சோழர் கால அரசியல் தலைவர்கள்/நெற்குன்றங்கிழார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நெற்குன்றங் கிழார்

முதற் குலோத்துங்கன் காலத்துப் புலவர்கள்

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் ஆசிரியர் செயங்கொண்டார் வாழ்ந்து கலிங்கத்துப் பரணி பாடியமை யாவரும் அறிந்ததே. இச் செயங்கொண்டார் காலத்தில் கவிகுமுத சந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டர், நெற்குன்றங்கிழார் களப்பாள ராயர், வீரைப் பரசமய கோளரிமாமுனி, மருதூருடையான் குன்றன் திருச்சிற்றம்பல முடையான் முதலிய புலவர்கள் வாழ்ந்தனரென்று வரலாற்று ஆசிரியர்கள் பகர்வர். அன்னோருள் நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் முதற் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்தில் சில ஆண்டுகளும் வாழ்ந்தவராகக் கருதப் பெறுகிறார்.

அரசியல் அலுவலர்

நெற்குன்றங்கிழார் தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்துப் போரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த ஓர் அரசியல் தலைவராவர். இவருக்குக் கருவுணாயகர் என்பது இயற்பெயர். நெற் குன்றம் என்ற வூரைக் காணியாகக் கொண்டமையின் நெற்குன்றங் கிழார் என வழங்கப் பெற்றார் ; வேளாண் மரபினராதலின் களப்பாளராயர் எனப் பெற்றார்.

புலவர்களை வாழ்வித்தமை

ஒட்டக்கூத்தர் இவருடைய முதுமைப் பருவத்தில் வாழ்ந்தவராகத் தெரியவருகிறது. ஒட்டக் கூத்தர் புலவர்கள் பலராகப் பெருகிவந்ததைச் சிறிதும் பொறுக்காது செய்த செயலை,

“இரண்டொன்றா முடிந்துதலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்த னில்லை”

என்ற படிக்காசுப் புலவர் பாடற்பகுதி வலியுறுத்தும். கூத்தரது இச்செயலைத் தடுக்கவேண்டுமென்று நெற் குன்றங்கிழார் நினைத்தார் ; அதனால் ஒட்டக் கூத்தரின் முன்நின்று பின்வரும் பாடலைப் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதை கூறும் :-

“கோக்கண்டு மன்னர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில; பூவில் விண்ணோர்
 காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்திநின் கட்டுரையாம்
பாக்கண் டொழிவர்க ளோதமிழ் பாடிய பாவலரே.”

இப்பாடலின்கீழ் “கவிஞரை வெட்டவேண்டா என்று நெற்குன்றவான முதலியார் பாடியது” என்ற ஒரு குறிப்பும் அந்நூலுள் காணப்படுகிறது.

நம்பிகாளி

இவர் காலத்தில் நம்பிகாளி என்ற ஒரு புலவர் இருந்தார். அவரைப் பற்றித் தக்கயாகப் பரணி உரையாசிரியரும் குறித்திருக்கிறார். தக்கயாகப் பரணி 457-ஆம் தாழிசை உரையில், “உலகக் கவிப்பு என்னும் பெயர் கவிச் சக்ரவர்த்திகள் தாம்படைத்த திரிசொல்லென உணர்க. பண்டு நம்பிகாளியார் கடற்குப் பெயர் மழு வென்றிட்டு எறிதலும், கூர்த்தலும், திரைத்தலும் உடைய தென்றார்; அதுபோலும் இதுவென்க“ என்றமை காண்க.

நம்பிகாளியார் அந்நாளில் வாழ்ந்த ஒரு சிறந்த புலவர். ஒட்டக்கூத்தர் ஆக்கிய சொல்லிற்கு நம்பிகாளி ஆக்கிய சொல்லைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் மேற்கோளாகக் காட்டியிருக்கின்றமையின் நம்பிகாளியும் கூத்தரும் ஒருங்கு இணைத்துக் கூறப்பெறும் அரும் புலவர்களென்பது அறியப்பெறும். “கம்பனென்றும் கும்பனென்றும்“ என்ற தொடக்க முடைய தனிப் பாடலில் “காளி ஒட்டக் கூத்தன்“ என்று இவ்விருவரும் ஒருங்கு கூறப்பெற்றமை காண்க.

