உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் வரலாறு/விக்கிரம சோழன்

விக்கிமூலம் இலிருந்து

2. விக்கிரம சோழன்
(கி.பி. 1122 - 1135)

முன்னுரை: விக்கிரம சோழன் கி.பி. 1118-இல் முடி சூடிக்கொண்டு கி.பி.1122 வரை தன் தந்தையுடன் இருந்து அரசு செலுத்தினான்.இவன் ஆணித்திங்கள் உத்திராடத்திற் பிறந்தவன். இவன் தன் தந்தையின் இறுதிக் காலத்தில் இருந்த சோழப் பெருநாட்டிற்கு உரியவன் ஆயினான். இவனது ஆட்சியின் பெரும் பகுதி போரின்றி அமைதியே நிலவியிருந்தது என்னலாம். இழந்த கங்கபாடியிலும் வேங்கியிலும் இவனுடைய கல்வெட்டுகள் இருப்பதை நோக்க, அவ்விரண்டு நாடுகளிற் பெரும்பகுதி இவன் காலத்திற் சோழப் பெருநாட்டில் மீண்டும் சேர்க்கப் பட்டது என்பது தெரிகிறது.

கல்வெட்டுகள் : இருவகைத் தொடக்கம் கொண்ட மெய்க்கீர்த்திகள் இவனுக்குண்டு. ஒன்று “பூமாது” அல்லது “பூமகள் புணர” என்னும் தொடக்கத்தை உடையது; மற்றது ‘பூமாது மிடைந்து’ என்று தொடங்குவது. இத்தொடக்கம் உடைய கல்வெட்டுகள் விக்கிரம சோழன் செய்த சிதம்பரம் கோவில் திருப்பணிகளை விளக்குகின்றன. முன்னவை இவனுடைய இளவரசுப் பருவத்தில் செய்த தென்கலிங்கப் போரைக் குறிக்கின்றன. இவை இரண்டும் வேறு போர்களையோ பிற நிகழ்ச்சிகளையோ கூறவில்லை.

இலக்கியம் : ‘விக்கிரம சோழன் உலா’ என்பது இவனது அவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர் பாடியது. அவரே இவனது தென்கலிங்கப் போரைச் சிறப்பித்துப் பரணி ஒன்று பாடியதாக இராசராசன் உலாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன் உலாவும் தக்கயாகப் பரணியில் உள்ள தாழிசையும்[1] குறிக்கின்றன. இப்பரணி இப்பொழுது கிடைத்திலது. ஆதலின் கல்வெட்டு களையும் உலாவையும் கொண்டே இவன் வரலாறு துணியப்படும்.

வேங்கி நாடு : விக்கிரம சோழன் வேங்கி நாட்டை விட்டுத் தந்தையிடம் சென்ற கி.பி. 1178 முதல் அந்நாடு ஆறாம் விக்கிரமாதித்தன் பேரரசில் கலந்துவிட்டது. சோழர்க்கு அடங்கி வேங்கி நாட்டை ஆண்ட வெலனாண்டு அரசர்கள் விதியின்றிச் சாளுக்கியர் ஆட்சியை ஒப்புக்கொண்டு சிற்றரசராக இருந்தனர். ஆனால் கி.பி. 1126-இல் பேரரசனான விக்கிரமாதித்தன் இறந்தான். உடனே வேங்கியின் தென்பகுதி விக்கிரம சோழன் பேரரசிற் கலந்து விட்டது. முன்னர் விக்கிர மாதித்தன் ஆட்சியை ஒப்புக்கொண்ட குண்டுர், கெர்ள்ளிப்பாக்கை முதலிய இடங்களில் இருந்த சிற்றரசர் விக்கிரமசோழனைப் பேரரசனாகத் தங்கள் கல்வெட்டு களிற் குறித்திருத்தலே இதற்குத் தக்க சான்றாகும்[2]. வெலனாண்டுச் சிற்றரசரும் விக்கிரமனைப் பேரரசனாக ஏற்றுக் கொண்டனர்[3].

