செயலும் செயல்திறனும்/துன்பம் கண்டு துவளாமை
1. தோல்வியும் துன்பமும்
செயலில் தோல்வி என்பது வேறு, துன்பம் என்பது வேறு. தோல்வி என்பது செயலினால் வருவது.துன்பம் செயல்களுக்கிடையில் வருவது, துன்பம் என்பது தோல்வியன்று. ஒரு செயலை வெற்றியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. தோல்வியாகச் செய்வதிலும் துன்பங்கள் உண்டு. இவ்விருவகைத் துன்பங்களும் அகமும், புறமும் ஆகும். செயலில் அகத்துன்பமானாலும் சரி, புறத்துன்பமானாலும் சரி, அவற்றால் நாம் மனச்சோர்வு கொள்ள வேண்டியதில்லை.
செயலினால் வரும் அகத்துன்பங்கள், செயல் முடக்கம் முதலீடு போதாமை, போதிய ஆள் துணையின்மை, கருவிப் பழுது முதலியவற்றால் வருவன. புறநிலைத் துன்பங்கள் உடல் ஒத்துழையாமை, எதிரிகள் இடையூறு, துணைப் பொருட் குறைவு, காலம் இடம் பொருந்தாமை முதலியவற்றால் வருவன. இவ்வகையான துன்பங்களுள் எது வரீனும், அத்துன்பத்திற்கான காரணத்தை ஆய்ந்து கண்டு, அதனைப் போக்குவதற்குரிய முறையைத் தேர்ந்து, அதைத் தீர்க்க வேண்டுமே அன்றி, அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டு, அறிவும், முயற்சியும், செயலும் முடப்பட்டு நிற்க வேண்டும் என்பதில்லை.
ஒரு செயலை இதுதான் நமக்குரியது என்றும், இதனால் தான் நாம் பயனோ, மகிழ்ச்சியோ, விளைவோ பெற முடியும் என்றும் கருதித் தேர்ந்து, ஈடுபாடு கொண்டு அதில் இறங்கிய பின், எதிர்பாராமல் வரும் அகப் புறத்துன்பங்களுக்காக நாம் அலமர வேண்டியதில்லை.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை (669)
என்பார் அறவாசிரியர்.துன்பம் வருபம்பொழுது, அச்செயலால் நாமோ, பிறரோ அல்லது உலகமோ பெறப் போகும் அச்செயலின் விளைவையும் பயனையும் எண்ணிப் பார்த்துத் துணிவாக அதில் ஈடுபட வேண்டும்.
2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது
துன்ப நிலைகளால் உறுதியாக இருக்க வேண்டிய உள்ளம், கலக்கமுற்று உறுதியிழக்குமாயின், மீண்டும் அது உறுதி பெறுவது கடினம். உள்ளத்தின் உடைவு கண்ணாடியின் உடைவைப் போன்றது. சரி செய்யப்பெற்றாலும் வலிவற்றதாகவே இருக்கும். எனவே, கலக்கமுற்று, மனம் துன்பத்திற்குள்ளாகமல் காப்பது அறிவின் பாற்பட்டது. அறிவால், மனம் கலக்கமுறாமல் காத்தல் வேண்டும்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)
ஒரு செயலின்கண் ஏற்படும் துன்பத்தால் மனம் கலக்கமுறு மாயின்' செயலிலும் ஈடுபாடு கொள்ளாமை நேரும். எனவே, செயல் தாழ்த்தமும், முடக்கமும், தேக்கமும் வினை நீட்டிப்பும் ஏற்படும். அக்கால இடைவெளியால் செயல் நாளுக்கு நாள் மிகவும் தொப்வுறலாம். எனவேதான் திருவள்ளுவப் பேராசான், கலங்காமல், வினைசெய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லாமல், அதனால் நேரும் தேக்கத்தையும், கால நீட்டிப்பையும் செய்ய வேண்டாம் என்று வேறு எச்சரிக்கிறார். துளங்குதல் என்பது மன அசைவைக் குறித்தல் போலவே, மன அச்சத்தையும் குறித்து, மேற்கொண்டு இயங்காத நிலைப்பாட்டையும் குறிக்கும். துன்பத்தால் தாக்கமுற்ற மனம் முதற்கண் வருந்தும். பின் அந்த வருத்தத்தை ஏற்படுத்திய வினைக்கண் மேலும் செல்ல அச்சப்படும் அவ்வச்சத்தால் சோர்வுற்றுக் காலத்தை நீட்டிக்கும். அக்கால் செயல், மேலும் வலிவிழக்கும். எனவே, துளங்காது, தூக்கம் கடிந்து அஃதாவது சோர்வால் செயலிழந்து நிற்காது, மேன்மேலும் அச்செயலில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்க. திருவள்ளுவப் பேராசான் மிகச் சிறந்த மனவியலாசிரியர்; ஆகையால், செயலின்கண் நேரும்.அசைவுகளிலெல்லாம் மனம் எவ்வெந்தத் தாக்கவுணர்வுகளுக்குட்படும் என்றும் அவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் என்றும் உணர்த்தினார் என்க.
