உள்ளடக்கத்துக்குச் செல்

சேக்கிழார் தந்த செல்வம்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

சேக்கிழார் தந்த செல்வம் என்ற இந்த நூல் தோன்றிய விதமே சற்று புதுமையானதுதான். இரண்டாண்டுகட்கு முன்னர், சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சி பதிவு செய்ய வானொலி நிலையம் சென்றிருந்தேன். அன்றைய நிலைய இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அண்மையில் இருந்த வானொலி நிலைய உதவி இயக்குனர் திருமதி. காலா ரவியைப் பார்த்து ‘உடனடியாக பெரிய புராணம் பற்றி பத்து பேச்சுக்கள் பேசுமாறு செய்து அதனை ஒலிப்பதிவு செய்யுங்கள்’ என்று கூறினார். சில மாதங்கள் கழித்து உதவி இயக்குனர் இதனைச் செய்யுமாறு அழைத்தார்.

பெரிய புராணத்தைப் பற்றி, பெரிய புராணம் ஓர் ஆய்வு, தேசிய இலக்கியம் என்ற இரண்டு நூல்கள் முன்னரே என்னால் எழுதப் பெற்றுள்ளன. அவை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் இருந்து, பெரிய புராணத்தில் ஆய்வு செய்து எழுதப் பெற்றவைகள் ஆகும். பெரிய புராணம் பற்றி, மற்றொரு நூல் எழுத வேண்டும் என்ற சிந்தனை என் மனத்தில் தோன்றவேயில்லை. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளி வந்த ‘இராமன் பன்முக நோக்கில்’ என்ற நூலின் முகவுரையில் யாழ்ப்பாணத்து சித்தர் பெருமகனார் யோக சுவாமிகள் அவர்கள் எனக்கிட்ட கட்டளைகள் பற்றி எழுதியுள்ளேன். அந்தக் கட்டளையின் ஒரு பகுதியாக, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. துரைசாமி நாயுடு அவர்கள், இராமனைப் பற்றி எழுத பணித்த பொழுது, அதனை நிறைவேற்றினேன். சித்தர் பெருமானின் கட்டளையின் மற்றொரு பகுதியாக, திரு.விஜய திருவேங்கடத்தின் ஆணை பிறந்தது. அதனை நிறைவேற்ற உதவி இயக்குனரின் தூண்டுதல் உதவிற்று. அதன் பயன்தான் ‘சேக்கிழார் தந்த செல்வம்’ என்ற தலைப்பில் பத்து பேச்சுக்கள் பேசினேன்.

பெரிய புராணத்தை பக்தி நூலாகக் காணும் முறையில் சிலர் நூல்கள் எழுதியுள்ளனர். வேதத்திற்கும், சைவத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து, ‘பெரிய புராணம் ஓர் ஆய்வு’ என்ற நூலை 1985ல் எழுதினேன். வானொலிப் பேச்சில், அதை ஒரு சமுதாய நூலாகக் காண வேண்டும், குறிக்கோள் அற்று, செல்லும், திசை தெரியாமல் தாழ்ந்து கிடந்த 12ஆம் நூற்றாண்டு தமிழினத்தைத் தூக்கி நிறுத்த சேக்கிழார் பெருமான் செய்த முயற்சியே பெரிய புராணம் ஆகும். இந்த எண்ணம் நீண்ட காலமாக என் மனத்துள் ஆழ்ந்து படியத் தொடங்கிற்று. பெரிய புராணத்தில் பக்தியும் உண்டு, சமயமும் உண்டு. என்றாலும், இவை அனைத்தையும் தாண்டி, மனிதன் மனிதனாக வாழ வேண்டுமேயானால், குறிக்கோள், இறை உணர்வு, தொண்டு என்ற மூன்றும் வாழ்வில் தலை தூக்கினாலன்றி, ஓரினம் சிறந்த வாழ்வை பெற முடியாது என்பதே பெரிய புராணத்தின் உயிர்நாடி என்ற கருத்து மனத்தில் தோன்றவே, அந்த கண்ணோட்டத்தில் பெரிய புராணத்தைக் காண முயன்றேன்.

அந்த முயற்சியின் பயனாகவே, வானொலி பேச்சுக்கள் அமைந்தன. அதனைக் கேட்ட பலரும், இத்தகைய முயற்சி காலத்துக்கேற்ற ஒன்று என்று பாராட்டினார்கள். ஆந்திர பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், ஸ்ரீஅரவிந்தரின் சிறந்த பக்தருமான திரு கே.ஆர்.சீனிவாச அய்யங்கார் அவர்கள் பெரிய புராணத்தை நான் காணும் முறை சரியானதே என்று பாராட்டியதுடன், எழுதுமாறு பணித்தார்கள்.

இந்த வானொலி பேச்சுக்களைக் கேட்ட, அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்கள் உடனே எழுதித் தருமாறு வேண்டினார்கள். வானொலி பேச்சுக்கள் காதால் கேட்கும் பொழுது தரும் பயனை, எழுத்து மூலம் தரும் பொழுது தரவில்லை என்பதை கண்டறிந்தேன்.

எனவே, வானொலி பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டு அதில் கூறத்தக்க கருத்துக்களோடு இன்னும் பலவற்றையும் சேர்த்து நூல் வடிவாக்கினேன்.

எனது நல்லூழின் பயனாக, இந்நூலை சேக்கிழார் ஆராாய்ச்சி மையம் ஆண்டு தோறும் கொண்டாடும் சேக்கிழார் விழாவின் ஐந்தாவது விழாவில், 25-7-97 அன்று வெளியிடும் நல்வாய்ப்பு கிடைத்தது.

நூலை வெளியிட இசைந்த சேக்கிழார் ஆராய்ச்சி மையத் தலைவர் நீதிபதி திரு. எஸ். நடராஜன் அவர்கட்கு என் நன்றி உரியதாகும்.

இந்நூல் தோன்றக் காரணமாக இருந்த வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கட்கும், உதவி இயக்குனர் திருமதி. கலா ரவிக்கும் என் நன்றி உரியதாகும்.

வழக்கம் போல் கையெழுத்துப் பிரதியிலேயே இதனை படித்து, வேண்டுமான இடங்களில் மாற்றம், விளக்கம் என்பவை இடம் பெற வேண்டும் என்று கூறி, உதவிய அருமை நண்பர் மா.ரா.போ.குருசாமி அவர்கட்கு என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும்.

பார்வை இல்லாத நிலையில், நூல் முழுவதையும் என் வாய் மொழியில் கேட்டு, எழுத்து வடிவில் கொண்டு வந்த என் மகள் ஞா.மீராவிற்கும், இதனை அச்சிட்டு வெளியிட்ட கங்கை புத்தக நிலையத்தாருக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியதாகும்.

அ.ச.ஞானசம்பந்தன்.

சென்னை-83.
25—7—97