சோழர் கால அரசியல் தலைவர்கள்/பெருமான் நம்பிப் பல்லவராயன்

விக்கிமூலம் இலிருந்து

பெருமான் நம்பிப் பல்லவராயன்

ஊரும் பேரும்

பெருமான் நம்பிப் பல்லவராயன் எனப்படுபவன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துக் காரிகைக் குளத்தூர் என்னும் ஊரவன். ஜெயங் கொண்ட சோழ மண்டலமென்பது முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து தொண்டை மண்டலத்துக்கு அமைந்த பெயர். தொண்டை மண்டலத்தின் இருபத்து நான்கு கோட்டங்களில் ஆமூர்க் கோட்டம் என்பதொன்று. அதிலொரு பகுதி சிறு குன்ற நாடு எனப்பட்டது; காரிகைக் குளத்தூர் உள்ள பகுதியே இது. அமிதசாகரர் என்பார் யாப்பருங்காலக் காரிகையைக் குளத்துணரிலிருந்து பாடிய காரணத்தால் குளத்தூர், காரிகைக் குளத்து என்று வழங்கலாயிற்று. இது இந்நாளில் பாலாற்றங் கரையில் செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள ஓரூராகும்.

இக்குளத்தூரில் வாழ்ந்த வேளாண் பெருமக்களில் ஒருவரே, குளத்துழான் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பியாரான பல்லவராயர். திருத்தொண்டர் புராண வரலாற்றாசிரியரும் வேளாண்குடிப் பெருமக்களுள் ஒரு வகையினர் எனக் குளத்துழான் குடியினரைக் குறிப்பிடுவர். இக் குளத்துழான் குடியிற் பிறந்தமையின் இக்குடிப் பெயர் இவன் பெயரோடிணைந்துள்ளது. பல்லவராயன் என்பது இரண்டாம் இராசராச சோழனால் அளிக்கப் பெற்ற சிறப்புப் பெயராகும்.

அலுவல்

கி. பி. 1146 முதல் 1163 வரை சோழப் பேரரசனாக விளங்கிய இரண்டாம் இராசராச சோழன் காலத்திலும், அவனுக்குப் பிறகு அரசாண்ட இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் ஏறத்தாழ எட்டாண்டுகள் (கி. பி. 1171) வரையிலும் இவன் சிறந்த படைத்தலைவனாக விளங்கியவன். இரண்டாம் இராசராச சோழன் காலத்திலே பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டுச் சிங்களப் படையை வென்று தன் புகழ் நிறுவியவகைக் காணப் படுதலின், இவன் அந்நாளில் சோழப் பேரரசில் திகழ்ந்த பெருந்தானத் தலைவன் என்பது உறுதி. பல்லவராயன் பேட்டைச் சாசனத்திலிருந்து (433 of 1924) மேலே குறிப்பிட்ட சிங்களப் படையை வென்ற செய்தியை அறிய வருவதோடு இவனுடைய இன்னொரு அலுவலும் தெரிய வருகிறது. இரண்டாம் இராசராச தேவருடைய பத்துக் கோயில் கொத்துக்களுக்கும், யானை குதிரை முதலிய எல்லாத் துறைகளுக்கும் தலைவனாகவும்: முன் ஏவல் செய்யும் ஏற்றமும் பெற்றிருந்த அரசனது அரண்மனை உள்துறைப் பேரலுவலனகவும் இருந்தான் என்று மேற் குறித்த பல்லவராயன் பேட்டைச் சாசனத்தின் 6-7-ஆம் வரிகளில் குறிக்கப் பெற்றுள்ளது.

சேரனை வென்றமை

பல்லவராயன் சேரனைப் போரில் வென்று அவன் பால் திறைகொண்டு வந்தான் என்ற செய்தி தக்கயாகப் பரணியிலுள்ள பின்வரும் தாழிசையால் அறியலாம் :-

”வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்டகாபதியைப்
பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே” (தக், 236)

இத்தாழிசையில் கண்ட தண்டகா பதியைத் தக்கயாகப் பரணியின் உரையாசிரியர், 'தொண்டை நாட்டுக் குளத்துழார் குடியிற் பிறந்த பல்லவராயனான நம்பிப் பிள்ளை என்று குறித்துள்ளார்.

