சோழர் கால அரசியல் தலைவர்கள்/பொய்கைநாடு கிழவன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பொய்கைநாடு கிழவன்[1]

பொய்கைநாடு

சோழமண்டலம் முதலாம் இராசராசசோழனது ஆணையின்படி ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[2] அவற்றுள் இராசேந்திர சிங்கவளநாடு என்பது ஒன்று. ஒவ்வொரு வளநாடும் சிலநாடு[3]களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பொய்கை நாடு என்பது இராசேந்திர சிங்க[4] வளநாட்டைச் சேர்ந்தது. திருவையாறு[5] திருநெய்த்தானம்[6] , திருமழபாடி[7] என்பன இப்பொய்கை நாட்டைச் சேர்ந்த தலங்கள் என்றால் இப்பொய்கை நாட்டின் எல்லை ஒருவாறு அறியப்பெறும், இவ்விராசேந்திர சிங்க வளநாடு காவிரியின் வடகரைநாடு என்பதும் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்துக் கல்லெழுத்தால் அறியலாம்.

பொய்கைநாடு கிழவன் அலுவல்

இப்பொய்கைநாட்டின் தலைவனாக இராசராசன் I காலத்தில் விளங்கியவன் பொய்கைநாடு கிழவன் எனப் பெற்றன். இவன் இயற்பெயர் ஆதித்தன் சூரியன் என்பதும், தென்னவன் மூவேந்தவேளான் என்பது இவன் சிறப்புப் பெயராக இருத்தல் வேண்டும் என்பதும் அறியத்தகும். இப்பொய்கைநாடு கிழவன் முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டாகிய கி. பி. 985ல் திருச்சோற்றுத் துறையில் சில அறங்களைச் செய்துள்ளான். அக்கல்லெழுத்தில் ‘பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்’ என்று குறிக்கப் பெற்றுள்ளான். முதல் இராசராசனது 29-ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் முதல் ராசேந்திரசோழனது 3-ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்களிலும் (கி. பி. 1015ல்) அதாவது முதல் இராசேந்திரன் பட்டத்திற்கு வந்த ஆண்டில் காணும் பல கல்லெழுத்துகளிலும் ”ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனை தென்னவன் மூவேந்த வேளான்” என்று குறிக்கப்படுவதால் தஞ்சையில் இராசராசேச்சரம்[8] எடுப்பித்த பிறகு இராசராசசோழனால் ஸ்ரீகார்யம் செய்கின்ற அலுவலில் நியமிக்கப்பட்டிருந்ததாக அறியப்பெறுகிறது. இவன் சிறந்த சிவபக்தி யுடையவன். இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டொழுகியவன். ஆதலின், இவனது சிறந்த பண்புகளையறிந்து, இராசராசன் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ்செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன் என்னலாம்.

திருச்சோற்றுத்துறைக் கல்லெழுத்து

முதலாம் இராசராசனின் 9-ஆம் ஆட்சி ஆண்டில் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்குப் பொய்கைநாடு கிழவன் பொன்னின் வெண் சாமரைக்கை-1க்கு, நிறை 19; கணபதியார்க்கு இராசந்தி விளக்கு ஐந்தனுக்கும் நொந்தா விளக்கினுக்கும்... ... ... வைத்தகாசு 10; (இங்ஙனம் பல தருமங்கள் சொல்லப்பட்டுள்ளன); 'யாண்டு 10-ஆவது ... ... ... திருப்பதியம் பாடுவார்க்கு நெல்லு 70 கலத்துக்கு வைத்தபொன் 33; துர்க்கையார்க்குத் திருவமிது நெல்லு 20க்கு வைத்தகாசு 10...' இரண்டு திருவிழாவுக்குப் பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்தகாசு 12, என்ற இக்கல்லெழுத்துப் பகுதியினின்று கி. பி. 985-ல் திருச்சோற்றுத்துறை மகாதேவர் கோவிலுக்குப் பொய்கை நாடு கிழவன் சில அறங்கள் செய்துள்ளான் என்றும் அறியப்படுகிறது. இதில் திருப்பதியம் பாடுவார்க்குப் பொன் அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

மூவர் படிமங்களை எழுந்தருளுவித்தமை

திருச்சோற்றுத் துறையில் தேவாரம் பாடுவதற்கு நிபந்தம் அளித்த பொய்கைநாடு கிழவன், தஞ்சை இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியம் செய்கின்ற அலுவல் ஏற்றுக்கொண்டதும் தேவார மூவருடைய படிவங்களைத் தஞ்சை இராசராசேச்சுரத்தில் எழுந்தருளுவித்து அவற்றுக்கு அணிகலன்களும் அளித்தான் என்பதை இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியலாம்[9].

