தந்தையும் மகளும்/186

விக்கிமூலம் இலிருந்து


186அப்பா! சில காட்டுப்பன்றிகள் உடம்பில் முள் இருக்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அவ்விதம் உடம்பில் முள் உள்ளவைகளை முள்ளம் பன்றி என்று கூறுவார்கள். அது மலைச் சரிவுகளில்தான் வசிக்கும். மூன்றடி நீளமிருக்கும். அதன் முதுகிலும் விலாவிலும் முட்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு முள்ளும் ஏழெட்டு அங்குல நீளமிருக்கும். வாலிலுள்ள முட்கள் வெண்ணிறமாயும் மற்ற முட்கள் கறுப்பாயும் இடையிடையே வெண்ணிற வளையங்கள் உடையனவாயுமிருக்கும் முன் காலத்தில் அதைக் கொண்டு வந்து "நிப்' போட்டு பேனா மாதிரி உபயோகிப்பதுண்டு. ரோமங்கள்தான் அடர்ந்து நெருங்கி ஒன்றாகச் சேர்ந்து இப்படி முட்கள் போல் ஆகியுள. இதர முட்கள் சாதாரணமாக எப்பொழுதும் நம்முடைய ரோமம் போல் மடிந்தே கிடக்கும். நமக்குக் குளிர் ஏற்பட்டால் நம்முடைய ரோமம் சிலிர்த்துவிடுகிறது. அதுபோல் முள்ளம் பன்றி ஏதேனும் எதிரியைக் கண்டு பயப்படவோ, கோயப்படவோ, செய்யுமானால் அப்பொழுது அதன் முட்கள் சிலிர்த்துவிடும். வாலை ஆட்டும். அப்பொழுது அதிலுள்ள முட்கள் சலசலக்கும்.

முள்ளம் பன்றி எதிரியை நேராகச் சென்று தாக்காது. வெகு விரைவாகப் பின்காட்டி ஒடித் தன் பின்புறமுள்ள முட்களை எதிரியின் முகத்தில் ஆழமாகப் புதைத்து விடும். அந்த முட்கள் எதிரியின் உடம்பில் தங்கி எதிரியைக் கொன்றுவிடும். இவ்வாறு பெரிய புலிகள்கூட அதனிடம் அகப்பட்டுக்கொண்டு இறந்துவிடுவதுண்டு. பன்றி இவ்வாறு முட்களை இழந்தபோதிலும் அவையிருந்த இடங்களில் புதிய முட்கள் முளைத்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/186&oldid=1538648" இலிருந்து மீள்விக்கப்பட்டது