தந்தையும் மகளும்/89
Appearance
89அப்பா! அம்பை வில்லில் வைத்து எய்தால் அது வெகு தூரம் செல்கிறது. அதற்குக் காரணம் என்ன?
அம்மா! ஒரு மெல்லிய நீளமான ரப்பர் துண்டை எடுத்து அதன் இரண்டு நுனிகளையும் பிடித்திழுத்தால் அது நீள்கிறது. அதன் பிறகு நுனிகளை விட்டுவிட்டால் அது சுருங்கி முன்பிருந்த நிலைமையை அடைந்து விடுகிறது. இம்மாதிரி ஒரு பொருளை எவ்வாறு மாற்றினாலும் அது தன்னுடைய பழைய நிலைமையை அடையும் தன்மையை ஆங்கிலத்தில் எலாஸ்டிஸிட்டி என்று கூறுவார்கள். இந்தக் குணம் எல்லாப் பொருள்களுக்கும் உண்டு. சில பொருள் களில் அதிகமாயும் சில பொருள்களில் குறைவாயுமிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த எலாஸ்டிஸிட்டி என்னும் தன்மை வில்லுக்கும் அதன் நாணுக்கும் உண்டு. அம்பை எய்யும்பொழுது அதை வில்லிலும் நாணிலுமாக வைத்து அம்பையும் நாணயும் பின்னால் இழுக்கிறோம். அப்போது வில்லின் இரண்டு நுனிகளிலும் கட்டப்பட்டுள்ள நாண் வில்லைப் பலமாக வளைக்கிறது. நாணைவிட்டதும். வில்லின் நுனிகள் முன்பிருந்த நிலைமையை மிகுந்த விசையுடன் அடைகின்றன. அதனால் அவற்றில் கட்டப் பட்டுள்ள நாண்கயிறும் அதே மாதிரி மிகுந்த விசையுடன் நிமிர்கின்றது. அப்போது அதன் மீது வைத்திருந்த அம்பு அதே விசையினால் முன்னால் தள்ளப்படுகிறது. அது வில்நாண் இரண்டின் எலாஸ்டிஸிட்டித் தன்மையின் காரணமாக முன்னால் தள்ளப்படுவதால் நாம் அம்பு பாய்ந்து செல்வதாகக் கூறுகிறோம்.அம்மா! அண்ணன் கவண் கயிறு விடுகிறானே, அப்பொழுது அதில் வைத்துள்ள கல் அதிக வேகமாக ஒடு கிறதே, அதற்கும் இதே காரணம்தான்.