நம்பிகாளி ஒரு சமயம் நெற்குன்ற வாணரைப் பாடிப் பரிசில் பெறச்சென்றார். நெற்குன்ற வாணர் வெளியூர்க்குச் சென்றிருந்தார். அவர்தாதி நம்பிகாளியாரின் புலமையை அறிந்து சிறப்புக்களைச் செய்தாள். நெற்குன்ற வாணர் திரும்பியதும் இச்செய்தியை அறிந்து அகமிக மகிழ்ந்து பின்னும் அப்புலவர்க்குப் பல பரிசில்களை வழங்கினர். இதனைப்,

“பன்னுந் தமிழ்க்கவன் மாமனைத் தாதி பரிசளிப்ப
முன்நம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலிஎன்போன்
பின்னும் சிலபல பொன்னும் கொடுத்துத்தன் பேர்நிறுத்த
மன்னும் தமிழு முரைத்தா னவன்தொண்டை மண்டலமே“

என்ற தொண்டை மண்டல சதகப் பாடலால் அறியலாம். நம்பிகாளியார் வல்லை என்னும் ஊரினர் ; யாதவ குலத்தினர். நெற்குன்ற வாணர் இந்நம்பி காளியிடம் மிகவும் ஈடுபாடு உடையராயினார். இவற்றைக்,

“கற்கும் கவிவல்லை யாதவர் கோன் நம்பி காளிக்கியாம்
விற்கும் பரிசனம் ஆகிவிட் டோம்வட வேங்கடமும்
பொற்குன்ற மும்புகழ்க் கங்கா நதியும் பொதியமும்போல்
நெற்குன்ற மும்நம் மரபும்எந் நாளும் நிலை நிற்கவே“

என்ற பாடல் பகரும். மேற்கூறப்பட்ட செய்திகளிலிருந்து நெற்குன்ற வாணரது செந்தமிழ்ப் புலமையும் பெருங்கொடைத் திறனும் பெறப்படும்.

திருப்புகலூர்க் கல்வெட்டு

நெற்குன்றவாணர் திருப்புகலூரிலும் வாழ்ந்து வந்தவராக அறியப் பெறுகிறார். சோழ நாட்டுத் திருப்புகலூர்த் திருக்கோயிலில் கண்ட முதற் குலோத்துங்க சோழனது 49-ஆவது ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டொன்று,

“ஸ்ரீ புகலூர்த் தேவர் மத்தியான்னம் அமுது செய்தருளும் போது...நித்தம் பன்னிரண்டு பிராமணர் உண்பதாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழார் அரையன் கருவுணாயகரான களப்பாள ராஜர் செய்வித்த சாலைக்கு ... ... சாலைப் புறமாக இறையிலி செய்து என்றுள்ளது.“[1] இக் கல்வெட்டுப் பகுதியிலிருந்து இவர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து நெற்குன்றம் என்ற ஊரவர் என்றும், அரையன் என்ற சிறப்புப் பெயர் உடையவர் என்றும், கருவுணாயகர் என்பது இவருடைய இயற்பெயரென்றும் அறியப்பெறும். இந் நெற்குன்றங் கிழார் திருப்புகலூர்ச் சிவபெருமானிடத்தில் மிகவும் பக்தி கொண்டிருந்தமையின் அவ்வூரில் ஓர் உணவுச்சாலை அமைத்துச் சாலைப்புறமாக இறையிலி நிலமும் அளித்தார். திருப்புகலூர் இறைவனிடத்தில் இவர்கொண்ட பக்தி இவரியற்றிய திருப்புகலூர் அந்தாதி என்ற நூலாலும் உறுதி யெய்தும்.

செவிவழிச் செய்தி

நெற்குன்ற வாணர் திருப்புகலூர் அந்தாதி பாடியமை பற்றி ஒரு கதை வழங்குகின்றது. அக்கதை வருமாறு :

ஒரு சமயம் நெற்குன்றங் கிழாரால், பஞ்சக் கொடுமையினால் அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே தம் மனத்துக்கினிய தலமாகிய திருப்புகலூர்க்குச் சென்றார். வரி செலுத்தாமையின் நெற்குன்றங் கிழாரைச் சிறைப்படுத்தற் பொருட்டு அரச னேவலரும் அங்குற்றனர் ; அரசனது ஆணையையும் அறைந்தனர். அது கேட்ட நெற் குன்றங் கிழார், திருப்புகலூர் இறைவனைக் கண்டு கும்பிட்டு வருவதாகக் கூறித் திருவதிகைக் கோயிலைச் சூழ்ந்துள்ள பொய்கையில் நீராடி விநாயகப் பெருமான் கோயிலே அடைந்து பின்வரும் பாடலைப் பாடினர் :-

“உரை செய் மறைக்கும் தலைதெரி யாவொரு கொம்பை யென்றே
பரசு மலர்க்குப் பெருநிழ லாக்கும் பழனமெல்லாம்
திரைசெய் கடற்றுரைச் சங்கமு லாவும் திருப்புகலூர்
அரசினிடத்து மகிழ்வஞ்சி யின்றவோர் அத்திநின்றே.”

