உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் கால அரசியல் தலைவர்கள்/அமராபரணன் சீயகங்கன்

விக்கிமூலம் இலிருந்து

அமராபரணன் சீயகங்கன்[1]

கங்கர்கள்

இந்நாளைய மைசூர்ப் பகுதியை ஆண்ட முன்நாளைய குறுநில மன்னர்கள் கங்கர்கள் என்று கூறப்பெறுவர். அன்னோர் கி. பி. மூன்று நான்காம் நூற்றாண்டு முதற் கொண்டு வரலாற்றில் குறிக்கப் பெறுகிறார்கள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் ஒரு சமயத்தில் பல்லவர் பக்கமுமாக இருந்தவர்கள். பெரும்பாலும் இவர்கள் மேலைச்சளுக்கியர்களுக்கு அடங்கியவர்களாகக் காணப்படுகின்றனர். சோழவரசர்கள் உயர் நிலையில் இருந்தபொழுது சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இவர்கள் தோன்றுகின்றனர். சீயகங்கன் என்ற பெயருடையான் முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருவன் இருந்தான்; இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் ஒருவன் இருந்தான் ; இவ்விருவரும் சிவபக்தர்களாகவே திகழ்ந்தனர்.

அமராபரணன் சீயகங்கன்

மேற்குறித்த இரு சீயகங்கரின் வழி வந்தவனும், கங்கமரபைச் சேர்ந்தவனும், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக் கடங்கிய குறுநில மன்னனாக விளங்கியவனு மாகியவனே அமராபரணன் சீயகங்கன். இற்றை நாளில் ’கோலார்’ என்று கூறப்படும் குவளாலபுரம் இவனுடைய தலைநகரமாகும். வடார்க்காடு மாவட்டம் திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டில்:

“ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு முப்பத்து நாலாவது அமராபரணன் சீயகங்கன் நம்பிராட்டியாரான அரியபிள்ளை "திருவல்ல முடைய நாயனர்க்கு வைத்த சந்தி விளக்கொன்றும்" (M. E. R. No. 446 of 1912-Sii Vol IIL No. 62) என்றும் காஞ்சிபுரத்து ஏகாம்பர நாதர் கோயிலில் கண்ட மூன்றாம் குலோத்துங்கனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்,

"ஸ்ரீமத் குவளாலபுர பரமேஸ்வரன் கங்க குலோற்பவன சிய்யகங்கன் அமராபரணான திருவேகம்ப முடையான் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு முப்பத்திரெண்டு ரிஷபம் ஒன்று’ (10 of 1893 Si Wol IV No. 823) என்றும், திருக்காளத்தியிலுள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், “குவளாலபுர பரமேஸ்வர சீயகங்கரான சூரநாயகர்’ (195 of 1892 Vol IV 643) என்றும்,

திருக்காளத்தியில் உள்ள மூன்றம் குலோத்துங்க சோழனின் 34-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்,

"உடையார் திருக்காளத்தியுடையார்க்குக் குவளால பரமேஸ்வரன் கங்ககுலோத்தமன் சூரநாயகன் திரு வேகம்பமுடையானான அமராபரணன் சீயகங்கன்" (116 of 1922) என்றும் காணப்படும் பகுதிகளிலிருந்து சீயகங்கன் என்ற இக்குறுநில மன்னனைப் பற்றி அறிய வருகிறது. மேற்கண்ட கல்வெட்டுக்களிலிருந்து இச்சீயகங்கனுக்கு இயற்பெயர் திருவேகம்பமுடையான் என்பது என்றும், சூரநாயகன், அமராபரணன் என்பன இவனுக்குரிய சிறப்புப் பெயர்கள் என்றும் அறியலாம். இச்சீயகங்கனின் கல்வெட்டுக்கள் மூன்றம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு முதல் முப்பத்துநான்காம் ஆட்சியாண்டு முடியத் தமிழகத்தில் காணப்படுகின்றன.

பவணந்தி முனிவர்

அமராபரணன் சீயகங்கன் காலத்தவரே பவணந்தி முனிவராவர். பவணந்தி முனிவர் இவ்வரசன் வேண்டு கோட்படியே நன்னூலை இயற்றினாரென்பது, அந்நன்னுாற் சிறப்புப் பாயிரத்தால் அறிந்ததாகும்.

குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
தொகைவகை விரியில் தருகெனத் துன்னார்
இகலற நூறி இருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோல் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக...

என்பன அச்சிறப்புப் பாயிரவடிகள். பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் சனகாபுரத்தவல் என இச் சிறப்புப் பாயிரத்துப்,

"பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பின் பவணந்தி"

என்ற அடிகள் தெளிவுப்படுத்துகின்றன. சனகாபுரம் (சனகை) என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் ஆகும் (திரு. பண்டாரத்தார் சோழர் சரித்திரம், பாகம் 2, பக்கம் 116.) பவணந்தி முனிவர் ஒரு சமணர் என்பது யாவரும் அறிந்ததே.

சீயகங்கனின் மனைவி

மேலே குறித்த திருவல்லத்துச் சாசனம், இவனது மனைவியின் பெயர் அரிய பிள்ளை என்று பகரும். இவள் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 34-ஆம் ஆட்சி யாண்டில் (கி. பி. 1212-ல்) திருவல்லத்திலுள்ள சிவன் கோயிலுக்குத் திருவிளக்கு வைக்க நிபந்தம் அளித்துள்ளனள்.

சீயகங்கனின் மக்கள்

இவனுடைய மகன் அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன் (சீயகங்கன்) என்ற பெயருடையவன். அவன் திருக் காளத்தி ஈசர்க்குத் திருநுந்தா விளக்கு வைக்க 32-பசுக்கள் அளித்தனன். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள் என்றும், அவள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் என்ற பெயருடையவள் என்றும் பிற்குறித்த கல்வெட்டினின்று அறியலாம்:

"ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு மூன்றவது உடையார் திருக்காளத்தி யுடையார்க்குக் குவளால புர பரமேஸ்வரர் சீயகங்கரான சூரநாயகர் மகள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் தமையனார் அருங் குன்றைப் பிள்ளையாரான செயகங்கர் திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவாப் பசு முப்பத்திரெண்டு" (195 of 1892; Vol IV No. 643.)

முடிப்புரை

இதுகாறும் கூறியவாற்றான் இக்கங்கர் மரபினர் சிறந்த சிவபக்தி உடையவர்களாய் இருந்தனர் என்றும், சிறந்த தமிழ்ப்பற்று வாய்ந்தவர்களாய் விளங்கினர் என்றும் தெரியவருகிறது.

"முன்னுரல் ஒழியப் பின்னூல் பலவினுள்
எந்நூ லாரும் நன்னூ லாருக்(கு)
இணையோ என்னும் துணிவே மன்னுக"

என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் போற்றும் பெருமை வாய்ந்த நன்னூலை இயற்றுவித்த அருங்கலை விநோதனாகிய சீயகங்கனைப் போற்றும் முறையில் நன்னூலைக் கசடறக் கற்று, "மொழித்திறத்தின் முட்டறுத்து, முதனூற் பொருளுணர்ந்து" தமிழ் மாணாக்கர் விளங்குவாராக.


  1. இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.