உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் வரலாறு/இரண்டாம் குலோத்துங்கன்

விக்கிமூலம் இலிருந்து

3. இரண்டாம் குலோத்துங்கன்
(கி.பி. 1133 - 1150)

அரசுரிமை : இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன் மகன். இவன் கி.பி.1133-இல் பட்டம் பெற்றுத் தந்தையுடன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். விக்கிரம சோழன் கி.பி 1135-இல் இறக்க, இவனே சோழப் பேரரசன் ஆனான். இவனுடைய கல்வெட்டுகள் குறிக்கும் மெய்க்கீர்த்தியில் வரலாற்றுக் குறிப்புக் கிடைப்பது அருமை. எனவே, இவன் காலத்தில் போர்ச் செய்திகள் இல்லை என்பது தெளிவு. இவனது ஆட்சி அமைதியும் செழுமையும் உடையதாக இருந்தது. விக்கிரம சோழன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு. இவனது ஆட்சியிலும் அங்ஙனமே இருந்தது.

கல்வெட்டுத் தொடக்கம் : இரண்டாம் குலோத்துங்க னுடைய கல்வெட்டுகள் பின்வரும் முதற் குறிப்பை உடையன : 1. பூமன்னு பாவை 2. பூமருவிய புவியேழும் 3.பூமேவிவளர் 4. பூ மன்னு பதுமம் 5. பூ மேவு திருமகள் 6.பூ மன்னு யாணர்.

சிற்றரசர் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்து இருந்த சிற்றரசருள் குறிப்பிடத்தக்கார் சிலர் ஆவர் :

1. விக்கிரம சோழன் காலத்தில் இருந்த செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் மகன் அம்மையப்பன் கண்ணுடைப் பெருமாள் ஆகிய விக்கிரம சோழக் சாம்புவராயன் ஒருவன்[1]. இம்மரபரசர், ஆளும் அரசன் பெயரை வைத்துக் கொள்ளல் மரபு என்பது தெரிகிறது.

2. தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருமாணிக்குழி என்னும் இடத்தில் இருந்த மோகன் ஆட்கொல்லி என்ற குலோத்துங்க சோழக் காடவராயன் ஒருவன். இவன் படிப்படியாக உயர்நிலையை அடைந்தான் என்பது இவன் கல்வெட்டுகளால் விளக்கமாகிறது. இவன் திருநாவலூர், திருவதிகை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) முதலிய இடங்களிலுள்ள சிவன் கோவில்கட்குத் தானங்கள் செய்துள்ளான். இவன் ‘ஆளப்பிறந்தான் கச்சிராயன், பைந்நாக முத்தரையன், அரசநாராயணன், ஏழிசைமோகன், என்ற சிறப்புப் பெயர்களைப் படிப்படியாகக் கொண்டான்[2]. இவன் திருமுதுகுன்றத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டு ‘ஏழிசை மோகன்’ என்றழைத்தான்; அப்போது ‘காடவர் ஆதித்தன்’ என்று தன்னை அழைத்துக் கொண்டான். கி.பி.300 முதல் கி.பி.900 வரை தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட பல்லவர் வழிவந்த இவன், படிப்படியாகத் தன் அலுவல் முயற்சியால் உயர்நிலை அடைந்தமை இவனுடைய பட்டங்களால் நன்குணரலாம்[3]. இப்பெரியவன் வழி வந்தவனே பிற்காலத்தில் சோழப் பேரரசையே ஆட்டங்கொள்ளச் செய்த கோப் பெருஞ்சிங்கன் ஆவன்[4].

3. நடு நாடு அல்லது மகதை நாடு என்பதைப் பார்வையிட்டு வந்த தலைவன் பாணர் மரபினன். அவன் பெயர் ‘இராசராச மகதை நாடாள்வான்’ என்பது[5]. 4. திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல (கோவலூர்) ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன்[6]. 5. தகடூர் அதியமான் ஒருவன், 6. நுளம்ப பல்லவர் சிலராவர் - 7. கி.பி. 1147-இல் கங்க மரபினனான சீயகங்கன் காளத்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு நிபந்தங்கள் விடுத்தனன்[7]. 8. காளத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் ‘யாதவராயர்’ என்ற மரபரசர் சிற்றரசராக ஆண்டுவந்தனர்[8]. இம்மரபினர் வீர ராசேந்திரன் காலமுதலே சிற்றரசராக இருந்துவந்தவர் ஆவர். 9. வேங்கி நாட்டுச் சிற்றரசருள் ‘மகா மண்டலேசுவரன் பல்லவ தேவ சோடன்’ ஒருவன்[9]. 10. வெலனாண்டுச் சோழர் மற்றொரு கிளையினர். இம்மரபைச்சேர்ந்த அரசரும் அரச மாதேவியாரும் பாபட்லா, திராக்ஷாராமம், காளத்தி இவற்றிலுள்ள சிவன் கோவில்கட்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்[10]. 11. ‘கொலுறு’வை ஆண்ட ‘காடம நாயகன்’ ஒருவன். இவன் கி.பி.142-இல் ஒரு சிற்றுரரை வேதியர்க்குப்பிரமதேயமாக விட்டனன்[11]. இவன், மகாமண்டலிக பீம நாயகன், வேங்கி தேசச் சாளுக்கிய அங்ககாரன் என்ற பட்டங்களையும் பெற்றவன்[12]. 12. பொத்தப்பி நாட்டை ஆண்ட மதுராந்த கன் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன் ஒருவன்[13].