பல்லவராயன் பேட்டை

பல்லவராயன் பேட்டை என்னும் ஊர் மாயூரத்துக்கு அண்மையில் உள்ளது. முன்னாளில் இவ்வூர்க்குக் குளத்தூர் என்ற பெயர் இருந்தது. இக் குளத்தூர், பின்னர் இப்பல்லவராயன் பெயராலே பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வரலாயிற்று. இவ்வூரில் பல்லவராயன் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் கோயிலெடுப்பித்து, அதற்கு இறையிலியாக நிலமும் அளித்தான் என்று இரண்டாம் இராசராசனுடைய 10-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1156) க்குரிய கல்வெட்டுக் கூறுகிறது. (435 of 1924). இந்தக் கோயிலுக்கு நாங்கூர் அவையினர் காசு கொள்ளா ஊர்க் கீழ் இறையிலியாக நிலமளித்தனர் என்று இரண்டாம் இராசராசனுடைய 15-ஆம் ஆட்சியாண்டுக்குரிய பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டில் உள்ளது (11 of 1925). திரு இந்தளூர் (திருவழுந்தூர்) மகா சபையினர், ஒரு வாய்க்கால் வெட்டுவதற்காகக் கொண்ட இக் கோயில் நிலத்துக்குப் பதிலாக, ஊர்க்கீழ் இறையிலியாக ஏழுமா நிலத்தை இக்கோயிலுக்குக் கொடுத்து, அவ்விடத்தில் தீர்த்தக்குளம் ஒன்று வெட்டுவதற்கு உத்தரவும் பெற்றனர் (6 of 1925).

பல்லவராயன் இறந்த பிறகு இவ்வூரிலுள்ள நாற்பது வேலி நிலம் இவனுடைய மனைவி மக்கள் அனுபவிக்குமாறு இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப் பெற்ற செய்தி இவ்வூரில் கண்ட இன்னொரு சாசனத்தா (433 of 1924) அறியலாம்.

இரண்டாம் இராசாதிராசன் அரசன் ஆனமை.

இரண்டாம் இராசராச சோழன் நோய்வாய்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நாளில் அவனுக்கு ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இரு குழந்தைகள் இருந்தனர். மிக்க இளங்குழவிகளாதலின் அன்னோர்க்கு முடிசூட்ட இயலாமைக்கு மன்னன் பெருங்கவலை கொண்டான். அந்நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் சில அரச குமாரர்கள் இருந்தனர். அவர்களை வருவித்து அவர்களுள் விக்கிரம சோழ தேவருடைய பேரனாகிய நெறியுடைப் பெருமாளின் மகன் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அந்நாளிலேயே இரண்டாம் இராசராச சோழன் இறந்து போனான்.

அப்பொழுது சோழ நாட்டில் ஆட்சி உரிமை பற்றிக் கலகம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அதனால் அமைச்சர் தலைவனாகிய பல்லவராயன் பழையாறையில் இருந்த ஆயிரத்தளி படை வீட்டிலிருந்து இராசராசனுடைய அந்தப்புர மகளிரையும், இளங் குழந்தைகள் இருவரையும், பரிவாரங்களோடு அழைத்து வந்து, இராசராசபுரத்திலே (தாரசுரத்தில்) காவல்மிக்க இடத்தில் இருக்கச் செய்து காப்பாற்றினான்; நாட்டுக்கும் எந்தக் குறைவும் உண்டாகாதவாறு பார்த்துக் கொண்டான்; இளவரசனாக ஆக்கப்பட்ட எதிரிலிப் பெருமாளை நான்காண்டுக் காலம் வரையிலும் இளவரசனாகவே இருக்கச் செய்து பின்னர் (இரண்டாம்) இராசாதிராசன் என்று அபிடேகம் செய்வித்துச், சோழப் பேரரசனாக ஆக்கினான் ; இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சியிலும் தலைமை அமைச்சனாக வீற்றிருந்து அரசியல் பொறுப்பையும் ஏற்று அரசாட்சியைத் திறமையாகப் பல்லவராயனே நடத்தி வந்தான்.

