சோழர் கால அரசியல் தலைவர்கள்/சிற்றிங்கணுடையான்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிற்றிங்கணுடையான்

முன்னுரை

ஈங்கா[1] நாட்டின்கண்ணது சிற்றிங்கண் என்னும் ஊர். இச் சிற்றிங்கண் ஊரவன் சிற்றிங்கணுடையான் எனப்பெற்றான். இவனது இயற்பெயர் கோயில்மயிலை என்பதாம். இவன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் காலத்தில் பராந்தகமூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப்பெற்றான். ஆகவே இச் சுந்தரசோழன் மகனாகிய ஆதித்தகரிகாலன் கல்வெட்டுக்களில் சிற்றிங்கணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றனன் இவன் திருவிடை மருதூர்க் கோயிலுள் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகளாகத்திகழ்ந்தான்.

ஆதித்தகரிகாலன்[2]

ஆதித்தகரிகாலனை, இரண்டாம் ஆதித்தன் என்பர் ஆராய்ச்சியாளர். 957 முதல் 970 வரை ஆண்ட இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கு இவன் முதன் மகனாவான். இவனது கல்லெழுத்துக்கள் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன; 5 ஆவது ஆட்சியாண்டு வரை காணப்பெறுகின்றன. இவன் 'பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப்பெறுகிறான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனால் கி. பி. 966ல் வெல்லப்பெற்ற வீரபாண்டியனே இவனால் வெல்லப்பட்ட பாண்டியனாதல் கூடும். இவ்வாதித்த கரிகாலன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவ்வாதித்தகரிகாலனது ஆட்சியாண்டுகள் குறிக்கப்பெற்ற கல்லெழுத்துக்களினின்று சிற்றிங்கணுடையானின் சிறந்த தொண்டுகளைக் காண்பாம்.

திருவிடைமருதூர் கல்லெழுத்து[3]

திருவிடைமருத்ல ஆழ்வார் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்க ணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்தவேளானும், திரை மூர்ச்சபையாரும் திருவிடைமருகில் நகரத்தாரும், தேவகன்மிகளும் நாடக சாலையில் கூட்டம் கூடினர். அவ்வூரில் சித்தி மறைக் காடானான திருவெள்ளறைச் சாக்கை என்ற ஆடல் வல்லான் ஒருவன் இருந்தான். அவன் தைப்பூசத் திரு நாளிலும், தீர்த்தமாடின பிற்றைநாள் தொடங்கி மூன்று நாட்களும், வைகாசித் திருவாதிரையின் பின் பிற்றை நாள் தொடங்சி மூன்று நாட்களும் ஆக ஏழு தடவை திருவிடை மருதில் உடையார் திருமுன் ஆரியக்கூத்து[4] ஆடுவதற்குப் பதினாற்கலம் நெல் கொடுப்பதற்காக ஒரு வேலி நிலத்தை அவர்கள் ஒதுக்கினர்கள். இச்செயல் இரண்டாம் ஆதித்தனின் 4-ஆம் ஆட்சியாண்டில் நடை பெற்றது. இத்தகைய கூத்து நிலையக நடத்த இவ்வதிகாரி முயற்சி எடுத்துக்கொண்ட மையான் நாகரிகக் கலைகளை வளர்ப்பதில் இவனுக்கிருந்த ஆர்வம் புலப்படு கின்றது.