3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை
ஒரு செயலின் கண், அச்செயலால் வரும் துன்பம் இருக்கவே செய்யும். துன்பமில்லாத செயல் உலகத்தில் ஒன்றும் இல்லை. தாம் எடுத்துக் கொண்ட செயலுக்கேற்றபடி துன்பமும் குறைத்தோ, மிகுத்தோ வரும். செயல் எளிதாயின் அதனால் வரும் துன்பமும் எளிதாகவே இருக்கும்; செயல் வலியதாயின் அதனால் வரும் துன்பமும் வலிதாகவே இருக்கும். வலிய செயலுக்கு எளிதான துன்பம் வராது; வலிய துன்பம் வரும்.
எனவே, செயலை வலிதாக எடுத்துக் கொண்டவர்கள் வலிதான துன்பத்தையே எதிர்கொள்ளும் அளவுக்கு மனத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ளவேண்டும். எந்தச் செயலையும் எவரும் எளிதாகக் கருதிவிடுதல் வேண்டா. சிறிய கல்லைப் பெயர்த்தெறிவதற்குச் சிறிய வலிவே போதும். பெரிய கல்லைப் பெயர்ப்பதாயின் பெரிய வலிவே
வேண்டும். பெரிய கல்லைப் பெயர்ப்பதில், சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு வேண்டிய சிறிய வலிவே போதும் என்று எண்ணிவிடக் கூடாது. சிறிய கல்லைப் பெயர்ப்பதற்கு நமக்கு இயல்பாக உள்ள உடல் வலிவே போதுமானதாக இருக்கலாம். ஆனால் பெரிய கல்லைப் பெயர்ப்பதற்குப் போதுமான உடல் வலிவுடன், மனவலிவும், அறிவு வலிவும் தேவையாக இருக்கலாம். அக்கால் உடல் துன்பமும், மனத் துன்பமும், அறிவுத் துன்பமும் இருக்கலாம். இன்னும் தேவையானால் ஒரு துணைக் கருவியும் வேண்டுவதாக இருக்கலாம். இந் நால்வகைக் கரணப் பொருள்களையும் கொண்டு ஒரு கருமத்தைச் செய்யுங்கால், அந்நால்வகைக் கரணப் பொருள்களாலும் வரும் துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டுமன்றோ? அக்கால் துன்பம் அளவில் பெரிதாகத்தானே இருக்கும். அதற்காக மலைத்து நிற்க முடியுமா? மலைத்து நின்றால் செயல் என்னவாது? எனவே செயலை விரும்பியவர் துன்பத்தையும் எதிர்பார்க்க வேண்டும்; இன்னுஞ் சொன்னால் அத்துன்பத்தையும் விரும்ப வேண்டும்.
