தந்தையும் மகளும்/124
124அப்பா! இறந்து போனவர்களுடைய உடலை அப்படியே வைத்திருக்க முடியும் என்று கூறுகிறார்களே, அதை எப்படிச் செய்கிறார்கள்?
அம்மா! இறந்துபோனவர்களுடைய உடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும். அந்த மாதிரி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்து நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசர்களுடைய உடல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்காக அவர்கள் பிரமாண்டமான "பிரமிடு" என்னும் கல்லறைகள் கட்டினார்கள். அவற்றைப் பார்ப்பதற்காக ஆயிரக் கணக்கான மக்கள் உலகத்தின் சகல பாகங்களிலிருந்தும் போகிறார்கள்.
இறந்தவர்களுடைய ஆன்மா மீண்டும் உடலை நாடி வரும் என்று எகிப்து நாட்டு மக்கள் நம்பியபடியினால் தான் அவ்விதம் உடலை அழிந்து போகாமல் பாதுகாத்தார்கள். அப்படிப் பாதுகாப்பதற்காக அவர்கள் மூன்று வித முறைகளைக் கையாண்டதாகப் பண்டைக் கிரேக்க சரித்திராசிரியர் ஹெரோடற்றஸ் என்பவர் கூறுகிறார். ஆனால் அந்த முறைகள் இவை என்று இப்பொழுது அறிந்து கொள்வதற்கில்லை.ஆயினும் இறந்த உடலைப் பாதுகாக்கும் முறை 1770-ம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கப் பெற்றதாக அறிகிறோம். ஜெர்மன் விஞ்ஞானி ஒருவர் மது சம்பந்தமான திராவகம் ஒன்றை சிவப்புரத்தக் குழாய்களுக்குள் செலுத்தியதாகவும், அதன் வாயிலாக இறந்த உடலின் உருவமும் நிறமும் சிறிது கூட மாறாமல் இருந்ததாகவும் தெரிகிறது. ஆயினும் அவ்வாறு பாதுகாக்கும் முறையின் இரகசியத்தை அவர் யாருக்கும் கற்றுக் கொடுக்காமல் போய்விட்டார். பின்னால் வில்லியம் ஹண்டர் என்பவர் சில வகை எண்ணெய்களைச் சிவப்பு இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி இறந்த உடலைப் உடலைப் பாதுகாக்கும் முறையைக் கையாண்டு வந்தார். இக்காலத்தில் கையாளும் முறை முதலில் சிவப்பு இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வெளியே எடுத்துவிட்டு மது சாரத்துடன் சில ரஸாயன உப்புக்களைக் கலந்த திரவத்தைச் செலுத்துவதாகும்.
அம்மா! ருஷ்ய நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? அந்த நாட்டின் குடியரசுத்vதலைவராயிருந்த லெனின் என்பவருடைய உடலை அழிந்து போகாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்களாம். அதை ஆண்டுக்கு ஒரு முறை அந்நாட்டு மக்கள் போய் தரிசித்து வருகிறார்களாம்