சோழர் கால அரசியல் தலைவர்கள்/கருணாகரத் தொண்டைமான்
முதற் குலோத்துங்க சோழன்
தாய் வழியால் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவனும், தந்தை வழியால் கீழைச் சாளுக்கிய பரம்பரையைச் சேர்ந்தவனுமாகிய முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1070 முதல் கி. பி. 1120 வரையிலும் அரசு வீற்றிருந்த சோழ மன்னனாவான். இவன் அரசனானதும் மேலைச் சளுக்கியர்களோடு ’துங்கபத்திரைச் செங்களத்திடைப்’ போர் செய்து வென்றான்; ’வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை ஏவிப்’ பாண்டியர் ஐவரை வென்றான் ; பின்னர்ச் சேரருடன் போர் நடத்தி, விழிஞத்திலும் காந்தளுர்ச் சாலையிலும் வெற்றிகொண்டு, கோட்டாற்றை யழித்து, அங்கு நிலைப்படையொன்று நிறுவினான் ; இங்ஙனம் சோழரது ஆட்சியின் தென்னாட்டெல்லை காட்டிப் பின்னர் வடக்கே தென் கலிங்கப் போரை நிகழ்த்தினான். இத் தென் கலிங்கப் போர், கி. பி. 1096 ல் நடைபெற்றது. இம் முதற் கலிங்கப் போர் இவன் மகனாகிய விக்கிரம சோழனால் நிகழ்த்தப் பெற்றது. பின்னர் கி. பி. 1112 - ல் நிகழ்த்தப் பெற்றதே வட கலிங்கப் போர். இப்போர்நிகழ்ச்சியைத் திருச்சிமாவட்டம் சீனிவாச நல்லூரில் உள்ள இவனது 42 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், (608 of 1904), தஞ்சை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள 45 - ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் (S. IV No. 445) அறிவிக்கின்றன. செயங்கொண்டார் என்னும் புலவர் பெருந்தகையார் குலோத்துங்க சோழன் மீது பாடிய ’கலிங்கத்துப் பரணி’ என்னும் நூல் இப்போரை விரித்துக் கூறுகின்றது. இப்போரை நடத்தி வாகை சூடிக் குலோத்துங்க சோழனுக்குப் புகழெய்துவித்தவன் ’கருணாகரத் தொண்டைமான்’ என்னும் படைத் தலைவனேயாவான்.
வட கலிங்கப் போர்
ஒரு நாள் குலோத்துங்க சோழன் காஞ்சிமாநகரில், தன் அரண்மனையில், சித்திர மண்டபத்து இருந்தான். அப்பொழுது தென்னவர், வில்லவர், கூவகர், சாவகர், சேதிபர், யாதவர், கன்னடர், பல்லவர், கங்கர், கடாரர், சிங்களர், வங்களர் முதலிய பல மன்னர்கள் திறைப் பொருள் கொணர்ந்து, அளித்து நின்றனர். அரசன், ”திறை கொடாது ஒழிந்தோர் யாரேனும் உளரோ ?” என்று கேட்க, ”வடகலிங்க அரசன் இரண்டுவிசை திறை கொடு வருகிலன்” என மந்திரக் கணக்கர் பணிந்து புகன்றனர். மன்னன் முறுவல் கொண்டு ”வடகலிங்க வேந்தனைக் கொணர்மின்” என்று கூறினன். உடனே கருணாகரத் தொண்டைமான், ”எழு கலிங்கமவை எறிவன் ; எனக்கு விடையளிக்க” என்று வேண்டப், புலியுயர்த்தவன் விடைகொடுத்தனன். கருணாகரன் யானைமேல் ஏறிக் கொண்டான். கருணாகரனுடைய அண்ணனாகிய பல்லவர்க் கரசு என்பானும் யானை மேல் புறப்பட்டான். இவர்களுடன், வாணகோவரையனும், முடிகொண்ட சோழனும் குதிரை மேலும் யானை மேலும் முறையே ஏறிப் போர்க்குப் புறப்பட்டனர். பாலாறு, குசைத்தலை, பொன் முகரி, பழவாறு, கொல்லி, வடபெண்ணை, மண்ணாறு, குன்றி, பேராறு (கிருஷ்ணை), கோதாவரி, பம்பை, காயத்திரி, கோதமை என்னும் ஆறுகளைக் கடந்து, வடகலிங்க நாட்டை