சோழர் கால அரசியல் தலைவர்கள்/பார்த்திவேந்திராதிபன்மன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchபார்த்திவேந்திரபன்மன்[1]

பார்த்திவேந்திரபன்மன் யார் ?

தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பார்த்திவேந்திரபன்மன் கல்லெழுத்துக்கள் காணப்பெறுகின்றன. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனுக்கு (957-970) ஆதித்த கரிகாலன் (ஆதித்தன் 11) என்ற ஒரு மகன் இருந்தான். இவ் ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுக்களையும், பார்த்திவேந்திரபன்மனுடைய கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து திரு. H. கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் இருவரும் ஒருவரேயாதல் கூடும் என்று முடிவுகட்டினர். அதனேயே தாமும் ஏற்றுக்கொண்டு திரு. K. A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் சுருக்கம்[2] பின் வருமாறு :-

இவ்விருவரும் ”வீரபாண்டியன் தலை கொண்டவர்கள்” என்று கூறப்பெறுகின்றனர். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுடன் போரிட்ட வீரபாண்டியனே இவர்களால் வெல்லப்பட்ட வீரபாண்டியனாதல் ஏற்புடைத்து. இருவரும் பரகேசரி எனப்பெறுகின்றனர். ஆதித்த கரிகாலன் கல்லெழுத்துக்கள் மிகச் சிலவே. அவை தாமும் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ளன; 5-ஆவது ஆண்டுக்கு மேலும் காணப்பெறவில்லை. பார்த்திவேந்திரபன்மனுடைய கல்லெழுத்துக்கள் பல தொண்டை மண்டலத்திலுள்ளன; அவை அவனது 13-ஆம் ஆட்சியாண்டு வரை கொடுக்கப்பெற்றனவாம். பார்த்திவேந்திரன் இவ்வரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாதல் கூடும். ஆராய்ந்து பார்த்தால் இவ்விருவருடைய கல்லெழுத்துள்ள இடங்கள் தாம் வேறுபடுகின்றன. எனினும் பார்த்திவேந்திர பன்மனும் ஒரு பரகேசரி;[3] கோவிராசமாராயர்[4] என்று குறித்துக் கொள்கிறான்; மூன்றாவது ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில்[5] பார்த்திவேந்திர ஆதித்தபர்மர் என்றும் குறிக்கப் பெறுகிறான். அவனுடைய மனைவியர்களும் உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார்,[6] பெருமானடிகள் தேவியார் தன்மப்பொன்னார்;[7] பெருமானடிகள் நம்பிராட்டியார் திரிபுவன மஹாதேவியார்[8] ’’ என்று அரச குலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பிக்கப் பெறுகின்றனர். இவ்வளவு சிறப்புக்களோடு இருந்த இவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுக இருத்தல் கூடும் என்பது உறுதி. ’’ பார்த்திவேந்திர ஆதித்தவர்மன் ” என்பதும், அதன் பிற வடிவங்களும், ’’பார்த்திவேந்திரன்’’ என்ற சிறப்புப் பெயரை ஆதித்தன் கொண்டனன் என்பதைக் காட்டுவனவாகும். ஆகவே பார்த்திவேந்திரபன்மனும், ஆதித்த கரிகாலனும் ஒருவரேயாதல் கூடும்.

எனவே இவன் இளைஞனாயிருக்கும்போதே வீர பாண்டியனுடன் போர் செய்தான்; பின்னர்ச் சோழ நாட்டு வடபுலத்தைக் காக்கும் பொறுப்பேற்றுத் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவன் காலம் 956-969.[9]

இனி இவ்விருவரும் ஒருவரேயல்லர் என்பாரும் உண்டு. ’’பாண்டி நாட்டுக்குப் பெரும் படையுடன் சென்று வீரபாண்டியனோடு போர் நடத்திய தலைவர்கள் சுந்தரசோழன் புதல்வனாகிய ஆதித்த கரிகாலன், கொடும்பாளுர்வேள் பூதி விக்கிரமகேசரி, தொண்டைநாட்டுச் சிற்றரசன் பார்த்திவேந்திரவர்மன் என்போர் ’’ என்று திரு. T.v. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்[10] கூறியுள்ளமையின், ஆதித்த கரிகாலனும் பார்த்திவேந்திரனும் ஒருவரேயல்லர் என்ற கருத்துடையவர் இவர் என அறியலாம்.

தென்னாற்காடு ஜில்லா தாயனூரில் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிபன்மருடைய (அதாவது இரண்டாம் ஆதித்தனுடைய) கல்வெட்டுக்களும், பார்த்தி வேந்திரனுடைய கல்வெட்டுக்களும் உள்ளன. ஆனால் இவற்றை நோக்கின் இவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதையும், இவ்விருவருக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பதையும் விளக்குவதற்குரிய குறிப்புச் சிறிதேனும் இல்லை[11] என்று ஒரு ஆராய்ச்சியாளர் எழுதியுள்ளார். எங்ஙனமாயினும் பார்த்திவேந்திர பன்மன், முதற்பராந்தகன் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்து ஆட்சி செய்தவன் என்பது மறுக்கப்படாததொன்று.