படிமாற்றுயர்த்தல்

ஆதித்தகரிகாலனது 4 ஆவது ஆட்சியாண்டு 170 ஆவது நாள் குறிப்பிடப்பெற்ற கல்லெழுத்தொன்று[5] ஒரு அரிய செய்தியை அறிவிக்கின்றது. திரைமூர், சாஸனத்துள் கண்டவண்ணம் ஒரு குடி நீக்கி தேவதானம்;[6] ஆண்டுதோறும் பஞ்சவாரமாக 260 கலம் நெல் கொடுக்க வேண்டும். ஆனால் படிமாற்றில் [7]நூற்றறுபது கலம் நெல் வரவு வந்தது. திரைமூர் தேவதானம் இருபதிற்று வேலியும் குடிநீக்கிற்றில்லை என்று கூறி 800 கலம் நெல் கொடுக்கப்பெற்று வந்தது. சிற்றிங்கண் உடையான் திரைமூரைத் தேவதானமாக்கிய மூல வோலையை வருவித்தான்; குடி நீக்கி என்பதைக் கண்றிந்தான் ; இனி அடை ஓலைப்படி திருவிடைமருதன் என்னும் மரக்காலால் 2800 கலமும், பஞ்சவாரமாக 260 கலமும் கொடுத்துவரல் வேண்டும் என்று உத்தரவிட்டான்; இதுகாறும் கொடுக்காத தொகையை முதற் பொருளாக்கி, அம்முதற் பொருளினின்று கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, படிமாற்றை மிகுவித்தான். இங்ஙனம் கோயில் கணக்குசளை நன்கு ஆய்ந்து, கோயில் வருமானத்தை மிகுவித்துப் படிமாற்றை அதிகரித்தமை, இச்சிற்றிங்கணுடையானின் இறைபணி நிற்றலில் பொறுப்புணர்ச்சியை நன்குணர்த்தும்.

அன்னம் பாலிப்பு

கும்பகோணத்திலுள்ள நாகேசுவரசுவாமி கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம்[8] எனப்பெறும். அங்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று[9] கிடைத்துள்ளது. திருக்குடந்தைச் சபையினர் சிற்றிங்கணுடையானுக்கு நிலம் விற்றனர். அந்நிலவருவாய் கொண்டு, வேதம் வல்ல அபூர்விகள்[10] இருபதின்மருக்கும், ஐந்து சிவயோகிகளுக்கும்[11] திருக்கோயிலில் அன்னம்பாலிக்கச் சிற்றிங்கணுடையான் ஏற்பாடு செய்தான். ’’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்றதை நன்குணர்ந்து பணியாற்றும் இத்தலைவன், பின்னும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் 50 பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலமளித்தான் என்று இன்னொரு சிலாலேகை[12] செப்புகின்றது.

பிராபாகரம்வக்காணித்தல்

திருக்குடமூக்கில் மூலப்பருடைப் பெருமக்கள்[13] சிற்றிங்கணுடையானுக்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இரண்டு மா நிலம் விற்றனர். அந்நிலத்தைப் பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்தி[14] யாகச் சிற்றிங்கணுடையான் அளித்தனன் என்று ஒரு கல்லெழுத்து[15] நுவல்கின்றது.

பிராபாகரம்[16]

‘‘யாகங்களை எவ்வாறு செய்வது என்பதும், மந்த்ரங்களை எம்முறையில் கூறவேண்டும் என்பதும், எச்செயல்கள் அங்கி எச்செயல்கள் அங்கம் என்பதும், இவை போன்ற பலவும் ச்ரெளதஸுத்ரங்களிலும் க்ருஹ்ய ஸுத்ரங்க்ளிலும் கூறப்பட்டன. வேதத்தில் பூர்வ காண்டத்தில் மந்த்ரங்கள் யாகங்களில் வழங்கவேண்டிய முறையிலே கூறப்படாமையாலும், எச்செயல்கள் அங்கி எவை அங்கம் என ஆங்குக் கூறப்படாமையாலும், அவையெல்லாம் மந்த்ரங்கள், விதிகள், அர்த்தவாதங்கள் இவற்றின் ஆராய்ச்சியால் அறிதல் வேண்டும். வேத வாக்கியங்களில் முரண்பாடு இருப்பின் எதனைக் கொள்ளல் வேண்டும் என்பதும், வேத வாக்கியத்துக்கும் ஸ்மிருதி வாக்கியத்துக்கும் முரண்பாடு இருப்பின் யாது பிரமாணமாகும் என்பதும், இவை போன்ற பலவும் இவ்வாராய்ச்சியால் அறிதல் கூடும். இவ்வாராய்ச்சி நூலுக்குப் பூர்வமீமாம்ஸா எனப்பெயர். பூர்வமீமாம்ஸாவை முதன்முதலில் சாஸ்திரமாக இயற்றியவர் ஜைமினி மஹர்ஷியாவர். இவர் சுமார் கி. மு. 600-ல் இருந்தவர். மீமாம்ஸ ஸுத்ரம் 12 அத்தியாயங்களைக் கொண்டது. இதற்கு சபரஸ்வாமி என்பவர் பாஷ்யம் இயற்றினர். இவரது காலம் கி. பி. 200 என்பர். இவர்க்குப்பின் ஆசார்ய சுந்தரபாண்டியன் மீமாம்ஸா வார்த்திகம் எழுதினர். இவர்க்குப் பிறகு குமாரில பட்டர் சபரபாஷ்யத்துக்கு உரை எழுதினர். இவர் காலம் கி. பி. 620 - 680 என்பர். குமாரிலபட்டரின் கொள்கைகளுக்கு மாறுபாடாக பிராபாகரமிச்ரர் சபரபாஷ்யத்துக்கு இரண்டு உரை எழுதினர். முதலுரை ஆயிரம் கிரந்தமும், இரண்டாமுரை பன்னிராயிரம் கிரந்தமும் உடையது. அவற்றிற்கு விவரணம் நிபந்தனம் எனப் பெயர். சாலிகநாதர் என்பார் விவரணம் நிபந்தனம் ஆகிய இரண்டிற்கும் உரை எழுதினர். சாலிகநாதர் காலம் கி. பி. 690-760. குமாரில பட்டரின் மதம் எவ்வாறு பரவியதோ அவ்வாறு பிரபாகர மதம் பரவவில்லை.”

