் விட்டுக் கழுவுவதாலேயே உடல் தூய்மையடைந்து விடாது என்று அறிவார்கள்.

நீர் விடுதல், தேய்த்தல், கழுவுதல், மறைவிடங்களில் சேரும் அழுக்குகளை அகற்றல், செயல்களுக்கும், உடல் இயக்கத்திற்கும் உதவும் உறுப்புகளைச் சிறப்பாகத் துய்மை செய்தல் என்பவற்றை ஒருவர் செவ்வையாக உணர்ந்திருத்தல் வேண்டும்.

நம்மில் எத்தனைப் பேர் குளிக்கும் பொழுது, சரியாகப் பல் விளக்குகிறார்கள்? கண்களைக் கை விரலால், நீர் கொண்டு உள்ளலம்பித் தூய்மை செய்து கொள்கிறார்கள்? காதுகளை விரலால் உள்குடைந்தும், மூக்குத் தொளைகளை விரலை உள்விட்டுத் துய்மை செய்தும், கொப்பூழ் போலும் அழுக்கடையும் இண்டு இடுக்குகளை விரலால் அழுத்தித் தேய்த்துக் குடைந்தும் கொள்கிறார்கள்? பலர், சிறுநீர் கழித்தவுடன், அவ்வுறுப்பை நீரால் கழுவுவதே இல்லை; பலர் மலங்கழித்தவுடன், எருவாயை வெளிப்புறம் மட்டுமே நீர் கொண்டு அலம்பும் தன்மையையே அறிந்திருக்கின்றனர். விரலில் நீர்விட்டு நீர்விட்டு, எருவாயின் உட்புறத்துச் சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மலப்பசையை, முரமுரப்பாக ஆகும் வகையில், தூய்மை செய்வதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஐயோ, இதனால் அவர்கள் எத்தனை வகையான உட்புறக் கீழ்ப்புற நோய்களை வருவித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலோர் விரல்களில் உள்ள உகிர் நகங்களில் உள்ள அழுக்கைக் குளிக்கும் பொழுது நீக்குவதோ, அல்லது அவ்வழுக்குகள் சேரா வண்ணம் உகிர்களையே ஒட்ட வெட்டுவதோ இல்லை. சிலர் கைவிரல்களில் உள்ள உகிர்களில் மட்டுமே கவனம் செலுத்துவதும், கால் விரல்களைப் பற்றியே கவலையில்லாமல் இருப்பதும் அறியப்படலாம்; அதனால் சிலரின் கால் விரல்களில் உள்ள உகிர்கள் வளைந்தும், சிதைந்தும், திருகல் முருகலாகியும், அழுக்கடைந்தும், வெடித்தும் இருப்பதைப் பார்க்கலாம். கால் விரல் இடுக்குகளை அவர்கள் கவனிப்பதே இல்லை. நம்மில் பலர் கால்களைக் கழுவுவது என்றால், முகம், கை, இவற்றைக் கழுவிய பின்னர், எஞ்சியுள்ள செம்பு நீரைக் கால்களின் மேல் ஊற்றிக் கொள்வது என்றே அறிந்திருக்கிறார்கள். ஒரு கால் பாதத்தால் மற்றொரு காலை நீர்விட்டு அழுந்தத் தேய்த்தும், பாதப் புறங்களைச் சொரசொரப்பான காறைத் தரையிலோ கல்லிலோ திருப்பித் திருப்பி நீர்விட்டு ஊற வைத்து, நொதி தோல்களைத் தேய்த்தும், அகற்றுவதே இல்லை.

அதனால் சிலர் பாதங்களும், பாதப் பக்கச் சுவர்களும், முருடுதட்டியும், வெடித்தும், அழுக்கடைந்தும், குழிகள் விழுந்தும் இருப்பதைப் பார்க்கலாம். சிலர் கால்களை முழங்கால் வரை கழுவுவதே இல்லை. தேவையானால், கால்கள் கழுவும் ஒவ்வொரு முறையும், எருவாய், கருவாய், தொடையிடுக்குகள் இவற்றையும் நீர்விட்டுக் கழுவுவது மிகவும் நல்லது. மலங்கழித்துத் தூய்மை செய்கையிலும், இரவு படுக்கைக்குப் போகு முன்பும் இவ்வாறாக நீர்விட்டு அலம்புதல்

பற்பலவாறான கீழுறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை. பலருடைய வியர்வை அவர்கள் கழிவுப் பொருள்களைப் போலவே தீ நாற்றமடிப்பதை மிகப் பலர் உணர்ந்திருக்கலாம். சிலரின் வாய்க்காற்றும் அவ்வாறு அடிப்பது உண்டு.

பலர் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன், வாயை நீர்விட்டுப் பலமுறை கொப்பளித்துத் தூய்மை செய்வதும் முகம் கழுவுவதும், கண்களில் உள்ள மலங்களையும், கசண்டுகளையும் நீர்விட்டு விரலால் தூய்மை செய்து கொள்வதும் இல்லை. இத்தகையவர்கள் அருகில் பிறர் நிற்கவும் அருவருப்பாக இருப்பதை அவர்கள் நினைப்ப தில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை.

இனி, இன்னும் பலர், குளிப்பது எனில் தலையை விட்டு மேலுக்கு மட்டுமே நீர் விட்டுக் கழுவுவது என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு நீர் விடாமல் குளிப்பது என்பதற்குப் பொருளே இல்லை. நாள்தோறும் உடலைக் கழுவுகையில், தலையையும் சேர்த்தே கழுவுதல் வேண்டும். தலையை விட்டுவிட்டு மேலுக்கு மட்டுமே நீர் வார்த்து வருவதன் கெடுதல் தன்மை, உடனே விளங்காது. ஆனாலும் காலப்போக்கில் கண், காது, மூக்கு, தொண்டை, தலை இவற்றுக்கு வரும் பலவகையான நோய்களை வைத்து விளங்கிக் கொள்ளலாம். சிலருடைய தலைமுடியில் நிறைய அழுக்கு மண்டியிருப்பதை, அவர்கள் தலைவாரிக் கொள்ளும் சீப்பைப் பார்த்தாலே விளங்கிவிடும். ஒரு முறை அவர்கள் தூய்மையான புதுச்சீப்பைக் கொண்டு, வாரிப்பார்த்து அறிந்து கொள்ளலாம். தலை அழுக்கடைவதுடன், பிசுக்கும் தீ நாற்றமெடுத்தும், பேனும் ஈரும் குடியிருக்கும் கூடாரமாக அவர்கள் தலை விளங்குவதை அவர்களே தாம் அறிய வேண்டும். இனி, குளிப்பதற்கு வெந்நீரைவிட, தண்ணிரே எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலையிலும் நல்லது. உடல் நலிவு, நோய் வாய்ப்பட்டிருக்கும் பொழுதும், எண்ணெய்க் குளியலின் பொழுதும் வெதுவெதுப்பான நீர் நல்லது.