பார்த்திவேந்திரனின் மனைவியர்

தக்கோலத்துத் திருவூறல் ஆழ்வார்க்குத் திருப்பள்ளிக்கட்டில் அளித்த அருமொழிநங்கை;[12] உத்தர மேரூரில் ஸ்ரீவெளி விஷ்ணுகிரகத்தில் ஸ்ரீபலி கொட்டுவதற்கு நிலம் வாங்கியளித்தவரும்,[13] ௸ கோயிலில் இரண்டு விளக்கு எரிக்க 192 ஆடுகளை அளித்துப் பன்மைச்சேரி வெள்ளாளர்க்கும் வியாபாரிகளுக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தவரும்[14] ஆகிய பெருமானடிகள் நம்பிராட்டியார் திருபுவன மகாதேவியார்; காஞ்சி புரத்தில் 50 கழஞ்சு பொன் அளித்துப் பன்னைப்புரம் ஊரவர் 100 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்த பெருமானடிகள் தேவியார் தருமப் பொன்னர் ஆன திரைலோக்யமாதேவியார்,[15] திருபால் புரத்தில் இரண்டு விளக்கு எரிக்கப் பட்டாளமான எழுநூற்றுவச் சதுர்வேதி மங்கலத்தவரிடத்தில் 25 கழஞ்சு பொன் கொடுத்த வஜ்ஜவை மகாதேவியார்[16] ; உத்தர மேரூரில் தன்னுல் எழுந்தருள்விக்கப் பெற்ற படிவத் திற்கும், திருக்கோயிலுக்கு ஸ்ரீபலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் 2920 குழி நிலம் அளித்த உடையார் தேவியார் வில்லவன் மகாதேவியார்[17] ஆகிய இவ்வைவரும் பார்த்திவேந்திரபன்மனுடைய மகாதேவியராக அறியப் பெறுகின்றனறர்.

திருப்பாற்கடல் கல்லெழுத்து

திருப்பாற்கடல் என்பது வட ஆற்காடு மாவட்டம் காவிரிப் பாக்கத்துக்கு அண்மையில் உள்ள ஓரூர். இவ்வூரில் கரபுரேசுவரர் கோயில் இறையக வடபுறச் சுவரில் இக்கல்லெழுத்துக் காணப்பெறுகிறது.[18] இது பார்த்தி வேந்திராதிபன்மனது மூன்றாவது ஆட்சியாண்டுக் கல் வெட்டாகும். திருப்பாற் கடலில் பெரியதளி அபிஷேக மண்டபத்தில் படுவூர்க்கோட்டத்துக்[19] காவிரிப்பாக்கமான[20] அவநிநாராயணச் சதுர்வேதிமங்கலத்துச் சபை யாரும், அந்த ஆண்டுக்குரிய சம்வத்ஸர-, தோட்ட-, ஏரி-, கழனி-, பஞ்சவார-, கணக்கு-, கலிங்கு-, தடிவழி வாரியப் பெருமக்களும்[21] பட்டர்,[22] விசிட்டர்,[23] ஸ்ரீ வடவீரநாராயணப் பெருமக்களும்,[24] ஊராள்கின்ற பல்லவ பிரம்மாதரயனும், கண்காணி அரும்பாக்கிழானும் கூடினர். தானம்[25] உடைய சிவபிராம்மணன் மாகண்டனன் திருக்கரபுரத்துப் பெருமாற்கு அருச்னாபோகமான தோட்டமும் நிலமும் ஆறும்[26] உடைந்து மணல் மேடிட்டுக்கிடந்தன வென்று சபையாரிடம் விண்ணப்பித்தனன். சபையார், ஊர் மஞ்சிக்கத்தினின்று[27] கழனிக் கோலால் அளந்து 1400 குழி சிலாலேகை செய்து தருக, என்று கழனி வாரியத்தார்க்கு உத்தரவு பிறப்பித்தனர்.

1400 குழியும் ஆமாறு

(1) இவ்வூர்ப் பிடாகை[28] ஒச்சேரி வடகழனியிற் செல்லும் மஹாத வாய்க்காலுக்குத் தெற்கேயுள்ள ஊர் மஞ்சிக்கம் 400 குழி; இதன் எல்லை:-கிழக்கு - மாங்காட்டுச் சோமாசி நிலம்; தெற்கு - ஊர் மஞ்சிக்கமாய்க் கிடந்த மேடு; மேற்கு - திருப்பன்றீஸ்வரத்துத் திருமூலட்டானத்துப் பெருமானடிகள் உதமாதம்பட்டி;[29] வடக்கு மஹாத வாய்க்கால்.

(2) இதன் தெற்கில் திருநாராயண வாய்க்கால் வடசிறகில் உள்ள ஊர்மஞ்சிக்கமான மேட்டுச் சிறு கருகேசுவக் கழனி 400 குழி; இதன் எல்லை:- கிழக்கு - அங்காரை மாதேவ பட்டர் பூமிமே லருகே போன நடைகால்; தெற்கு - திருநாரண வாய்க்கால்; மேற்கு - ஐயன் பெருமான் பூமி; வடக்கு முடும்பைப் பொற்கூளி பூமி.


(3) திருநாரணவாய்க்காலுக்குத் தெற்கில் ஊர் மஞ்சிக்கமாய் வரி கொடாதிருந்த பூமி 600 குழி; இதன் எல்லை:- கிழக்கு - வரி செலுத்தாது கிடந்த பூமி, தெற்கு - அவட்டை கிழவன் நிலமான சோமாசி பூமிக்குக் கிழக்கிலுள்ள குண்டில்; மேற்கு - எடுக்குபட்டிகளும் இகுடிகளாய[30] சோமாசி பூமி; வடக்கு - கால் (-நாராயண வாய்க்கால்).

வாரியங்கள்

ஊர்ச்சபையின் உட்கழகங்கள் வாரியம் என்ற பெயராலும், வாரியத்தில் இருந்து யணியாற்றுபவர் வாரியப்பெருமக்கள் எனவும் கூறப்பெற்றனர். காவிரிப் பாக்கத்தில் எட்டு வாரியங்கள் இருந்தன வென்பது மேலே கூறப்பெற்றது. ஆனல் திருப்பாற் கடலில் நான்கு வாரியங்களே இருந்தன என்று பராந்தக சோழனது 12-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று இயம்பு கின்றது.[31]

சம்வத்ஸ்ரவாரியம் : இவ்வாரியப் பெருமக்கள் தமக்குரிய அலுவல்களை ஓராண்டுக் காலம் இருந்து ஆற்றும் தகுதியுடையர் ஆவர். அறநிலையங்களைக் கண்காணிப்பதும், நியாயம் வழங்குவதும் இவர் கடமையாகும். இவ்வாரியம் எல்லா வாரியங்களையும்விடச் செல்வாக்குள்ளது; சிறப்பு வாய்ந்தது. மற்ற வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்கு முன்னதாக இவ்வாரியப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தோட்ட வாரியத்திலோ ஏரி வாரியத்திலோ இருந்து பணியாற்றினவர்களும், கல்வியறிவில் சிறப்புடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமே இவ்வாரியத்துக்குத் தகுதி யுடையராவர். இதில் பன்னிரண்டு உறுப்பினர் இருப்பர்.[32]

தோட்டவாரியம் : 'நிலங்களைப்பற்றிய' , எல்லா விஷயங்களையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமை என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். தோட்டங்களைப் பற்றியவற்றைக் கண்காணிப்பதும் இவர் கடமையாகலாம்.