யாவரும் அடைந்தனர். கருணாகரனின் படைகள், சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின. இதனைக் கண்ணுற்ற வடகலிங்கக் குடிகள் தம்மரசனாகிய அனந்தபன்மனிடம் முறையிட்டனர். கலிங்க அரசனும் வெகுண்டு “கானரணும் மலையரணும், கடலரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி என்பதனை நன்கு அறியாது சோழரது சேனை வருகின்றது போலு’ மென்று தடம் புயங்கள் குலுங்க நக்கான். அது போழ்து உடனிருந்த எங்கராயன் என்னும் அமைச்சன் சோழப் படையின் வலிமையையும், கருணாகரன் தலைமை பூண்டு படை வருதலையும் கூறித் ’திறை செலுத்தலே முறை’ என்னும் உட்கருத்தோடு உரைத்தனன். அனந்தபன்மனோ அமைச்சனது உரையை இகழ்ந்து பேசித் தன் சேனைகளுக்குப் போர் தொடங்குமாறு ஆணையிட்டனன் : கலிங்கப் படைகளும் போர்க்குப் புறப்பட்டன. போர் கடுமையாக நடந்தது ! கருணாகரன் தன் யானையைப் போரில் முந்திச் செலுத்தினான். “புரைசை மதமலை ஆயிரம் கொடு பொருவம்” என்று அரசன் உரை செய்த ஆண்மை அழித்துக் கலிங்க மன்னனது படைகள் ஒதுங்கின. கலிங்கர் படையிலுள்ள யானை குதிரை முதலியவற்றைக் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். அனந்த பன்மன் தலை மறைவானான். ’எழுகலிங்கர் தம் இறையையும் கொடு பெயர்தும்; அவன் இருந்துழி அறிக’ என்று கருணாகரன் பணிக்க, ஒற்றர்கள் கலிங்க வரசன் மறைந்திருந்த மலைக்குவட்டைக் கண்டறிந்து அதனை முற்றுகையிட்டனர். அவ்விடத்தைச் சுற்றி, வேலாலும் வில்லாலும் வேலி கோலி விடியும் வரை காத்திருந்து அனந்த பன்மனைச் சிறைப் பிடித்தனர். கலிங்க வீரர்கள் பலரும் மாறுவேடம் பூண்டுகொண்டு தப்பியோடினர். இங்ஙனம் கலிங்க மெறிந்து வாகை சூடியவனாகிய கருணாகரத் தொண்டைமான் கடகரியும் குவிதனமும் குலோத்துங்கன் திருமுன்னர் வைத்து வணங்கினன். இப்போர்ச் செய்திகள் யாவும், கலிங்கத்துப் பரணியில் காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
பரணியில் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான் வரலாற்றைக் கலிங்கத்துப் பரணி கொண்டு விளக்கமாகவும், திராட்சா ராமக் கல்வெட்டால் சுருக்கமாகவும் அறிய முடிகிறது. கலிங்கத்துப்பரணி இன்றேல் இவனுடற்றிய கலிங்கப் போரைப் பற்றி நன்கு தெரியாது போயிருக்கும். கருணாகரன் பல்லவர் குலத் தோன்றல். இதனைச் செயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியில் வண்டை வளம்பதி பாடீரே ... பல்லவர் தோன்றலைப் பாடீரே (தா. 534) என்று குறித்தார் ; அன்றியும் வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகு புகழ் கருணாகரன் (11-132) என்றும், கலிங்கப் பரணி நம் காவலன்மேல் சூட்டிய தோன்றல் தொண்டையர் வேந்தன் (13-33) என்றும், வண்டைமன் தொண்டைமான் (11-16) என்றும், வண்டைநகர் அரசன் (11-30) என்றும், வண்டையர்க் கரசு (11-53) என்றும், கண்ணாகிய சோழன சக்கரமாம் கருணாகரன் (11-52) என்றும், வண்டையர் கோன் (11-160) என்றும், அபயன் மந்திரி முதல்வன் (11-149) என்றும், வண்டையர் கோன் தொண்டைமான் (11-160) என்றும் கருணாகரனைப் பலவாறு புகழ்ந்து கூறியுள்ளார்.