கங்கபாடி : கங்கபாடியின் கிழக்குப் பகுதி மட்டும் விக்கிரமன் நாட்டுடன் கலப்புண்டது. அஃது எப்போது கலந்தது, எவ்வாறு கலந்தது என்பன கூறக்கூடவில்லை. இவனது இரண்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று மைசூரில் உள்ள சுகட்டுரில் கிடைத்தது. அதனில், இவனது தானைத் தலைவன் ஒருவன் அங்கு ஒரு கோவில் கட்டியது குறிக்கப்பட்டுள்ளது[4]. கோலார்க் கோட்டத்தில் இவனது 10-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அங்கு ஒரு விமானம் கட்டப்பட்ட செய்தி அதனில் குறிக்கப்பட்டுள்ளது[5]. இவ்விரண்டு கல்வெட்டு களாலும் கங்கபாடியின் கிழக்குப் பகுதியேனும் சோழப் பெருநாட்டில் சேர்ந்திருத்தது என்பது அறியக்கிடத்தல் காண்க.

வெள்ளக் கொடுமை : விக்கிரம சோழன் காலத்தில் (ஆறாம் ஆட்சி ஆண்டில்) வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு கோட்டங்களிற் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்திற்கு இரையானது. இதனாற் சில இடங்களில் ஊர்ப் பொது நிலங்களை விற்று அரசாங்க வரி இறுக்கப்பட்டது. . திருவொற்றியூர், திருவதிகை முதலிய ஊர்களில் இருந்த சபைகள் இவ் விற்பனையில் ஈடுபட்டன[6]. வெள்ளக் கொடுமையால் தஞ்சாவூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கோவிலடிதுறக்கப்பட்டது; ‘காலம் பொல்லாதாய், நம்மூர் அழிந்து, குடி ஒடிப்போய்க் கிடந்தமையால்’ என்பது கல்வெட்டு[7]. இக் குறிப்புகளால் சோணாட்டில் விக்கிரமனது 6,7-ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெள்ளக் கொடுமை நிகழ்ந்தது என்பதை அறியலாம்.

அரசியல் : விக்கிரம சோழன் ஆட்சி சிறப்பாக அமைதியுடையதே ஆகும். அரசன், தன் முன்னோரைப் போலத் தன் பெருநாட்டைச் சுற்றிப் பார்ப்பதில் ஊக்கமுடையவனாக இருந்தான். கங்கைகொண்ட சோழபுரமே அரசனது கோ நகரம் ஆயினும், பழையாறை முதலிய இடங்களில் இருந்த அரண்மனைகளிலும் அரசன் இருந்து கட்டளைகளைப் பிறப்பித்தல் உண்டு. கி.பி.1122-இல் விக்கிரமன் முடிகொண்ட சோழபுரத்து (பழையாறை) அரண்மனையில் காணப்பட்டான்[8]; அடுத்த ஆண்டு செங்கற்பட்டுக் கோட்டத்துக் குனிவளநல்லூரில் இருந்து குளக்கரை மண்டபத்தில் காணப்பட்டான்[9]. இம்மண்டபம், இக்காலப் ‘பிரயாணிகள் விடுதி’ (Travellers Bangalow) போன்றது போலும் அரசன் கி.பி.1124-இல் தென்னார்க்காடு கோட்டத்து வீர நாராயணர் சதுர்வேதிமங்கலத்தில் (காட்டு மன்னார் கோவில்) இருந்த அரண்மனையில் காணப்பட்டான்[10]. கி.பி. 1120-இல் தில்லை நகரில் இருந்த அரண்மனையில் தங்கி இருந்தான்[11]. இக் குறிப்புகளால், இப்பேரரசன்,தன் ஆட்சிமுறையை நன்கு கவனித்துவந்தான் என்பது புலனாகிறதன்றோ?