ஏரிவாரியம் : நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச் செய்வது இவர் கடமை என்பது திரு. பண்டாரத்தார் கருத்து. சிற்றூர்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய செலவுக்காக நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டிருக்கும். அவை ஏரிப்பட்டி எனப்பெறும். ஏரிப்பட்டியை மேற்பார்வையிட்டவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பெற்றனர் என்றும் சிலர் கூறுவர்.[33]

கழனிவாரியம் : நன்செய் நிலங்களைப் பற்றியவற்றைக் கவனிப்பது இவர் கடமை.

பஞ்சவார வாரியம் : ’அரசனுக்குக் குடிமக்கள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரியையும் வாங்கி அரசாங்கப் பொருள் நிலையத்துக்கு அனுப்புபவர்’ என்பர் திரு. பண்டாரத்தார் அவர்கள். நாடோறும் அரசாங்க அலுவல்களை மேற்பார்வை செய்வதும் கணக்குகளைப் பார்த்தலும் அவர் கடமையாகலாம் என்பர் Dr. S. K. ஐயங்கார் அவர்கள்.[34] ஒவ்வொரு சிற்றூரிலும் அறுவடை ஆனதும் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கிவைக்கப்பெறும். அதனைச் சேர்த்தல், மேற்பார்வையிடல், காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்துதவல் முதலிய வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே பஞ்சவார வாரியம் எனப்பெறும் ” என்பர் டாக்டர் இராசமாணிக்கனார் (பல்லவர் வரலாறு, பக்கம் - 228).

கணக்கு வாரியம் : அரசியல் கணக்குகளைப் பரிசீலனை செய்வது இவர் கடமையாகலாம்.

கலிங்கு வாரியம் : ஏரிக் கலிங்குகளை[35] மேற்பார்வை செய்பவர் இவர்.

தடிவழி வாரியம் : வயல்களைக் கண்காணிப்பவர் இவர் ( Fields Supervision Committee); ‘தடி என்னும் அளவையால் அளக்கப்பெறும் பெருவழிகளைப் பார்வையிடுபவர் என்று திரு. S. K. ஐயங்கார் அவர்கள் கருதுவர்.[36]

உறுப்பினரைத் தேர்ந்திடுமாறு

"உறுப்பினரைக் குடவோலை வாயிலாக ஆண்டு தோறும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கும் இடத்துத் தர்மகிருத்தியம் கடைகாணும் வாரியர், அரசன் ஆனைப்படி நாட்டில் சபை கூடுதற்கென்று அமைத்த பெரு மாளிகையில், இளைஞர் முதல் முதியோர் வரையுமுள்ள எல்லோரையும் குறைவறக் கூட்டி, அன்று அவ்வூர் நம்பிமார் அனைவரையும் அழைத்து வந்து அம்மாளிகையினுள் இருக்கச்செய்து, அவர்க்கு நடுவில் குடத்தினை வைப்பார்கள். அவருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தினை மேலே உயர்த்து, அதனுள் ஒன்றுமில்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழே வைத்த பினனர், ஒவ்வொரு ஊரையும் முப்பது பகுதி(Ward)களாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியிலுள்ள ஒவ்வொருவரும் தகுதியுடையரெனத் தமக்குத் தோன்றும் ஒருவர் பெயரைத் தனி ஓலையில் எழுதி, எழுதிய ஓலைகளை ஒருங்கு சேர்த்து இன்ன பகுதியைச் சார்ந்த ஓலை என்பது விளங்க, அப்பகுதியின் பெயர் எழுதிய வாயோலை பூட்டிக் கட்டிக் குடத்தில் இடுவர். இவ்வாறு முப்பது பகுதியினரும் இட்ட பின்னர், அம்முதியார், அங்கு நடைபெறுவது இன்னதென்றறியாத ஒரு சிறுவனக்கொண்டு, அக்குடத்தினின்று ஒரு ஓலைக் கட்டினை எடுப்பித்து, அதனை அவிழ்த்துப் பிறிதொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஒரு ஓலையை அவனைக்கொண்டு எடுக்கச்செய்து அதனைத் தாம் வாங்கி, அங்கிருக்கும் கரணத்தான் கையில் கொடுப்பர். அவன் தன் ஐந்து விரல்களையும் அகலவிரித்து அகங்கையில் அதனை ஏற்று அதன்கண் எழுதப்பெற்றுள்ள பெயரை யாவரும் அறிய வாசிப்பன். அங்கிருந்த நம்பிமார் அனைவரும் அவ்வோலையைப் படித்திடுவர். அதன் பின்னர் அப்பெயர் ஒரு ஒலையின் கண் எழுதிக்கொள்ளப்படும். இவ்வாறு மற்றைய கட்டுக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக முன்போல் எடுப்பித்துப் பிரித்துக் குடத்திட்டுக் குலுக்கி, முன்னையிற்போல ஒவ்வொரு ஓலையாக எடுக்கச்செய்து எழுதிக்கொள்வார்கள். இவ்வண்ணம் எழுதிய முப்பதின்மருள் கல்வியின் முதிர்ந்து வயதின் மூத்தார் பன்னிருவரைச் சம்வத்சர வாரியர் எனத் தேர்ந்திடுவர். மற்றைய பதினெண்மருள் பன்னிருவர் தோட்டவாரியராகவும், அறுவர் ஏரிவாரியராகவும் தேர்ந்திடப்பெறுவர். பின்னரும் இம் முறையே முப்பது ஓலைகளைத் தேர்ந்து குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் பன்னிரண்டினை எடுப்பித்து, அறுவரைப் பொன் வாரியராகவும், அறுவரைப் பஞ்சவாரியராகவும் ஏற்படுத்துவார்கள் ”.[37]

பொன்வாரியம் : இக்கல்லெழுத்தில் 'பொன்வாரியம் என்று ஒரு வாரியம்' குறிக்கப்பெறவில்லை. ’’பல்வகையானும் திரட்டப்படும் காசுகளை ஆராய்வு செய்வது பொன்வாரியக்காரர் பொறுப்பாக இருந்தது’’ என்று பண்டித எல். உலகநாதபிள்ளை அவர்கள் கூறுவர்.