உடல் தூய்மை என்பது, சிறு பருவம் முதலே அறிந்து கொள்ளப்பெறுவதும், பழக்கப்படுத்திக் கொள்வதுமான ஒன்று. பெற்றோர் தம் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நல்ல பழக்கங்களுள் இது மிகவும் முகாமையானது. இவையன்றி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நடைமுறைகள் நிறைய உண்டு அவற்றை வல்லார் வழியாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, இவையெல்லாம் செயலுக்குத் தேவையில்லை என்று கருதிவிடக் கூடாது என்பதாலேயே இவற்றை இவ்வளவு விரிவாக எடுத்து விளக்கவேண்டி வந்தது என்க.

6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்

இனி உடல்துய்மைக்கு அடுத்தபடி செயல்திறம் உடையவர்களுக்கு . நல்லெண்ணம் மிகவும் தேவை. பலர் நல்லெண்ணம் என்பதற்கும்.

நேர்மையான உணர்வுகளுக்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கின்றனர். நல்லெண்ணம் என்பது, தாம் வாழ்வது போலவே பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதும், நமக்குப் பிறரின் உதவி தேவையாயிருப்பதைப் போலவே, பிறர்க்கும் நம் உதவி தேவைப்படும் என்று கருதுவதும், நம்மிடம் பிறர் இணக்கமான அன்பு காட்டுவதுபோல், நாமும் எல்லாரிடமும் இணக்கமான நட்புணர்வோடு அன்பு காட்டுவதுமே நல்ல எண்ணங்களாகும். நேர்மையான உணர்வுகள் என்பன, அந்நல்லெண்ணங்களைக் கடைப்பிடித்தொழுகுகையில் மேற்கொள்ள வேண்டிய உணர்வுகள். அவை பொய்யாகவும், வஞ்சனையாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் நடவாமை. பிறரின் சிறு முயற்சியையும் பெரிதும் பாராட்டல் முதலியன. ஆனால் இவற்றிற்கும் கூட நல்லெண்ணம்தான் காரணம்.

ஒரு செயலைத் தொடங்கும் பொழுதே, அச்செயல் ஒருவருக்குப் போட்டியாகவோ அவரை வீழ்த்துகின்ற நோக்குடனோ தொடங்குவதாக எண்ணுதல் கூடாது. அல்லது அந்நோக்கத்துடன் தொடங்குதல் கூடாது. நமக்கும் அச்செயலுக்கும் உள்ள உறவு அல்லது இணைவு அல்லது பொருத்தம், நாம் அதைச் செய்யவேண்டுவதன் நோக்கம், அதனால் கிடைக்கவிருக்கும் பயன் போன்றவற்றையெல்லால் நல்ல எண்ணத்துடனேயே கருதிப் பார்க்க வேண்டும். அவ்வாறில்லை யாயின், அச்செயல் படிப்படியாக நசித்து வெற்றியடையாமல் போகும். காரணம் நம் முழு எண்ணமும் உணர்வும் அச்செயலில் படியாமல், நம் தவறான எண்ணங்களிலேயே தோய்ந்து, விளைவைக் கெடுப்பதுதான்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்

(178)

இப்பொய்யாமொழியுள் அக்கருத்து விளங்கித் தோன்றுவதைக் காண்க. இந்நிலையில் ஒருவர் எத்துணை அறிவு வாய்ந்தவராக இருப்பினும் கூட பயன்படுவதில்லை. அந்த அறிவும் தீயவற்றிலேயே பெய்யப்படுவதால், அதுவும் பாழாகவே போகும் என்பதைத் திருவள்ளுவப் பேராசான்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

(175)

என்னும் குறட்பாவில் நன்கு உணர்த்தியுள்ளார். இக்கருத்துகள் சாவிப்புப் போலவோ, ஊழ்வழிப் பட்டனவாகவோ உரைக்கப் பெற்றனவல்ல. மனவியலும், அறிவியலும் கலந்து செயன்மையைத் தாக்கும் இயல்பியல் அல்லது இயங்கியல் கோட்பாடுகள் வழியே உரைக்கப் பெற்றனவாகும். நமக்கு ஆக்கம் வேண்டும் என்றெண்ணுவது பிழையன்று; இன்னொருவருக்கு ஆக்கம் வருதல் வேண்டாம் என்றோ அல்லது அவருக்கு வருகின்ற ஆக்கம் நமக்கும் வரவேண்டும் என்றோ விரும்புவதுதான் தீயவெண்ணம். எனவே, பிறன் பொருளும் நமக்கு

வேண்டாம் நம்மால் பிறர்க்கு இழப்பும் நேரவேண்டாம் என்று எண்ணும் எண்ணம் உயர்ந்தது. அதே மன உயர்வைக் காட்டுவதாகும். அதுவே, நம்மைச் செயலில் ஊக்கும் மனப்பாங்காகும். அதுவே, வெற்றியை ஈட்டித் தரவல்ல விருப்பம்.

இறலினும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை என்னும் செருக்கு

(180)

இனி, செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு நல்ல நம்பிக்கையும் மிக வேண்டுவதாகும். நம்பிக்கை என்பது நல்லெண்ணங்களை ஊக்குவிக்கும் ஒரு மனவுணர்வு. இம்மனவுணர்வு இல்லெனின் அனைத்துச் செயல்களின் நடைமுறையிலும் அவநம்பிக்கை தோன்றி ஊக்க உணர்வைக் கெடுக்கும். அது செயலில் தொய்வை உண்டாக்கும். வருகின்ற நல்விளைவு எத்தகையது என்று தெரியாமற் போயினும், அதன்பாலுள்ள நம்பிக்கை நமக்கு அச்செயலுக்கான மன உரத்தையும் முயற்சியையும் கட்டாயம் தரும் தரவே அச்செயலில் நாம் முழு ஈடுபாடு காட்டி, நம் வினையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை உறுதியாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

(666)

நம்பிக்கையில்லாதவர்களுக்கு இவ்வுலகமே வெறுமையாகத் தோன்றும். அவர்கள் எதையும், எவரையும் ஐயப்பாட்டுடனேயே பார்ப்பர். எனவே, அவர்களின் செயல்களில் உறுதிப்பாடு இராது; தெளிவு இராது. முடிவு அண்மையில் இருக்கும்; அதில் வெற்றி இருக்கும் என்று நம்பாதவர்களுக்கு முயற்சியும் கூட முழுமையாய் இராது. எனவே, ஒரு வேளை தோல்வி ஏற்பட்டாலும் ஏற்படும். நம்பிக்கையின்மை தோல்வியைச் சந்திக்கின் மனம் தொய்ந்து போகிறது. எனவே, நாம் எடுத்துக் கொண்ட வினையில் நமக்கு வெற்றியுண்டாகும் என்ற நம்பிக்கை வேண்டும். இத்தகைய நம்பிக்கையால் உலகில் எத்தனையோ ஆக்கமான செயல்கள் நிகழ்ந்திருக்கின்றதைப் பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றும் உணர்ததிக் கொண்டிருக்கின்றன.

