செயலும் செயல்திறனும்/முன்மொழிவுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்மொழிவுரை

ஐம்பத்தாறு தொடர்களாக - ஏழாண்டையும் கடந்த ஒரு நீளிய காலப் பரப்பினிடையில் - தமிழகச் சிறார்க்கென மாதம் பாடியாகப் பறந்துலவித் திரியும் தமிழ்ச்சிட்டு இதழின் ஆசிரியவுரைப் பகுதியில் பதிப்பேறிவந்த செயலும் செயல்திறனும் என்னும் கட்டுரை தொடர் இப்பொழுது இந்நூல் வழியாகத் தொடரியாக்கப்பெற்று நம் கைகளில் கமழ்கின்றது.

தம் உள்ள மன அறிவு நிலைகளை நலத்தோடும் வளத்தோடும் வலிவோடும் காத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் நல்லுணர்வாளர் ஒவ்வொருவரும் இதனை வாழ்வியல் வழிகாட்டி நூலாகக் கொண்டு இதனைக் கடைப்பிடித்து வந்து உருப்பட்டு உயரலாம்.

அதற்கெனவே மிக மிக உழைப்பெடுத்து நீளவும் அகலவுமாக ஆழவும் ஓங்கவுமாகத் தம் எண்ணத்தைச் செலுத்திச் செப்பமுற்ற நிலையில், இதற்குரிய பாகுபாடுகளை நன்கு திருத்தமுற வகுத்துக் கொண்டு, அருமையான அமைப்பொழுங்கில் இக்கட்டுரையைக் கட்டமைத்திருக்கின்றார் ஆசிரியர்.

இக்காலத்து இளையோர்களில் பலரும் பெரியோர்களில் சிலரும் செயல் பற்றியோ அல்லது செயல்திறன் பற்றியோ, அடிப்படைத் தெளிவேயில்லாது அலமரலுற்று உழன்றவாறே தாறுமாறாய் இடறிவீழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவல நிலைகளைக் கண்டு அவற்றை அகங்கொண்டு அன்னார்க்கென மிக்க கழிவிரக்கங் கொண்டு நம் பெருமதிப்புகுரிய ஐயா பாவலரேறு அவர்கள் இந்நூலை மிகமிக அருமையாக யாத்தளித்துள்ளார்கள்.

கட்டுரைத் தொடர்களைத் தொடர்ந்து படித்துப் பார்க்கையில் சேம்சு ஆலனின் வெளிப்பாட்டு முறைப்பாங்கு பல்வேறு இடங்களில் நிழலாடுகின்றது. செய்திகள் தாம் அவ்வவ்விடங்களில் வேறுவேறாக வெளிப்பட்டிருக்கின்றனவே தவிர இவ்விருவகை வெளிப்பாடு களினுள்ளும் இயல்பெழும் கனற்சியும் தணப்பும் பல்லிடங்களில் ஒரேவகை அலையொழுங்கினவாகவே படுகின்றன.

நூலாசிரியரின் முப்பதாண்டிற்கும் மேற்பட்டு நீண்டு வரும் திருக்குறள் தோய்வும் ஆய்வும் செயலும் செயல் திறனும் என்னும் தலைப்பின் கீழ் இவ்வளவு திட்ட நுட்பஞ் செறிந்த ஒட்டநூலை வரையும் ஆற்றலைத் தந்துள்ளமை நூலின் அமைப்பாக்கத்தினுள் துலங்கத் தெரிகின்றது.

திருக்குறளின் மீதும் திருவள்ளுவர் மீதும் மீமதிப்பும் பெருவணக்கவுணர்வும் நிறைந்த நெஞ்சத்தைத் தாம் பெற்றிருப்பதை ஐயா அவர்கள் இந்நூலின் பல்வேறிடங்களில் பதித்துள்ளார்கள்.