நிலத்தை அளக்கும் கோல்

திருப்பாற்கடல் கல்லெழுத்தில் நிலம் அளக்கும் கோல், கழனிக் கோல் என்று கூறப்பெற்றுள்ளது. காவனூர்க் கல்லெழுத்தில்[38] நிலம் அளக்கும் கோல் 'கடிகைக் களத்துக் கோல்' என்று சொல்லப்பெற்றுள்ளது. முதல் இராசராசனது ராஜக்கல் கல்வெட்டிலும் இக்கோல் குறிக்கப்பெற்றுள்ளது.[39]

நில வருமானத்தைச் செலவுசெய்யுமாறு

மேலே கூறப்பட்ட 1400 குழியும் முன் இருந்த பூமியோடு திருக்கரபுரத்துப் பெருமானடிகளுக்கு இறையிலி அர்ச்சனாபோக[40] மாக அளிக்கப்பட்டது. இந்நில வருமானத்தைக்கொண்டு திருக்கரபுரத்துப் பெருமானடிகளும் நிசதம் இருநாழி அரிசியால் ஒருபொழுது திரு அமுது செய்யவும், மூன்று சந்தியும் ஒரு விளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது.[41]

சில சொற்றாெடர்களும் வழக்காறுகளும்

மஞ்சிக்கம் என்பது ஊர்களில் இருக்கும் புறம்போக்கு நிலம். இது ஊர்ச்சபையாரின் மேற்பார்வையில் இருக்கும்; இந்நிலப்பகுதியை இங்ஙனம் சாசனம் செய்து கொடுக்கும் உரிமை ஊர்ச்சபையார்க்கிருந்தது. இம்மஞ்சிக்கம் வரி செலுத்தாது கிடந்த பூமி என்பது ”ஊர் மஞ்சிக்கமாய் வரிசிலத்துக் கிடந்த பூமி” என்ற பகுதியால் அறியலாம். ’வரி சிலத்துக்கிடந்த’, ’வரிசிரையாய்க் கிடந்த’ என்ற பகுதிகள் ’’வரி செலுத்தாதிருந்த’’ என்ற பொருளைத் தருவனவாம். இனி உத்தரவுகள் பிறப்பிப்பது சபையாரது உரிமை என்றும், வயல்களைப்பற்றிய உத்தரவுகளை நிறைவேற்றுவது கழனி வாரியப் பெரு பெருமக்களது கடமை என்றும் இக்கல்லெழுத்தினின்று அறிகிறோம்.

’’குறி’’ என்ற சொல் சபை என்று பொருள்படும். ஊராள்கின்றவன், கண்காணி, மத்யஸ்தன் கணக்கன் என்ற அலுவலர்கள் பெயர்களும் அறியப் பெறுகின்றன. கண்காணி என்பது மேற்பார்வை செய்பவர் (overseer) என்று பொருள்படும். மத்யஸ்தன் என்பவர் கரணத்தான் என்றும் கூறப்பெறுவர்; வாரியப் பெருமக்கள் அல்லது ஊர்ச் சபையினர் பணித்தவற்றைச் செய்வது இவர் கடமை. இக்கல்லெழுத்திலிருந்து ஊராட்சிமுறை அக்காலத்துச் சிறந்திருந்தமை அறிந்து மகிழ்வோமாக !

பிற்கல்லெழுத்துச் செய்திகள்

வியாக்கியான விருத்தி

திருக்கோவில்களில் வியாக்கியான மண்டபங்கள் இருந்தன. அங்குப் பெரும்புலவர்கள் இலக்கணத்தை விளக்கி விரிவுரை யாற்றுவர். இங்ஙனம் இலக்கண விரிவுரை நடாத்துபவர்க்கு ஊதியம் அளித்தற்பொருட்டு நிலம் ஒதுக்கப்பெறுவதுண்டு; இது குறித்து உத்திரமேரூர் வைகுண்டப்பெருமாள் கோவிலில் வடபுறத்துச் சுவரில் உள்ள பார்த்திவேந்திர பன்மனுடைய 3-ஆம்ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது.[42] வியாகரன விருத்தியாக (1) பத்ரங்கது வாசுதேவபட்ட சோமாசியார் 3-ஆம் தரம் 480 குழியும், (2) ஓதிமுகில் மாதவபட்டர் தலைதரம் 720 குழியும், (3) துர்பில் நரசிங்க கிரமவித்தன் தலைதரம் 220 குழியும், (4) இவையிற்றுக்கு நீர்பாயும் வாய்க்கால் 35 குழியும் ஆக 1455 குழி நிலம் அளித்தனர் என்று அறியப்படுகிறது.[43]

விஷஹரபோகம்

மக்களின் உடற்பினிை போக்க ஆதுரசாலைகள் பல முற்காலத்து இருந்தன. அங்குச் சல்லியக்கிரியை பண்ணுவாரும் (Surgeons) இருந்தனர். வைத்தியர்களுக்கு மருத்துவக் காணியும் அளிக்கப்பெற்றது.[44] பார்த்திவேந்திரபன்மனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக்குரிய உத்திரமேரூர்க் கல்லெழுத்து,[45] விடம் தீர்க்கும் வன்மையுள்ள மருத்துவரை நியமித்து அவற்கு ஊதியம் அளித்தற்கு இறையிலிநிலம் அளித்த செய்தியைப் புகல்கின்றது. அது ‘விஷஹரபோகம்’ எனப்பெற்றது. விஷஹரபோகமாக அளிக்கப்பெற்ற நிலம் 1280 குழி. இந்த நிலத்துக்கு யாராவது இறை செலுத்தவேண்டும் என்று கூறி இறை வசூலித்தால் தன்மாசனத்துக்கு.[46] இருபத்தைந்து கழஞ்சு பொன் தண்டம் செலுத்த வேண்டும். இக்கல்லெழுத்தில் கானும், சபையாரிடம் பணிபெற்றார். ... ... யுடையாரே அனுபவிக்கப்பெறுவாராகவும் ’’ என்ற பகுதியால் விடம் தீர்த்தலில் வல்ல மருத்துவரைச் சபையாரே நியமிப்பர் என்றும்,விஷஹரபோகத்தை வழிவழி அனுபவிக்க முடியாதென்றும் அறிகிரறோம்.