2. உள்ளச் சோர்வு

1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும்

உடல், உள்ள இயக்கத்திற்கு அடிப்படை என்று முன்னர் பலவிடங்களில் விளக்கப் பெற்றுள்ளது. நலம் குறைந்த உடல் உள்ளத்தையும் நலிவுறச் செய்கிறது. அது பொதுவான நடைமுறை. ஆனால் உடல் நலமாக உள்ளவர்களும், வேறு வகையான புறத்தாக்கங்களால், உள்ளச் சோர்வு கொள்கிறார்கள். இவ்வாறு ஏற்படுகின்ற உள்ளச் சோர்வு, நல்ல உடலையும் தாக்குகிறது.

வினையழுத்தங்கள், பணிச்சுமைகள், தொடர்ந்த தோல்வி, எதிரிகளின் மறைமுகமான எதிர்ப்புகள், பகைவர்களின் குறுக்கீடுகள், உடன் பணியாளர்கள் - தொழில் செய்பவர்களின் ஒத்துழைப்பின்மை அல்லது முரண்பாடுகள் குடும்பநிலைகள், பொருள் பற்றாமை, காலம், இடம் பொருந்தாமை, ஆட்சியாளரிடமிருந்து வரும் எதிர்ப்புகள், தாக்கங்கள் . முதலியவற்றால் ஒரு செயலில் ஈடுபடுபவரின், உள்ளம் தாக்கமுறுகிறது.

இவ்வகைத் தாக்கங்களில் ஒன்றோ இரண்டோ சிலவோ தொடர்ந்து வரும்போது, வினை செய்வார், மனச்சோர்வுறுவது இயற்கையாகவே அமைகிறது. இந்நிலைகளால் நாம் மனம் - உள்ளம் - சோர்வுற வேண்டியதில்லை. இவ்விடத்திலெல்லாம்,

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்

(627)



இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

(628)



இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.

(629)

ஆகிய மூன்று குறட்பாக்களின் பொருளுரைகளை நன்கு எண்ணி, உள்ளத்தைச் சோர்வுற விடாமல், துக்கி நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

நாற்கதியிலும் உள்ள உடம்புகள், இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து, தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார் என்றும்,

'தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாமல், வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான், தன் முயற்சியால் துன்பமுறான்' என்றும்

'வினையால் தனக்கு இன்பம் வந்துழி, அதனை (உடலால்) நுகர்தலன்றி, மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்துழியும் அதனை (உடல் நுகர்தலன்றி, மனத்தான் வருந்தான்' என்றும்,

இம்மூன்று திருக்குறள் மெய்யுரைகளுக்கும், உரையாசிரியர் பரிமேலழகர் எழுதும் பொருளுரைகளைத் தெரிந்து தெளிந்து, உள்ளச் சோர்வைப் போக்கிக் கொள்ளுதல் இன்றியமையாதது.

2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம்.

நம்மில் பெரும்பாலார் நாம் நம் உடலைப் பயிற்சியாலும், செயலாலும் இயக்குவதைப் போலவே, நம் உள்ளத்தையும் இயக்க முடியும் என்பதை அறிவதில்லை. உடல் பருப்பொருள்; உள்ளம் அதற்குள்ளிருந்து அடங்கி இயங்கும் நுண்பொருள்.

நாம் பருப்பொருளாகிய நம் உடலை இயக்குவது நமக்குத் தெரிகிறது; முடிகிறது. ஆனால் நம் உள்ளம், நாம் கண்களால் காண முடியாத பொருளாகையால் அதை இயக்குவதை அல்லது அது நம்மால் இயங்குவதை அறிய முடிவதில்லை. நம்மால் அறிய முடியாமலேயே அது நம்மால் இயக்க முறுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்கு, உடலைப் பயிற்றுவிப்பதைப் போலவே, உள்ளத்தையும் பயிற்சியால் இயக்க முடியும் என்று அவர்கள் அறியாமல் இருப்பதே காரணமாகும்.

3. உடலின் இரண்டு இயக்கங்கள்

நம் உடல் தானாகவும் இயங்கும்; நம்மாலும் இயக்கப்படும் அவற்றுக்கு விரும்பாச் செயல் (அநிச்சைச் செயல் விருப்பச் செயல் இச்சைச் செயல் என்று பொருள்.

நாம் விரும்பாலேயே சில உடல் செயல்கள் தாமாகவே நடைபெறுகின்ஹன. பார்க்க விரும்பாமலேயே கண் பார்க்கிறது; கேட்க விரும்பாமலேயே காது கேட்கிறது; நாம் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கவும், வெளியே விடவும் செய்யாமலேயே, வெளிக்காற்று தானாகவே மூக்குத் தொளைகளின் வழியாக உள்ளே போகவும், வெளியே வரவுமான, உயிர்ப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது; நம் வாயில் எப்பொழுதும் ஊறிக்கொண்டிருக்கும் உமிழ்நீர் நாம் விரும்பாமலேயே விழுங்கப்படுகிறது. இனி, நாம் விரும்பாமலேயே நம் உடலின் உள்ளுறுப்புகள் அவையவைபாட்டிற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றன; நெஞ்சாங்குலைத் துடிப்பு, செரிமான வேலைகள், குடல் இயக்கங்கள், அரத்த ஓட்டம் முதலிய நூற்றுக்கணக்கான உடலின் உள்ளுறுப்புப் பணிகள் எப்பொழுதும், நாம் விழித்திருக்கும் பொழுதும், துங்கும்பொழுதும், இறுதிவரை நடந்து கொண்டே இருக்கின்றன. இவை யாவும் விரும்பாச் செயல்கள் (அநிச்சைச் செயல்கள்) என்பதை நாம் அறிதல் வேண்டும்.

இனி, இவை போலவே விருப்ப இச்சைச் செயல்களும் நம்மில் நடைபெறுகின்றன. நாம் விரும்பி ஒரு பொருளைப் பார்க்கிறோம்; விரும்பி ஓர் இசையைக் கேட்கிறோம், விரும்பி ஒரு பொருளை உண்கிறோம்; விரும்பி ஓர் இடம் நோக்கி நம் கால்களை நடக்க விடுகிறோம்; விரும்பி நம் கைகளால் ஒரு வேலையைச் செய்கிறோம்.

இவ்வாறு, நம் உடல் நாம் விரும்பாமலும் இயங்குகிறது; நம் விருப்பத்துக்கும் இயங்குகிறது. இவ்விரண்டு இயக்கங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றை நாம் உணர்கிறோம்; அறிகிறோம். இங்கு, விரும்பாமல் நடக்கும் இயக்கங்களையே உணர்வதாக நாம் கூறுகிறோம். விரும்பி நடைபெறும் இயக்கங்களையே அறிவதாக நாம் குறிப்பிடுகிறோம்.

4. உள்ளத்தின் இரண்டு இயக்கங்கள்

இனி, உடலைப் போலவே, உள்ளத்திற்கும் இரண்டு இயக்கங்கள் உண்டு. அவையும் விரும்பா எண்ணங்களும் விருப்ப எண்ணங்களும் ஆகும். உடலின், உடல் உறுப்புகளின் அசைவுகளை இயக்கங்களைச் செயல்கள் என்று நாம் குறிப்பது போல், உள்ளத்தின் இயக்கங்களை அசைவுகளை அலைகளை - நாம் எண்ணங்கள் என்று கூறுகிறோம். (உடல் அசைவுகள், செயல்கள் எனப் பெறுவது போலவே உள்ளத்தின் அசைவுகள், அலைகள், எண்ணங்கள் ஆகின்றனர்.)