பாண்டிய நாட்டுப் போர்

இரண்டாம் இராசாதிராச சோழன் காலத்தில் பாண்டிய நாட்டில் மதுரையில் அரசாண்டவன் பராக்கிரம பாண்டியன் எனப் பெற்றான். அவனுக்கும் அவன் தாயத்தின்னான குலசேகர பாண்டியனுக்கும் போர் மூண்டது. குலசேகர பாண்டியன் மதுரை நகரை முற்றுகை யிட்டான். பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவுமாறு சிங்கள வேந்தனாகிய பராக்கிரம பாகுவை வேண்டினான். இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் சிங்களப் படை ஒன்று வந்தது. அப்படை வருவதற்குள் பராக்கிரம பாண்டியனும் அவன் மக்களும் கொல்லப்பட்டனர். இதனை யறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன் குலசேகர பாண்டியனை எதிர்த்துக் கடும்போர் புரிந்து வெற்றி யெய்தினான் ; மதுரை நகரைக் கைப்பற்றினான் ; கொலை செய்யப்பட்ட பராக்கிரம பாண்டியன் மகனும் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தவனுமாகிய வீரபாண்டியனை வருவித்து அவற்கு மதுரையை அளித்தான் ; கீழை மங்கலம் மேலை மங்கலம் முதலாகிய ஊர்களைப் பிடித்துக் கண்டதேவமழவராயன் ஆண்டு வருமாறு செய்தான் ; தொண்டி, கருந்தங்குடி முதலான ஊர்களைக் கைப்பற்றி மாளவச் சக்கர வர்த்தி என்பானிடம் ஒப்படைத்தான்.

இங்ஙனம் இலங்காபுரித் தண்ட நாயகன் வெல்வதையறிந்த குலசேகரன் மீண்டும் வீரபாண்டினைத் தாக்கினான் ; வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினன். இதைக் கண்ட இலங்காபுரித் தண்ட நாயகன் படைத்துணை அனுப்புமாறு வேண்ட, இலங்கையரசனாகிய பராக்கிரமபாகு ஜெகத் விஜய தண்ட நாயகன் என்பான் தலைமையில் பெரும் படையை அனுப்பினான். இவ்விரு படைத் தலைவர்களும், குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்து வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தினார்கள். குலசேகர பாண்டியன் பன்முறை தோல்வி யுற்றமையால் மனம் நொந்து ஏறத்தாழக் கி. பி. 1167-ல் சோழ நாட்டிற்கு வந்து ‘‘என்னுடைய ராஜ்யம் நான் பெறும்படி பண்ண வேணும்‘‘ என்று இரண்டாம் இராசாதிராசனிடம் கேட்டுக் கொண்டான். இராசாதிராச சோழனும் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். தொண்டி, பாசி முதலாகிய ஊர்களில் போர்கள் நடந்தன ; ஈழப்படை வெற்றி யெய்தியது. சோழ மண்டலத்திலும் மற்றுமுள்ள நாடுகளிலும் உள்ள மக்களெல்லாம் அஞ்சினார்கள்.

இதனையறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்பான் உமாபதி தேவராகிய ஞானசிவதேவர் என்பாரிடம் விண்ணப்பித்துக்கொள்ள அவரும் சிங்களப் படை தோல்வியுற்று ஓடவேண்டும் என்று 28 நாட்கள் இரவும் பகலும் தவங்கிடந்தார். இறைவன் திருவருளால் பெருமான் நம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வென்றன் ; சிங்களப் படைத் தலைவர்கள் இருவரையும் கொன்றான் ; அவர்கள் இருவர்களுடைய தலைகளையும் மதுரை வாசலிலே தைப்பித்தான். பிறகு குலசேகர பாண்டியனை மதுரையில் ஆட்சி செய்து வருமாறு செய்தான். (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் II, பக்கம் 128-131)

பல்லவராயனின் இறுதி

இங்ஙனம் பாண்டிய நாட்டுப் போரில் வெற்றி யெய்திக் குலசேகர பாண்டியனுக்கு மதுரையும் அரசும் அளித்துத் திரும்பிய சில காலத்துக்கெல்லாம் (ஏறத்தாழக் கி. பி. 1171-ல்) பெருமான் நம்பிப் பல்லவராயன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு இரண்டாம் இராசாதிராச சோழனுக்குத் தலைமை அமைச்சனாக வந்தவன் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவன முடையான் அம்மையப்பனரான அண்ணன் பல்லவராயன்.