ஸ்ரீபலிபோகம்

திருக்கோயில்களில் ஸ்ரீபலி என்று ஒரு சடங்கு நடைபெறும். வாத்தியம் முழக்கிச் சோறும் பூவும் திருக்கோயிலில் (குறித்த இடங்களில்) தூவுதலே ஸ்ரீபலி எனும் சடங்காகும். ஸ்ரீபலி இடும்போது விக்கிரகத் தோடு வலம்வருவர். அப்பொழுது இசைக்கருவிகளை வாசிப்பர். ஸ்ரீபலி என்பது, ஹவிர்பலி எனவும் தீயெறி சோறு எனவும் கூறப்பெறும். இதற்கு நிபந்தம் விட்டதாகப் பார்த்திவேந்திரனது 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துச் செப்புகிறது.[47] ஸ்ரீமந் நீலகங்கரையன் அண்ணாவன் நாட்டடிகளுக்குத் தாயனூர் ஊரார் விண்ணப்பித்தனர். சூரியகிரகண நாளில் ஸ்ரீபலிபோகம் தரப்பெற்றது. ஸ்ரீபலிக்கு ஐந்துபேர் தணக்கமலை மகா தேவர் திருமுன் வாச்சியங்கள் முழக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. இதற்குரிய நிலம் 1 (வேலி). இந்த 1 (வேலி) நிலமும் உம்பளநாட்டு மேற்குடிகிழான் திரன் மூதையனும் இவன் தம்பி திரன் உலகடிகளும் பொன்கொடுத்து இறையிழிச்சி, ஸ்ரீபலி போகமாகக் கொடுத்தனர்.

உத்திரமேரூரில் ஸ்ரீ பலிபோகமாக நிலம் அளித்த செய்தி இரண்டு கல்லெழுத்துக்களில்[48] கூறப்பெற்றுள்ளது.

அன்றியும் ஸ்ரீ பலிக்கும் அர்ச்சனாபோகத்துக்குமாக உடையார் தேவியார்[49] வில்லவன் மஹாதேவியார் 2920 குழிநிலம் உத்தரமேரூரில் அளித்தார். சிரத்தாமந்தர்[50] இவ்வறத்தை நன்கு நடைபெறக் கண்காணித்தல் வேண்டும் ; தவறு நிகழின் 25 கழஞ்சு தண்டம் வசூலிக்கவும் அவர்களுக்கு உரிமை தரப் பெற்றது.[51]

உத்தரமேரூரில் கொங்கரையர் என்பார் ஸ்ரீ வெளி விஷ்ணு கிருகத்தைக்[52] கட்டினார். சில நிலங்களை அவ்வூர் விவசாயிகளிடமிருந்து தம்பிராட்டியார்[53] திருபுவன மகாதேவியார் விலைக்கு வாங்கி அக்கடவுளுக்கு ஸ்ரீ பலி கொட்டுவதற்காகக் கொடுத்தார். பூர்வாசாரம்[54] பெற்று அந்நிலம் இறையிலியாக்கப் பெற்றது.[55]

பாண்டூரில் ஸ்ரீ பலி கொட்டுவதற்கு இசைவல்ல எழுவர் நியமிக்கப் பெற்றனர் என்று இவ்வரசனது 15-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது[56] ஸ்ரீ பலி போகம் எனினும் சீபலிப்பட்டி எனினும் ஒன்றேயாம்.

மூதையனும் உலகடிகளும்

இவ்விருவரும் மேலே கூறிய தாயனூர்க் கல்லெழுத்தில் (பக்-44) கூறப்பெற்ற உடன் பிறந்தோர் ஆவர். இவ்விருவரைப் பற்றியும் தாயனூரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பாறையிலுள்ள கல்லெழுத்திலிருந்து ஒரு அரிய செய்தி தெரியவருகிறது[57]

மேற்குடி கிழான் திரன் மூதையனும் இவன் தம்பி உலகடிகளும் தாயனூரார்க்கு 30 கழஞ்சு பொன் கடன் கொடுத்தனர். ‘‘கடன் ஓலை‘‘ காணாமற்போயிற்று. போனாலென்ன ! வட்டியும் முதலுமாக 45 கழஞ்சு பொன் இவ்விருவரும் திரும்பப் பெற்றனர். காணாது போன ஓலை அகப்பட்டால், ‘அவ்வோல சாவோலையாகக் கருதப்பெற வேண்டும்‘ என்று இக்கல்லெழுத்துப் பகர்கின்றது. இதிலிருந்து கடன் கொடுத்தார் கொண்டார் ஆகிய இவ்விருதிறத்தாருடைய நேர்மை தெள்ளிதின் விளங்குகின்றது !

