தந்தையும் மகளும்/159
159அப்பா! பிராணிகள் எல்லாம் சதா காலமும் காற்றைச் சுவாசித்தாலும் காற்று இருந்து கொண்டே இருக்கிறதே’ அதற்குக் காரணம் என்ன?
அம்மா! காற்றில் முக்கியமாகக் காணப்படுவன பிராணவாயு நைட்ரோஜன் வாயு, கரியமில வாயு ஆகிய மூன்றும் தான். இந்த மூன்று வாயுக்களும் இடை விடாமல் செலவழிந்து போய்க்கொண்டு தான் இருக்கின்றன. சதாகாலமும் நாமும் மற்றப் பிராணிகளும் பிராண வாயுவைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்; பூமியிலுள்ள மைக்ரோப் என்னும் நுண்ணுயிர்கள் நைட்ரோஜன் வாயுவைக் கிரகித்துக் கொள்கின்றன ; செடி கொடிகள் கரியமில வாயுவைக் கிரகித்து உணவாக்கிக் கொள்கின்றன.
ஆயினும் காற்று எப்பொழுதும் போல் குறையாமலே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் என்ன? சதா காலமும் செடி கொடிகளும் பிராண வாயுவை வெளியே விட்டு பிராண வாயு நஷ்டத்தைப் போக்குகின்றன. பிராணிகளும் செடிகளும் இறந்த பின் அவை அழுகிப் போகின்றன. அப்பொழுது அவற்றின் உடலிலுள்ள நைட்ரோஜன் காற்றில் வந்து சேர்ந்து நைட்ரோஜன் நஷ்டத்தைப் போக்கிவிடுகிறது. சகல பிராணிகளும் சுவாசிக்கும்போது கரியமில வாயுவை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் கரியமில வாயு நஷ்டமும் நீங்கிவிடுகிறது.