சிற்றரசர் : கல்வெட்டுகளில் சிற்றரசர் சிலர் குறிப்பிடப் பட்டுளர். விக்கிரம சோழன் உலாவிலும் சிலர் குறிக்கப் பட்டுளர். முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்டாரைக் காண்போம். குலோத்துங்கன்பால் பெருஞ்சிறப்புப் பெற்ற நரலோக வீரனின் மகன் ஆன சூரை நாயகன் ஒருவன்[12]. வட ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட சம்புவராயன் ஒருவன். அவன் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் ஆன இராசேந்திர சோழ சாம்புவராயன்’ என்பது. அவன்மனைவி கி.பி. 1123-இல் திருவல்லம் மடத்திற்குச் சில தானங்கள் செய்துள்ளாள்[13]. வழக்கம் போலக் கோவலூரை ஆண்ட சேதிராயர் சிற்றரசராகவே இருந்தனர். தொண்டைநாட்டில் ‘ஆனைவாரி’யைத் தலைநகராகக் கொண்டு ‘சாளுக்கியர்’ என்பவர் ஆண்டு வந்தனர்[14]. தெற்கே இருந்த சிற்றரசருள் ‘பாண்டிநாடு கொண்டான்’ என்பவன் ஒருவன்[15]. இராமநாதபுரம் கோட்டத்துச் ‘சிவபுரியை ஆண்ட ‘சுண்டன் கங்கை கொண்டான், ஒருவன். இவனுக்குத் துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர்[16]. தெலுங்கு நாட்டில் சிற்றரசர் பலராவர். அவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். கி.பி.121-இல் பொத்தப்பி நாட்டை ஆண்டவன் மதுராந்தகன் - பொத்தப்பிச் சோழன் என்பவன். இவன் மகாமண்டலேசுவரன் - விமலாதித்த தேவன் என்னும் பெயர் பெற்றவன்.இவன் தன்னைக்கரிகாலன் வழிவந்தவன் என்று குறித்துள்ளான்[17]. இப்பொத்தப்பிச் சோழமன்னர்கள் காளத்தியில் உள்ள கோவிற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.[18] வெலனான்டி ‘இரண்டாம் கொங்கன் ஆன கொங்கயன், ஒருவன். இவன் முன்னோர் சோழப் பேரரசனிடம் உள்ளன்பு கொண்டவர், விக்கிரம சோழனுடன் தென் கலிங்கப் போரில் ஈடுபட்டவர். கொள்ளிப் பாக்கைக்குத் தலைவனான ‘நம்பையன்’ ஒரு சிற்றரசன். காளத்தி நாட்டுப் பகுதியை ஆண்டவன் மகா மண்டலேசுவரன் கட்டிதேவமகாராசன் என்பவன்[19]. இவன் முன்னோர் வீரராசேந்திரன் காலத்தும் உண்மை உடையவராகவே இருந்தனர்.

இனி, விக்கிரம சோழன் உலாவிற் கூறப்பட்டுள்ள சிற்றரசர் யாவர் என்பதைக் காண்போம் : 1. கருணாகரத் தொண்டைமான் முதல்வன். 2. முனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த முனையதரையன் ஒருவன். இவன் தானைத் தலைவன்; சிற்றரசன்; அமைச்சனுமாவன். 3. கொங்கர், கங்கர், மஹாரதர் என்பவரை வெற்றிகொண்ட ‘சோழர் கோன்’ ஒருவன். 4. போரில் விற்றொழில் பூண்ட சுத்தமல்லன் வானகோவரையன் ஒருவன். 5. நரலோக வீரனான காலிங்கராயன் ஒருவன். 6. செஞ்சியை ஆண்ட காடவராயன் ஒருவன்; இவன் மதங்கொண்ட யானையை அடக்கிச் செலுத்துவதில் வல்லவன். 7. வேள் நாட்டை ஆண்ட சிற்றரசன் ஒருவன்; அவன் துன்பமின்றி நாட்டை அமைதியாக ஆண்டனனாம். 8. கங்கை முதல் குமரி வரை பல அறங்களைச் செய்துள்ள அனந்தபாலன் ஒருவன். இவன் திருவாவடுதுறையில் உள்ள சிவன் கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளான்[20]. 9. கருநாடர் கோட்டை அரண்களை அழித்த சேதியராயன் ஒருவன். 10. தகடுரை ஆண்ட அதிகன் ஒருவன். இவன் கலிங்கப் போரில் பகைவரை முறியடித்தவன். 11. வடமண்ணையில் யானைகொண்டு அழிவு செய்த ‘வத்தவன்’ ஒருவன். 12. கோட்டாற்றிலும் கொல்லத்திலும் வெற்றிபெற்ற நுளம்பபல்லவன் ஒருவன். 13. கொங்கு, குடகு நாடுகளையும் சேரபாண்டியரையும் வென்ற ‘திரிகர்த்தன்’ ஒருவன்.