ஆனையாள் அளித்த தருமம்

பார்த்திவேந்திரபன்மரது 13-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமால் புரக் கல்லெழுத்து[58] இவ்வரசனது ஆனையாள்பற்றி அறிவிக்கிறது. ஆனையாள், “மன்னன் கண்ணனாகிய சாமாமோக வாரணப் பேரரையன்’ எனும் பெயரினன் ; பெருமாள் பிறகேறும் ஆனையாள் ’’ என்று குறிக்கப் பெற்றுள்ளான்; திருமால் அடியவன்; தாமல் கோட்டத்து வல்லநாட்டு ஸ்ரீ கோவிந்தப்பாடி நின்றருளிய பெருமானடிகளும் ஸ்ரீகாரியம் செய்கின்ற வைஷ்ணவதாசரிடமிருந்து சிற்றியாற்றூரில் 2000 குழி நிலம் விலைக்கு வாங்கி அவ்வூரில் உள்ள ஒரு மடத்தில் உத்தமாக்கிரமாக நாடோறும் ஒரு பிராமணனுக்கு உணவு அளித்தற் பொருட்டுக் கொடுத்தனன்.

தண்ணீர்ப்பட்டி

(செங்கற்பட்டு மாவட்டம்) காட்டூரில் அம்பலம் அமைத்தவர் பெருந்தரத்து மேனாயகம் செய்கின்ற பட்டையனார் என்பவர் ஆவர். இவர்க்கு இவ்வூரவர் தண்ணீர்ப்பட்டியாக நிலம் விற்றனர் என்று பார்த்தி வேந்திரனது 9-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துள் காணப்பெறுகிறது.[59] தண்ணீர்ப்பட்டி என்றால் என்ன என்று இக்கல்லெழுத்தினின்று அறிந்துகொள்ள இயலவில்லை ; தண்ணீர்ப்பந்தல் தருமத்துக்கு விடப்பெற்ற நிலம் என்பர் சிலர்; எனினும் ஏரி, குளம், வாய்க்கால் முதலிய நீர்ப்பாசனத்துக்குரியவைகளைப் பாதுகாப்பதற்குரிய செலவுகளுக்கென ஒதுக்கப்பெறும் நிலப்பகுதி எனக்கொள்ளுதலும் தகும். இங்ஙனம் கொடுக்கப்பெற்ற நிலத்தின் ஒரு பகுதி, ‘‘ஏரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்குமா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஏரிப்பட்டியாவது ஏரிகளைப் பழுது பார்த்துச் செவ்வனே வைத்திருக்க மானியமாகக் கொடுக்கப்பெறும் நிலம் ஆகும்.

விராடராசன் தொண்டுகள்

திருமால்புரக் கல்லெழுத்துக்களில் விராடராசன் ஒருவன் பேசப்பெறுகிறான். அனயமன்[60] ஆன பர மண்டலாதித்தியன் என்பது அவன் பெயர். அவன் பார்த்திவேந்திரனது மூன்றாவது ஆட்சியாண்டில்[61] திருமால்புரக் கோயிலையும் சுற்றியுள்ள தாழ்வாரத்தையும் கட்டினான். இவனே பன்னிரண்டாம் ஆட்சி யாண்டில்[62] ஒரு மண்டபத்தைக் கோயிலில் அமைத்தான். இவனோ இவன் மகனோ நாடோறும் பதினைந்து பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலதானம் செய்தான்.[63]

அய்யன் மஹா சாஸ்தா

அய்யனார் அல்லது மாசாத்தனார் என்பார் ஹரிஹர புத்திரர் என்றும் கூறப் பெறுவர். இவர்க்கு உத்தர மேருச் சதுர்வேதிமங்கலத்தில்[64] ஒரு கோயில் இருந்தது. இக் கோயிலுக்குப் பார்த்திவேந்திரனது 3-ஆவது ஆட்சி யாண்டில் நிலம் அளிக்கப்பெற்றது.[65] எம்மூர்த் தெற்கில் அய்யன் மஹா சாஸ்தாவுக்குத் திருச்சென்னடைக்கும், நுந்தாவிளக்குக்கும், ஸ்ரீ பலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் வைத்த பூமி என்பது கல்லெழுத்து வாசகம்.

(திருச்சென்னடை - நாடோறும் இடையீன்றி நடத்தப்பெறவேண்டிய நித்திய பூசை முதலியன ; நுந்தா விளக்கு - இடையறாது எரியும் விளக்கு ; அர்ச்சனா போகம் - அர்ச்சனைக்காக ஒதுக்கப்பெறும் நிலவருமானம்.)

ஜேஷ்டை

ஜேஷ்டை அல்லது சேட்டையார் திருமகளின் தமக்கை என்பர். சேட்டையார்க்குக் கோயில் இருந்ததென உத்திரமேரூர்க் கல்லெழுத்து இயம்புகிறது.[66] பெருங்குறி மகாசபையார்[67] குமண் பாடியிலுள்ள நிலத்தைப் பூர்வாசாரம் பெற்று இறையிலியாக அளித்தனர். (எண்ணாயிரம் என்னும் ஊரில் ஜேஷ்டையார் முதலிய தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன வென்று முதலாம் இராசேந்திரனின் 25-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து நுவல்கிறது.[68] )

சப்தமாதர்கள்

அபிராமி, மகேச்வரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி என்பவர் சப்த மாதராவர். பெரும்பாலான திருக்கோயில்களில் இவர் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளனர். இச்சப்தமாதர் பூசைக்காக நிபந்தங்கள் விடப்பெற்ற செய்தியைச் சில கல்லெழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. இராசகேசரியின் 25-ஆம் ஆண்டில் ஆலம்பாக்கத்திலும்[69] முதல் இராசராசனின் 23-ஆம் ஆட்சி யாண்டில் ஆத்தூரிலும்[70] முதல் இராசேந்திரனின் 25-ஆம் ஆட்சியாண்டில் எண்ணாயிரத்திலும்[71] சப்த மாதர்கோயில்களைப்பற்றி அறிவிக்கும் சாசனங்கள் கிடைத்துள்ளன. செங்கற்பட்டு ஜில்லா வேளச்சேரியில் பார்த்திவேந்திரனுடைய 10-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துளது.[72] சோழநாட்டு மழநாட்டுத் திருவேட்பூ ருடை யான் தேவடிகள் என்பார் சப்த மாதர்க்கு நாட் பூசைக்காகப் பூதிபாக்கன் செறு தடி நாலினால் நிலம் 200 குழியும், இரண்டெற்றி என்னும் நிலம் 539 குழி ஆக 739 குழி நிலம் இறையிலியாகக் கொடுத்தார். சப்த மாதரைப் பூசிக்கும் பூசகரை ”மாத்ருசிவர்” என்று இக்கல்லெழுத்து அறிவிக்கிறது.

