தந்தையும் மகளும்/34
34அப்பா! இடி பலமாகக் கேட்கும்போது சன்னல் எல்லாம் குலுங்குகிறதே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒரு கல்லை எடுத்து குளத்தில் எறிந்தால் அலைகள் உண்டாகி கரைக்குவந்து சேர்கின்றன. அந்தக்கல் பெரியதாய் இருந்தால் அப்பொழுது உண்டாகும் அலைகள் கறையில் வந்து பலமாக மோதுகின்றன. இதை நீ பார்த்திருப்பாய். இதுபோல்தான் சாதாரணமான சப்தம் உண்டாகும்போது அதனால் காற்றில் உண்டாகும் அலைகள் அதிக பலமுடையனவாக இரா. நமக்குச் சப்தம மட்டுமே கேட்கும். ஆனால் இடி உண்டாக்கும் அலைகள் அதிக பலமாகவும் வேகமாகவும் வந்து நம்முடைய காதுகளைத் தாக்கும். இடி முழங்குகிறது என்று கூறி காதுகளைப் பொத்திக் கொள்வோம். சில சமயங்களில் காதிலுள்ள தோல் பறை கிழிந்து செவிடாய் விடுவதுமுண்டு. அதனால்தான் போர்க்களத்தில் பீரங்கி சுடும் வீரர்கள் தங்கள் காதில் பஞ்சை வைத்து நன்றாக அடைத்துக்கொள்வார்கள். இவ்வாறு பெரிய சப்த அலைகள் காதுகளில் மோதித் தாக்குவது போலவே சன்னல்களிலும் மோதும். அப்பொழுது சன்னல்கள் அதிரும். சில சமயங்களில் அவற்றிலுள்ள கண்ணாடிகள் கீறிப் போவதுமுண்டு.