அவ்வமயம் விநாயகப் பெருமானை வணங்க வந்த ஒரு மாது இப்பாடலக் கேட்டு மனமகிழ்ந்து, “இச்செய்யுளை ஒரு அந்தாதிக்குக் காப்பாக அமைத்தல் சாலவும் நன்று” என்றனள். நெற்குன்ற வாணர், “அங்ஙனமே ஆகுக ; அந்தாதிக்குக் காப்பாக்கினால் அரசிறைக்குப் பொருளாதல் யாங்ஙனம் ?” என்றார். அம்மாது, நெற்குன்றங் கிழார் கூறியதன் பொருளை அறியாது திகைக்க, அரச ஏவலர் செய்தியைக் கூறினர். அவள் நெற்குன்ற வாணர் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை முழுவதும் செலுத்தினாள். நெற்குன்ற வாணரும் மேலே காட்டிய பாடலையே காப்பாகக் கொண்டு திருப்புகலூர் அந்தாதி என்ற நூல் பாடி முடித்தார்.

திருப்புகலூரந்தாதி

திருப்புகலூர் அந்தாதியைப் பாடியவர் நெற்குன்ற வாணர் என்பதை அந்நூலிறுதியில் கண்ட ”களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதி கலித்துறையே” என்ற தொடரால் அறியலாம். இந்நூல் சோழ நாட்டுத் திருப்புகலூர்ச் சிவபெருமான் பேரில் அந்தாதித் தொடையில் பாடப்பட்ட நூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது ; சொல் நயம், பொருள் நயங்களுடையது ; திரிபு என்னும் சொல்லணி சிறப்பாகப் பொருந்தியது.

சுந்தரர் ”தம்மையே புகழ்ந்து” என்று திருப்புகலூரில் பாடிய பாட்டின் பொருளைச் ”செல்வர் பால் கவி நூறு உரைத்துத் தாக்கு அமருக்கு முருகா அருளென் பர் ... ... புகலூரைப் போற்றி உய்யார்” என்று இரண்டாவது பாடலில் குறித்துள்ளார். நான்காவது பாட்டில் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றைத் ”தென்னன் முன்னே மாவடி வந்திக்கு மண் சுமந்தோர்” என்றமைத்தார். இறைவன் ”கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடிய செய்தியை 4-ஆம் பாட்டில் ... , ”உரைத்த அப்பாவை முற்சங்கத்தில் ஏறி நின்று ஒதும் ஐயர்” என்று குறிப்பிட்டுள்ளார். 50-ஆவது பாட்டில் திருப்பழனம், திருவையாறு, திருநள்ளாறு, திருவெண் காடு, திருவிடை மருதூர் என்ற தலங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இறைவன் சுந்தரர் பெருட்டுப் பரவையாரிடத்தில் தூது சென்றமையை ”அன்னநடைப் பரவைக்குத் திருத்தூது சென்ற நளினத்திலே” என்று குறித்தார். இறைவனை வணங்குவதற்குத் திருமூலர் ”யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை” என்றார் ; இதனை நினைப்பிக்கும் முறையில் 83-ஆம் பாட்டில்,

“புற்றிலை யாபுக லூரிலை யாவெனப் போற்றியின்றே
சற்றிலை யாயினும் தூவுநெஞ் சேபினைச் சாவிலேயே”

என்றார். “படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சும் என் நாவிற் கொண்டேன்” என்ற அப்பர் வாக்கை,

“அடைக்கலம் நானுன் அடித்தா மரையினைக்(கு) ஐந்தெழுத்தாம்
படைக்கலம் நாவிலுண்(டு) அஞ்சேன் எவர்க்கும்...”

என்ற வரிகள் நினைவூட்டும். விக்கிரம சோழன் ஆட்சியில் சிவ பக்திச் செல்வராகவும், பெரும் புலவராகவும், அருங்கொடை வள்ளலாகவும், புலவர்களை ஊக்கிக் காத்தவராகவும் விளங்கிய நெற்குன்றங் கிழார், முதலாம் குலோத்துங்க சோழனுடைய மகனாகிய விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்திலும் திருமந்திர ஓலை நாயகமாக விளங்கினர். இதனை விக்கிரம சோழனது 11-ஆம் ஆட்சியாண்டுக்குரிய தஞ்சை மாவட்டம் ஆலங்குடிச் சாசனத்தினின்று அறியலாம்.

“ ...--- திருவாய் மொழிந்தருளினாரென்று திருமந்திர ஓலை நாயகம் செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு பெ...நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங் கிழான் அரையன் கருவு... ...”

என்பது அச்சானப் பகுதி (195 of 1894 ; S. I. I. Vol. V 458) இதனால் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நெற்குன்றங்கிழார் சோழ நாட்டில் இருந்தமை தெளிவு.


  1. சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 64.