தந்தையும் மகளும்/50A
50அப்பா! சுவர்க் கடிகாரம் வேனிற் காலத்தில் மெதுவாக ஓடுகின்றதே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! வேனிற் காலத்தில் அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மணி பிந்தத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்.
அம்மா! சுவர்க் கடிகாரத்தில் ஒரு நீண்ட மெல்லிய கம்பியில் ஒரு வட்டு மாட்டித் தொங்குகிறது. கடிகாரத்தை ஓட்டுகிறவர்கள் முதலில் சாவி கொடுக்கிறார்கள். பிறகு அந்தத் தொங்கட்டானை ஆட்டி விடுகிறார்கள். அது ஊசலாடுகிறது.
அது வலது பக்கமோ இடது பக்கமோ எவ்வளவு தூரம் ஆடினாலும் மணியில் வித்தியாசம் எதுவும் ஏற்படாது. ஆனால் வட்டுத் தொங்கும் கம்பி நீளமாயிருந்தால் மெதுவாக ஆடும், மணி பிந்தும். நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும், மணி முந்தும்.
வேனிற் காலத்தில் உஷ்ணம் அதிகமல்லவா? அதனால் அந்தக் கம்பி நீண்டு விடுகிறது. அதனால் அது மெதுவாக ஆட ஆரம்பிக்கிறது. அதனால்தான் வேனிற் காலத்தில் அந்தக் கடிகாரம மணியைப் பிந்திக் காட்டுகிறது