4. துன்பம் என்பதன் பொருள்
துன்பம் என்பது வேறொன்றுமில்லை; செயலால் வரும் எதிர்வுநிலை, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு எதிரான, அதற்கு நிகரான ஒரு எதிர்ச் செயல் உண்டு என்று முன்பே கண்டோம் இல்லையா? அந்த இணையான எதிர் விளைவு தான் துன்பம்.துன்னுதல் என்றால் பொருந்துதல். இதன் வேரடியாகப் பிறந்த சொல்லே துன்பம். எனவே துன்பம் எனில் பொருந்தி வரும் எதிர்ச்செயல் என்பதே பொருள். ஒரு செயலுடன் பொருந்திவரும் எதிர்ச்செயலே துன்பம் எனப்படுவது. எதிர்ச்செயல் இல்லாமல் ஒரு நேர்ச்செயல் இல்லை. ஒரு கல்லைப் பெயர்க்கும் பொழுது, நாம் எத்தகைய ஆற்றலை அக்கல்லின் மேல் செலுத்துகிறோமா, அதே ஆற்றலை அக்கல்லும் நம்மேல் செலுத்துகிறது. நாம் நம்முடைய உடல் வலிவைக் கொண்டு ஆற்றலைக் கொண்டு அக்கல்லைப் பெயர்க்கும்பொழுது, அக்கல்லும் அதன் எடை வலிவைக் கொண்டு, நம்மை எதிர்த்துச் செயல்படுகிறது. அந்த ஆற்றலை வெல்லுவதே நாம் அந்தக் கல்லைப் பெயர்ப்பது. சிறுபையன் ஒருவன் அந்தக் கல்லை அசைக்கவும் முடியவில்லை என்பது, அச்சிறுவனின் உடல் ஆற்றலைவிட, அக்கல்லின் கன ஆற்றல் மிகுதியாக உள்ள தென்பதே பொருள்.
எனவே, ஒரு செயலால் வரும் எதிர்ச் செயலேதுன்பம், அவ்வெதிர்ச் செயலுக்கு மீறிய செயலாக, நம் ஆற்றலையும், அது மட்டும் போதாதபொழுது நம் மன ஆற்றலையும், அதுவும் போதாதபொழுது நம் அறிவாற்றலையும், அதுவும் போதாத பொழுது ஒரு துணைக் கருவியின் ஆற்றலையும் சேர்த்து அக்கல்லின் கன ஆற்றலை நாம் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே செயல்.
5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம்
இப்பொழுது இக் கல்லைப் பெயர்க்கும் செயலை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். நாம் பெயர்த்தெறியும் கல்லுக்கு உள்ள ஆற்றல் அதன் எடையே. அல்லது கணமே. ஆனால், அக்கனத்தை - அவ்வெடையைப் போலவே நம் கனமும் அல்லது எடையும் இருந்தால் நாம் எவ்வாறு அக்கல்லைப் பெயர்க்க முடியும்? அக்கல்லுக்கு அதன் எடை ஒன்றுமட்டுந்தான் ஆற்றலாக அமைகிறது. அதற்கு வேறு பிற ஆற்றல்கள் இல்லை. அஃதாவது அக்கல்லுக்கு மன ஆற்றலோ, ஒரு துணைக் கருவியைப் பயன்படுத்தும் ஆற்றலோ இல்லை. ஆனால் நமக்கோ நம் உடலின் எடையாற்றலைவிட, மன ஆற்றலும் அறிவாற்றலும் கருவியாற்றலும் கூடுதலாக இருக்கின்றன. எனவே, அக்கல்லின் எடையாற்றலை வெல்ல, நம் உடலின் எடையாற்றல் போதாத பொழுது, நம் மன ஆற்றலையும் பயன்படுத்துகிறோம்.