பட்டப் பெயர்கள் : இரண்டாம் குலோத்துங்கன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் ‘திருநீற்றுச் சோழன்’ என்பது ஒன்று. இப்பெயர் முதற் குலோத்துங்கனும் கொண்டிருந்தான். அதனால் இக்காலத்துச் சேக்கிழாரை முதற் குலோத்துங்கன் காலத்தவர் என மயங்கக் கொண்டாரும் உளர். எதிரிலிசோழன், கலிகடிந்த சோழன் என்பனவும் முன்னோர் கொண்ட விருதுப் பெயர்களே ஆகும். இவன் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் எனப்பட்டான்[14]. இவனுக்கே சிறப்பாக உரிய விருதுப் பெயர் ‘அநபாயன் என்பதே ஆகும்.[15] இப்பெயர் இவனுடைய கல்வெட்டுகளிலும் உலாவிலும் இருப்பதோடு இவனது அரசியற் செயலாளன் பெயரிலும் காணப்படல் நோக்கத் தக்கது. அச்செயலாளன் அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான்[16]. பல சிற்றுரர்கள் அநபாய நல்லூர் என்று பெயரிடப்பட்டன[17].

அரச குடும்பம் : திருமழபாடிக் கல்வெட்டில் அரச மாதேவியர் இருவர் குறிக்கப்பெற்றுளர். அவருள் பட்டத்தரசி தியாகவல்லி என்பவள். அவளுக்கே ‘புவனமுழுதுடையாள், என்ற பெயரும் உண்டு. மற்றவள் ‘முக்கோக்கிழான்’ என்பவள். இவள் மலாடுடை சிற்றரசர் மகளாவள்[18]. இவனுடைய பிற மனைவியரைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ ஒன்றும் அறியக் கூடவில்லை. இவனுக்கு இராசராசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் கி.பி.146-இல் முடி சூடிக்கொண்டு தந்தையுடனே நாட்டை ஆண்டு வந்தான். இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் சோழர்கோ நகரம் கங்கைகொண்ட சோழபுரமே ஆகும். எனினும், இவன் காலத்தில் சிதம்பரம் பெருஞ் சிறப்படைந்தது; அரசன் அடிக்கடி தங்கும் பெருநகரமாக விளங்கியது.

அவைப்புலவர் : இரண்டாம் குலோத்துங்கன் அவையில் ஒட்டக்கூத்தர் பெரும் புலவராக இருந்தார். அவர் விக்கிரம சோழன் காலத்திலும் இவன் காலத்திலும் இவன் மகன் இரண்டாம் இராசராசன் காலத்திலும் இருந்தவர் ஆவர்; மூவர்மீதும் உலாப் பாடினவர்.இரண்டாம் குலோத்துங்கன் இவரிடம் தமிழறிவு பெற்றிருத்தல் கூடும். ஆனால் இவர் பெயர் ஒரு கல்வெட்டிலும் காணப்படவில்லை. அதனால், இவர் இருந்திலர் எனக் கூறல் இயலாது. என்னை? இவர் பாடிய உலாப் பிரபந்தங்களும் பிறவும் இருத்தலின் என்க. இங்ஙனமே,குன்றத்துர்-சேக்கிழார் இப்பேரரசன் காலத்தில் இருந்தவர்; அரசன் வேண்டத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளியவர். இவரைப் பற்றி வேறிடத்து விரிவாகக் கூறப்படும்.ஈடும் எடுப்பும் அற்ற திருத்தொண்டர் புராணமும், கூத்தர் செய்த உலாக்களும் பரணியும் இக்காலத்துச் சிறந்த இலக்கிய நூல்கள் ஆகும். இவற்றால் இவ்வரசனைப்பற்றியசெய்திகள் ஓரளவு அறியவசதி உண்டு இப்புலவர்களையும் இவ்விலக்கியங்களையும் பற்றிப் பிற்பகுதியில் விரிவானவரலாறு தரப்படும்; ஆண்டுக்காண்க