குமரடி நங்கை தொண்டு[73]

தக்கோலம் என்றவூர் திருவூறல் என்ற பெயருடைய திருப்பதிகம் பெற்ற சிவதலமாகும் ; ”ராஜமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம்” என்னும் பெயருடையதாயிருந்தது. குமரடி நங்கை என்பார், திருவூறல் கோயிலில் இரணசிங்கவீரர் பள்ளிக்கட்டில் மண்டபத்தில் “களிகை விடங்கர்” என்ற திருமேனியை எழுந்தருள்வித்தார் ; நாள் வழிபாட்டிற்கு 92 கழஞ்சு பொன் இச்சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடம் ஒப்படைத்தார். இக்குமரடி நங்கையின் தாய் பெயர் ”நந்தி நங்கை”; இந்நந்தி நங்கையின் தந்தை பெயர் ”திருவூறல் தேவனார்” என்பதாகும்.

வட்டி

பெருமானடிகள்[74] தேவியார் தருமப்பொன்னார் ஆன திரைலோக்ய மாதேவியார் 50 கழஞ்சு பொன் அளித்து 200 காடி நெல் வட்டியாகத் தரவேண்டும் என்று ஏற்பாடு செய்தார்.[75] இவரே 50 கழஞ்சு பொன்னுக்குப் பன்னை புரத்தவர் 100 காடி நெல் வட்டியாகக் கோயிலுக்குத் தரவேண்டும் என்று அளித்தார்.[76] இங்ஙனம் வட்டி விகிதம் அறிதல் தகும்.

முகத்தலளவை

“காடி’’ என்பதே பெரும்பாலும் காணும் அளவையாகும். காடி என்பது கலத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். தக்கோலம் கல்லெழுத்தில்[77] ’’கவாரமொழி’’ என்று ஒரு மரக்காலின் பெயர் கூறப்படுகிறது, “ஊரகத்து நின்றார் காடக்கீழ் நாழி’’ என்று ஒரு நாழியின் பெயர் ஒரு கல்லெழுத்தில் காணப்பெறுகிறது.[78]

நிஷ்கா

(வட ஆர்க்காடு மாவட்டம் பிரமதேசத்திலுள்ள பார்த்தி வேந்திரனது 13-ஆம் ஆண்டுக் கல்லெழுத்து மூவாயிரவன் திரைராஜ்ய கடிக மத்யஸ்தன் என்பான் ஒரு அபிஷேக பிராமணனுக்கு ஊதியமளிக்க 30 கழஞ்சு பொன் அளித்த செய்தியை உணர்த்துகிறது.[79] இதில் ஒரு நிஷ்கா என்பது ஒரு கழஞ்சுக்குச் சமமாகும் என்றுள்ளது. முதற்பராந்தகனது 30-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில் தமிழ்ப் பகுதியில் “கழஞ்சு’’ என்று குறித்து, வடமொழிப்பகுதியில் “நிஷ்கா’’ என்று குறிக்கப்பெற்றுள்ளது.[80] முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியிறுதியில் “கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவனாகிய” மூன்றாம் கிருஷ்ணனுடைய 20-ஆம் ஆட்சிக்குரிய திருவொற்றியூர்க் கல்லெழுத்தில்[81] சதுரானன பண்டிதர் என்பார் 100 நிஷ்கா பொன் திருவொற்றியூர்க் கோயிலுக்கு அளித்த செய்தி கூறப்பெறுகிறது. இனி இக்கால வெல்லைக்கு ஒரு நூற்றண்டுக்குப் பின்னர்த் தந்த முதற் குலோத்துங்க சோழனுடைய திருவாமாத்தைர்க் கல்வெட்டிலும் நிஸ்கா குறிக்கப் பெற்றுள்ளது.[82] இவற்றால் நிஷ்கா என்பது ஒரு பொன் நாணயம் என்றும், ஒரு கழஞ்சு எடையுள்ளது என்றும் தெரியலாம்.

தொகுப்புரை

இவ்வேந்தன் ஆட்சியில் தொண்டை மண்டலத்தில் அமைதி நிலவியது ; ஊராட்சி செவ்வனே நடைபெற்றது ; இலக்கண விரிவுரையாற்ற நிலமளித்தல் போன்ற செயல்களால் கேள்விச்செல்வம் ஓங்கியது ; விஷ வைத்தியம் செய்ய மருத்துவரிருந்தனர் ; கோயில்களில் எல்லாச் சடங்குகளும் நடந்தன ; உடையாக் தேவிமார் கோயில்களுக்கு நிபந்தம் அளித்தனர் ; இசைவல்லார் ஆதரிக்கப்பெற்றனர் : பொதுமக்கள் கோயில் காரியங்களில் கவனம் செலுத்தினர் , திகுமேனிகளை எழுந்தருள்வித்தனர் : சைவம் வைணவம் ஆகிய இரு சமயங்களும் ஓங்கி வளர்ந்தன ; அய்யனார், சேட்டையார், சப்த மாதர்கள் கோயில்களில் இடம் பெற்றிருந்தனர் : அந்தணர் அருந்தவர்க்கு அன்னம் பாலிக்கப்பெற்றன என்றின்னோரன்ன அறிகிறோம்.