விளக்கம் வருமாறு:-

1. நம்பி ஆரூரர்-சுந்தரமூர்த்தி சுவாமிகள் படிவம்

பாதாதி கேசாந்தம் பதினெழுவிரல் இரண்டு தோரை[10] உயரமும் இரண்டு திருக்கையும் உடையவராய்க் கனமாக[11] எழுந்தருளுவிக்கப்பெற்றது; இது செப்புப் பிரதிமம்; இவர் நின்ற பத்மம் இரு விரலரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண் விரல் சம சதுரத்து மூவிரலே இரண்டு தோரை உயரம் உடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

ருத்ராக்ஷத் தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி 56-ம் ருத்ராக்ஷம் 56-ம் உள்பட நிறை 8-கழஞ்சே 9– மஞ்சாடி[12] ; விலை காசு 25.

குறுவானியக் குடியாகிய[13] பரகேசரிபுரத்து நகரத்தார். கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும், நாண்படு கண்ணும் கொடுக்குவாயும் உள்பட நிறை கழஞ்சே 7 மஞ்சாடி; விலைகாசு 3.

வெண்ணி[14] நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடி: திரள்மணிவடம் ஒன்று, பொன் இருகழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி, திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடியாக இரண்டிற்கு 3 கழஞ்சே 3 மஞ்சாடி.

2. நங்கை பரவையார் படிவம்

பதினறு விரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளிநின்ற பத்மம் இருவிரலே இரண்டு தோரை உயரமுடையது; இதனேடுங் கூடச்செய்த பீடம் 6 விரலே 2 தோரை சம சதுரத்து மூவிரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திருக்கைக்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; திருக்காற்காறை ஒன்று பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; மோதிரம் ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி.

பரகேசரிபுரத்து நகரத்தார் கொடுத்தது

திருகு ஒன்று உள்பட பட்டைக்காறை ஒன்று, பொன் முக்காலே குன்றி.

வெண்ணி நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே 2 மஞ்சாடி.

3. திருநாவுக்கரசர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் 22 விரலே 2 தோரை உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இரு விரலே ஆறு தோரை உயரமுடையது; இதனோடுங்கூடச் செய்த பீடம் எண்விரலே ஆறு தோரைச் சம சதுரத்து நால்விரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டு மா; விலை காசு ஒன்று. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்று உள்பட நிறை ஆறு மஞ்சாடியும் இரண்டுமா, விலை காசு ஒன்று. கண்டிகை ருத்ராக்ஷம் ஒன்றும் சுரி ஒன்றும் நிறை ஐங்கழஞ்சே மஞ்சாடியும் குன்றி: விலை காசு எட்டு. திருப்பொற்பூ ஒன்று, பொன் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி; திருக்கைக்காறை ஒன்று, பொன் இரு கழஞ்சு; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி.

பரகேசரிபுரத்து ககரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடி; விலை காசு மூன்று.

4. திருஞானசம்பந்தர் பிரதிமம்

பாதாதி கேசாந்தம் இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையாராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் இருவிரலே இரண்டுதோரை உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரலே இரண்டு தோரைச் சமசதுரத்து நால்விரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே இரண்டு மஞ்சாடிக்கு விலை 1 காசு. ருத்ராக்ஷச்சுரி பொன்னின் நூலிற் கோத்த ருத்ராக்ஷம் ஒன்றுட்பட நிறை கழஞ்சே மஞ்சாடியும் குன்றிக்கு விலை 1 காசு. தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி 56-ம், ருத்ராக்ஷம் 56-ம் உட்பட நிறை எண் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றிக்கு விலை 25 காசு. திருப்பொற்பூ ஒன்று, பொன்கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் இரு கழஞ்சே குன்றி. திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி. திருப்பட்டிகை ஒன்று, பொன் இருகழஞ்சு.

பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டியது ஒன்றும் நாண்படு கண்ணும் கொக்கு வாயும் உட்பட நிறை கழஞ்சே ஏழு மஞ்சாடிக்கு விலைகாசு மூன்றேகால்.