சமயநிலை : இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரத்தில் முடிகவித்துக் கொண்டான் என்பது தெரிகிறது. இவன் காலத்தில் தில்லை நகர் சொல்லொணாச் சிறப்புற்றுப் பொலிந்திருந்தது. நகரம் சீர்திருத்தப்பட்டது; கோவில் சிறப்புற அமைக்கப்பட்டது. இதனை முதன் முதல் அறிவிப்பது அரசனது 7ஆம் கல்வெட்டே ஆகும். அது திருப்புறம்பியக் கல்வெட்டு ஆகும்[19]. இவன் தனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டிலேயே பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் எனப்பட்டான். ஆதலின், இவன் பட்டம் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டுவரை தில்லைத் திருப்பணியிற் பெரிதும் ஈடுபட்டிருந்தான் எனலாம். இப்பணி இவனது தந்தையான விக்கிரமசோழன் காலத்து முடிவடையாது இவன் காலத்து முடிவுற்றதோ-அன்றி இவன் தானாகவே இதை மேற்கொண்டு செய்தனனோ தெரியவில்லை.[20] இவன் செய்த கோவில் திருப்பணிகள் குலோத்துங்கன் உலாவிற் சிறப்புற விளக்கப் பட்டுள்ளன. குலோத்துங்கன் ஈடும் எடுப்பும் அற்ற தன் அரச மாதேவியுடன் தில்லை சென்று கூத்தப் பெருமான் திருக்கூத்தைத் தரிசித்து, தில்லை மண்டபத்தில் இருந்த வைணவக் கடவுளாகிய கோவிந்தராசரை அப்புறப்படுத்தி னான்; பல திருத்தங்களைச் செய்தான்: எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்; தான் பிறந்த கயிலையை நினையாதிருக்க அதனினும் மேம்பட்ட முறையில் அம்மனுக்குத் திருமாளிகை அமைத்தான் கோவிலின் பல பகுதிகளும் நகரத்தில் குறிப்பிடத்தக்க சில இடங்களும் பொன் வேய்ந்தான்.[21]’ இச் செய்திகளே சுருக்கமாக இராசராச சோழன் உலா[22]விலும் தக்கயாகப் பரணி[23]யிலும் குறிக்கப்பட்டுள.இவன், சிதம்பரத்துப்பொன்னம்பல நாதர் திருவடிகளாகிய தாமரை மலர்களிலுள்ள வண்டு போன்றவன்; இவன் திருவாரூரில் உள்ள அப்பர், சுந்தரர், சம்பந்தர் படிமங்கட்குப் பூசை முதலியன நடக்கத் தானம் செய்துள்ளான்[24] என்று ஒரு கல்வெட்டுக் கூறலைக் கொண்டு, இவனது சிவபக்தியையும் மூவர் முதலிகளிடம் இவன் கொண்டிருந்த பெருமதிப்பையும் உணரலாம். 

இக்குலோத்துங்கன் தில்லை - கோவிந்தராசப் பெருமானை அப்புறப்படுத்திய செய்தியை ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[25]. அக்குறிப்புடைய பகுதி வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதி செம்மையாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் சிவனையும் திருமாலையும் ஒன்றுபடுத்திச் ‘சங்கர நாராயண’ வடிவத்தில் வழிபாடு ஏற்படுத்திச் சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றுபடுத்த முயற்சி செய்யப்பட்டது. பிற்கால நிகழ்ச்சிகள் இம்முன்னேற்பாட்டிற்கு இடம் தரவில்லை. சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேறுபாடு அதிகமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளுள் இரண்டாம் குலோத்துங்கன் செய்தது ஒன்றாகும்[26]. இந்நிகழ்ச்சி தவிர, இவனது அரசாட்சி பல வழிகளிலும் செம்மையான தென்றே கூறி முடிக்கலாம்.


  1. 302 of 1897
  2. 157 of 1905
  3. 374 of 1902, 391 of 1921; 45,46 of 1903
  4. 137 of 1900
  5. 14 of 1903
  6. 284, 285 of 1902
  7. 63 of 1922
  8. 83, of 1922
  9. 210 of 1897
  10. 210 of 1897, 227 of 1893, 123 of 1922
  11. Ind, Ant. Vol 14. pp. 56-60
  12. 172 of 1897
  13. 572 of 1907
  14. 350 of 1927
  15. 269 of 1901
  16. 531 of 1912
  17. 271 of 1215, 533 of 1921, 346 of 1911.
  18. 85 of 1895
  19. 350 of 1927
  20. A.R.E. 1913, Part II, No. 34; 1927, Part II, No.24
  21. Ula lines 69- 116
  22. R. Ula lines 58-66
  23. T. Parani, KK, 777, 800-810
  24. S.I.I. iv 7
  25. 36, of 1907
  26. Cholas Vol II, P.74 (Foot-note)