அரசன் விருதுகள் : விக்கிரம சோழனுக்குப் பிரியமான பெயர் ‘தியாக சமுத்திரன்’ என்பது, இஃது இவன் உலாவிலும் கல்வெட்டுகளிலும் காண்கிறது[21]. 'அகளங்கன்’ என்பது மற்றொரு பெயர்[22]. ‘குற்றம் அற்றவன்’ என்பது இதற்குப் பொருளாகும். இவன் இவற்றுடன், தன் தந்தையின் விருதுகளில் பலவற்றைக் கொண்டிருந்தான்.

அரச குடும்பம் : பரகேசரி விக்கிரம சோழனுக்கு மனைவியர் எத்துணையர் என்பது தெரியவில்லை. கல்வெட்டுகளில் நால்வர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருத்தி முக்கோக் கிழான் என்பவள் மற்றவள்தியாகபதாகை என்பவள் முன்னவள் கி.பி.127 வரை கோப்பெருந்தேவியாக இருந்து இறந்தாள்; பிறகு தியாகபதாகை கோப்பெருந்தேவி ஆயினள். [23]இவள் பெண்கட்கு அணிபோன்றவள், சுருண்ட கூந்தலை உடையவள், மடப்பிடி போன்றவள் தூய குணங்களை உடையவள்; திரிபுவனம் முழுதுடையாள் எனப்பட்டவள்; அரசன் திருவுளத்து அருள் முழுவதும் உடையாள், அரசனுடன் வீற்றிருந்து சிறப்புற்றவள் என்று திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகிறது. தரணி முழுதுடையாள் என்பவள் ஒரு மனைவி. அவள் பெண்களில் மயில் போன்றவள் நிலவுலகத்து அருந்ததி, ‘இலக்குமி திருமாலின் மார்பில் இருப்பதுபோல இவள் அரசன் திருவுள்ளத்தில் தங்கியுள்ளாள்’ என்று அதே கல்வெட்டுக் குறிக்கின்றது. மூன்றாம் மனைவி நம்பிராட்டியார் நேரியன் மாதேவியார் என்பவள். இவளுக்கு அகப்பரிவாரம் இருந்ததென்று கல்வெட்டுக் குறிக்கிறது[24]. ‘அகப்பரிவாரம்’ என்பது ஒவ்வோர் அரசமாதேவிக்கும் இருந்த பணிப்பெண்கள் படையாகும். விக்கிரம சோழனுக்குக் குலோத்துங்கன் என்னும் மைந்தன் ஒருவன் இருந்தான். அவனே இவனுக்குப் பின் சோழப் பேரரசன் ஆனான்.

சமயப் பணி : கங்கைகொண்ட சோழபுரம் சோழர் கோநகரம் ஆனது முதல், அதற்கு அண்மையில் உள்ள தில்லை நகரம் சிறப்புப் பெறலாயிற்று. விசயாலயன் முதல் இராசராசன்வரை இருந்த அரசர்கள் திருவாரூரையே மிக்க சிறப்பாகக் கருதினர். இவருள் முதற் பராந்தகன் ஒருவனே சிதம்பரத்தைச் சிறப்பித்தவன்.இராசேந்திரன் காலம் முதல் தில்லை பெருஞ்சிறப்பு எய்தியது. முதற் குலோத்துங்கன் காலத்தில் சிதம்பரம் மிக்க உயர்நிலை அடைந்தது. தில்லைப் பெருமானே சோழர் குலதெய்வமாக விளங்கினார். விக்கிரம சோழன் காலத்தில் தில்லைப் பெருமான் கோவில் பெருஞ் சிறப்புற்று விளங்கியது. இவன் கி.பி. 128-இல் தனக்கு வந்த சிற்றரசர் திறைப் பொருளின் பெரும் பகுதியைத் தில்லைப் பெருமான் கோவிலைப் புதுப்பிக்கவும் பெரிதாக்கவும் பிற திருப்பணிகள் செய்யவும் தாராளமாகச் செலவிட்டான். இதைப்பற்றிக் கூறும் திருமழபாடிக் கல்வெட்டு[25] செய்தியைக் காண்க:-