மன ஆற்றல் என்பது நாம் அக்கல்லைப் பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகின்ற எண்ணம். அதன் உறுதி. எண்ணம் ஒரு நுண்ணுணர்வுதானே. அதற்கு ஆற்றலுண்டா என்று கேட்கத் தோன்றுகின்றதா? ஆம் எண்ணத்திற்கு வலிவுண்டு எண்ணத்தின் வலிவு பொதுவாக நமக்குத் தெரிவதில்லை. எண்ணம் ஒரு வகை நுண்ணிய அலைகளை உண்டாக்குகிறது. ஆனால், அது காற்றைப் போலவோ ஒளியை அல்லது ஒலியைப் போலவோ, உணரப் பெறுவதில்லை. அவ்வெண்ண அலைகள் அவற்றினும் மிக நுண்ணிய வாகையால், பிறவற்றைப்போல் நாம் அதை அவ்வளவு எளிதாக உணர்வதில்லை. ஆனால், அவ்வலைகள் அவ்வொலி, ஒளி அலைகளைவிட, மிக நுண்ணியனவும், மிக வேகம் உடையனவும் ஆகும்.
மின்சார அலைகள் எவ்வாறு மின் விசிறியை - உந்ததத்தை இயக்குகின்றனவோ, அவ்வாறே எண்ண அலைகள் பருப்பொருள்களின் மேல் இயைந்து அவற்றை இயக்குகின்றன. ஆனால், பருப்பொருள்களை அவ்வலைகள் இயக்குவதை நாம் உணர்வதைவிட, உயிர்ப்பொருள்களை அவை இயக்குவதை நாம் எளிதில் உணர முடியும். எண்ண அலைகள் உயிராற்றலுடன் கலந்து உயிர்ப் பொருள்களை இயக்குகின்றன. அல்லது ஆட்சி செய்கின்றன. ஆனால், இயக்கப் படும் உயிர்ப் பொருள்களின் நிலைகளும், அவற்றின் ஆற்றல்களுக்கு ஏற்ப அவ்வெண்ண அலைகளுக்கு ஆற்றலை மிகுத்தோ, குறைத்தோ செயல்படுதல் வேண்டும்.
6. எண்ண அலைகள், ஆற்றல்கள்
பெரும்பாலும், நம்மிடத்துத் தோன்றும் எண்ண அலைகள் நம்முடைய உடலை இயக்கவே போதுமான அளவில் ஆற்றலில் இயங்குகின்றன; அவை பிறருடைய உடலை இயக்குமாறு எழுப்பப்பெற வேண்டுமானால், இயக்கப்படும் ஒருவருடைய உடலாற்றலினும், அவருடைய எண்ண ஆற்றலினும் வலிவுடையனவாக, எழுப்பப்பெறல் வேண்டும். மீண்டும் அந்தக் கல்லைப் பெயர்க்கும் கதைதான். முதலில், பிறருடைய எண்ண ஆற்றலைச் செயலிழக்கச் செய்யவும், அதன்மேல் அவருடைய உடலை இயக்கவும் போதுமான வலிவுடன் நம் எண்ண ஆற்றல் செயல்பட்டால்தான் நாம் பிறருடைய உடலை எண்ணத்தினால் இயக்க முடியும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். (676)
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)
தெரிந்த இனத்தொரு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (462)
எண்ணித் துணிக கருமம் (467)
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின் (497)
பொருள் கருவிகாலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (675)
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உறைப்பான் தலை. (687)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு. (595)
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. (598)
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)
என்பனபோல் வரும் இடங்களில் எல்லாம், நாம் மேலே கூறிய உண்மைகள் புலப்படுத்தப் பெற்றுள்ளவற்றை ஆய்ந்து கண்டு கொள்க. மேலும் இவற்றுள் எண்ணமும் அதற்கிடனாய் உள்ளமும் வேறு வேறு கரணிய கருமங்கள் பற்றி மாறி மாறிக் கூறப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் விரிக்கின் மிகப் பெருகுமாகலின் ஈண்டு இந்த அளவில் மட்டும் கூறப்பெற்றன.
