தந்தையும் மகளும்/28

விக்கிமூலம் இலிருந்து


28அப்பா! 'சில இடங்களில் சுடுநீர்ச் சுணைகள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ மலைக்குப் போனபொழுது பார்த்தது குளிர்ந்த நீர்ச்சுனை தான். மழை பெய்து கிணறு உண்டாவது போல்தான் சுனையும் உண்டாகிறது. சுனைகள் அநேகமாக மலைச்சரிவுகளிலேயே காணப்படும். ஆனால் சுடுநீர்ச்சுனை உண்டாவது அவ்வாறன்று.

அவைகள் காணப்படுவது எரிமலைகள் உள்ள இடங்களிலும் எரிமலைகளால் மலைகள் உண்டான இடங்களிலும் தான். அத்தகைய தரையின் அடியில் உஷ்ணம் அதிகம் என்பதை நீ அறிவாய். அதனால் அங்குள்ள நீர் சூடாகி வெளியே வந்து சுடுநீர்ச் சுனைகள் ஆகின்றன.

அத்தகைய இடங்களில் சிலவற்றின் தரை அடியில் கட்டியாக இராமல் தண்ணீர் கொதிக்கக்கூடிய அளவு அதிக உஷ்ணமான பெரிய பொந்தாக இருக்கும். அங்கு தண்ணீர் வந்து சேர்ந்ததும் நீராவியாக மாறிவிடும். தண்ணீர் நீராவியாக மாறுமானால் அதன் கன அளவு 1650 மடங்கு பெரிதாவதால் அதன் மேல்பக்கத்தில் வந்து சேரும் தண்ணீரை தரையிலுள்ள வெடிப்பின் வழியாக மிகுந்த விசையுடன் பீச்சுகிறது. அடியிலுள்ள நீர் பீச்சப்பட்டதும் சிறிதுநேரம் தண்ணீர் வருவது நின்றுவிடும். மறுபடியும் தண்ணீர் வந்து நிறைந்ததும் மறுபடியும் பீச்சும். இவ்வாறு ஒழுங்காக விட்டுவிட்டுப் பீச்சிக்கொண்டிருக்கும். இவ்வாறு வரும் சுனையை ஆங்கிலத்தில் "ஜெய்ஸர்" என்று கூறுவார்கள்.

ஜெய்ஸர்களுள் மிகப் பெரியது நியூஜீலந்து நாட்டிலுள்ள போஹு என்னும் பெயருடையதாகும், அது எண்பது அடி ஆழத்திலிருந்து கிளம்பி 1500 அடி உயரம பீச்சுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/28&oldid=1538103" இலிருந்து மீள்விக்கப்பட்டது