உடல் தானாகவும் இயங்குகிறது; நாமும் இயக்குகிறோம். உடல் தானாக இயங்கும் நிலை தொடர்ந்தும். இடைவிடாமலும் நடைபெறுகிறது. நாமாக உடலை இயக்கும் பணி தடைப்பட்டும், இடையிடை நின்றும் நடைபெறுகிறது. உடலின் தன்னியக்கம் நம் அறிவிற்கும், மனத்திற்கும் அப்பாற்பட்டு மூளை உறுப்பு வழியாகச் செயல்படுகிறது. உடலின் உந்து இயக்கம் நம் அறிவிற்கும் மனத்திற்கும் உட்பட்டு அதே மூளை வழியாகவே செயல்படுத்தப்படுகிறது. ஆக, உடல் தானாகவும் மூளைவழியாகவும் இயங்குகிறது; நம்மாலும் அதே மூளை வழியாக இயக்கவும் படுகிறது. இரண்டு செயல்களுக்குமே மூளை ஒரு கருவியாக உள்ளதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அது போலவே, நம் உள்ளமும் நம் மூளை வழியாகத் தானாகவே இயங்குகிறது. அதே மூளை வழியாக நம் அறிவாலும் இயக்கப்படுகிறது.

உடலின் இரண்டு வகை இயக்கங்களுக்குமே நாடி, நரம்புகள் மூளைக்குத் தொடர்புக் கருவிகளாக உள்லன.

உள்ளத்தின் இரண்டு வகை இயக்கங்களுக்கும் உணர்வு அலைகள் அஃதாவது எண்ண அசைவுகள் தொடர்புக் கருவிகளாக உள்ளன.

நாடி, நரம்புகள் நம் விருப்பத்திற்கும் இயக்கப் பெறுகின்றன; நம் விருப்பத்திற்கும் அப்பாற்பட்டு, அஃதாவது தன்னியக்கத்திற்கு உட்பட்டும் இயங்குகின்றன.

அதுபோலவே, உள்ளத்தின் உணர்வு அலைகளும் அஃதாவது எண்ண அலைகளும் நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு. |எழும்புகின்றன. நம் விருப்பத்திற்கு உட்பட்டும் எழுப்பப் பெறுகின்றன.

5. விருப்பம் என்பது என்ன ?

நம் விருப்பம் என்பது உடலை ஒட்டி எழுகிறது. உடல் துய்க்க விரும்புவதையும் விருப்பம் என்கிறோம்; உள்ளம் துய்க்க அஃதாவது உணர விரும்புவதையும் விருப்பம் என்கிறோம்.

உடல் துய்ப்பு, உள்ளத் துய்ப்பு இரண்டுக்குமே கருவி மூளையாகிறது. இனி, அறிவுத்துய்ப்புக்கும் கருவி மூளையே.

நம் அறிவுணர்வும் ஒரு வகையான அலை உணர்வே.

ஒலிக்கும் ஒளிக்கும் எவ்வாறு ஒலியலையும் ஒளி அலையும் ஆக இரண்டு வகையான அலைகள் இருக்கின்றனவோ, அர்வாறே நம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் இருவேறு வகையான அலைகள் உண்டு.

ஒன்று எண்ண அலை; மற்றது அறிவு அலை;
எண்ண அலை (உள்ள அலை) உணர்வு எனப்பெறும்.
அறிவு அலை அறிவு எனப்பெறும்.
உடல் அலை (அ) அல்லது அசைவு செயல் எனப்பெறும்.

இம்மூன்று செயற்பாடுகளுக்கும் மூளைதான் கருவியாக இருக்கிறது.

6. மொத்த இயக்கங்கள்

எனவே, நம் ஒவ்வொருவருக்கும் மொத்தம் ஆறு இயக்கங்கள் உள்ளன. உடல், உள்ளம், அறிவு - ஆகிய ஒவ்வொன்றுக்கும் இரண்டிரண்டு இயக்கங்களாக ஆறு இயக்கங்கள் உள்ளன. அவற்றை இவ்வாறு வகைப்படுத்தலாம்.

உடலுக்கு :
1. விரும்பா இயக்கம் அல்லது தன்னியக்கம்
2. விருப்ப இயக்கம் அல்லது செயல்.
உள்ளத்திற்கு :
1. தோன்றும் எண்ணம் அல்லது நினைவு
2. தோற்றும் எண்ணம் அல்லது எண்ணுவது அல்லது நனவு
அறிவிற்கு :
1. தானாய் அறிய வருதல் அல்லது அறிவு
2. நாமாய் அறிதல் அல்லது பகுத்தறிவு
(இது நம் பொறி, புலன்களால் அறிதல்)
7. ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா?

இவ்வாறு இயக்கங்களுக்கும் மேலான அல்லது வேறான ஏழாவது இயக்கமும் அதற்கான ஓர் உணர்வு அலையும் உண்டு. அதுவே மெய்யுணர்வு அல்லது மெய்யறிவு.

மெய்யுணர்வின் அல்லது மெய்யறிவின் காரணியாக - மூலப் பொருளாக நிற்பதே இறைமை. இவைபற்றியெல்லாம் விரிப்பின் பெருகுமாகலினாலும், அவை காலத்தால் உணரப்பெற வேண்டிய பேரறிவு ஆகலாலும், அவ்வகண்ட அறிவின் ஒரு சிறு கூறே இங்குத் தேவை கருதி விளக்கப் பெறுதல் போதும் ஆகையினாலும், இவ்விளக்கங்களை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

இனி, இவ்விடத்து நாம் கவனிக்க வேண்டியது, உள்ளத்தையும் நாம் இயக்க முடியும் என்பதே

8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும்

உடல் நலிவால் உள்ளம் ஊக்கமிழக்குங்கால், உடலுக்கு நலமூட்டி, அதன்வழி உள்ளத்தைச் சோர்வுறாமல் செய்யலாம். ஆனால், உடல் நலமாகவே இருந்து, வேறு பிற காரணங்களால் உள்ளம் நலிவுறுமானால், அதனை அறிவு கொண்டும் உடல் நலத்தையே முன் வைத்தும் தேற்றிக் கொள்ளுதல் வேண்டும்; ஊக்கப்படுத்தல் வேண்டும்.

நாம் உடல் நலமாக உள்ளோம்; வலிவாகவும் உள்ளோம். நாம் நன்றாக உள்ள பொழுது இந்த இடும்பைக்காக துன்பத்திற்காக - தொய்விற்காக இடையூறுக்காக நாம் ஏன் ஊக்கமிழக்க வேண்டும்? இந்த இழப்பை துன்பத்தை வேறு வகையாக ஈடுகட்டிக் கொள்ளலாமே. இதை ஏன் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டும் என்று அடிக்கடி எண்ணி மனந்தேற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்க.