எனவே பூர்வமீமாம்ஸ்மதமே பிரபாகரரால் விவரிக்கப் பெற்றது என்றும், அப்பிரபாகரரால் எழுதப்பெற்றவற்றை (பிரபாகர மதத்தை) விளக்குவதற்குத் திருக்குடந்தையில் நிபந்தம் அளிக்கப்பெற்றது என்றும் அறியப்பெறும். இதனான் சிற்றிங்கணுடையான் சமய அறிவு படைத்தவன் என்றும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வம்கொண்டு ஆவன செய்தான் என்றும் தெரியலாம்.

பிறாண்டும் பிராபாகரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருக்கோட்டியூர் என்ற ஊரில் முதலாம் இராசராசனது 11-ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்தொன்று,[17] திரைமூர் நாட்டுச் சாத்தமங்கலத்தவர் ஒருவர், பிராமணர் ஒருவரால் பிராபாகரம் வக்காணிக்கவும், விளக்கெரிக்கவும், நில தானம் செய்ததை உணர்த்துகின்றது. இதனாலும் சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் பிராபாகரம் பரவச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பெற்றன என்றும், சோழநாட்டவருள் வடமொழிவல்லார் அந்நாளில் பிராபாகரம் கற்று வல்லவராய் இருந்தனர். என்றும் அறியக்கிடக்கின்றது.

காப்புரை

பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்திதந்த திருக்குடந்தைச் சாஸனத்தில் ’ஆயிரம் திருவடியு முடையார் ரக்ஷை’ என்று காப்புரை காணப்பெறுகிறது. ஆயிரம் திருவடியு முடையார் என்பது மகாவிஷ்ணுவைக்குறிக்கும் என்றும், புருஷசூக்தத்தில்[18] ஸஹஸ்ர பாத் என்றுள்ளது என்றும், ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.[19] ஆனால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கொள்ளுதலே ஈண்டைக்கு ஏற்புடைத் தாகும். என்ன ?

‘ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும் ஆரூ ரமர்ந்த அம்மானே’

என்ற தேவாரத்துள் அப்பர், ’ஆயிரம் சேவடியான்’ சிவ பெருமான் என்று கூறுவர். இக்காப்புரை சிவபெருமான் திருக்கோயில் சிலைமேலெழுத்தில் காணப்படுதலால் இத் தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கோடலே சாலவும் பொருந்தும். அன்றியும், ”ஸஹஸ்ர சரணம்” என்று பஸ்மஜாபா லோபநிஷத்தும், ”ஸஹஸ்ரபாத்’’ என்று சுவேதாசுவத ரோபநிமிஷத்தும், ஸுபாலோபநிஷத்தும் கூறுதலின்[20] சிவபெருமானே ஆயிரம் திருவடியுமுடையார் என்று குறிப்பிடப்பெற்றுள்ளார் எனல் உறுதியாதல் காண்க.