திருக்குறளை உலகநெறி நூல் : புகழுரை , திருவள்ளுவர் திருவாய்மொழி: மெய்யுரை பொய்யாமறை ; தெளிவுரை பொன்னுரை: வாயுரை, திருவள்ளுவம் , வாய்மையுரை ; குறளுரை : அறிவுமொழி: குறள்மொழி; வாய்மைமொழி பொய்யாமொழி என்றவாறு பதினைந்து வகைகளிலும்

திருவள்ளுவரை - பொய்யாமொழிப் புலவர்; திருவள்ளுவர் பெருமான்: திருவள்ளுவப் பேராசான்; குறளார்; திருவள்ளுவப் பெருந்தகை, திருவள்ளுவப் பெரியார்: பேரறிஞர்; பொய்யாமொழிப் புலவர்; குறள் பெருமான் ; பேரறிஞர் திருவள்ளுவர் ; திருக்குறள் பயந்த செம்மலார்; குறளாசான்; மெய்யுணர்வாசான்; மெய்ந்நூலறிவர்; திருக்குறள் ஐயன்; திருக்குறள் ஆசான்; ஆசான்; மெய்ப்பொருளாசிரியர் என்றவாறு பத்தொன்பது வகைகளிலும் உள்ளமெல்லாம் நிறைவு ததும்பும் பற்றுணர்வோடு இந்நூலாசிரியர் நூலில் பதித்துள்ளார்.

இவ்வாறு வேறெந்நூலினும் இவ்வளவு வேறுபட்ட வகைபாடுகளில் திருக்குறளோ திருவள்ளுவரோ சுட்டப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

முந்நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மேற்கோள்களை முறையுற்ற விளக்கங்களோடு ஆங்காங்கே தெளிவாக நிறுத்தி வைத்துள்ளார்.

செயல் என்பது பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே இத்தமிழ்ப்புலத்தில் எத்தகு நிலையளவுக்கு அஃகியகன்ற நுண்மாண் துழைபுலம் தழைத்திருந்தது என்பதை இக்கட்டுரைத் தொகுப்புள் ஊடாடும் திருக்குறள் மேற்கோள்களே வெள்ளிடை மலையென விளங்கிச் சான்று நாட்டுகின்றன.

சிறப்புத் தலைப்புக் கொண்ட அதிகாரங்களின் கீழ் படிந்துள்ள குறள்களினுள்ளும், வினை செயல் தொடர்பான நுட்பச் சிறப்புச் செய்திகளிருப்பவற்றை நுணித்துப் பார்த்துப் பாகுபடுத்திக் காட்டி விளக்கங்களினூடேயே முறையுற அவற்றைப் பிணைத்து நிலைநாட்டி, சொல்லவந்த கருத்துகளுக்கு ஊற்றமும் உரமும் ஊட்டமும் ஊட்டி நிற்கும் தனிப்பெருந்திற நிலைகளின் பதிவுகளை, நூலின் ஒட்டத்திடையில் பல இடங்களில் பார்க்கவியல்கின்றது.

தம் வாழ்வில் தாமே பட்டறிந்து தெளிந்த பல்வேறு உண்மைகளின் சார நிலைகளையும் இலைமறைகாயாகக் கருத்துகளோடு கருத்துகளாக இந்நூலாசிரியர் மொழிந்து நிற்கும் அழகே தனி!

ஒரு சிறு செய்தியை விளக்கப் புகுகையிலும், அணியணியாக அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் நூலேடுகளாகிய தாளோடைகளில் கரைபுரண்டு நுரைததும்பப் புனலோடி நீடும்படிச் செய்துள்ள இவரின் திறம் அருமையான பாங்குடையதாகும். எண்ணுதொறும் வியப்பளிக்குந் தகையவாகும்.

சான்றுகளும் எடுத்துக்காட்டுகளும் அனைவர்க்கும் பளிச்செனப் பற்றும்படியான தகைமையுடையவை. அன்றாட நடைமுறைகளினின்று யாவர்க்கும் விளங்கும்படி எடுத்துச் சுட்டப்பெறும் இனிய தன்மையன! 'எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள் இதற்கு ஒர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

செயலையும் செயல் திறனையும் விளக்கி நிற்கும் மூலப் பணியோடு ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் எவ்வெவ்வாறெல்லாம் - எவ்வெவ்விடங்களிலெல்லாம் எப்படியெப்படியெல்லாம் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்னும் வாழ்வியல் சூழ்வியல் நிலைகளையெல்லாம். தன் குழந்தைக்குப் பாலூட்டும் விருப்பம் நிறைந்த அன்புத் தாயின் உணர்வுடன் இடையிடையே ஊட்டமாகத் தந்துள்ளார்.