பல்லவராயன் பேட்டைச் சாசனம்

இரண்டாம் இராசாதிராச சோழனுடைய 8-ஆவது ஆட்சியாண்டில் இச்சாசனம் கொடுக்கப் பட்டது. கி. பி. 1171-ல் பெருமான் நம்பிப் பல்லவராயன் இறந்தபோது அவன் விருந்தங்களுக்கும் (மனைவியர்களுக்கும்), மக்களுக்கும், பெண் மக்களுக்கும், தாயார்க்கும், உடன் பிறந்தாளுக்கும், உடன் பிறந்தாள் மக்களுக்கும் இராசாதிராசன் குளத்தூரில் நாற்பதிற்று வேலிநிலம், வேதவனமுடையான் அம்மையப்பனாரான அண்ணன் பல்லவராயன் நிச்சயித்தபடி இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பட்டது. அங்ஙனம் அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் பின்வருமாறு :—

I. மனைவியர்

1. சிற்றாலத்தூருடையான் மகளுக்கு 3 வேலி நிலம்
2. ஆலி நாடுடையான் மகளுக்கு 3 வேலி நிலம்
3. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர்[1] மகளுக்கு 3- வேலி நிலம்
4. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு 3- ,,

II. மக்கள்

1. ஆலி நாடுடையான் மகளுக்கு மக்களான மூவர்க்கு 6- ,,
2. நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளின் மகன் அழகிய தேவனுக்கு 3- ,,
மேற்படியாளின் மூன்று பெண் மக்களுக்கு 6- ,,
3. அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு மக்களில், சேந்தன் திருநட்டமாடி வீர நம்பி தேவங்குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் 2- ,,

III. உறவினர்

இராஜராஜ தேவர் மனைவிகளுக்கும் மக்களுக்கும் 8- ,,


IV. தாயார்

வைப்பூருடையார் மகளார்க்கு 1- ,,

| வைப்பூருடையார் மகளார்க்கு | 1- „ |- | |} V. உடன் பிறந்தார்

விழியூருடையானுக்குப்புக்க பெண்ணுக்கும் அவள் மகளுக்கும் 2- வேலி நிலம்
——— ———
ஆக அளிக்கப்பட்ட நிலம் கூடுதல் 40 வேலி நிலம்
அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு ——— ———

மேற் குறித்தவற்றிலிருந்து பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தனர் என்றும், ஐந்து ஆண்மக்களும் மூன்று பெண் மக்களும் இருந்தனர் என்றும், ஒரு மகன் இவன் இறப்பதற்கு முன்னதாகவே இறந்திருத்தல் கூடுமென்றும், இவன் இறந்த பிறகும் இவன் தாயாகிய வைப்பூருடையான் மகளார் உயிர் வாழ்ந்திருந்தாள் என்றும், இவனுக்கு ஒரு உடன் பிறந்தாள் இருந்தாள் என்றும் தெரிய வருகிறது.

மேல் III-ல் உறவினர் என்ற பகுதியில் குறிக்கப்பட்ட இராசராச தேவர் எனப்படுபவன் பெருமான் நம்பிப் பல்லவராயனுக்கு நெருங்கிய உறவினனாகவும், அவன் அன்புக்கு உரியவனாகவும் இருந்திருக்கவேண்டும். இவ் இராசராச தேவர் என்பானை இரண்டாம் இராசராச சோழன் என்பாரும் உளர்.[2] அக் கருத்துப் பொருந்துவதாகத் தோன்றவில்லை. “உடையார்“ என்னும் அரசருக்குரிய அடைமொழி இன்மையும் ஆகைப்பட்டனல்லன் என்ற கருத்தையே வலியுறுத்தும்.


  1. முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த புலவரும் அரசியல் அலுவலரும் இப் பெயருடையவர் : 1120 இல் வாழ்ந்தவர்.
  2. Colas, K. A. N. Vol. II p. 92. -வேலி நிலம்