“பத்தாம் ஆட்சி ஆண்டில் சிற்றரசர் தந்த தூய பொற்குவியல் பேரரசன் முன் வைக்கப்பட்டது. அப்பொழுது மணிகள் பதித்த பொற்றட்டில் கீழ்வருவன வரையப்பட்டன : ‘மன்னன் நீண்டநாள் வாழ்ந்து உலகைக் காப்பானாக!’ செம்பொன் அம்பலம் சூழ் திருமாளிகையும் கோபுரவாசல்களும் கூடசாலைகளும் பெருமாள் கோவிலைச் சூழவுள்ள கட்டடங்களும் பொன் ஆக்கப்பட்டன.பலிபீடமும் பொன்னாற் செய்யப்பட்டது; முத்துமாலைகளால் அணி செய்யப்பட்ட தேர்க்கோவில் பொன்னால் இயன்றது. இத்தேரில் கூத்தப்பிரான் பூரட்டாதியிலும் உத்திரட்டாதியிலும் உலாப் போவானாக அப்பொழுது நடைபெறும் விழா ‘பெரும் பெயர் விழா’ எனப்படும். நிறை மணி மாளிகை நெடுந்தெரு ஒன்றும் அமைக்கப்பட்டது. இத்தெரு அரசன் பெயர் பெற்றதாகும். பைம்பொன் குழித்த பரிகலம் முதலாகச் செம் பொற்கற்பகத்தோடு பரிச்சின்னமும் அரசனால் கோவிற்குத் தரப்பட்டன. இத்திருப்பணி அரசனது 10-ஆம் ஆண்டில் இத்திரைத் திங்களில் அத்த நக்ஷத்திரம் கூடிய தாயிறன்று செய்யப்பட்டது.”

இக் கல்வெட்டுச் செய்தியால், விக்கிரம சோழன் சிறந்த சிவபத்தன் என்பதும், தில்லைக் கூத்தன் கோவிலில் பல திருப்பணிகள் செய்தனன் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா? பொன்னம்பலவன் திருக்கோவிலின் முதல் திருச் சுற்று மதில் ‘விக்கிரம சோழன் திருமாளிகை[26]’ எனவும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒன்று ‘விக்கிரம சோழன் திருவீதி[27]’ எனவும் வழங்கின என்பது பிற்காலக் கல்வெட்டுகளால் அறியக் கிடக்கும் செய்தியாகும்.

விக்கிரம சோழன் சிறந்த சிவபக்தன் ஆயினும், திருவரங்கம் பெரிய கோவிலிலும் திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. அக்கோவிலின் ஐந்தாம் திருச்சுற்று மதில் இவனால் கட்டப்பட்டது; இராமன் கோவில் முதலியன இவனால் அமைப்புண்டவை எனத் ‘திருவரங்கம் கோவில் ஒழுகு’ தெரிவிக்கின்றது. சமயத்துறையில் இவன் முன்னோரைப் போலவே சமரச நோக்குடன் இருந்தமை பாராட்டற் பாலதே அன்றோ?


  1. V.776
  2. 153 of 1897
  3. 163 of 1897
  4. 175 of 1911
  5. 467 of 1911
  6. 87 of 1900, 30 of 1903
  7. 275 of 1901 (S.I.I. Vol.7, No.496
  8. 168 of 1906
  9. 229 of 1910
  10. 63 of 1918
  11. 163 of 1902
  12. 128 of 1930
  13. 322 of 1921
  14. 378 of 1913
  15. 521 of 1905
  16. 47 of 1929
  17. 579 of 1907
  18. 102 of 1922
  19. 155 of 1922
  20. 71 of 1926
  21. Ula, 431, 662 etc., Ins. 272, 273 of 1907; 49 of 1831
  22. Ep. Ind. Vol. 6, pp.227-230
  23. S.I.I. Vol.3, p.184
  24. 136 of 1895
  25. S.I.I. Vol.3, pp. 183-184
  26. 282,284287 of 1913
  27. 312 of 1913