5. அரசன் அரசியர் பிரதிமங்கள்

பொய்கைநாடு கிழவன் தன் அரசனிடத்தில் மிக்க அன்பு உடையவன் என்பது இராசராசனது படிவத்தையும், அவனது பெருந்தேவியாகிய ஒலோகமாதேவியார் படிவத்தையும் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளுவித்ததினின்று அறியப் பெறுகின்றது.

இராசராசன் பிரதிமம்

பாதாதிகேசாந்தம் ஒரு முழமே நால்விரலரை உயரத்து இரண்டு திருக்கையுடையராக எழுந்தருளுவிக்கப் பெற்றது; இவர், கல்வெட்டில் பெரிய பெருமாள் என்று குறிக்கப் பெறுகிறார்; இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஐவிரலே இரண்டு தோரை உயரங்கொண்டது; இதனோடுங்கூடச் செய்த பீடம் 11 விரல் சமசதுரத்து ஐவிரலே ஆறு தோரை உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடுகிழவன் கொடுத்தன

திருக்கைக்காறை ஒன்று, பொன்கழஞ்சே ஆறு மஞ்சாடியும் மூன்றுமா ஆக இரண்டினால் பொன் 2 கழஞ்சு 2 மஞ்சாடி ஆறுமா. திருக்குதம்பை ஒன்று, பொன் எட்டு மஞ்சாடி ஏழு மாவாக இரண்டினால் பொன் கழஞ்சு இரண்டு மஞ்சாடி நான்கு மா.

6. தேவாரதேவர் திருமேனி[15]

இப்பிரதிமம் பெரிய பெருமாள் திருமுன் வைக்கப்பட்டிருத்தல் கூடும். ‘‘பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர்” என்று குறிக்கப் பெறுதலின் இராசராசன் தேவாரம் ஓதுங்கால் ஒரு விக்கிரகத்தை எதிரில் எழுந்தருளுவித்து ஓதுவது பழக்கம்போலும் என்ற செய்தியை அறிகிறோம். இத்திருமேனி சந்திரசேகரர் எனப் பெறுவார். இவர் ஐவிரலே இரண்டு தோரை உயரத்து நான்கு திருக்கை யுடையவர்: இத்திருமேனி பித்தளையால் ஆயது; இவரோடுங் கூடச் செய்த பத்மம் 1 விரல் உயரமுடையது; பீடம் இருவிரலே நாலு தோரை சமசதுரத்து ஒரு விரலுயரமுடையது. ஒரு விரல் சுற்றில் கனமாகச் செம்பால் செய்த பிரபை ஒன்றும் இத்திருமேனியைக் கவித்து இருந்தது.

7. ஒலோகமாதேவியார் பிரதிமம்

இருபத்திருவிரலே இரண்டு தோரை உயரத்து இரண்டு திருக்கை யுடையராகக் கனமாக எழுந்தருளு விக்கப்பெற்றது; இவர் எழுந்தருளி நின்ற பத்மம் ஐவிரல் உயரமுடையது; இதனொடுங்கூடச் செய்த பீடம் ஒன்பதிற்று விரல் சமசதுரத்து ஐவிரலே இரண்டு தோரை உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திருக்குதம்பை ஒன்று, பொன் ஏழு மஞ்சாடியும் குன்றியாக இரண்டினால் பொன் முக்கால் கழஞ்சு. திருக்கைக் காறை ஒன்று, பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் மூன்றுமா. திருக்கைக்காறை ஒன்று, பொன் கழஞ்சே எட்டுமா.

விளக்குகளை அளித்தமை

மேற்குறித்த ஆறு பிரதிமங்களும் ஒரு திருமேனியும் இராசராசசோழனது 29-ஆம் ஆட்சியாண்டில் எழுந்தருளுவிக்கப் பெற்றன. அடுத்த ஆண்டில் அதாவது (இராசேந்திரனின் 3-ஆவது ஆட்சியாண்டு எனக் குறிக்கப்பெற்ற) இராசேந்திரன் I பட்டத்துக்கு வந்த ஆண்டில் பொய்கைநாடு கிழவன் தான் எழுந்தருளுவித்த நம்பியாரூனார்க்கும், திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் 41 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தரா[16] நிலை விளக்கு ஒன்றும், பெரிய பெருமாளுக்கு[17] 120 பலம் நிறையுள்ள இருப்பு நாராசத்தோடு கூடிய தராநிலைவிளக்கு ஒன்றும், 4. பலம் எடையுள்ள வெண்கல மடல் ஒன்றும் அளித்துள்ளான்.[18] வெண்கல மடல் இப்பிரதிமங்களை வணங்க வருவார்க்குத் திருநீறு அளித்தற் பொருட்டுக் கொடுக்கப்பட்டது போலும் !