உள்ளத்தை இயக்குவது அறிவு - என்பதைத் திருவள்ளுவப் பேராசான், நன்றின்பால் உய்ப்பது அறிவு 422) என்னும் குறட்பாவால் உணர்த்துகிறார். உய்ப்பது என்னும் சொல்லுக்கு இயங்குவது, செலுத்துவது, ஆற்றுப்படுத்துவது, உய்விக்கச் செய்வது, தேற்றுவது, மலர்த்துவது என்றெல்லாம் பொருள். எனவே, அவ்வப்பொழுது நேரும் உள்ளச் சோர்வை அறிவுணர்வால் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உற்றுணர்ந்து கொள்க.

3. அறிவுத் தளர்ச்சி
1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது?

உடல் நலிவுற்றால் உள்ளத்தால் ஊக்கமிழக்காமல் இருக்கலாம். அதேபோல் உள்ளம் சோர்வுற்றால் அறிவால் தேற்றலாம். இனி, அறிவே சோர்வுற்றால் என்ன செய்வது? பெரும்பாலும், உடல் நலிவு எல்லாருக்கும் தெரியக்கூடியதாக இருக்கும். பிறர்க்கும் தெரியும்; நமக்கும் தெரியும். அதை முழுவதுமே மூடி மறைத்துவிட முடியாது. உடல் நலிவு நோய்களாலும், உறுப்புகள் தாக்கத்தாலும், ஒய்வின்மையாலும், ஊட்ட உணவு பற்றாக்குறையாலும் வரும்.

2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு

உள்ளச் சோர்வு என்பது எல்லாருக்குமே தெரியக் கூடியதாக இராது. மிகத் திறமையான மனவுணர்வு உள்ளவர்களால்தாம் பிறருடைய உள்ளச் சோர்வைத் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள்

கண்டு கொள்ளாதபொழுது, நம் உள்ளம் சோர்வடைந்திருப்பது நமக்கு மட்டுமே தெரிய வரும் ஒரு செய்தியாகும். எனவே, இதனைப் பிறர்க்கு அல்லது ரெளிக்குத் தெரியாதவாறு நாம் மறைத்துக் கொள்ள முடியும். உலகில் பெரும்பாலார், இப்படித்தான், தங்களுக்குற்ற மனத்துயரங்களையும் சோர்வுகளையும் பிறர் அறியாதவாறு மறைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு மறைத்துக் கொள்வதுடன், பிறர்க்குத் தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளவர்கள் போலவும், தென்பை அல்லது ஊக்கத்தை இழக்காதவர்கள் போலவும், வெளிக்குக் காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஒருவாறு இப்படிச் செய்வது அவர்களுக்கு இரு வகையிலும் நன்மையாகவே இருக்கும். இன்னொரு படியில், இவருக்கு அண்மையிலிருப்பவர்க்கு தொல்லையாக, அஃதாவது அவரின் தாக்கம் பிறர்க்கும் துன்பம் தராததாக இருக்கும்.

3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள்

இனி, தங்கள் உள்ளச் சோர்வை மூடி மறைத்துக் கொள்பவர்களுக்கு விளைவதாகக் கூறும் இருவகை நன்மைகள் எவை? ஒன்று, தங்கள் உள்ளச் சோர்வையோ, துன்பத்தையோ பிறர் அறியமாட்டார்கள். அதனால் இவரை விரும்பாதவர்கள் இவரைக் குறைத்து மதிப்பிடவோ, இவர்மேல் பொறாமை கொண்டவர்கள், இவர் துன்புறுவதைப் பார்த்து மகிழ்ச்சியடையவோ முடியாது. அல்லது இவரைப் பகைப்பவர்கள் இவர் வீழ்ச்சியடைவதை எதிர்பார்க்கவும் இயலாது. இவ்வகையில் இவர்க்கு அந்நிலை நன்மையாகவே இருக்கும்.

இரண்டு, இவர் மெலிவை யுணர்ந்தால், இவருக்கு உண்மையாக உதவக் கூடியவர்கள் கூட, ஒரு வேலை உதவாமல் போனாலும் போகலாம். அந்நிலை, இவர் அத்துன்பத்திலிருந்து தம்மை உய்வித்துக் கொள்ளவும் அடுத்து மேலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும், முன்னேற்றிக் கொள்ளவும் இயலாமல் செய்துவிடும். இது அவருக்கு செயல்நிலை முடக்கத்தை உண்டாக்கிவிடலாம்.

அதுவுமின்றி, நாம் நம் மனச்சோர்வுகளையும் மனத் துயரங்களையும் பிறரிடம் கூறி அவர்களுக்கு ஏன் வருத்தத்தை உண்டாக்க வேண்டும்? இது பெரும்பாலானவர்களின் மனநிலைக்கு ஏற்றதன்று. நம்மேல் உண்மையான அன்பும் நட்பும் கொண்டவர்கள்தாம் நம் துன்பங்களையும் துயரங்களையும் மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டு, இரக்கமும் ஆறுதலுரையும் கூறுவார்கள். ஆனால் மற்ற பிறர் தங்களுக்குள் மகிழவே செய்வார்கள். இப்படித் தான் பெரும்பாலாரின் மனநிலை இருக்கும். இது மாந்த மனவியலைச் (Sodal Psychology) சார்ந்த உண்மையாகும். மேலும், நம்மைச் சூழ்ந்திருப்பவர்களின் மனநிலையை, இந்த வகையில் எடையிடுவதும்

கடினம். அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அல்லது என்ன நினைப்பார்கள் என்பதை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது. பெரும்பாலும் இவ்வுலகில் பிறரின் துன்ப துயரங்களைக் கண்டு உள்ளத்தில் மகிழ்கின்றவர்களே அதிகம். அவ்வாறில்லாமல், நல்ல பொதுவுணர்வுடன் நம்மேல் உண்மை அன்பு காட்டுபவர்களும் நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவர்களும் மிகமிகக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களை நாம் இனம் பிரித்தறிவது மிகமிகக் கடினம். இந்நிலையில் வீணாக ஏன் பிறரிடம் நம் துன்ப, துயரங்களைச் சொல்லுதல் வேண்டும்? ஒரு வேளை, நமக்கு மாறானவர்களிடம் நம் கேடுகளையும் மனத் துயரங்களையும் கூறிக் கொண்டு ஆறுதல் பெற விரும்புவதால், நமக்கு இரக்கம் காட்டும் உணர்வுக்கு மாறாக அவர்களிடமிருந்து இழிவும் எள்ளலும் சில நேரம் கெடுதலுமே நமக்கு வரவாக வரலாம்.

எனவே, நம் உள்ளச் சோர்வையும், துயரங்களையும் பிறரிடம் சொல்லாமல் இருப்பதே பொதுவில் நல்லது என்று கருதிக் கொள்ள வேண்டும்.

4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன ?

இனி, உள்ளச் சோர்வையே பிறரிடம் கூற வேண்டியதில்லை என்று ஆனபின், நம் அறிவுத் தளர்ச்சியை யாரிடம் போய்ச் சொல்வது? இதைத் தீர்மானிக்குமுன் அறிவுத் தளர்ச்சி என்றால் என்னவென்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்வது நல்லது.