குளிப்பது பல்துலக்குவது கால்கழுவுவது போன்ற அன்றாட வினைகளிலும் எவ்வளவு முறைகள் உள்ளன என்பது பற்றியும் - மக்களில் சிலர் துய்மைப்படுத்த வினைகளைப் புறக்கணித்து, எப்படியெப்படியெல்லாம் அருவருப்பாக இயங்கி வருகின்றனர் என்பது பற்றியும் அருளுணர்வோடு அருமையாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் பாங்கிலெல்லாம் ஆசிரியரின் இயல்பான மக்கள்நல நாட்ட உள்ளுணர்வே ஒளிகாட்டுகின்றன.

ஒவ்வொரு சிறப்புச் சொல்லும் அதன் நிலையில் பல்வேறு கோணங்களில் ஊட்டம் பெற்றுச் சிறந்திருப்பதை நன்கு உன்னிப் பார்த்து - அக்கருத்துகளைத் திரட்டிய பொருள்வடிவை அச்சொல்லுக்கு நேரிதாக எடுத்து வைக்கும் பாங்கே தனிச்சிறப்புடையதாகும்.

விருப்பம். விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பாய ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மனநாட்டம்.

செருக்கு. செருக்கு என்பது நமக்கு தெரிந்த சிறிய அளவை மிகுதியாகக் கருதிக் கொள்வது.

இந்நூலின் மூலப்பகுதியே 250 பக்க அளவு கொண்டது. இதில் பன்னூற்றுக் கணக்கான பாரிய உண்மைகள் பரக்கப் பேசப் பெறுகின்றன.

மனவியல் மெய்ம்மவியல் கூறுகளைச் சிறக்க உள்ளடக்கி நிற்கும் இந்நூல் படித்த அளவிலேயே முற்ற விளங்கித் தோன்றும் அல்லது புரிந்து விடும் பான்மைத்தாக வில்லாமல், உற்று உற்று உள்நோக்கிப் படிக்க வேண்டிய தன்மைத்தாகவுள்ளது.

ஒவ்வொருவரும் . அவரவர்க்குரிய - அவரவர்க்குகந்த நற்செயலைத் தெரிந்தெடுத்து மேற்கொண்டு வாழ்க்கையில் செழித்தோங்குதற்குரிய வகைமுறைகளைப் பற்றியும் அச்செயலைச் செப்பத்தோடும் நுட்பத்தோடும் திட்பத்தோடும் ஒட்பத்தோடும் செய்வதன் வழி திறநிலை கொள்ளும் தகைமையை அடைவது எவ்வெவ்வாறு என்பது பற்றியும் பல கோணங்களில் ஒளிகாட்டுகின்றது; தெளிவூட்டுகின்றது.

வாழ்க்கைச் செப்பத்தையும் உயர்ச்சியையும் விரும்பும் மாந்தர் எவர்க்கும் - இவ்வரிய, செந்நூல், செழிப்பையும் சீரையும் விழிப்பையும் வீற்றையும் விளைக்கும் திறத்ததாகும்.

செயல்திறன் யெய்த விழையும் எவருக்கும் இந்நூல் ஒரு கையேடு! ஒரு வழிகாட்டி

'பெற்றுப் பயனெய்தல் பெறுவார் பேறு'

இத்தகு அருமை உடைய செயலை - இந்நூல் யாத்த செயலை திறனோடு செய்துள்ள தமிழ்ப் பெருந்தகை பாவலரேறு ஐயா அவர்களை நிறைவுணர்வோடும் இதன் வெளிநாட்டுப் பயன்கருதிப் பார்த்த நன்றியுணர்வோடும் நெஞ்சம் குளிர வணங்குகின்றேன்.

இதனை நாம் அனைவரும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.

நம்மவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

உருப்பெறுதற்கும்
உயர்வுறு தற்கும்
உளஞ் சிறத்தற்கும்
உறுதுணையான
உயர்நூல் இஃது!
ஊன்றி படிப்பவர்
ஓங்குவதுறுதி!

13.2.1988

அன்பன்

தமிழ்ப்பல்கலைக்கழகம்

ப. அருளி

தஞ்சை

பதிப்பாசிரியர்
தூயதமிழ் அகரமுதலி, அறிவியல் அகரமுதலி