சிறுத்தொண்டர் மெய்ப்பொருளார் வரலாறுகளைப் போற்றியமை

பொய்கைநாடு கிழவன், செயற்கருஞ் செயல்கள் செய்த சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார் முதலியவர்களுக்குத் தஞ்சைப் பெரிய கோயிலில் படிமங்களை எழுந்தருளுவித்தான் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்று அறிகிறோம்.

8. சிறுத்தொண்டர்[19]

சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரினர் ; பரஞ்சோதியார் எனும் இயற்பெயரினர் ; இவர் பல்லவ அரசனுக்குத்[20] தானைத் தலைவராய் அமர்ந்து வாதாபி வரையிலும் சென்று வாதாபியை அழித்துப் பல பொருள்களையும் கவர்ந்து அரசன் முன் கொணர்ந்தார்.[21] அரசன் இவரது சிவபக்தியை அறிந்து இவர்க்கு ஓய்வு அளித்தார். இவர் திருச்செங்காட்டங்குடியில் இருந்து அடியார்களுக்குத் திருவமுது அளித்துவரும் தொண்டில் ஈடுபட்டிருந்தார். இவரது வாழ்க்கைத் துணைவியார் திருவெண் காட்டுநங்கை எனப் பெறுவர். ஒரு நாள் இவரது அன்னதானச் சிறப்பைச் சோதிக்கத் திருவுளங் கொண்ட சிவபெருமான் பைரவக்கோலம் தாங்கிவந்தார்; அடியாரை நோக்கி ஆறு திங்களுக்கு ஒரு முறையே உண்பதாகவும் பிள்ளைக்கறி இடுவதாயின் உண்பதாகவும் கூறினார். தொண்டானார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் தன் மனைவியோடு உசாவினார் , தம் ஒரு மகவாகிய சீராளரைச் சமைத்து அடியார்க்கு உணவளிக்க உறுதி கொண்டார் ; வாளால் மகவரிந்து ஊட்டினார் ; பைரவராக வந்த இறைவனும் காட்சிய ளித்தார்


இவ்வரலாற்றில் பங்குபெறும் சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளதேவர், பைரவமூர்த்தி, காட்சிகொடுத்த இறைவர் ஆகிய ஐவருக்கும் பிரதிமங்களும், திருமேனியும் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்தான் ; விளக்கம் வருமாறு :

1. க்ஷேத்திரபாலதேவர்

பாதாதிகேசாந்தம் முக்காலே அரைக்கால் முழ உயரத்து எட்டுத்திருக்கைகளை யுடையவர் ; இவர் எழுந்தருளி நின்ற பீடம் 9 விரல் சமசதுரத்துப் பத்மத் தொடும் கூடியது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன்கால் : சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் ஏழுமஞ்சாடி; திருக்குதம்பைத் தகடு இரண்டு, பொன் மூன்று மஞ்சாடி.

இந்த சேஷத்திரபால தேவரே சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த தேவராக எழுந்தருளுவிக்கப் பெற்றார் எனக்கோடல் பொருந்தும்.

2. பைரவமூர்த்திகள் திருமேனி

பதினெண் விரல் உயரத்து இரண்டு திருக்கை யுடையராய் ஆடுகிறாராக எழுந்தருளுவிக்கப் பெற்றது : இவர் எழுந்தருளி நின்ற பீடம் ஒன்பதிற்று விரல் உயரத்து எண்விரலகலத்துப் பத்மத்தொடும் கூடியது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன் 4 மஞ்சாடி : முப்பத்து மூன்று முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை அரைக் கழஞ்சே 4 மஞ்சாடியும் குன்றி : விலே காசு. 37 முத்துக்கள் கோத்த முத்துவடம் ஒன்று, நிறை எட்டு மஞ்சாடி ; விலே காசு.