ஒரு செயலில் நாம் ஈடுபடும்பொழுது, அச்செயலைப் பற்றி எழுகின்ற சிக்கலாலோ, அதனால் ஏற்படுகின்ற இடர்ப்பாட்டுச் சூழலாலோ, அல்லது அந்நிலையில் வரும் எதிர் விளைவுகளாலோ, நம் அறிவுக்கு ஏதோ விளங்காத ஒரு முட்டுப்பாடும் தளர்ச்சியும் உண்டாகும். சே! என்ன நம் அறிவு. அறிவில்லாமல் இதில் போய். இறங்கி விட்டோமே, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே. என்று நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியிருக்கும். அப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட செயல் மீதே நாம் வெறுப்புக் கொள்ள வேண்டி வரும். அல்லது சோர்வு கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் கூட நாம் சோர்வு அடைய வேண்டுவதில்லை.

5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை

அப்பொழுதும் எப்பொழுதும் நமக்கு ஒரு தன்னம்பிக்கை தேவை. நம் உள்ளம் சோர்ந்து போகும்பொழுதும் சரி, அறிவு தளர்வுறும் பொழுதும் சரி, 'இச்செயலை நம்மால் செய்ய முடியும். நாம் சோர்வடையத் தேவையில்லை நமக்கு இன்றைக்கு இந்நிலை உள்ளது. நாளை இந்நிலை மாறலாம். அல்லது மாற்றி விடலாம்' என்னும்

உள்ளத்துணிவும் அறிவுத் துணிவும் நமக்கு வேண்டும். அத்துடன் நம் அறிவின் மேலேயே நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் ஒரு தன்னுணர்வும் தேவை.

'நாம் இச்செயலை எப்படியும் முழு வெற்றியுடன் செய்து விடமுடியும்' என்பது தன்னம்பிக்கை. 'நாம் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் ஈடுபட ஈடுபட, இது பற்றிய முழு அறிவும் நமக்கு விளங்கிவிடும்' என்று எண்ணி ஊக்கம் பெறுவது தன்னுணர்வு. இவ்வுணர்வுகள் வளர வளர மேலும் நமக்கு உள்ள ஊக்கமும் அறிவூக்கமும் தோன்றிக் கொண்டே இருக்கும்.

6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்

அத்துடன், இன்னொன்றையும் நாம் செய்யலாம். இதற்குத் திருவள்ளுவப் பேராசான் ஊக்க உரையாகவும், உளவுரையாகவும் ஒன்றை நமக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு உள்ளமும் அறிவும், சோர்வும் தளர்ச்சியும் ஊறும் பொழுது, நமக்குத் தெரிந்த நண்பர்களுள் முதிர்ந்த பட்டறிவுள்ளவர்களுள் ஒழுக்கம் உடையவர்களை அண்டி நம் நிலைகளை எடுத்துச் சொல்லி, அத்தொய்வு நிலைக்கும் செயல் இடர்ப்பாட்டிற்கும் உள்ள காரணத்தைத் தெரிந்து, கொண்டு அவர்களின் வாய்ச் சொல்லின்படி நடந்துவிட வேண்டும் என்பார்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

(415)

அஃதாவது, 'வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடக்கும்பொழுது, நமக்கு ஊன்று கோல் போல் உதவுவன ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச் சொற்கள்' என்றார்.

செல்வம் உடையவரைச் சென்று கேளுங்கள்; அல்லது பதவி அல்லது 'அதிகாரம் உடையவர்களைப் போய்க் கேளுங்கள்; அல்லது கற்றவர்களைக் கேளுங்கள்' என்று அவர் அறிவுரை கூறவில்லை. 'ஒழுக்கம் உடையவரிடம் போய் விளக்கம் கேளுங்கள்' என்று பண்புடையாளர்களை நமக்கு ஆற்றுப்படுத்துகின்றார், ஏன்? செல்வம் உடையவர், செல்வ நாட்டம் கொண்டு மட்டும் நமக்கு அறிவுரை கூறுவாராம் பதவி அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள், நாம் எடுத்துக் கூறுவதை முழுவதும் செவ்வனே சிந்தியாமல், கட்டளைத் தோரணையிலேயே நமக்கு அறிவுறுத்துவார்களாம்; கற்றவர்கள் ஒருவேளை ஒழுக்கம், பண்பு அற்றவர்களாக இருப்பின், தவறான சூழ்ச்சிகள், குறுக்குப் பாதைகள், நெறியற்ற முறைகளில் நமக்கு வழிகாட்டி விடலாமாம். ஆகவேதான் ஒழுக்கமுடையவர் வாய்ச் சொல்லை, அவ்வக் காலத்தில் கேட்டுச் செய்யுங்கள்' என்றார்.

இதற்குப் பரிமேலழகர், 'கல்வியுடையரேனும், ஒழுக்கம் இல்லாதார், அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது' என்பது தோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார்' என விளக்கம் தருவார்.

எனவே, ஒருவர், தம் செயலுக்கிடையில் எதிர்ப்படும் அறிவுத் தளர்ச்சி கொள்ளுதல் தேவையில்லை; அவ்வாறு நேரினும், அதனைத் தம் உள்ளுணர்வாலோ அறிவு நம்பிக்கையாலோ, நம் அறிவால் இயலாத நிலையில், கல்வியொழுக்கம் நிறைந்த பண்புடையாளர் வழி, அவர் அறிவால் கண்டு காட்டிய தீர்வுகளைக் கேட்டறிந்து, மேலும் செயலின் கண் ஊக்கமுடன் ஈடுபடுதல் வேண்டும் என்க.

9. புறத்தாக்கம்

இது நமக்கு வெளியிலிருந்து வரும் தாக்கம். நம் செயலுக்கிடையில் அகத்தாக்கங்களாக வரும் உடல் நலிவு, உள்ளச் சோர்வு, அறிவுத் தளர்ச்சி ஆகிய மூன்றுமோ அல்லது அவற்றுள் ஒன்றோ, அல்லது இரண்டுமோ, நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் பொழுதோ, அல்லது தாக்காத பொழுதோ இப்புறத் தாக்கங்கள் வரலாம்.

இப்புறத்தாக்கங்கள் கருவிச் சேதம், துணைத் தொய்வு, எதிர்ச் செயல்கள், பொருள் முடை, காலப் பிறழ்ச்சி, இடம் பொருந்தாமை, ஆட்சி முரண் ஆகியன என்று முன்னர் கண்டோம்.

இங்கு அவை ஒவ்வொன்று பற்றியும் சிறு அளவில் விளக்கி விட்டு மேலே செல்லுவோம்.