7. எதிர்ச் செயலே துன்பம்
இனி, ஒரு செயலுக்கு எதிராக வரும் தாக்கச் செயலே துன்பமாகத் தோன்றுகிறது என்னும் உண்மை தெரியப்பெற்ற பின், இதையறிந்த அறிவுள்ளவர்கள் இத்துன்ப நிலைகளை உள்ளத்தளவிலேயே தவிர்த்துக் கொள்ளும் உணர்வுப் பாடறிந்தவர்க ளாதலின், இத்துன்பங்கள் இவர்களிடத்தும் தோன்றாவாம் என்க.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)
என்பதில் இக்கருத்தைப் பேராசான் புலப்படுத்துவார். இனி இதனினும் மேலாக, இத்தகையவர்கள் இத்துன்பத்திற்கே துன்பம் விளைவிப்பார்கள் என்பார் இவர்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623)
இக்கருத்தையொட்டி இவர் திருக்குறளுள் எடுத்துரைக்கும் பல கருத்துகள், இன்னும் விரிவாகவும், விளக்கமாகவும் இது தொடர்பாக உண்மைகளை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
உடல் என்பது செயல் கருவி என்பதையும், எனவே செயல்களுக்கிடையில் வரும் துன்பங்கள் என்னும் எதிர் நிலைச் செயல்களால் உடல் ஒவ்வொரு நிலையிலும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)
8. துன்பத்தை வரவேற்க வேண்டும்
எனவே, துன்பத்தை நாம் வரவேற்கவே வேண்டும். அத்துடன் மட்டும் அமையாமல் இன்பத்தை எதிர்பார்க்கவும் கூடாது என்பார் அவர். ஏனெனில் துன்பம்தான் உயிர்களுக்கு இயற்கையேயன்றி இன்பம் அன்று. துன்பங்களுக்கிடையில் தான் இன்பம் வரும் என்று எண்ண வேண்டுமேயன்றி, இன்பங்களுக்கிடையில் துன்பம் என்று எதிர்நிலையாக இயற்கைக்கு மாறாக எண்ணிக் கொண்டு, இடர்ப்படலாகாது என்பார் உலகியற்கைப் பேராசிரியராகிய திருவள்ளுவர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)
இனி, இவையே மட்டுமல்லாமல் துன்பத்தையே இன்பம் என்று கொள்ளுதல் வேண்டும் என்பதும் அவரின் மெய்ப்பொருள் சான்ற கருத்தாகும்; அவ்வாறு கொண்டால்தான் தம் பகைவரும் தம்மை விரும்பும்படியான பெருமையை ஒருவர் பெறமுடியும் என்கிறார் அவர். அவ்வாய் மொழியைப் பாருங்கள்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. (630)
9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள்
இன்பம் என்பதும் துன்பம் என்பதும் ஒரே செயலின் இரண்டு தன்மைகள். ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை. அவ்வாறு இயங்கச் செய்யவும் முடியாது. உடம்பு செயலுக்குரியது. செயலோ துன்பத்திற்கும் இன்பத்திற்கும் இடையில் இயங்கும் ஒர் அசைவுப் பொருள். எனவே உடம்பு துன்பத்திற்கும் இன்பத்திற்கும் பொதுவான ஒர் அச்சு. நம்மால் இன்பத்தை ஏற்று நுகர்வதைப் போல் துன்பத்தை ஏற்று நுகர முடியாமல் போவதால், துன்பமே பெரிதாகத் தோன்றுகிறது. இன்னுஞ் சொன்னால் இன்பமும் ஒரு துன்பமே. துன்பமும் ஒர் இன்பமே. மெய்ப்பொருளடிப்படையில் கூறுவதானால், மிகுந்த இனிப்பு கசப்பாவுதுபோல், மிகுந்த இன்பம் மிகுந்த துன்பத்திற்கே அடிப்படையாக விளங்குவதால், உயிர் கூறுகளுக்குத் துன்பமே மிகுதியும் நுகரப் பெறும் உணர்வாக விளங்குகிறது. இன்பமோ சட்டென்று மாய்ந்துவிடும் ஓர் உணர்வாக விளங்குகிறது. எனவே, திருவள்ளுவப் பேராசான் உடம்பே துன்பத்தை இட்டு நிரப்பும் கலனாக உள்ளது என்றார். உடம்பே ஒரு துன்பம். அஃது உயிருக்குச் சுமை என்னும் மெய்ப்பொருள் உண்மையினையும் எடுத்து விளக்குகிறார். கீழே உள்ள இரண்டு திருக்குறட்பாக்களையும் கவனியுங்கள்.
இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு. (1029)
மற்றுத் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (345)
10. துன்பமே இன்பம் ; இன்பமே துன்பம்
இனி, துன்பமே இன்பம்; இன்பமே துன்பம் என்னும் உண்மையை உணர்ந்தபின் இன்னோர் உண்மையையும் அதனை ஒட்டி நாம் உணர்தல் வேண்டும். அஃதாவது துன்பத்தை நாம் நுகரவில்லையானால் இன்பத்தையே நுகர முடியாது. இருள் விலகுவதுதானே ஒளி? எனவே இருள் இல்லையானால், ஒளியை நாம் எவ்வாறு உணர்வது?
'நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்' என்னும் உண்மை, ‘ஒருவன் நிழலின் அருமையை, அதன் இன்பத்தை அறிய வேண்டுமானால், அவன் வெய்யிலிலே நின்று விட்டு அதன் பின் நிழலிலும் நின்றுதான் அறியமுடியும்’ என்பதையே உணர்த்துகிறது.
எனவே, துன்பம் என்பதைத் தவிர்க்கவோ அதனின்று தப்பவோ எவராலுமே முடியாது என்பதைத் தெளிதல் வேண்டும். காலமுழுவதும் ஒருவன் நிழலிலேயே இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. உடலியல் தன்மை அவ்வாறு அமையவில்லை. நிழலிலேயே உடல் தொடர்ந்து இருந்தால், அது நோயுறுகிறது. வெய்யிலிலும் நிழலிலும் மாறி மாறி இருந்து பயிலுமாறே உடலின் இயற்கைத் தன்மை அமைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்தல் வேண்டும். அதுபோலத்தான் நம் உள்ளத்தின் தன்மையும் பலவாறான உணர்வு நிலைகளை மாறி மாறி உணர்கின்றபடியாக இயற்கையால் அமைக்கப் பெற்றுள்ளது. ‘இடும்பையாவது உள்ளத்தின் ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை’ என்பார் பரிமேலழகர்.
உடலால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலை ‘வீரம்’ என்று நாம் சொல்வதுபோல், உள்ளத்தால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலையும் ‘வீரம்’ என்றே கருதுதல் வேண்டும். பருப்பொருள் தாக்கத்தை உரமுற்ற உடல் தாங்கிக் கொள்வதுபோல், நுண்பொருள் தாக்கமாகிய துன்பத்தையும் உரமுற்ற உள்ளம் தாங்கிக் கொள்கிறது.
இவ்வாறு துன்பத்திற்குத் துவளாமல் எதிர்நின்று ஏற்றுக் கொள்பவர்களையும் அவர்கள் செய்யும் வினைகளையும் திருவள்ளுவப் பேராசான், ‘உயிர் அஞ்சா மறவர்’ (778), ‘ஊறு அஞ்சா வன்கண்’ (762, ‘கூடி எதிர் நிற்கும் ஆற்றல்’ (765), ‘மனத்திட்பம்’ (661), ‘தாழாது உஞற்றுபவர்’ (620), ‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர்’ (597), ‘அறிவறிந்து ஆள்வினை’ (618), ‘அறிந்தாற்றிச் செய்தல்’, (515), என்று பலபடப் பாராட்டிப் பெருமைப்படுத்திக் கூறுவார். அவர்களின் உழைப்பை ‘எருது போல் உழைத்தல்’ (624) என்றும் உவமை கூறி அமைவு செய்குவார்.
ஆகவே, ஒரு வினையையோ, செயலையோ மேற்கொண்ட ஒருவர், அகப்புறத் தாக்கங்களாகிய துன்பத்தாலோ வேறு பிறர் செய்யும் தடைகளாலோ, பொருள் தொய்வுகளாலோ இடை நிறுத்தம் இன்றியும் (472), இறுதி வரையிலும் (663) செய்து முடித்தல் வேண்டும் என்பதை உறுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.