3. சிறுத்தொண்ட நம்பி

பாதாதிகேசாந்தம் 17 விரல் உயரத்து இரண்டு கையுடையவர்.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திரள்மணிவடம் ஒன்று, பொன் மூன்று மஞ்சாடியும் குன்றி : ருத்ராக்ஷக்காறை ருத்ராக்ஷம் நீக்கிப் பொன் அரைக் கழஞ்சே மஞ்சாடி.

4. திருவெண்காட்டு நங்கை

பாதாதி கேசாந்தம் 15 விரல் உயரத்து இரண்டு கை உடையவர்.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

பட்டைக்காறையிற் கோத்த தாலி உட்படப் பொன் ஒன்பது மஞ்சாடியும் குன்றி.

5. சீராள தேவர்

பாதாதி கேசாந்தம் 12 விரல் உயரத்து இரண்டு கையுடையவர்.

இவர்க்குப் பொய்கை நாடு கிழவன் கொடுத்தன

சுருக்கின வீரபட்டம் ஒன்று, பொன் நான்கு மஞ்சாடி, திருக் குதம்பைத் தகடு இரண்டு, பொன் மஞ்சாடியும் குன்றி, பட்டைக்காறையும் சூலமும், பொன் அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி.

பிரதிமங்கள் மூவரும் கின்ற பீடம் : 23 விரல் நீளத்து ஏழு விரல் அகலத்து எண் விரல் உயரத்துப் பத்மத்தொடும் கூடியது.

இவ்வைவருக்கும் திருமேனிகளும் பிரதிமங்களும் எழுந்தருளுவித்ததை நோக்கின் சிறுத்தொண்டர் திருநாள் தஞ்சை இராசராசேச்சரத்தில் நிகழ்த்தவேண்டும் என்று பொய்கைநாடு கிழவன் கருதினன்போலும் என்று நினைக்க இடம் தருகிறது.

9. மெய்ப்பொருள் நாயனார்[22]

மெய்ப்பொருள் நாயனாருடைய படிவத்தைப் பொய்கைநாடு கிழவன் எழுந்தருளுவித்திருக்கிறான். இந்நாயனாது படிவத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் இவர் பெயரைக் கூறாமல் ’’தத்தா நமரே காண்’’ என்ற மிலாடுடையார் படிவம் என்று கூறியுள்ளமையை நோக்கப், பொய்கைநாடு கிழவன் நாயன்மார்களுடைய வரலாற்றில் ஈடுபாடு உடையவனாய் இருந்தான் என்பதும், நாயன்மார்களுடைய வரலாறுகளைக் கூர்ந்து அறிந்திருந்தான் என்பதும் அறியப்பெறும்.

நாயனாரை வஞ்சனையாகக் கொல்லவந்த முத்த நாதன், தான் எண்ணியதையே முடிக்கத், தத்தன் என்ற வாயிற் காவலன் முத்தநாதனைக் கொல்ல வாளோச்சின்னான். நாயனர் ’’தத்தா நமரே காண்’’ என்று கூறித் தத்தனை விலக்கினார். நாயனார் வாக்கில் முகிழ்த்த இச்சொற்றாெடர், நம்பியாண்டார்நம்பி திருவந்தாதியில் தவழ்ந்து, கல்லெழுத்தில் பதிந்தவாற்றை அறிந்தால் சோழவரசர் ஆட்சியில் இருந்த தமிழரது சைவ சமயப் பற்றுத் தெற்றென விளங்கும்.

தத்தா நமரே காண்

பாதாதிகேசாந்தம் இருபதிற்றுவிரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகச் செய்யப்பெற்றது,

தத்தா நமரே காண்' என்ற மிலாடுடையார் படிவம். இவர் நின்ற பத்மத்தொடுங்கூடச் செய்த பீடம், பதிற்று விரல் நீளம் எண் விரல் அகலம் எண் விரல் உயர முடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது

ருத்ராக்ஷம் ஒன்றிற் கட்டின பொன் ஏழு மஞ்சாடி உட்பட ருத்ராக்ஷம் ஒன்று ; நிறை அரைக் கழஞ்சே நாலு மஞ்சாடியும் குன்றி ; விலை காசு ஒன்று.