1. கருவிச் சேதம்

கருவிச்சேதம் என்பது நம் செயலுக்கு உரிய கருவிகள் சேதமுறுவது அல்லது பழுதுபடுவது. அக்கால் வினை தடைப்படும். அத்தடை குறுகிய காலத் தடையாக இருக்கலாம். அல்லது கொஞ்சம் நீளலாம். இந்நிலையில் வரும் இடையூறுகளுக்காக நாம் வருந்திப் பயனில்லை. ஆனால் இவ்வாறு வரும் அல்லது அடிக்கடி நேரும் என்று அறிந்து, முன்னரே நாம் எச்சரிக்கையாக சேதமேற்படும் அல்லது பழுதுபடும் கருவிகளுக்குரிய சேமக்கருவியை அல்லது துணைக் கருவியை (Space) முன்பே வாங்கி வைத்திருக்கலாம். இவை அடிக்கடி பழுதுறுவனவாக இருப்பின் மலிவாகக் கிடைக்கும் இடங்களில் அல்லது காலங்களில் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி இருப்பில் வைத்திருக்கலாம். இப்படி அடிக்கடி சேதம் செய்யும் தொழிலாளர்களை மாற்றி, வேறு நல்ல தொழிலாளரை அமர்த்தலாம். இந்த வகை எச்சரிக்கைகளால் இதன்வழி ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கலாம்.

2. துணைத் தொய்வு

வினைக்குத் துணையாளர்களாலும், தொழிலாளர்களாலும் இடையூறு இது. சிறந்த வினைத்திறம் இல்லாதவர்கள், இடையிடை நின்று கொள்பவர்கள், ஒத்துழைப்புணர்வு அற்றவர்கள், குழுமனப்பாங்குள்ளவர்கள், முரண்படுபவர்கள் ஆகியவர்களால் வரும்

இடையூறுகளை, முறையான சிறந்த தொழிலாளர்களையும் துணையாளர்களையும் அமர்த்துவதன் வழி தீர்த்துக் கொள்ளலாம்.

{{gap}3. எதிர்ச் செயல்கள்

நம் செயலுக்கு ஏற்படும் எதிர்விளைவுகளும், நமக்கு எதிராகச் செயல்படுபவர்களுடைய செயல்களும் ஆகும். இவை பற்றியும் ஆங்காங்கு விளக்கப் பெற்றிருக்கின்றன. எனவே, இவை செயலுக்கிடை நேராதவாறு எச்சரிக்கையோடு இருப்பதுடன், இவ்விடையூறுகளுக்காக வருந்திக் கொண்டிராமல், மேலும் ஊக்கத்துடன் செயலைச் செய்து கொண்டிருப்பதே நல்லது.

4. பொருள் முடை

பொருள் முடை என்பது பொதுவாக எல்லாருக்குமே எல்லாவகைச் செயல்களிலுமே ஏற்படும் இடையூறுதான். பொருள் இழப்பு எதனால் நேர்கிறது என்பதையும், ஏன் ஊதியம் வருவதில்லை என்பதையும், உருவாக்கிய பொருள்களின் விற்பனைக் குறைவு, தேக்கம் ஏன் ஏற்படுகின்றன என்பதையும், மேலும் எவ்வெவ் வகையில் செயலை அல்லது தொழிலை விரிவாக அமைக்க அல்லது வளர்த்தெடுக்க முடியும் என்பதையும் தீவிரமாகச் சிந்தித்து இப்பொருள் முடையை நீக்கலாம்.

மற்றபடி பொருள்முடை ஏற்படும் பொழுதெல்லாம் கடன்வாங்கிச் செயலில் ஈடுபடுத்துவதும், இவ்வகையில் ஏற்படும் குருட்டுத் துணிவும், பின்னர் நம்மைப் பேரிழப்புக்கும் பேரிழிவிற்கும் பலவகையான தொல்லைகளுக்கும் ஆளாக்கிவிடும் என்பதை நாம் ஒன்றுக்குப் பத்து முறை நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

பொருள் நலிவு என்பதற்காக உருவாக்கிய விற்பனைப் பொருள்களை விலைகூட்டி விற்பதோ, மலிவாக விற்பதோ தேவையில்லாதது. சில நேரங்களில் அல்லது காலங்களில் விலை வீழ்ச்சியும் விலை உயர்ச்சியும் தவிர்க்க முடியாதவை. அக்கால் நம் முயற்சியை இடைக்காலத்துக்குத் தாழ்த்தி வைத்திருப்பதும் குற்றமில்லை. ஊக்கமும் முயற்சியும் உடையவர்கள் சில எதிர்பாராத நிலைகளில், தங்கள் செயலை முடக்கி வைத்துத் தாங்கள் செயல்படுவதினின்று ஒடுங்கி ஒய்ந்திருக்கலாம். அதில் தவறில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு அவர்கள் எந்த வினையிலும் ஈடுபடாத காலம், அவர்களை அவ்வுணர்வில் ஊக்கத்தில் - புதுப்பித்துக் கொள்ளப் பயன்படுகிறது. அது, சண்டையிடும் ஆடு எதிரியை மேலும் தாக்குவதற்குத் தன்னை ஊக்கப்படுத்திக் கொள்ள, பின்வாங்குவதைப் போன்றது என்பார்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.

(486)

எனவே, பொருல் முடையால், தட்டுப்பாட்டால், ஓர் அரிய செயலில் ஈடுபட்டிருப்பவர், அப்பொருள் நிலையைச் சரி செய்து கொண்டு, மேலும் அதில் தம்மை ஊக்கமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வருஞ் செயல் செய்வதிலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பதைச் செயல் திறமுடையவர்கள் உறுதியாகக் கொள்க.

5. காலப் பிறழ்ச்சி

அடுத்து, ஒரு செயலில் ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்யும் செயலைப் பொருத்தமில்லாத ஒரு காலத்தில் தொடங்கிவிடலாம். அல்லது அச்செயலைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்படி ஒரு காலம் வந்து அவர்களின் செயலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அந்த நிலையிலும் கூட அவர்கள் மனச்சோர்வு கொள்ளத் தேவையில்லை. அடுத்துவரும் காலம் அவர்களுக்கு ஒரு பொருத்தமான காலமாக இருக்கலாம். அதை எதிர்பார்த்து, அவர்கள் தம் முயற்சியில் தளர்ந்துவிட வேண்டுவதில்லை. அதற்காக தாம் சரியென்று கருதி மேற்கொண்ட செயலிலிருந்து விலகி விட வேண்டியதில்லை.

இவ்வுலகில் பலபேர் ஒரு செயலில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும் வரை ஈடுபடுவதை நாம் பார்ப்பது அரிது. ஒரு காலத்தில் ஒருவர் ஒரு தொழிலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். ஆனால் சிறிது காலம் சென்று மீண்டும் அவரைப் பார்க்கையில் தாம் வேறு வகையான ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுவார். அத்துடன் நில்லாது, முன்னர் தாம் செய்து கொண்டிருந்த தொழிலைக் கைவிட்டுப் பிறிதொரு தொழிலை மேற்கொண்டதற்கான காரணத்தையும் பலவாறு விளக்கிச் சொல்லுவார். இது ஒரு வகையில் சரியாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் சில காலம் சென்று அவரைப் பார்க்கையில், இரண்டாவதாகச் செய்து கொண்டிருந்த தொழிலையும் அல்லது செயலையும் கைவிட்டு விட்டு, அக்கால் வேறு ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார். இந்நிலைக்கும் ஒரு காரணத்தைப் புதிதாகச் சொல்லுவார். இவர் தம் வாழ்க்கை முழுவதும் இப்படியேதான் ஒன்றிலும் நிலை பெறாமல், ஆடு இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் தழையைக் கடித்துத் தின்பது போல், அலைவு மனம் கொண்டவராய், அலைந்து திரிவர். இந்நிலையைத் தவிர்த்துக் கொண்டால், காலப் பிறழ்ச்சியியால் வரும் இடர்ப்பாடுகளை இவர்கள் விலக்கிக் கொள்ள இயலும்.

