தந்தையும் மகளும்/10
10அப்பா! நட்சத்திரங்களிலும் பலவிதமான வஸ்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! பூமியில் காணப்படுவது போலவே சூரியனிலும் நட்சத்திரங்களிலும் அநேக வஸ்துக்கள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த விஷயம் அவர்கட்கு எப்படித் தெரியும் என்று கேட்பாய்.
அம்மா! சூரிய ஒளியை முக்கோணப் பளிங்கு வழியாகச் செல்லும்படி செய்து ஒரு வெண் திரையின் மீது விழுமபடி செய்தால் அந்த ஒளி வானவில் போல்
ஏழு நிறங்களுடையதாக விரிந்து அந்தத் திரையில் தோன்றும்.அப்படித் தோன்றுவதை ஒன்பது அடி அகலமுடையதாகப் பெரிதாக்கினால் அப்பொழுது அதில் அநேக செங்குத்துக் கோடுகள் காணப்படும். அதற்குக் காரணம் என்ன?அம்மா! இரும்பு போன்ற ஒரு தனி வஸ்துவை அதிகக் சூடாக்கி ஒளி விடும்படி செய்து அந்த ஒளியையும் பளிங்கு வழிச் செல்லும்படி செய்தால், அப்பொழுதும் திரையின் மீது வானவில் உருவம் தோன்றும். இது போலவே ஒவ்வொரு தனி வஸ்துவுக்கும் வானவில் உருவம் உண்டாகும். ஆனால் அவை வேறு வேறாக இருக்கும்.
இவற்றையும் சூரிய வானவில்லில் காணப்படும் கோடுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து அந்தக் கோடுகள் சூரியனிலுள்ள பல வஸ்துக்களாலேயே உண்டாவதாக அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதுபோலவேதான் நட்சத்திரங்களின் ஒளியையும் ஆராய்ந்து அவற்றிலுள்ள வஸ்துக்கள் இவை என்று அறியக்கூடியவர்களாயிருக்கிறார்கள்.