தந்தையும் மகளும்/122
122அப்பா! விளக்கை அணைத்தால் அறை முழுவதும் புகை நாறுகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நீ எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்கைப் பற்றியே கேட்கிறாய். மின்சார விளக்கை அணைத்தால் நாற்றம் கிடையாது. எண்ணெய் விளக்கை அணைத்தால் தான் நாற்றம் உண்டாகும். அதற்குக் காரணம் என்ன? எண்ணெய் விளக்கில் எண்ணெய் திரியில் ஏறி, ஆவியாக மாறி எரிகிறது. அப்படி உண்டாகும் ஆவி முழுவதும் பிராணவாயுவுடன் சேர்ந்து எரிந்தால் அப்பொழுது புகை கிடையாது. ஆனால் உண்டாகும் ஆவியில் ஒருபாகம் எரி யாமல் இருந்துவிட்டால் அதுதான் புகை. நாம் விளக்கை அணைத்தால் அப்பொழுது உண்டான ஆவி எரியமுடியாமற் போகிறது. அது புகையாகக் கிளம்பி அறை முழுவதும் பரவி விடுகிறது அதனால் தான் நமக்குப் புகை நாற்றம் தெரிகிறது.
அம்மா! சாதாரணமாகக் குத்துவிளக்கை அணைத்தால் அதில் புகையும் உண்டாகாது, அதிக நாற்றமும் பரவாது. ஆனால் மண்ணெண்ணெய் விளக்கை அணைத்தாலோ அதிக நாற்றம் உண்டாகிக் கஷ்டம் தரும். அதனால் அத்தகைய விளக்கை அணைக்க வேண்டுமானால் முதலில் திரியைக் கீழே இறக்கிக்கொண்டு அணைக்கவேண்டும். அப்படிச் செய்தால் எண்ணெய் ஆவி அதிகமாக இராது, நாற்றம் பரவாது.