6. இடம் பொருந்தாமை

செயலுக்குப் புறத்தாக்கமாக வருகின்ற இன்னொரு நிலை இடம் பொருந்தாமை நாம் ஒரு செயலை அமைத்துக் கொண்ட இடம் ஒன்றாக இருக்கும். ஆனால் அவ்விடம் அச்செயலுக்கு பொருந்துவதாய்

இல்லாமல் இருப்பது, செயலைத் தொடங்கிய பின்னர் தெரிய வரலாம். அந்நிலையில் அவ்விடத்தை உடனே மாற்றி, அச்செயலுக்குப் பொருத்தமாய் உள்ள வேறோர் இடத்தில் அதை மாற்றியமைப்பது நன்று. செயலுக்குக் காலம் எப்படி முகாமையானதோ, அப்படி முகாமையுடையது இடமும் ஆகும். எனவே, செயலுக்குரிய இடத்தைத் தேர்வது செயல் தொடங்குவதற்கு முன்னதாகவே செய்ய வேண்டுவது.

செயல் எத்துணைச் சிறந்ததாக இருந்தாலும், அது சரியான இடத்தில் தொடங்கப் பெற்றால்தான் சரியான முழுமையான பயனைத் தர முடியும்.

காடுகள் உள்ள பகுதியில் விறகுக் கடையும், கடலோரத்தில் இரும்புக் கடையும் வைத்தால் எப்படி? நாம் எடுத்துக் கொண்ட செயலுக்குத் தகுந்தாற்போல, பொருந்திய முறையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னரே, அந்தச் செயலை அல்லது வினையைத் தொடங்குதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கண்ட இடத்தில் ஒரு செயலைத் தொடங்கிவிடக் கூடாது, என்பது திருக்குறள்.

தொடங்கற்க எவ்வினையும்; எள்ளற்க முற்றும்

இடம்கண்ட பின்அல் லது

(491)

இத் திருக்குறளில் எள்ளற்க என்னும் சொல், "இடப் பொருத்தமில்லாமல் ஓர் இடத்தை ஒரு செயலுக்குத் தேர்ந்த பின், அச்செயல் பயன் தராத நிலையில், அச்செயலையோ, அதற்குத் துணையான வேறெந்தக் கூறையோ இகழ்தல் வேண்டா” என்னும் பொருளை விளக்கும்.

இனி, ஒரு செயலை ஏதோ ஒரு தேவையோ சடுத்தமோ கருதி ஓர் இடத்தில் தொடங்கி விட்டாலும், அது பயன் குன்றியிருப்பதைக் கண்டு, உடனே அச்செயலிடத்தை மாற்றி, அதற்குப் பொருத்தமான இடத்தை அமைத்துக் கொண்டால், அவ்விடப் பொருத்தமின்மையால் வரும் இடர்ப்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்க.

7. ஆட்சி முரண்

இனி, ஆட்சி முரண் என்பது செயல் ஆளுமையால் வரும் இடர்ப்பாடு என்க. இஃதன்றி, அதிகாரக்காரர்களால் வரும் இடர்ப்பாடும் ஆகும்.

ஒரு செயல் எத்துணைச் சிறப்பினதாக இருந்தாலும், எத்தனை அடிப்படைக் கூறுகளை நிறைவுறக் கொண்டிருந்தாலும், அஃது ஆளும் திறம் இல்லாமையால் கேடுறும் என்க.

செயலாளுமை என்பது தனிச்சிறப்புப் பொருந்தியது. 'ஒரு செயலில்

ஈடுபட விரும்பியவன் தன்மை, செயலினது தன்மை, செய்கின்ற முறை, அச்செயலைச் செய்கின்றவன் தன்மை - ஆகிய நான்கையும் எண்ணியே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

செய்வினை, செய்வான், செயல்முறை, அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

(677)

என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்து. செயல்முறை என்பது செயல் செய்கின்ற முறையையும் ஆளுமையையும் குறித்தது. செயலை உள்ளறிவான் என்பவனே அச்செயலைச் செய்ய விரும்பியவன். இவனே ஆளுமைக்கு உகந்தவன். இவன் தன்னாளுமை, தன்னுணர்வு, தன்னறிவு பெற்றவனாகவும், செய்யப் பெறுகின்ற செயலை முழுவதும் அறிந்தவனாகவும் இருத்தல் வேண்டும். தான் பலர் கருத்துக் கூறுவதைக் கேட்கும் உரிமையும், பொறுமையும், ஆர்வமும் உள்ளவனாக இருப்பினும், செயல் பற்றிய முடிவைத் தானே இறுதி செய்யக் கூடியவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லையானால் முடிவு சிதறும்; கெடும் சிறப்பு எய்துதல் கடினம்.

ஒருவர் எல்லாரையும் நிறைவு செய்தல் கடினம். எல்லாருக்கும் உகந்தபடி ஒருவர் நடக்க இயலாத நிலையில், தக்கவர் அறிவுரையைக் கேட்கலாம். ஆனால் அதையும் ஆளுமையுள் நிலைப்படுத்துதல் கடினம்.

எனவே, செயலாளுமை என்பது ஒன்றைக் கண்டறிதல், கேட்டறிதல், உசாவியறிதல், ஆய்தல், நடுநிலை உணர்வுடன் முடிவு செய்தல் என்னும் படிநிலைகளைப் பொறுத்தது ஆகும் என்று அறிக

இது வரை கூறியவற்றால் நாம் ஒரு செயலைச் செய்ய முற்படுகையிலோ, அது நடைபெறுகையிலோ, உடலாலும், அதன் வழி உள்ளத்தாலும், அவற்றின் வழி அறிவாலும், சில பல இடர்ப்பாடுகள் வந்து வாய்க்கலாம் என்றும், அவ்வாறு வரும் இடர்ப்பாடுகளை எவ்வாறு முன் எச்சரிக்கையுடன் இருந்து தடுத்து நிறுத்திக் கொள்ளமுடியும் என்றும், பலவாறு விரித்தும் ஒருவாறு தொகுத்தும் விளக்கப்பெற்றன.

செயலுக்கிடையில் வரும் அகப்புற இடர்ப்பாடு களாலேயே, பெரும்பாலான செயல்கள் நின்றுபோதல், உலகியல்பாக உள்ளதாலும், பெரும்பாலார் அதன் மேலும் செயலைத் தொடர்தல் இயலாமையாலும், இத்தலைப்பை இத்துணை விளக்கமாகவும் விரிவாகவும் கூற வேண்டி வந்த தென்க. இனி, அடுத்த தலைப்பிற்கு வருவோம்.