மதுராந்தக மூவேந்தவேளான்

இரண்டாம் ஆதித்தன் கல்வெட்டுக்களில், சிற்றிங்கணுடையான், பராந்தக மூவேந்த வேளான் என்று சிறப்பிக்கப் பெற்றான் என்பது முன்னரே கூறப் பெற்றது. கி. பி. 970 முதல் 984 வரை ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் இவன் திருவிடை மருதூரில் சில காலம் ஸ்ரீ காரியம் ஆராய்கின்றவனாகவே காணப்பெறுகிறான். ஆனல் இவ்வுத்தம சோழன் காலத்து இவன் மதுராந்தகமூவேந்த வேளான் என்று குறிக்கப்பெற்றுள்ளான்.[21] கோனேரிராசபுரத்து உத்தம சோழனது கல்வெட்டொன்று[22] ’’இவனை நம் கருமம் ஆராய்கின்ற மதுராந்தக மூவேந்த வேளான்’’ என்று குறிப்பிடுகிறது. யாண்டு மூன்றாவது முதல் நந்தவனப்புறமாய் தேவதான இறையிலியாக வரியிலிட்டுக்கொள்க என்று நமக்குச் சொல்ல ... ... ... யாண்டு மூன்றாவது முதல் வரியிலிட்டுக்கொள்க என்று நாம் சொல்ல, நம் கருமம் ஆராய்கின்ற கோனூருடையான் பரமேசுவரன் அரங்கனான இருமுடிச்சோழவேந்த வேளானும், சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளானும், பருத்திக்குடி யுடையான் கொதுகுலவர் சாத்தனான பரகேசரி மூவேந்த வேளானும், ஆணத்தி[23] யாலும்‘‘ என்பது அச்சாஸனப்பகுதி. இதனால் இவன் இவ்வுத்தரவு நிறைவேற்ற ஆணத்தியாக இருந்தான் என்பது பெறப்படும். ஆனால் இதே சாஸனத்தில், யாண்டேழாவது நாள் 240-ல் கொடுக்கப்பெற்ற உத்தரவில், கருமம் ஆராய்கின்ற பரகேசரி மூவேந்த வேளான் மட்டும் குறிக்கப்பெறுகிறான். ஆகவே 7-ஆம் ஆட்சி யாண்டில் சிற்றிங்கண் உடையான் கோனேரிராசபுரத்தில் இல்லை என்பது தெளிவு. இனித் திருவிடைமருதுாரிற் கண்ட பரகேசரிவர்மனது ஆறாவது யாண்டுக் கல்லெழுத்தில் மீண்டும் இவன் திருவிடை மருதுாரிற் காணப்படுகின்றமையின், இவ்வுத்தம சோழன் ஆட்சியிலேயே மீண்டும் திருவிடைமருதூர்த் திருக்கோயில் அலுவலுக்கு இவன் வந்துவிட்டான் என்று கொள்ளலாம்.

முடிந்தது முடித்தல்

இதுகாறும் கூறியவாற்றான் சிற்றிங்கணுடையான் ஆதித்த கரிகாலன் காலத்தும் (ஆதாவது சுந்தரசோழன் ஆட்சிக்காலத்திலும்) சுந்தர சோழனுக்குப் பின்னர் ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் வாழ்ந்தவன் என்பதும், இவ்விருவராலும் சிறப்பிக்கப்பெற்றவன் என்பதும், திருவிடைமருதுார்க்கோயிலில் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற அலுவலில் இருந்தான் என்பதும், இறை பணி நிற்றலில் சிறந்தவன் என்பதும், நாகரிகக் கலைகள் வளர்த்தவன் என்பதும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வங்கொண்டவன் என்பதும் பிறவும் தெளியப்பெறும். இங்ஙனம் இன்னோர் அன்னோர் வரலாறறிந்து அன்னோர் போல ஒழுகுவதற்கு முயல்வோமாக.

இடைமருதுறையும் எந்தாய் போற்றி !