 1. இது ஞானசம்பந்தத்தில் வெளிவந்தது.
 2. K. A. N. COLAS - Part I-Pages 178 and 179.
 3. திருவடந்தை 20 of 1910; S. I. I. III 180.
 4. do 26 of 1910; S. I. I. III 186.
 5. உத்தரமேரூர் - 38 of 1898; S. I. I. III 158.
 6. S. I. I. III 193
 7. 17 of 1921.
 8. S. I. I. III 195 ; 52 of 1898.
 9. K. A. N. COLAS Part I, P. 180.
 10. சோழர் வரலாறு - பகுதி I பக்கம் 78.
 11. K. A. N. COLAS Part I. P. 453 Footnote.
 12. தக்கோலம் 3 ம் ஆண்டு S. I. I. 166.
 13. உத்தரமேரூர் 12ம் ஆண்டு, do 194.
 14. 13 ம் ஆண்டு, do 195.
 15. காஞ்சிபுரம் - 12 ம் ஆண்டு, 17 of 1921.
 16. திருமால்புரம் - 1 8 ம் ஆண்டு, S. I. I. III 197.
 17. உத்தரமேரூர் - 11-ஆம் ஆண்டு, S.I.I. III 193.
 18. S. I. I. III 156; 692 of 1904.
 19. படுவூர்க் கோட்டம் - தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று.
 20. காவிரிப்பாக்கம் - இது அவதிநாராயணச் சதுர்வேதி மங்கலம் எனப்பெற்றது. அவதிநாராயணன் என்பது மூன்றாம் நந்திவர்மனுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
 21. பெருமக்கள் - அவையின் உறுப்பினர்.
 22. பட்டர் - கோயில் பூசகர்.
 23. விசிட்டர் - ஊரிலுள்ள சான்றோர்.
 24. இச் சதுர்வேதிமங்கலத்தின் வடபகுதியிலுள்ளவர் போலும்; வீரநாராயணன் என்பது முதற் பராந்தகனது சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
 25. தானம் - கோயில் உரிமை.
 26. ஆறு - பாலாறு.
 27. மஞ்சிக்கம் - புரம்போக்கு; தரிசுநிலம்.
 28. பிடாகை - ஊருடன் சேர்ந்திருக்கும் சிற்றுார்; உட் கிடையூர்.
 29. உதமாதம்பட்டி - நிலத்தின் பெயர்.
 30. பொருள் விளங்கவில்லை.
 31. S. I. I. III. 99; 693 of 1904.
 32. Dr. Meenakshi - Administration and Social life under the Pallavas – P. 128: Footnote No. 25.
 33. Dr. இராசமாணிக்கம்-பல்லவர் வரலாறு-பக்கம் 214; Dr. Meenakshi - Administration and Social iife under the Pallavas P. 146.
 34. Hindu Administrative Institutions in S. IndiaPage 199.
 35. கலிங்கு - அனை; மதகு.
 36. Hindu Administrative Institutions in S. IndiaPage 134 and 171.
 37. முதல் இராசசாசசோழன் - உலநாத பிள்ளை - பக்கம் 53 – 53.
 38. இரண்டாம் ஆதித்தனது 8-ஆம் ஆண்டு, 160 of 1921; பார்த்திவேந்திரவர்மனது 18-ஆம் ஆண்டு, 156 of 1 9521.
 39. 172 Of 192 1
 40. அர்ச்சனா போகம் - அருச்சனை ஆராதனைகளுக்காக அளிக்கப் பெறுவது.
 41. 962 of 19O4; S. I. I. III 156.
 42. 41 18 of 1898; S. I. I. III 161.
 43. திருவொற்றியூரில் வியாகரணதான வியாக்கியான மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு வியாகரணம் கற்பிப்பார்க்கும், கற்பார்க்கும் ஆக முன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிபந்தம் ஏற்படுத்தப்பெற்றது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பொன் வரி என்று ஒரு வரி வசூலித்து அவ்வியாக்கியான மண்டபத்தைப் பழுது பார்த்தற்கு அளித்ததன், ( 2O1 of 1912 and 11O of 1912; தென்னிந்திய கோயில் சாஸனங்கள் எண் 5 18, 5.10.)
 44. இவைகுறித்து இவ்வாசிரியர் வெளியிட்ட இலக்கியக்கேணி’ என்ற நூலில் ‘கல்லெழுத்துக்களில் மருத்துவ சாலைகள்‘ என்ற கட்டுரையில் காண்க.
 45. 36 of 1898 : S. I. I. III 177
 46. தன்மாசனம் - நீதிமன்றம்.
 47. 362 of 19O9 ; S. I. I. III 178.
 48. 55 of 1898: S. I. I. III 171; and 20 of 1898: S. I. I. III 182.
 49. பார்த்திவேந்திர பன்மனது மனைவி.
 50. சிரத்தாமந்தர் - கோயில் தருமங்களைச் சிரத்தையோடு (பற்றாேடு) பார்ப்பவர்.
 51. 32 of 1898: S. I. I. III 193.
 52. விஷ்ணு கிருகம் - திருமால்கோயில்.
 53. பார்த்திவேந்திரனது மனைவி.
 54. பூர்வாசாரம் - முன்னாள் வழக்கம்.
 55. 49 of 1898: S. I. 1. III 194.
 56. 75 of 1923.
 57. 364 of 19O9; S. I. I. VoI. III 175.
 58. 328 of 19O6; S. I. I. III 1 88.
 59. 252 of 1912; S. I. I. III 189.
 60. ஆனையமன் என்றிருக்கலாம்.
 61. 267 of 1906.
 62. 323 Of 1906.
 63. 324 Of 19O6.
 64. சதுர்வேதிமங்கலம் - வேதம் வல்ல அந்தணர்கள் வாழுமிடம் ; சதுப்பேதி மங்கலம், சருப்பேதிமங்கலம் எனவும் கல்லெழுத்தில் காணப்பெறும்.
 65. S. I. I. III 1 6 7; 1 5 of 1898
 66. 23 Of 1898 ; S. I. I. III 169.
 67. அகரப்பிரமதேயக்கிராமத்துச் சபையினர்.
 68. 335 Of 1917.
 69. 705 Of 1909.
 70. 245 of 193O.
 71. 335 of 1917.
 72. 316 of 1911 ; S. I. III 191.
 73. 19 Of 1897.
 74. பார்த்திவேந்திரபன்மன்
 75. 17 Of 1921.
 76. 18 Of 19321.
 77. 13 of 1897.
 78. 19 of 1921.
 79. 197 of 1915
 80. 17O of 1912; S. I. I. III 104.
 81. 181 of 913.
 82. 25 of 1922