தந்தையும் மகளும்/6
6அப்பா! ஆண்டுகளைச் சொல்லும்போது கி. பி. கி. மு. என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாம் 1952-ம் வருஷம் என்று கூறுகிறோம்.அதன் பொருள் என்ன? அம்மா நீ இயேசுகிறிஸ்து என்று கேட்டிருப்பாய். அவர் ஒரு பெரிய மகாத்மா, அவர்தான் கிறிஸ்தவ மதத்தை நிறுவியவர். 1952-ம் ஆண்டு என்பதன் பொருள் இயேசுகிறிஸ்து பிறந்த நாளிலிருந்து 1951 வருஷங்கள் சென்றுவிட்டன. இப்போது 1952-ம் வருஷம் நடக்கிறது என்பதாகும். இப்படி கிறிஸ்து பிறந்தபின் உள்ள வருஷத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் 1952 என்று சொல்வதற்காகச் சுருக்கமாக கி.பி. 1952 என்று கூறுவார்கள். அதுபோல் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள வருஷத்தைக் குறிப்பிட கி.மு. என்று கூறுவார்கள்.
இவ்விதம் ஏதேனும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்துக் கூறும் ஆண்டு முறையைச் சகாப்தம் என்று சொல்லுவார்கள். நம்முடைய நாட்டிலும் சாலிவாஹன சகாப்தம், கொல்லம் ஆண்டு என்று பல உண்டு. முஸ்லீம்கள் முகமது நபி மெக்காவிவிருந்து மதினாவுக்குச் செல்ல நேர்ந்த ஆண்டிலிருந்து தங்கள் சகாப்தத்தைக் கணக்கிடுகிறார்கள். அதை அவர்கள் "ஹிஜ்ரி" என்று அழைப்பார்கள். ஆதியிலிருந்த கிறிஸ்தவர்கள்' ரோமாபுரி நிறுவப்பட்ட தேதியிலிருந்தே கணக்கிட்டு வந்தார்கள். கிறிஸ்து பிறந்து ஐந்நூறு வருஷங்கள் கழிந்தபின் எக்ஸிகன் என்னும் பாதிரியார்தான் கிறிஸ்தவ சகாப்தத்தை ஏற்படுத்தினார். இப்போது உலகமெங்கும் அதையே உபயோகித்து வருகிறார்கள்.