முடிப்புரை

இந்நாளில் திருக்கோயில்களில் கோயில் அலுவல்களை மேற்பார்வை செய்யும் இறை பணியாளர் (Executive Officer) போன்று முன்னாளில் ஸ்ரீ காரியம் ஆராய்கின் றவர் என்ற அலுவலர் இருந்து கோயில் அலுவல்களைச் செவ்வனே நடத்தினர். முன்ளனாலும் பின்னாளிலும் இவ்வலுவலில் பலர் இருந்திருப்பினும் பொய்கை நாடு கிழவன் போன்று சிலைமேல் எழுத்தில் நின்றவர் சிலரே. பொய்கை நாடு கிழவன்போன்று இந்நாள் இறைபணியாளர் தொண்டாற்றிச் சைவர் நெஞ்சில் நிலை பெறுவாராகுக.


 1. இது ஞானசம்பந்தத்தில் வெளி வந்தது.
 2. அவையாவன: அருண்மொழிதேவ வளநாடு; க்ஷத்திரிய சிகாமணி வளநாடு; உய்யக்கொண்டான் வளநாடு; தித்தவிநோத வளநாடு; பாண்டிய குலாசனி வளநாடு; கேரளாந்தக வளநாடு: இராசாசிரிய வளநாடு; இராசராச வளநாடு; இராசேந்திர சிங்க வளநாடு (பண்டாரத்தார் - சோழர் வரலாறு - பாகம் 1 - பக்கம் 1 18 அடிக்குறிப்பு.)
 3. நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வளநாட்டை ஜில்லாவிற்குச் சமமாகவும் கொள்ளலாம்
 4. இராசேந்திர சிங்கன் என்பது முதலாம் இராசராசனது சிறப்புப் பெயர்களில் ஒன்று.
 5. ராஜராஜ தேவர்க்கு யாண்டு 22-ஆவது வடகரை ராஜேந்திர சிங்கவள நாட்டுப் பொய்கை நாட்டுத் தேவ தானம் திருவையாற்று ஒலோகமாதேவீச்சரத்து மகாதேவர் (S. I. I. Volume V 516)
 6. ஸ்வஸ்திஸ்ரீ கோவிரச கேசரி பன்மர்க்கு யாண்டு: 3-ஆவது பொய்கை நாட்டுக் கீழ் பிலாற்றுத் தேவதானம் திருநெய்த்தானத்து மகாதேவர் (S. 1. 1. Vol. V No. 580)
 7. கோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கியாண்டு 16-ஆவது ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடியுடைய மகாதேவர்.
 8. கி. பி. 1009ல் இராசராசேச்சுரத்திருப்பணி முடிவுற்றதாதல் வேண்டும் - உலகநாதபிள்ளே.
 9. S. I. I. Vol. II Part II No. 38 & 41
 10. தோரை - நெல்; (8 தோரை- 1 விரல்; 12 விரல்- 1 சாண்; 2 சாண் - 1 முழம்.)
 11. Solid image (உள் இடைவெளி இல்லாதது).
 12. 2 குன்றி - 1 மஞ்சாடி, 20 மஞ்சாடி - 1 கழஞ்சு.
 13. இது இராசேந்திர சிங்க வளநாட்டில் இருந்த ஊர்; தஞ்சை ராசராசேச்சுரத்துத் தேவதானங்களுள் ஒன்று.
 14. இதுவும் இராசராசேச்சுரமுடையார் தேவதானம்; நித்த வினோதவளநாட்டது.
 15. கடவுள் வடிவம் : ‘‘திருமேனி‘‘ என்றும், மக்கள் வடிவம் ‘பிரதிமம்‘ என்றும் வழங்கப்பெறும்.
 16. தரா-எட்டுப் பாகம் செம்பும், ஐந்து பாகம் காரீயமும் கலந்த உலோகம்.
 17. பெரிய பெருமாள்-இராசராசன் I
 18. S. I. I. Vol II, Part II, No 41.
 19. S. I. I. Voi. II No. 43.
 20. முதல் நரசிம்மவர்மன்.
 21. ‘‘மன்னவர்க்குத் தண்டுபோய்‘‘ என்ற பெரிய புராணம்-சிறுத்தொண்ட புராணம் செ. 6 காண்க.
 22. S. I. I. Vol II Part II No 40. இவ்வாசிரியர் வெளியிட்ட ’இலக்கியக்கேணி’ என்ற நூலுள் ’தத்தா நமரே காண்’ என்ற கட்டுரை காண்க.