ஊர்
செயங்கொண்டார் வண்டைமன் எனக் கருணாகரனைக் கூறியுள்ளமையால், இவன் வாழ்ந்த ஊர் ’வண்டை’ என்ற பெயருடையதாக இருத்தல் வேண்டுமென அறிகிறோம். வண்டை என்பதைத் தொண்டை நாட்டிலுள்ள ’வண்டலூர்’ என்று டாக்டர் ’உல்விடி’ போன்றவர்கள் கருதினர். (S. i. 1.1 P. 133)தொண்டை மண்டல சதகமும் இவனைத் தொண்டை நாட்டின்னாகவே எண்ணுகின்றது:-
”பண்டையோர் நாளையில் ஓர் ஏழ் கலிங்கப் பரணிகொண்டு செண்டையும் மேருவில் திட்டுவித்தான் கழற்செம் பியன் சேய் தொண்டைநன்னாடு புரக்கின்ற கோனத்தி தோன்ற லெங்கள் வண்டையர் கோனங் கருணாகரன் தொண்டை மண்டலமே?”
(தொ. ம. ச. 92)
தொண்டை நன்னாட்டில் அரசியல் தலைவனாக இருந்தமை பற்றி இவனைத் தொண்டை நாட்டினனாக இப்பாடல் கூறுகின்றது. எனினும் இவன் ஊராகிய வண்டை என்பது சோழவள நாட்டைச் சேர்ந்த ஓரூர் என்று காஞ்சிபுரக் கல்வெட்டால் அறியப் பெறும். அச்சாசனம் பின் வருமாறு :-
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோஇராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று-ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான கருணாகரனான, தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு” (S. I. I. Vol. IV No 862).
இக் கல்லெழுத்தில் ‘கருணாகரத் தொண்டைமான் சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழவளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரி உடையான்‘ என்று கூறப்படுதலால் இவனூர் சோழநாட்டு ‘வண்டாழஞ்சேரி‘யா யிருத்தல் வேண்டும் என அறியலாம். இந்நாளில் இவ்வூர் ‘வண்டுவாஞ்சேரி‘ என்ற பெயரில் கும்பகோணத்திலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெரு வழியில், திருநறையூருக்கும் திருச்சேறைக்கும் இடையில் அமைந்துள்ளது.
இவன் மனைவி
மேலே காட்டிய கல்வெட்டிலிருந்து இவன் மனைவி அழகிய மணவாளனி மண்டையாழ்வார்‘ என்ற பெயருடையவர் என்று அறியலாம். முன்னாளில் பெருந்தரத்து அதிகாரிகள், அரசர்கள், அமைச்சர்கள் போன்றாேருடைய மகளிரை ‘ஆழ்வார்’ என்ற சிறப்புப் பெயரால் வழங்கும் மரபு பற்றி இவ்வம்மையாரும் ஆழ்வாரென்று வழங்கப் பெற்றார். இவ்வம்மையார் காஞ்சிபுரத்து வரதராசப் பெருமாள் திருக்கோயிலுக்குத் திருநுந்தா விளக்கு’ வைத்ததாக அறியப் படுகிறது.
திராட்சாராமக் கல்வெட்டு
கோதாவரி மாவட்டம் திராட்சாராமத்தில் காணப் பெறும் கல்வெட்டொன்று முதற் குலோத்துங்க சோழனின் 33-ஆம் ஆட்சியாண்டிற்குரியது (349 of 1893; S. 1. 1. IV 1239). இக் கல்வெட்டால் கருணாகரனின் தந்தை பெயர் சீரிளங்கோ என்றும், திருநறையூர் நாட்டு மண்டலஞ்சேரி என்ற ஊரவன் என்றும், கருணாகரனின் இயற் பெயர் ‘திருவரங்கன்’ என்றும், இவன் ’வண்டுவராஜன்’ என்று கூறப் பெறுவானென்றும், இவன் சத்வைஷ்ணவன் என்றும் அறியலாம்.
மேலும் இக்கல்வெட்டினின்று கருணாகரன் ஆலவேலி என்ற ஊரில் திருமால் கோயில் கட்டினானென்றும், அதற்கு நிலதானம் செய்தானென்றும், திராட்சாராமக் கோயிலுக்குப் பல அறங்கள் செய்தானென்றும் அறிய வருகின்றது.