 1. இங்கண் நாடு எனினும் ஆம் ; அருமொழிதேவ வள நாட்டு இங்கணாடு என்றும் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு இங்கணாட்டு இங்கண் என்றும் ஒரே கல்லெழுத்தில் காணப்படுக்கின்றமையின் (70 of S.I.I. Vol II Part III) இவ்விரு வளநாடுகளுள் ஒன்றின் கண்ணது சிற்றிங்கண் இருந்த இங்கணாடு என்று கூறலாம்.
 2. ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரபன்மரும் ஒருவரே யாதல் கூடும் என்பர் ஒருசாரார்; இது குறித்து இந்நூலுள் ‘ ‘பார்த்திவேந்திராதிபன்மன்‘ என்ற கட்டுரை காண்க.
 3. 154 of 1895. S. I.I. Vol V No 718 ; Vol III 202.
 4. புராண இதிகாசக் கதைகளைத் தழுவிவரும் கூத்து ஆரியக்கூத்து எனப்பெறும் மு. ரா. ஆராய்ச்சித் தொகுதி - பக்கம் 453 அடிக்குறிப்பு.
 5. 214 of 1907: S. I I I 203.
 6. பழங்குடிகளை நீக்கிக் கோயிலுக்கு அளிக்கும் நிலம் அல்லது ஊர் இதனால் கோயிலே மேல்வாரம் குடிவாரம் இரண்டும் அனுபவிக்க முடியும் (S. I. T. I. Vol III Part II Page 1418).
 7. படிமாற்று - Scale of expenses in the temple; செலவுத் திட்டம்.
 8. திருநாவுக்கரசர் பாடியுள்ள தாண்டகம் மட்டுமே கிடைத்துள்ளது.
 9. 230 of 1911.
 10. அபூர்விகள் - பெரும்பாலும் தல யாத்திசை செய்யும் பிராமணர்கள் (S. J. T. I. Vol. III Part II Page 1393).
 11. சிவபெருமானத் தியானம் புரிந்து யோகநெறியைப் பயில்பவர்; சிவயோகம் ஆவது யாதென்பதனை, ’’எப்பொருள் வந்துற்றிடினும்’’ என்ற உண்மைநெறி விளக்கச் செய்யுளால் அறிக. ’’சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் - அவயோகமின்றி அறிவோருண் டாகும்’’ என்ற திருமந்திரத்தால் சிவ யோகிகளின் பெருமை விளங்கும் ; பிரமோத்தரகாண்டம் சிவயோகியர் மகிமைச் சருக்கமும் காண்க.
 12. 231 of 1911.
 13. திருக்குடமூக்கு - கும்பகோணம் ; மூலப்பருடைப் பெருமக்கள் - சிவன்கோயில் நிர்வாகத்தை நடத்தும் குழுவினர்.
 14. பட்டவிருத்தி - கல்வி வல்ல பிராமணருக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்.
 15. 233 of 1911 ; S. I. I. III 200.
 16. இத்தலைப்பில் எழுதியிருப்பவை ஸ்ரீ P. S. சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட ‘வடமொழி நூல் வரலாறு‘‘ என்ற நூலில் பக்கம் 240 - 2 45 ல் எழுதப்பெற்றுள்ளனவாம்.
 17. 333 of 1923.
 18. புருஷசூக்தம் - ’புரு : எல்லா உயிர்களுடைய இதய குகையில், ஷ : படுத்திருப்பார் ; புர் : எல்லாவற்றிற்கும் முதலில், உஷ : இருப்பவர்’ என்று பொருள் கூறுவர் பெரியோர். இது ரிக்வேதத்திலுள்ள ஒரு மந்திர விசேடம்.
 19. S. I.I. Vo1 III பக்கம் 377.
 20. திரு. ஆர். ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய ”சிவபரத்துவ நிச்சயம்” காண்க.
 21. பரகேசரிவர்மனின் 6 ஆவது ஆண்டு - திருவிடை மருதூர் : 219 Of 19O7.
 22. S. I. I. III. Part III பக்கம் 3O2.
 23. ஆணத்தி - அரசன் உத்தரவை நிறைவேற்றுவோர்.