இவனது சமயம்
திராட்சாராமக் கல்வெட்டில் இவன் சத்வைஷ்ணவன் என்று கூறப்பட்டிருப்பதாலும், ஆலவேலியில் திருமாலுக்குக் கோயிலெடுப்பித்து நிபந்தம் விட்டிருப்பதாலும், இவனது மனைவி காஞ்சிபுரம் திரு அத்தியூ ராழ்வார்க்குத் திருநுந்தா விளக்கு நிபந்தம் அளித்துள்ளமையாலும், இவனது திருமால் பக்தி நன்கு விளங்கும். இவனது பெயர் ஆகிய ’கருணாகரன்’ என்பது, இராமன் திருநாமங்களி லொன்று. கலிங்கத்துப் பரணி யாசிரியரும் இராமப் பெயரோடு இவன் பெயரையும் வைத்து, இணைத்து ஒரு தாழிசையில் பின்வருமாறு கூறியுள்ளார்:—
’’இலங்கை எறிந்த கருணாகரன்றன்
இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன்றன்
களப்போர் பாடத் திறமினோ !’’ (2- 44)
இவன் தமையன்
தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான். தொண்டைமான் கலிங்கத்தின்மேல் படையெடுத்துச் சென்றபோது இவன் தமையனும் துணைப்படைத் தலைவனாகச் சென்றானென்பது பின்வரும் கலிங்கத்துப் பரணித் தாழிசையாலறியலாம் :-
“தொண்டையர்க் கரசு முன்வரும் சுரவி
துங்க வெள் விடை உயர்த்தகோன்
வண்டையர்க் கரசு பல்லவர்க் கரசு>
மால் களிற்றின்மிசை கொள்ளவே.’’ (11-53)
இத்தாழிசையிலிருந்து இவன் தமையன் ’பல்லவர்க்கரசு’ என்ற பெயருடையவனென்றும், மிக்க வள்ளன்மை உடையவன் என்றும் அறிகிறோம். தொண்டையர்க்கரசு முன்வரும் சுரவி’ என்பது இதனை வலியுறுத்தும். (சுரவி. காமதேனு.) இப் பல்லவர்க்கரசு திருப்பனந்தாள் கல்லெழுத்தில் கண்ட ’’இராசராச மூவேந்த வேளார் சேனபதிப் பல்லவ அரசர்’’ ஆக இருக்கக் கூடும் (46 of 1914) என்று திரு. மு. இராகவ ஐயங்காரவர்கள் கருதுவர் (சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக்கம் 57). பல்லவர்க்கரசு என்று சொல்லப் பட்டமையின் சோழ நாட்டுக்கு அடங்கியிருந்த சோழ அரசுக்குட்பட்ட பல்லவநாட்டுத் தலைவனாக இவன் இருந்திருத்தல் கூடும்.
சோழனசக்கரம்
கலிங்கப் போருக்குக் கருணாகரன் புறப்பட்ட செய்தியைக் கூறவந்த செயங்கொண்டார், பின்வரும் தாழிசையில், கருணாகரன் சேனை முழுமைக்கும் கண் போன்றவன்’ என்றும், ’சக்கரம் போன்றவன்’ என்றும் கூறியுள்ளார். அத்தாழிசை பின்வருமாறு :-
‘’தண்ணா ரின்மலர்த் திரள் தோள் அபயன்
தான் ஏவிய சேனை தன்க்(கு) அடையக்
கண்ணாகிய சோழன சக்கரமாம்
கருணாகரன் வாரண மேற்கொளவே.‘’ (1 1-52)
திருமால் தம்பகைவர்மேல் சக்கரத்தைச் செலுத்துவது போலத் திருமாலின் அம்சமாகிய சோழனும், கலிங்கப் பகையை அழிக்கக் கருணாகரனாகிய சக்கரத்தை ஏவினானென்பது இத்தாழிசையின் கருத்தாம். வடகலிங்க வேந்தன் அனந்த பன்மனுக்கு அவன் மந்திரி எங்கராயன் அறிவுரை கூறிய காலத்தில்,
‘‘கண்டு காணுன் புயவலி நீயுமத்
தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே‘‘
என்னுமிடத்தும் கருணாகரனைச் சோழவேந்தனது சக்கரமாக உருவகித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மாயூரத்துக்கு அருகில் ‘சோழ சக்கர நல்லுர்’ என்ற வூர் இருக்கிறது. அஃது கருணாகரத் தொண்டைமானின் சிறப்புப் பெயராகிய ‘சோழன சக்கரம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருத்தல் கூடும்.
உடன் சென்ற பிற தானைத் தலைவர்கள்
வடகலிங்கப் போருக்குச் சென்ற தானைத் தலைவர்களுள் கருணாகரனது தமையனாகிய ‘பல்லவர்க் கரசு‘ என்பானும் ஒருவன் என்பது முன்னர்க் கூறப்பட்டது.
‘‘வாசி கொண்டரசர் வாரணங் கவர
வாண கோவரையன் வாண்முகத்
தூசி கொண்டு முடிகொண்ட சோழன் ஒரு
சூழி வேழமிசை கொள்ளவே” (11-54)
என்ற வித்தாழிசையால் ‘வாணகோவரையன்‘ என்பானும், ‘முடிகொண்ட சோழன்‘ என்பானும், துணைப்படைத் தலைவராகச் சென்றனர் என்பது புலப்படும்.
வாணகோவரையன் என்பான் ‘சுத்த மல்லன் உத்தம சோழனாகிய லங்கேசுவரன்‘ எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகிறான். இவன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மேலப் பழுவூரில் செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்தான்; அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் எனப் பெயரிட்டு இறையிலி நிலங்கள் வழங்கினான் (389 of 1924, 392 of 1924). இதனால் இவனுடைய பக்தியும், அரசன்பால் கொண்ட பேரன்பும் தெளிவாக அறியப்படும். இவ்வாணகோ வரையனை விக்கிரம சோழனுலாப் பின்வருமாறு கூறும் :-
‘‘புல்லாத மன்னர் புலாலுடம்பைப் பேய்வாங்க
ஒல்லாத கூற்றம் உயிர்வாங்கப் - புல்லார்வந்(து)
ஆங்கு மடமகளிர் தத்தம் இழைவாங்க
வாங்கும் வரிசிலைக்கை வாணனும்.‘‘ (விக். 151-154)
முடிகொண்ட சோழன் என்பான் தென்னார்க்காடு வட்டம் சித்தலிங்க மடம் கல்வெட்டொன்றில் குறிக்கப் பெறுகிறான் இது விக்கிரம சோழனுடைய நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும் (383 of 1909). இதினின்று ஆடவல்லான் வாசுதேவனான முடி கொண்ட சோழ மூவேந்த வேளான்‘ எனப்படுபவன் ஓய்மா நாட்டுப் பண்டித கோஷ்டிச் சதுர்வேதி மங்கலமான முன்னூர் என்ற வூரவன் என்றும், ஆடவல்லான் வாசுதேவன் என்ற இயற்பெய ருடையவன் என்றும் அறியப்பெறும் (1. M. P. - S. A. - 786)
பிற போர்கள்
முதற் குலோத்துங்கனது 33-ஆம் ஆட்சி ஆண்டிற்குரிய திராட்சா ராமக் கல்வெட்டினின்று இவன் செய்த போர்களைப் பற்றி அறிய முடிகிறது. அதில் கலிங்கத்தை அழித்ததும், கங்கனைப் போரில் வென்றதும், கோசலர் படையின் உதவியால் தேவேந்திர வர்மன் என்பவனையும் பிறரையும் அடக்கியமையும், ஒட்டர தேசத்து எல்லையில் இராசேந்திர சோழனது வெற்றித் தூணை நிறுவியமையும் கூறப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய விளக்கங்கள் நன்கு தெரியவில்லை. எனினும் கலிங்கப் போருக்குமுன் பல போர்கள் நிகழ்த்திக் கருணாகரத் தொண்டைமான் சிறந்து விளங்கினான் என்பதை அறிவிக்க இக் கல்வெட்டொன்றே சாலும்.
விக்கிர சோழனாட்சியில்
முதற் குலோத்துங்கனுக்குப்பின் அரசனான விக்கிரம சோழனாட்சியிலும் கருணாகரத் தொண்டைமான் வாழ்ந்திருந்தா னென்பது ஒட்டக் கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவினா லறியப் பெறுகின்றது. அவ்வரிகள் பின்வருமாறு:-
—சேட்புலத்துத்
தென்னரும் மாளுவரும் சிங்களரும் கொங்கணத்து
மன்னரும் தோற்க மலைநாடர் — முன்னம்
குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி
மலையத் தருந்தொண்டை மானும் (விக். 134 - 137
இவனைப் பற்றிய பிற நூற் பாடல்கள்
கலிங்கத்துப் பரணிப் பிரதிகளிலும் தண்டியலங்கார மேற்கோள்களிலும் கருணாகரனைப் பற்றியும், கலிங்கப் போரைப் பற்றியும் சில பாடல்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :-
“ஒருவர் ஒருவர் மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தித்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க் கலிங்க மீதெழுந்த போது.”*
இது தண்டியலங்காரத்தில் சொற் பொருட் பின்வரு நிலையணிக்கு மேற்கோள்.
“கரடத்தான் மாரியும் கண்ணால் வெயிலும்
திரைவயிரக் கோட்டான் நிலவும் - சொரியுமால்
நீளார்த் தொடையதுலன் நேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.‘’
இது தண்டி-கருவிக் காரக வேதுவணிக்கு மேற்கோள்.
“கோட்டம் திருப்புருவம் கொள்ளா அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கம்
சிவந்தன. செந்தித் தெற.‘’
பின்வரும் பாடல்களிரண்டும் கலிங்கத்துப் பரணி கையெழுத்துப் பிரதிகளில் கண்டனவாகக் கூறப்படுகின்றன :—
’தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில்
விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப - நடுங்கியதே
கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண். ’’
’’சரநிரைத் தாலன்ன தண்பனி
தூங்கத் தலைமிசைச்செங்
கர நிரைத் தாரையும் காண்பன் கொலோ
கலிங்கத்து வெம்போர்
பொர நிரைத்தார் விட்ட வேழமெல்லாம்
பொன்னி நாட்டளவும்
வர நிரைத் தான்தொண்டை மான்வண்டை
மாநகர் மன்னவனே. ’’
கருணாகரன் செய்த கலிங்கப் போரைக் குறித்த கல்வெட்டுப் பகுதி பின்வருமாறு :—
’’வடதிசை வேங்கை மண்டலம் கடந்து ஆங்கவர்
கலிங்க மேழும் கனலெரி பரப்ப
விலங்கல் போல விளங்கிய வேந்தர்
விட்டவெங் களிற்றொடு பட்டுமுன் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர
வருகோ மட்டையன் மாதவன் எதிர்பட
எங்க ராயன் இகலவ ரேச்சணன்
மாப்பிறளா மதகரி யிராசனன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனைவரும்
வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யொடுவெண் ணினங்கழு கோடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப உயர்த்துக்
கருங்கட லடையத் தராதலந் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண்டு.”
முடிப்புரை
இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனானமைக்கு அவனுடைய படைத்தலைவனே காரணன் ஆவான் ஆனால், அப்படைத் தலைவன் யார் என்பதை இலக்கியம் அல்லது கல்வெட்டுச் சான்றுகளால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அவனுடைய தலைமைச் சேனதிபதி, விக்கிரம சோழச் சோழிய வரையனான இராசராசன் என்பான் கங்கைப் படையெடுப்பில் தலைமை வகித்து நடத்தி யிருக்கலாம் என்று ஆய்வாளர் கூறுவர். முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நிகழ்ந்த கலிங்கப் படையெடுப்பில் வெற்றிகொண்ட கருணாகரத் தொண்டைமான் பெயரும் கல்வெட்டுக்களில் தெளிவாக இடம் பெறவில்லை. என்றாலும் அவன் புகழை எஞ்ஞான்றும் நிலைபெறச் செய்யக் கலிங்கத்துப் பரணி யொன்றே சாலும். பரணி பாடிய பாவலனையும், பரணி கொண்ட காவலனையும், கலிங்கப் பரணி காவலனுக்குச் சூட்டிய தோன்றலாகிய தொண்டைமானையும் போற்று வோமாக !
காட்டிய வேழ அணிவாரிக்
கலிங்கப் பரணி நம் காவலன்மேல்
சூட்டிய தோன்றலைப் பாடீரே !
தொண்டையர் வேந்தனைப் பாடீரே ! (தா. 535